விளையாட்டு தரும் படிப்பினை

விளையாட்டு தரும் படிப்பினை

கடந்த மாதம் சென்னை மாமல்லபுரத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் ஆடவர் 'ஏ', மகளிர் 'பி' பிரிவைச் சேர்ந்தவர்கள் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் முக்கேஷ், தான் ஆடிய 11 ஆட்டங்களில், 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று தன்னுடைய புள்ளிகளை உயர்த்தினார்.
அதே போல் பிரக்ஞானந்தாவும் மிகவும் நன்றாக விளையாடினார்.
மேலும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய விஷயமாகும்.
இளம்வீரர் பிரக்ஞானந்தாவும் சற்று விரைவாக காய்களை நகர்த்துவாராம். நீண்ட நேரம் யோசிப்பது என்பது, பிரக்ஞானந்தாவைப் பொறுத்தவரை, மனதை மரத்துப் போகச் செய்யும் செயலாம்.
இம்மாதம் பிரிட்டன் பர்மிங்ஹாமில் நடைபெற்ற 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
இதில் பேட்மின்டனில் பி.வி. சிந்துவும், டேபிள் டென்னிஸில் சரத் கமலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட மகளிர் அணி, வெள்ளி பதக்கம் மட்டுமே வென்றது சற்று ஏமாற்றமே.
டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் போன்ற ஆட்டங்களில், புறங்கை தடுப்பு (பேக் ஹேண்ட் டிபன்ஸ்) ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. எதிராளி எத்தனை வேகமாக பந்தை வீசினாலும், அதை இயல்பாக புறங்கையால் தடுத்து, எதிராளியை சோர்வடைய செய்யும் முறை இது.
இந்த புறங்கை தடுப்பு ஆட்டத்தில் சீனர்கள் மிகவும் வல்லவர்கள். அப்படிப்பட்ட ஒருவரை, மலேசியாவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நமது பி.வி. சிந்து தோல்வி அடையச் செய்தது, குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கைக்கும் இது போன்ற தடுப்பு ஆட்டம் உதவும்.
வாழ்க்கை என்ற ஆட்டத்தில் முன்னேறும்போது, தடங்கல்களும், பலவிதமான ஏச்சுகளும், பேச்சுகளும், கிண்டல்களும், எகத்தாளங்களும் நம்மை வந்து தாக்கும். அம்மாதிரியான சமயங்களில், அவற்றை செவிமடுத்துக் கொண்டு, அவை உள் மனதிற்குள் செல்லாமல் தடுத்துவிடவேண்டும். அது போல் தடுத்தால், வாழ்க்கையில் எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும், சமாளித்துக் கொண்டு முன்னேறலாம்.
கிரிக்கெட், ஃபுட் பால், ஹாக்கி போன்ற ஆட்டங்களில், கூட்டுக் குழு மனப்பான்மை மிக மிக முக்கியம். அதாவது எல்லோரும் ஒற்றுமையாக, ஒருமனதோடு இணைந்து செயல்பட்டால் வெற்றி காண்பது எளிது.
தன்னுடைய ஸ்கோர் எண்ணிக்கையை மட்டுமே மனதில் கொண்டு விளையாடும் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சிலர். அத்தகையவர்கள் இருந்தால் ஆட்டத்தில் வெற்றி காண்பது மிகவும் கடினம். பந்து எல்லைக் கோட்டைத் தாண்டாமல் தடுப்பது, தாவி பந்தை கேட்ச் பிடிப்பது போன்ற காரணிகள் வெற்றிக்கு ஆதாரமாக அமையும். எனவே ஒட்டுமொத்த ஆட்டக்காரர்களின் ஒத்துழைப்பும் தேவை.
