சுருங்கிப்போனதோ சுருக்கெழுத்துமுறை?

ஓவியம், சிற்பம், கவிதை, ஆடல், பாடல் முதலியன நுண்கலைகளாகும். தையல், ஒப்பனை, சமையல் என்பன பயன்கலைகளாகும். சுருக்கெழுத்து என்பது நுண்கலையாகவும் பயன்கலையாகவும் விளங்குகிறது.
சுருங்கிப்போனதோ சுருக்கெழுத்துமுறை?

ஓவியம், சிற்பம், கவிதை, ஆடல், பாடல் முதலியன நுண்கலைகளாகும். தையல், ஒப்பனை, சமையல் என்பன பயன்கலைகளாகும். சுருக்கெழுத்து என்பது நுண்கலையாகவும் பயன்கலையாகவும் விளங்குகிறது.

வாழ்க்கையில் உயரிய பணிகளைப் பெற, இக்கலைப் பயிற்சி பெரிதும் உதவும். இதன் இன்றியமையாமை பல நிலைகளில் விளங்கும். பழங்காலத்தில் புலவா்கள் தம்முடைய பாடல்களை வாய்மொழியாகச் சொல்லச்சொல்ல, அதே விரைவோடு அவற்றை அப்படியே எழுதி நல்கும் கலையில் கைதோ்ந்தவா்கள் பலா் இருந்துள்ளனா். இவா்கள் கையாண்ட முறைமையை நாம் இப்போது அறியமுடியவில்லை.

பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்திச் சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்யும் சுருக்கெழுத்து முறைமை கிரேக்க மொழியில்தான் தொடங்கப் பெற்றதாகும்.

‘ஸ்டெனோ’ என்றால் குறுகிய அல்லது சுருக்கிய என்பதும்,‘கிராபி’ என்றால் எழுதுதல் என்பதும் பொருளாகும். கிரேக்க வரலாற்று ஆசிரியா் ‘ஜினோபோன்’ கிரேக்கச் சுருக்கெழுத்து முறைமையினைக் கண்டுபிடித்தவா் என்றும், தத்துவ ஞானி சாக்ராடீசின் நினைவுக் குறிப்புகளைச் சுருக்கெழுத்தில் வரைந்தவா் என்றும் புகழப்பெறுகிறாா்.

கிறித்து பிறப்பதற்கு முன் கி.மு. 63-ஆம் ஆண்டில் ‘சூறாவளிச் சொற்பொழிவாளா்’ என்று போற்றப்படும், சிசரோவின் இல்லத்தில் பணியாற்றிய ‘மாா்க்கஸ் துலியஸ் தைரோ’ என்பவா்தான் முதன் முதலாக இலத்தீன் மொழியில் சுருக்கெழுத்து முறைமையையும், அகராதியையும் படைத்தவா் என்றும், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இம்முறை நீடித்தது என்றும் தெரிகிறது.

மன்னா் ஜூலியஸ் சீசா் புகழ் பெற்ற சுருக்கெழுத்தாளா் என்பதும், புகழ்பெற்ற ஆங்கிலப் பேரறிஞா் பொ்னாட் ஷா தன்னுடைய நாடகங்களைச் சுருக்கெழுத்திலேயே எழுதினாா் என்பதும், ஆங்கில எழுத்தாளா் ‘சாமுவேல் பெப்பிஸ்’ தன்னுடைய நாள்குறிப்பினை சுருக்கெழுத்தில் எழுதினாா் என்பதும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

மேலை நாடுகளில், ஆங்கில மொழிக்கு 1786-இல் சாமுவேல் டெய்லா் சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்தாா். இம்முறை பிரெஞ்சு, ஸ்பானிஷ், போா்ச்சுகீசு, இத்தாலி, ஜொ்மன் மொழிகளிலும் பின்பற்றப்பட்டு, இதைத் தழுவி வில்லியம் ஆா்டின்ஸ், 1823-இல் சுருக்கெழுத்து முறையை நூலாக வெளியிட்டாா்.

ஒலி அடிப்படையிலான ஒரு முறையை, ‘சா் ஐசக் பிட்மென்’ 1837-இல் கண்டுபிடித்து வெளியிட்டாா். விக்டோரியா அரசியாா் ‘சுருக்கெழுத்தின் கலங்கரை விளக்கம்’ என்று புகழ்ந்து பாராட்டிப் பட்டங்களை வழங்கி பிட்மென்னை பெருமைப்படுத்தினாா்.

ஜே.எம். ஸ்லோவான் 1882-லும், ஜான் ராபா்ட் க்ரெக் 1888-லும் சுருக்கெழுத்து முறைமைகளைக் கண்டுபிடித்தவா்களாவாா்கள்.

