புத்தாண்டு, நம்பிக்கை, தீர்மானம்

கோப்புப் படம்
கோப்புப் படம்

மனித குலம் அறிந்திராத துயரமான அனுபவத்தைத் தந்தது 2020-ஆம் ஆண்டு. அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியிலேயே சீனாவில் உருவாகிய கரோனா தீநுண்மி, 2020-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் பரவியது.

இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இயக்கமே பல மாதங்களுக்குத்  தடைபட்டது. தனிமனிதர்கள் மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அனைவருமே  ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமில்லாமல், ஏராளமானோர் இன்னுயிரையும் இழந்தனர்.

கரோனா பெருந்தொற்று கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். இதுவரை சேமிப்பைப் பற்றித் தெரியாதவர்கள்கூட இப்போது சேமிப்புதான் வாழ்வில் ஆதார ஸ்ருதி என்பதைப் புரிந்து சேமிப்புக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளனர். முகக் கவசம், தனிமனித இடைவெளி என வாழ்க்கை முழுவதும் பின்பற்றத்தக்க பல நல்ல வழிமுறைகளையும் கரோனா வழங்கியுள்ளது.

கரோனாவிலிருந்து உலகம் மீண்டுவிட்டதாக அறியப்பட்ட வேளையில், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனாவின் தாக்கம் மீண்டும்  கவலையை ஏற்படுத்துகிறது. இச்சூழ்நிலையில், 2023-ஆம் ஆண்டை புதிய உறுதிமொழியேற்று வரவேற்கலாம்.

ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தந்து தினமும் உடற்பயிற்சி செய்யலாம். குழந்தைகளுக்கும் அவற்றைக் கற்றுத் தரலாம். வாழ்க்கைச் சுமையை ஏற்று வழிநடத்திச் செல்வதற்குப் பொருள் தேடி இளமையைத் தொலைத்துவிட்டு திரும்பிப் பார்க்கும்போது முதுமையில் நரை தெரியும். அழகான வாழ்க்கையை ரசித்து வாழத் தெரியாமல் முதுமைப் பருவத்தில் எப்படி வாழ்க்கையை வாழவில்லை என்பதை அசைபோட்டு துயரம் அடைவோர் ஏராளம். அதை விடுத்து உங்களுக்கென தனி நேரம் ஒதுக்கி உறவுகள், நட்புகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். இதன்மூலம் புத்துணர்வு பெற முடியும். புத்தாண்டிலாவது இதை முயற்சி செய்யலாம்.

மனித வாழ்க்கையில் நினைவுகளாகிப் போன சுவடுகளை என்றும் மறக்க முடியாது. எப்போதும் பழைய நிகழ்வுகள் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். தினமும் நாள்குறிப்பு எழுதுங்கள். இதில் முக்கியமானவர்களின் பிறந்த நாள், திருமண நாள்களைக் குறித்து வைத்து வாழ்த்துச் சொல்லுங்கள். முடிந்தால் பரிசளியுங்கள். இது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும். கிருஷ்ணனுக்கு நண்பன் குசேலன் அவல் கொடுத்தது போல பரிசு சிறியதெனக் கவலைப்படக் கூடாது. அதைக் கொடுக்கும் மனம் விசாலமான அன்பைப் பொழிய வேண்டும், அதுதான் முக்கியம். இந்த நினைவுகள் காலம் முழுவதும் நம்மை உயிர்ப்புடன் எழுச்சியாக வைத்திருக்க உதவும்.

புத்தாண்டில் இருந்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது எப்போதும் நம்முடைய முன்னேற்றத்தை உயர்த்தும். பெரியவர்கள் எப்போதும் மகன், மகள் என பாசத்தைப் பிரித்துக் காட்டாதீர்கள். இது அவர்களின் குழந்தைகளிலும் எதிரொலிக்கும். இதன்மூலம் மன அமைதியைப் பெரியவர்கள்தான் இழப்பார்கள். குழந்தைகளின் மனதிலும் வெறுப்பை விதைக்காதீர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை ஆழப் புதைந்து கிடக்கும். முடிந்தால் அதை ஊக்குவித்து திறமையை வெளிக்கொணர உதவுங்கள். நல்ல ஆசிரியர் ஒருவரைப் போல அதைச் செய்யுங்கள். அதுதான் குழந்தைகளின் மீதான அன்பைச் சொல்லும் மொழி. இது வீணையை மீட்டுவதைப் போல எப்போதும் இனிய ராகங்களால் இல்லமும் உள்ளமும் நிறைந்திருக்க உதவி செய்யும். இல்லாவிட்டால் அபஸ்வரமாகத்தான் இருக்கும்.

தேவையான சில இடங்களில் நாணல்போல வளைந்து செல்லுங்கள். புயல் வந்தாலும் மழை வந்தாலும் கவலையில்லாமல் ஏதாவது ஒருபுறம் சாய்ந்து கொண்டிருக்க முடியும். ஆடிக் காற்றிலும் நாணல் யாருக்கும் கவலையில்லாமல் வளையும். ஆனால், மரங்களின் நிலை- எதிர்த்து நின்றால் வேறோடு பிடுங்கி எறியப்படும். இதை மனதில் வைத்து  முடிந்த அளவு விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். 

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. முகத்தில் புன்னகையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மை பிற உயிரினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது புன்னகைதான். எப்போதும் புன்னகை மலர்ந்திருக்கட்டும்.

ஆண்டில் சில நாள்களாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். இது மனதில் என்றும் அழியாத கோலங்களாக, அகற்ற முடியாத நினைவாக இருக்கும். எப்போதும் அசைபோட்டுக் கொள்ளலாம். முடிந்த அளவு அனைவரும் தினமும் ஒருவேளையாவது குடும்பத்துடன் உணவு உண்ணுங்கள். அப்போது தினமும் நடந்த நல்ல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது குழந்தை வளர வளர எனக்காகக் குடும்பம் காத்திருக்கிறது என்பதைக் கற்றுத் தரும். இது பிணைப்பை அதிகப்படுத்தும்.

முதியவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் உறவாடுங்கள். அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் புத்துணர்வு தரும். குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களின் மனதில் கண்டிப்பாக மாற்றம் உண்டாகும்.

குழந்தைகள் எப்போதும் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. கேட்கும் வார்த்தைகளைப் பேசி  செய்யும் செயல்களையும் பார்க்கிறார்கள். குழந்தைகள் முன்னிலையில் பண்பான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய கடமை பெற்றோருக்கும், வீட்டின் பெரியவர்களுக்கும் உண்டு.

உலகத்துக்காகவும் எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை நன்றாக இருக்கவும் வாழ்நாளில் வாய்ப்பிருக்கும்போது மரங்களை நட்டுப் பராமரியுங்கள். உங்களுக்குப் பிறகும் அந்த மரம் உங்கள் பெயரைச் சொல்லும். இந்தத் தீர்மானங்களை 2023 புத்தாண்டில் எடுத்துக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்துவோம், நல்வழி காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com