அதே போல்தான் அலுவலகமும். ஓர் அலுவலகத்தில் மேல் அதிகாரி என்னதான் மிக நன்றாக வேலை செய்தாலும், உடன் பணிபுரியும் அனைவரும் ஒத்துழைத்தால்தான், அந்நிறுவனம் முன்னுக்கு வரமுடியும். இந்தியாவில் நிறைய நிறுவனங்கள் முன்னுக்கு வந்ததற்குக் காரணம், ஊழியர்களின் ஒத்துழைப்புதான் என்றால் அது மிகையல்ல. இதைத்தான் கிரிக்கெட், ஃபுட் பால், ஹாக்கி போன்ற ஆட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஜுடோ, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் தனித்தன்மை கொண்டவை. இவற்றுக்கு மிக அதிக அளவில் சக்தியைப் பெருக்கிக் கொண்டு ஆட முன் வரவேண்டும். டிரிபிள் ஜம்பிங் போன்ற ஆட்டங்களில் முதல் முறை தோற்றுவிட்டால், அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெறுவது என்பது கொஞ்சம் கடினமான காரியம். காரணம், இழந்த சக்தியை மீண்டும் பெற்று, புதிய பலத்தோடு வெற்றிபெற வேண்டும்.
இம்முறை காமன்வெல்த் போட்டிகளில், ஜுடோவில் அமிருத் துசிளிகா, உயரம் தாண்டுதலில் பஜ்ரங் புனியா போன்றவர்கள் பதக்கங்கள் வென்றனர். இதுபோன்ற மிக தீவிரமான உறுதி மனப்பான்மை, சுயதொழில் புரிந்து முன்னுக்கு வருபவர்களுக்கு மிகவும் அதிகம்.
அவர்கள் தங்கள் தொழிலில் இழப்பை எதிர்கொண்டாலோ, எதிர்பார்த்தபடி முன்னுக்கு வர முடியாவிட்டாலோ அதனால் துவண்டு விடாமல், தொடர்ந்து மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்பார்கள்.
முன்பெல்லாம் கிரிக்கெட் ஒன்றே ஆட்டம் என்ற எண்ணம் பல பேருக்கு இருந்து வந்தது. இப்போது அதைத் தகர்த்து பல தடகள போட்டிகளிலும், பேட்மின்டனிலும் இந்தியா சாதனை புரிந்து வருவது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
எல்லா விளையாட்டுகளிலும், கடைசி நிமிடம் ரசிகர்களின் இதயம் படபடக்கும். ஆனால் சதுரங்கத்தில் மட்டும் இதற்கு ஒரு மாற்று வழி உள்ளது. செஸ் விளையாட்டில் ஒரு விசித்திரமான தன்மை உண்டு. எந்த ஒரு நகர்த்தலும் எடுக்க முடியாமல் நிச்சயமற்ற தன்மை வந்துவிடும். இதை "ஸ்டேல் மேட்' என்பார்கள்.
அதாவது ஒரு நகர்த்தலை செய்வதற்கு முன் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தால், இரண்டு அணிகளும் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாமல், சமரசத்திற்கு ஒப்புக் கொண்டு ஆளுககு ஒரு பாயிண்ட் எடுத்துவிடுவார்கள்.
இதே போன்று பிரக்ஞானந்தாவின் 11-ஆவது ஆட்டத்தில் நடந்தது. அமெரிக்க வீரருடன் நடந்த அந்த ஆட்டம் டிராவில்தான் முடியும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அமெரிக்க வீரரின் மோசமான நகர்த்தலினால், பிரக்ஞானந்தா வெற்றி அடைந்தார்.
எனவே ஈகோ இல்லாமல், ஓரளவு சமரசம் செய்து கொண்டு, வாழ்க்கையை நகர்த்துவது, பல பேருக்கு, குறிப்பாக குடும்பஸ்தர்களுக்கு மிகவும் நல்லது.
நம் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை, சதுரங்கம், கிரிக்கெட், பேட்மின்டன் போன்ற ஆட்டங்களிலிருந்து பெற முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com