ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு - ஒரு பார்வை!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்தியா முழுமைக்கும் ஒரே நுழைவுத்தேர்வைக் கொண்டு வர இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய பொறியியல் - மருத்துவ நுழைவுத் தேர்வுகளை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் இணைப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. நாட்டில் இதுவரை நீட், ஜேஇஇ, க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன.
அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து ஒரே திட்டத்தில் கொண்டுவரப்படுவதன் மூலம் சமூக நீதி பேணப்படுமா என்பது ஆராயப்பட வேண்டும். இந்தியாவில் 45 தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட 90 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்காக க்யூட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவிக்கிறது. மேலும் 18 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இதன் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற கருத்தை வலிமைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தி வருகிறது மத்திய அரசு. இதற்கு பல மாநிலங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கும் க்யூட் தேர்வுக்கும் ஒரே பாடமுறை என்பதால் க்யூட் நுழைவுத்தேர்வையே வைத்துக்கொள்ளலாம் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது குறித்து இன்னும் தெளிவான விளக்கத்தைப் பெற வேண்டும் என்பதாலும், ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாலும் இந்த விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது.
இந்தியாவில் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒரே நுழைவுத்தேர்வை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பல்வேறு வகையில் விவாதங்கள் நடத்தப்படவேண்டும். குறிப்பாக, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இது ஒரு உணர்வுபூர்வ நடவடிக்கையாக தமிழக மக்களால் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசைப் பொறுத்தவரை, ஜாதிய அடிப்படையில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற மூன்று பிரிவுகளையே வைத்துள்ளது. மாநிலத்தில் இத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலும் இணைகிறது. ஆக, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சமூகத்தால் பொருளாதாரத்தில், கல்வியில், வேலைவாய்ப்பில் பின்தங்கியவர்களை கைதூக்கிவிடும் முயற்சிக்கு மத்திய அரசு பட்டியலில் இடமில்லை.
மேலும், கிராமப்புற, ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் முயற்சியில் இருக்கும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வும், கல்வி குறித்தான சமநிலை வாய்ப்பும், பொருளாதார சூழ்நிலையும் அமையாத காரணத்தினால் அவர்களுக்கு இந்தத் தேர்வு மூலமாக போதிய வாய்ப்பு கிடைக்காதோ என்கிற ஐயம் தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் மட்டும்தான் 69 % இட ஒதுக்கீடு இருக்கிறது. ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்கு கிராமப்புற மாணவர்களுக்கு போதிய பயிற்சி, அவர்களுக்கான உதவித்தொகை இவற்றை வழங்குவதன் மூலமாக நுழைவுத் தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில், மிகவும் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புறத்தில் இருந்து படிக்கின்ற விளிம்பு நிலை மாணவர்கள் இந்தப் போட்டித்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தனித்து விடப்படுவார்கள்.
பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசும் ஏனைய கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒலித்தாலும் இனி வரும் காலங்களில் இது போன்ற தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மாணவர்களை ஆயத்தம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. மேலும் நீட் தேர்வு வந்ததன் விளைவாக, மருத்துவக் கல்லூரிகளுக்குள் பின்வாசல் வழியாக நுழைகிற முயற்சி தடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு குறைந்தபட்சம் 120-ஆவது பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் போன்ற பல்வேறு விதிகளைப் புகுத்தியிருப்பதன் மூலமாக தனியார் கல்லூரிகளின் கல்வி வியாபாரம் தடுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் நீட் தேர்வில் 400 மதிப்பெண்ணில் இருந்து 720 மதிப்பெண் வரையான கட் ஆஃப் மதிப்பெண் வரை அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இடம் கிடைத்து விடுகிறது.
400-இல் இருந்து குறைந்தபட்சம் 120 வரையிலான மதிப்பெண் பெற்றிருக்கிற மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் என்று அரசே நிர்ணயித்து விடுகிறது. ஆக, பெரும் நன்கொடை செலுத்துவதில் இருந்து மாணவர்கள் தப்பித்திருக்கிறார்கள்.
பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைப் பெற வேண்டியிருப்பதால், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை நிர்வாகம், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஊதியம் போன்ற செலவுகளை எதிர்கொள்ள தடுமாறிக்கொண்டிருக்கின்றன. பெரும் வசூல் மழை பொழிந்த மருத்துவக்கல்லூரிகளில் இப்போது சாரல் மழை மாத்திரமே பொழிவதால் குறைந்தபட்ச வருவாயே கிடைக்கிறது.
இது போன்று பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு விட்டால், பல்வேறு பொறியியல் கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்படும். அதுவும், நிகர்நிலை பல்கலைக்கழகம் வைத்திருக்கிற பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் அதிக அளவிற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறார்கள்.
வசூலில், ஒன்றில் இருந்து ஐந்து பிரிவு வரை வசூலித்து பெரும் ஆதாயத்தைப் பெறுகிறார்கள். ஆக, தேசிய முகமை மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்துவதைப் போல, பொறியியல் படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் தனியார் வசம் இருக்கிற பொறியியல் கல்லூரிகளில் வசூல் மழை பொழிவது பெருமளவு தடுக்கப்படும்.
இந்த நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்தாமல், ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தினால் மாணவர்களுக்கான வாய்ப்பு அதிகமாகும். முதல் முறை தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டாவது முறை எழுதி தாங்கள் விரும்பிய துறை சார்ந்த படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு உருவாகும். அரசு தேர்வாணையமும் மத்திய தேர்வாணையமும் பலமுறை தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு வழங்குவதைப் போல இந்த ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள் க்யூட் நுழைவுத்தேர்வு மூலம் வெற்றி பெற்று தாங்கள் விரும்பும் படிப்புகளைப் படிக்க முடியும்.
அதே போல் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐ.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்ட் என்று பிரித்து நடத்தப்படுகிறது.
ஜேஇஇ தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று நுழைவுத் தேர்வுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அஸ்ஸாமி, வங்காளம், கன்னடம், மலையாளம், ஒடிஸா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது.
பிறமொழிகளில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் ஒரே மாதிரியான அறிவை அடிப்படையாகக் கொண்டு ஏன் ஒரே நேரத்தில் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும் என்கிற சிந்தனையின் வெளிப்பாடே தேர்வுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தது. மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளும், மாநில அரசின் நுழைவுத் தேர்வுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டால் மட்டுமே, எதிர்ப்புகள் வலுக்கின்ற பல்வேறு மாநிலங்களில் சமவாய்ப்பு உருவாகும்.
ஒரே தேர்வாக நடத்தப்படுகிறபோது வெளிப்படைத்தன்மையையும் ஆராய வேண்டியது அவசியம். க்யூட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள், தொழில்நுட்பக் கோளாறுகள், தேர்வு மையங்களில் சிக்கல்கள். வருங்காலத்தில் இவற்றைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்துவது மிகவும் சவாலானது. தேர்வுக்கான கட்டமைப்பில் குறைபாடு, இணையத்தில் சர்வர் பிரச்னை போன்றவற்றைக் களைவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
க்யூட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் கடினமானவே. இவற்றை கிராமப்புற மாணவர்களால் எதிர்கொள்ள இயலாது. ஏனென்றால், அந்த அளவிற்கு அவர்களுக்குப் போதிய அளவில் பயிற்சிகள் கிடைத்திருக்காது.
குறிப்பிட்ட சில படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் அவற்றில் சேருவதற்கு, கூடுதலான அறிவை மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றன. ஆனால், கிராமப்புற மாணவர்களால் அதனை எதிர்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
அது போன்று இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மையங்கள் பெருமளவு பணத்தை வசூலிக்கின்றன. இவற்றைத் தடுப்பதற்கு அரசு எந்த விதமான திட்டங்களை வைத்திருக்கிறது என்பதை ஆராய வேண்டும். அதற்குரிய வழிவகைகளை செய்ய வேண்டும். அதற்கான ஒரு குழுவை நிர்ணயித்து வரைமுறைப்படுத்த வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளுக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கும் கட்டணங்களை
நிர்ணயித்து விட்டு, பயிற்சி மையங்களின் கட்டணங்களை வரைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டால், இந்த நுழைவுத் தேர்வு சீர்திருத்தம் பயனற்றுப் போய்விடும் என்பதே நிதர்சனம்.

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com