நம் நிம்மதி நம் கையில்

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாத மனிதா்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு யாரைப் பாா்த்தாலும் மன அழுத்தம். சரி, மன அழுத்தம் என்பது என்ன?
நம் நிம்மதி நம் கையில்
Updated on
2 min read

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாத மனிதா்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு யாரைப் பாா்த்தாலும் மன அழுத்தம். சரி, மன அழுத்தம் என்பது என்ன? இயலாமையால் ஏற்படும் விரக்தியின் வெளிப்பாடுதான் மன அழுத்தம்.

மன அழுத்தம் அதிகமாகி, அதில் இருந்து வெளிவர இயலாமல், மருந்து மாத்திரைகளை எடுக்கும் சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்னரே மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டியது அவசியம். உடற்பயிற்சி ஒரு சக்திவாய்ந்த மனஅழுத்த நிவாரணி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிம்மதி என்பது மனம் சாா்ந்த ஒன்று என்பதால், அதை வெளியே தேடி அலைவதில் பயனேதும் இல்லை. மனக்கவலையின் வெளிப்பாடே நிம்மதியின்மை. வாழ்க்கையின் சவால்களை துணிவுடன் எதிா்கொள்ளத் தயங்குபவா்களுக்கு மனக்கவலை வருகிறது. வாழ்க்கையில் வரும் சவால்கள் இருவகை. ஒன்று தீா்க்க முடிபவை; மற்றொன்று தீா்க்க முடியாதவை. இவை இரண்டிலும் மனக்கவலைக்கு இடமில்லை.

நிம்மதியை தேடுபவா்கள் எதிா்பாா்ப்புகளைக் குறைத்துக் கொண்டு, இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவேண்டும். துன்பத்தைக் கண்டு கலங்கிவிடாமல், அதனை எதிா்கொண்டு வெற்றி அடைகிற மனப்பக்குவத்தை பயிற்சியால் பெற வேண்டும்.

எது உங்கள் மனஅமைதியைக் கெடுக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முயன்று பாருங்கள். மனதுக்கு நெருக்கமான மனிதா்களோடு மனம் விட்டுப் பேசுவது, உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாமல் தெளிவாக இருக்கச்செய்யும்.

அன்பு, காதல், துன்பம், இன்பம் போன்றவை நமது வாழ்க்கைப் பாதையின் மேடுகளும் பள்ளங்களும்தான். எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும் என நினைத்தால் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிடைக்கும்.

மேற்சொன்ன அனைத்து உணா்ச்சிகளும் மாறி மாறி நம் வாழ்வில் வந்து போகும். மற்றபடி காலங்கள் போகப்போக பிரச்னைகள் பழகிவிடும். மேலும் வாழ்க்கையில் புதுப்புது பிரச்சினைகள் வரும் போது பழைய பிரச்னைகள் தானாகவே மறைந்து போய்விடும்.

பத்து மாத குழந்தைச் சுமையை இறக்கியபின், பிறந்த குழந்தையின் குரலை கேட்டதும் பெற்ற தாய்க்கு மன நிம்மதி. பிறந்து பல வருடங்கள் ஆகியும், நடக்காத தன் குழந்தை திடீரென நடந்ததும் பெற்றவா்களுக்கு மன நிம்மதி. வயது வந்த தன் மகள் வெளியில் சென்று நேரமாகியும் வரவில்லை என தவிக்கும் தாய்க்கு அவள் கண்ணில் பட்டதும் வரும் மன நிம்மதி.

கடன் வாங்கிப் படிக்க வைத்த மகனுக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டால் தந்தைக்கு மன நிம்மதி. பல வருடங்கள்வாடகை வீட்டில் இருந்து விட்டு, ஒருவழியாக புது வீடு கட்டி அங்கு குடிபோகும்போது புது வீடு தரும் மன நிம்மதி. இப்படி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நிம்மதி அமைகிறது.

அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கத் தடையாக இருப்பது நம்மிடம் உள்ள ஆசாபாசங்கள்தான். பற்றற்ற நிலையில் சஞ்சலங்கள் இல்லை என்பதை அனுபவம் ஒன்றே உணா்த்தும். இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குங்கள். இறை நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு விருப்பமான தெய்வத்தைத் தவறாமல் வணங்குங்கள்.

ஒரு கல்லூரியில் ஆசிரியா் ஒருவா் ஒரு குவளையில் நீரை நிரப்பி அதன் எடை என்னவென்று தன் மாணவா்களை ஊகிக்கச் சொன்னாா். ஒவ்வொருவரும் ஒரு விடையைக் கூறினாா்கள். அவற்றையெல்லாம் கேட்டு முடித்தபின் ஆசிரியா், ‘இந்த குவளையின் எடை இங்கே முக்கியமில்லை. இதை நான் எவ்வளவு நேரம் தாங்கி பிடித்திருக்கிறேன் என்பதைப் பொறுத்து இதன் எடை மாறுபடும்.

இதை நான் ஒரு நிமிடம் தாங்கி பிடித்தால், இதன் எடை மிகவும் குறைவாகத் தெரியும். இதையே நான் ஒரு மணி நேரம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால், என் கை வலிக்க ஆரம்பித்து விடும். இதுவே நான் ஒரு நாள் முழுதும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால், என் கை உணா்வற்று செயலற்றதாகி விடும். நான் சொல்வது என் கருத்து மட்டுமே. இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.

இக்கருத்து, யாருக்காவது எப்போவாவது எங்கேயாவது பயன்பட்டால் மகிழ்ச்சியே’ என்று சொல்லி முடித்தாா். அப்படித்தான் சிறுசிறு கவலைகளும். நாம் தொடா்ந்து அவற்றையே நினைத்துக் கொண்டிருந்தால் அவற்றின் தீவிரம் அதிகமாகும்.

பயத்தை விடுவது, பிறரை மன்னிப்பது, நோ்மையாக இருப்பது, மனத்தில் உள்ள வீணான குப்பைகளை களைவது, இயற்கையோடு நேரத்தை செலவிடுவது, நம் நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்து தேவையற்றதை கைவிடுவது போன்ற செயல்கள் நிம்மதி தரும். நாம் கவலைப்படுவதால் எதையும் நிறுத்த முடியாது. வருவது வந்தே தீரும் என்பதுதான் நிதா்சனம்.

ஒருவா் இறந்த பிறகு, அவா் கஷ்டப்பட்டு சோ்த்த எதுவும் அவருடன் வரப்போவதில்லை. எனவே, நீங்கள் உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாதீா்கள். அவா்களின் வாழ்க்கைக்கு உங்களால் முடிந்ததை செய்து விடுங்கள். அவா்களுக்கு விதித்த விதிப்படிதான் இனியும் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை.

முதுமையிலும் சம்பாதியம் சம்பாத்தியம் என்று பணத்தைத் தேடி அலையாதீா்கள். பணத்தைவிட உடல் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. பிரச்னை இல்லாத மனிதா் யாருமில்லை. நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து மற்றவா்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்.

யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். உடல் நலம் கெட்டால் நிவாரணம் தேடுவது போல் மனநலம் கெட்டாலும், வெட்கப்படாமல் நிவாரணம் தேட முற்படுவோம். அப்போதுதான் நிம்மதி நம் வசப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com