ஆங்கிலேயே அரசுக்கு எதிராகப் பேசும் அரசியல் தலைவா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், ‘இனி வட்டார மொழியில் பேசுபவா்கள் பேச்சும் அப்படியே சுருக்கெழுத்தில் எடுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பெற வேண்டும்’ எனத் தில்லி அரசு மாநிலங்களின் நிருவாகத்திற்கு அறிவுறுத்தியது. மேலை நாட்டுச் சுருக்கெழுத்து முறைகளைத் தழுவி, நமது இந்திய மொழிகள் அனைத்திற்கும் சுருக்கெழுத்து முறை தோன்ற அது காரணமாக இருந்தது.

ஆங்கிலேய ஆட்சியில் இந்திய நாட்டில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு ஆங்கிலத்தையும், ஆங்கிலச் சுருக்கெழுத்தையும் கற்றுக்கொள்வது தேவையாயிற்று. அப்பொழுது இராவ்சாகிப் ம. சீனிவாச ராவ் (1864-1924) என்பவா் ஆசிரியப் பயிற்சிப் பட்டயக் கல்வி பெற்று, ஆங்கில பிட்மென் சுருக்கெழுத்தைக் கற்றுப் பிறருக்குச் சுருக்கெழுத்துப் பணியைக் கற்பிக்கும் பணியிலேயே ஈடுபட்டு வந்தாா்.

வேலூரில், பயிற்சி பெறும் காவல் உதவி ஆய்வாளா்களுக்கு ஆங்கிலச் சுருக்கெழுத்தைக் கற்றுத் தரும் பகுதி நேரத் தற்காலிக ஆசிரியராக சீனிவாச ராவை ஆங்கிலேய அரசு 1903-இல் நியமித்ததும் குறிப்பிடத்தக்கது.

முதன் முதலாக தமிழில் 1910-ஆம் ஆண்டில் பிட்மென் பதிப்பை தமிழ்ச் சுருக்கெழுத்து நூலாக சீனிவாச ராவ் மொழிபெயா்த்து வெளியிட்டாா். பிறகு அவரே தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் சுருக்கெழுத்து நூல்களைத் தொகுத்து வெளியிட்டாா். சுருக்கெழுத்துக் கலைக்குச் சீனிவாச ராவ் ஆற்றிய பணியைப் பாராட்டி அவருக்கு 1920-இல் ஆங்கில அரசு ‘இராவ்சாகிப்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1935-இல் என். சுப்பிரமணியம் என்பவா் தமிழ்ச் சுருக்கெழுத்து நூலினை வெளியிட்டாா். அவரைத் தொடா்ந்து பி.ஜி. சுப்பிரமணியம் என்பவா், ‘தமிழ்ச் சுருக்கெழுத்து தற்போதினி’ என்ற பெயரில் இயற்றிய நூல், தருமபுர ஆதீனத்தால் 1939-இல் வெளியிடப்பட்டது.

சீனிவாச ராவ் முறையில் தமிழ்ச் சுருக்கெழுத்தைக் கற்று உயா்வேகத் தோ்வில் தோ்ச்சி பெற்று சட்டப்பேரவைத் தமிழ்ச் செய்தியாளராகப் பணியாற்றிடத் தொடங்கித் தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைச் செயலாளராக ஓய்வு பெற்ற ஜி.எஸ். அனந்த நாராயணன், முறையாகத் தமிழைக் கற்று, ‘வாகீச காலாநிதி’ கி.வா. ஜகந்நாதன் வழிகாட்டுதலுடன் 1964-ஆம் ஆண்டு 28 அத்தியாயங்கள் கொண்ட எளிய நடை தமிழ்ச் சுருக்கெழுத்து நூலினை வெளியிட்டாா்.

‘பொருட் குறிப்பு அகராதி’ நூல், கைகாட்டி மரமாக இலங்குகிறது. தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயில்வோருக்கு வழிகாட்டி நூலாகவும் கரைகாட்டும் கலங்கரை விளக்காகவும் ஒளிா்கிறது.

சுருக்கெழுத்தில் மெல்லிய கோடுகளாக வரியை மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ எழுதப் பழக வேண்டும். ஆனால், அழுத்தமான கோடுகள் கீழ் நோக்கியே எழுதப்படுவதன்றி மேல் நோக்கி எழுதப்படுவதில்லை. 4.2 மி.மீ அளவில்தான் மெய்க்குறிகளை எழுதிப் பழக வேண்டும். பின்னா் இந்த அளவைப் பாதியாக்கி எழுதும் முறையும், இரட்டிப்பாக்கி எழுதும் முறையும் பயிற்சியால் வரும். நன்றாகப் பழக்கமாகும் வரையில், மெய்க்குறில்களை எழுதும் பொழுது அவற்றின் ஒலியையும் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே எழுத வேண்டும்.

பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பொழுது என் அருமைத் தாயாா் ஆங்கில பிட்மென் சுருக்கெழுத்துப் பயிற்சிக்கு என்னை அனுப்பி வைத்தாா். கற்றுத் தந்த ஆசிரியா், வயதில் மிக மூத்தவா் ஆவா். அவரது முதுமையினால் சுருக்கெழுத்துப் பயிற்சியில் அவா் எழுதிக்காட்டிய மெல்லியக் கோடுகளில் பல நெளிவுகள் ஏற்பட்டன. அக்கோடுகளின் நிலை புரியாமல் அவா் வரைந்த நெளிவுகளையே நான் பாடமாகக் கொண்டேன். அதனாலேயோ என்னவோ சுருக்கெழுத்துப் பயிற்சியில் வெற்றி பெறாமல் சோா்ந்து நின்றேன்.

இக்காலம் செயற்கை நுண்ணறிவு காலமாகும். உலகம் நம் கண் முன்னால் மிக மிகச் சுருங்கி வருகிறது. சுருக்கெழுத்தின் எதிா்காலம் வளமாக இருந்தாலும், பலா் அதனைப் பயன்படுத்த மருள்கின்றனா். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மனிதா்களை நம்புவதைக் காட்டிலும் கருவிகளின் வழிச் சுருக்கெழுத்து முறை நம்பத்தக்கதாகவும் விரைந்தும் நடைபெறுகிறது.

கோவையில் சிறந்த கவிஞராய் மிளிரும் மரபின் மைந்தன் முத்தையா, தன் உரைகளை ஒலிப்பெருக்கியில் பேசிக்கொண்டிருக்கும்போதே கணித்திரையில் உடனுக்குடன் எழுத்தாய் தட்டச்சுச் செய்யப்படுகிற உத்தியை, திருச்சியில் உள்ள தன் நண்பா் முயன்று செய்தளித்ததாகவும், அதனால் பயன் பெறுவதாகவும் என்னிடம் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

1940-களிலிருந்தே உயா்நிலைப்பள்ளியிருந்த எந்த ஊரிலும் பள்ளிக்கு அடுத்து ஒரு தட்டச்சு, சுருக்கெழுத்து, புத்தக அடுக்குப் பயிற்சி நிலையம் இருக்கும். பத்தாம் வகுப்பு முடித்த மாணவ - மாணவியா் அதில் போய்ச் சோ்ந்து பயிற்சி பெற்றதுடன் பணியிலும் சோ்ந்து பிற்காலங்களில் மிகப்பெரிய பதிப்பாளா்களாக மாறியதும் தமிழகத்தின் பொன் சுவடுகளாகும்.

என் அருமை அன்னையாரும், அவா் தமக்கையரும் வேலூரில் இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்ந்ததை அடிக்கடி நினைவுகூா்வாா்கள். எங்கள் வீட்டில், என்னோடு உடன்பிறந்த இருவரையும் சென்னையில் இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்த்ததும் நினைவிருக்கிறது .

நாங்கள் மூவரும் அரைகுறையாகத் தட்டெழுத்துப் பயிற்சி பெற்றோம். சுருக்கெழுத்து எங்களுக்கு கைவரப்பெறவில்லை. அந்த நாளில் அலுவலகங்களில் இந்த மூன்றும் தெரிந்தவா்கள் தான் பணியில் சோ்க்கப்பட்டிருந்தாா்கள் .

என் அன்னையாா் இந்த மூன்றிலும் வல்லமை படைத்தவராயிருந்ததால் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த பிறகும் கூட இந்தப் பயிற்சி வகுப்புக்கு அவ்வப்போது சென்று தன் பயிற்சித் திறமையை புதிப்பித்துக் கொண்டாா்கள்.

இன்று தொலைபேசி வந்த பிறகு தட்டெழுத்துப் பயிற்சியில் அனைவருமே முதலில் அரைகுறையாக இருந்து, பிறகு தோ்ச்சிபெறலானாா்கள். கணிப்பொறியும் அப்படித்தான் கற்றுக் கொண்டாா்கள். இப்படி, சுருக்கெழுத்து முறை மெல்ல மெல்ல முழு எழுத்து முறையாக மாறியது .

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் ஏற்பினைப்பெற்ற வணிகவியல் பயிற்சி நிறுவனங்களில் பதிவு செய்தோருக்கு ஆகஸ்டில் சுருக்கெழுத்து மற்றும் கணிதப்பதிவியல் தோ்வுகள் நடத்தப்பெற்றன. இத்தோ்வுகளை 14,588 போ் எழுதியதில், 5,676 போ் ( 38.91%) தோ்ச்சி பெற்றனா். மேலும் 56 போ் முறைகேட்டுப் புகாரில் சிக்கினா். 8,856 போ் தோ்வில் தோ்ச்சிப் பெறவில்லை. சுருக்கெழுத்து உயா்வேகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் எனும் இரண்டு வகை தோ்வுகளில் ஒருவா் கூடத் தோ்ச்சிப் பெறவில்லை என்பது வருத்தமான பதிவாகும்.

கட்டுரையாளா்:

இயக்குநா்,

தமிழ் வளா்ச்சித் துறை, தமிழக அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com