இலவசங்களும் நலத்திட்ட உதவிகளும்

இலவசங்களும் நலத்திட்ட உதவிகளும்

'இலவசம் இழிவு உழைப்பே உயர்வு' என்று கூறியவர் தேசப்பிதா காந்திஜி. இலவசம் என்பது உன்னதமான உழைப்பை உதாசீனப்படுத்தும் சொல். லஞ்சம் என்பதை அன்பளிப்பு என்று கூறுவது போலத்தான் இதுவும்.
"மீனைக் கொடுக்காதே, மீன் பிடிக்கத் தூண்டில் கொடு' என்பது ஒரு மேலைநாட்டுப் பழமொழி. மீனைக் கொடுப்பது இலவசம்; தூண்டில் என்பது உழைப்பு.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நான்குவழி விரைவுச் சாலையைத் திறந்துவைத்துப் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "உத்தர பிரதேச மக்கள் இனிப்புப் பண்டத்தை விரும்பிச் சாப்பிடுவதைப் போல இலவசங்களை விரும்புகிறார்கள். இது தேச வளர்ச்சிக்கு ஆபத்தானது' என்று பேசியுள்ளார்.
பின்னர், இதே கருத்தை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் இலவசங்களுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய என்கிற வழக்குரைஞர் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.
அதில், "தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையில் நியாயப்படுத்த முடியாத இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது, அரசியல் சாசனத்தின் ஜனநாயகக் கோட்பாட்டிற்கே முரணானதாகும். அத்தகைய அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும், அக்கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், நமது நாடாளுமன்றம் இதனை விவாதிக்க விரும்பாது என்றும், அரசியல் கட்சிகளும் இலவசங்களை ரத்து செய்ய விரும்பாது என்றும் சுட்டிக்காட்டியது. ஆனாலும் ஆணையமோ, மத்திய அரசோ இப்படிக் கூறிவிட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் எடுத்துக் கூறியுள்ளதை வரவேற்க வேண்டும்.
"இலவசம் என்பது அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் தேசத்தின் பொருளாதாரப் பேரழிவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை மறுக்க முடியாது' என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளித்த பதில் மனுவில் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
இப்போது நம் முன் உள்ள கேள்வி, இலவசங்கள் என்பவை எவை என்பதுதான். அவற்றைத் தீர்மானிக்க ஒரு நிபுணர் குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அக்குழுவில் மத்திய அரசு - மாநில அரசுகள், நிதி கமிஷன், நீதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி, பயனாளிகள் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இலவசங்களால் அரசு நிதி அதிக அளவு செலவாகிறது. அதனால் மாநில அரசுகள் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகிறது. இலவசங்களை வழங்கும் ஆளுங்கட்சி, வாக்காளர்களின் அபிமானத்துக்கு உரியதாவதால், அதனுடைய ஆட்சி தொடர்வதற்கு உதவுகின்றது. இந்த இலவசங்களால் அடுத்து வரும் தேர்தலிலும் மீண்டும் அந்த அரசியல் கட்சியே வெற்றி பெறுகிறது. இலவசம் இவ்வாறு வாக்குவங்கியாக செயல்பட்டு வருகிறது.
ஆளுங்கட்சிக் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டுமானால், எதிர்க்கட்சி கூட்டணியும் இதேபோல அதிக இலவசங்களை அறிவிக்க வேண்டியதாகிறது.
ஒரு கட்சி மிக்ஸி, கிரைண்டர் இலவசமாகத் தருவதாகச் சொன்னால், இன்னொரு கட்சி வாஷிங்மெஷின் தருவதாகப் போட்டிக்கு அறிவிக்கும். ஒரு கட்சி மடிக்கணினி என்றால், இன்னொரு கட்சி இலவச இணையம் என்கிறது.
ஒரு கட்சி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி தருவதாகச் சொன்னால், இன்னொரு கட்சி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தரப் போவதாக அறிவிக்கிறது. ஒரு கட்சி புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால், இன்னொன்று பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறுகிறது.
குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 என்று ஒரு கட்சி அறிவித்தால், இன்னொரு கட்சி குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறுகிறது.
இந்த இலவசப் போட்டாபோட்டிக்கு எல்லையே இல்லை. இலவச அறிவிப்பின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதுதான். "வருடம் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாகக் கூறிய மத்திய ஆளுங்கட்சி, அப்படித் தரவில்லை என்பது மட்டுமல்ல, வேலையில் இருந்த தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்குமாறு பல தொழிற்சாலைகளையும் மூடிவிட்டது' என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இலவசங்களைப் பற்றி இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. ஏழைகளால் மிக்ஸி, கிரைண்டர்களை வாங்க முடியாது. அவர்கள் பழைய ஆட்டுக்கல், அம்மிக் கல்லைத்தான் பயன்படுத்துகின்றனர். அவர்களுடைய தினக்கூலி அவர்களின் உணவுக்குக்கூட போதுமானதாக இல்லை. அதனால்தான் நியாயவிலைக் கடைகளின் மூலம் அவர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி தரப்படுகிறது. விலைக்கு வாங்கும் அரிசியும் குறைந்த விலையில் தரப்படுகிறது.
இப்படிப்பட்ட சாமானிய மக்களுக்கு வாங்கும் சக்தி குறைவாக உள்ளதை கவனத்தில் கொண்டுதான், இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, இலவச வேட்டி, புடவை முதலியவற்றை அரசு வழங்குகின்றது. இவற்றை இலவசம் என்று கூறாமல், நலத்திட்ட உதவி என்றே அரசு கூறுகிறது. முந்தைய அரசும் இவற்றை செய்துவந்த காரணத்தால், இலவசங்களை குற்றமாக அரசியல் கட்சிகளால் கூற முடிவதில்லை.
மத்திய அரசு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ சிகிச்சைக்காகத் தருவதாகக் கூறுகிறது. மாநில அரசுகளும் பல சலுகைகளை வழங்குகின்றன. கல்விக்கான கடன்கள் ரத்துசெய்யப்படப் போவதாக அறிவிக்கப்படுகிறது.
வட்டியில்லாக் கடனாக அதனைக் கருதி, மாணவர்கள் படிப்பை முடித்து வேலைக்குச் சென்ற பிறகு கடனை தவணைமுறையில் திருப்பிக் கட்டலாம் எனக் கூறப்படுகிறது. இன்னொரு கட்சி கல்விக் கடனையே முழுமையாக ரத்து செய்வதாக அறிவிக்கிறது.
ஹிமாசல பிரதேசத்தில் ஒரு கட்சி, வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும், ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 நிதியுதவி என்றும் அறிவித்துள்ளது (அங்கு நான்கு மாதத்தில் தேர்தல் வரவிருக்கிறது).
இதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பதற்கான விளக்கத்தை அக்கட்சி தரவில்லை. அவ்வாறு தராமல் இலவசங்களை மட்டும் அறிவிப்பது தவறானது என்று கட்சிகளைக் கண்டிக்கும் சட்ட விதிகளும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை; நீதிமன்றத்திடமும் இல்லை. நீதிமன்றம் அறிவுரை கூறலாம், அவ்வளவுதான்.
இதற்காக ஒரு குழு அமைத்து விதிகளை வகுக்க வேண்டும் என்று யோசனை கூறத்தான் உச்சநீதிமன்றத்தால் முடிந்ததே தவிர, உத்தரவிட முடியவில்லை. தமிழ்நாட்டில் மகளிருக்கு பேருந்துப் பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால், அவர்களுடைய பயணச் செலவு மிச்சமாகியுள்ளது. பொருளாதார சிக்கலிலிருந்து அவர்கள் மீண்டுள்ளனர் என அரசு கூறுகிறது.
இந்த திட்டத்திற்காக பெண் வாக்காளர்கள் நன்றி கூறுவார்களேயானால், அவர்கள் அக்கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். இதனை எதிர்ப்பது என்றால், நகரப் பேருந்துகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த இலவசம், புறநகர்ப் பேருந்துப் பயணங்களுக்கும் தரப்படும் என்றுதான் எதிர்க்கட்சிகள் கூற வேண்டி வரும்.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுப்பது, இலவச கழிப்பறைக் கட்டிக் கொடுப்பது, இலவச சமையல் எரிவாயு உருளைகளைத் தருவது போன்றவை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளாகவே கருதப்பட வேண்டுமே தவிர, அவற்றை இலவசமாகக் கருதுவது தவறு என்கின்றனர்.
இலவச மதிய உணவு, இலவச காலை சிற்றுண்டி ஆகியவை ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களே தவிர, அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் இலவசங்கள் அல்ல என்று கூறப்படுகிறது. இதேபோலத்தான் ஏழைகளுக்கு இலவச சட்டஉதவி வழங்க உச்சநீதிமன்றமே முன்வந்துள்ளது.
உண்மையில் அரசியல் ஆதாயத்திற்காகவே இலவசங்களை வழங்குகிறார்கள் என்பதே உண்மை. என்ன அந்த அரசியல் ஆதாயம்?
நாடு முழுவதுமுள்ள 10 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ. 6,000 சென்ற இரு ஆண்டுகளாகத் தரப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகளுக்குத் தரப்படும் நிதி உதவியாக நினைக்க வேண்டுமே தவிர, விவசாயிகளை வாக்குவங்கியாக்கும் நோக்கமுள்ளதாகக் கருதக் கூடாது என்கிறனர்.
இவை இலவசங்கள், இவை நலத்திட்டங்கள் என வரையறை செய்வதில் குழப்பமே நீடிக்கிறது. ஆனாலும், இலவசங்கள் தேசப் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்கிற விமர்சனம் தவறல்ல.
இலவசம், நலத்திட்டம் இரண்டுமே வாங்கும் சக்தியற்றவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கானவை. இலவசம் வாக்குவங்கியாக உருமாறுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. வாக்காளர்களின் ஏழ்மை நிலை அதனை நியாயப்படுத்துகிறது.
வேலைவாய்ப்பை உடனடியாக உருவாக்க முடியாத நிலையில்தான் கிராமப்புறங்களில் நூறுநாள் வேலைத்திட்டம் எனும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
எவையெல்லாம் இலவசங்கள், எவையெல்லாம் நலத்திட்டங்கள் என்பதை வரையறுக்க வேண்டியது இன்றைய அவசரத் தேவையாகும். உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி அமைக்கப்படும் குழுவை ஆளுங்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரவேற்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களும் அக்குழுவுக்குத் தங்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இலவச பட்டியலும் நலத்திட்ட உதவி பட்டியலும் தயாரிக்கலாம். இலவச பட்டியலில் உள்ளவற்றை நலத்திட்ட பட்டியலுக்கு மாற்றலாம். அதேபோல நலத்திட்டப் பட்டியலில் உள்ளவற்றை இலவச பட்டியலுக்கு மாற்றலாம்.
இவ்வாறு உருவாக்கப்படும் இறுதிப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலவசங்களை வழங்குவதற்குரிய நிதி ஆதாரத்தை இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் எப்படித் திரட்டப் போகின்றன என்பதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம்.
தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடிக்கும் மாபெரும் பணியை செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆனால், அது மட்டும் போதாது. தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி சுயாட்சியுள்ள நிறுவனம்.
இலவசங்களை வழங்க முன்வரும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதியை எப்படித் திரட்டுகின்றன என்பதைத் தெரிவிக்காத நிலையில் அக்கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வழிகோலப்பட வேண்டும். அப்போதுதான் நீதிமன்றத்தைப் போல தேர்தல் ஆணையமும் ஜனநாயகத்தைக் காக்கும் அரணாக அமையும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com