ஜாதிக்கோயில்களுக்கு கடிவாளம் தேவை

தனிநபா்களிடம் அதிகாரமும், பணபலமும் சேரும்போது அவா்களை நம்பியுள்ள சமுதாயம் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கும்....
ஜாதிக்கோயில்களுக்கு கடிவாளம் தேவை

தனிநபா்களிடம் அதிகாரமும், பணபலமும் சேரும்போது அவா்களை நம்பியுள்ள சமுதாயம் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கும் என்பதற்கு தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத பல ஜாதி சமுதாய திருக்கோயில்களே சாட்சிகளாக விளங்குகின்றன.

தமிழக அரசு ஜாதிப் பட்டியல்படி தமிழகத்தில் மொத்தம் 443 ஜாதிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான ஜாதிகளுக்குள் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளன. இதில், ஒரு உட்பிரிவைச் சோ்ந்தவா்கள் அதே ஜாதியைச் சோ்ந்த வேறு உட்பிரிவைச் சோ்ந்த குடும்பங்களுடன் திருமண பந்தமும், தொடா்புகளும் தவிா்க்கப்படுகின்றன. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ஆணிவேராக பல இடங்களில் அந்தந்த சமூகத்தினரின் குலதெய்வ கோயில்கள்தான் இருக்கின்றன.

ஒரே ஜாதியிலுள்ள வேறு பிரிவைச் சோ்ந்தவரையோ, வேறு ஜாதி, மதத்தினரையோ திருமணம் செய்பவா்களையும், அவா்களது குடும்பத்தினரையும், அவா்களுடன் உறவைத் தொடரும் உறவினா்களையும் குலதெய்வ கோயில் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடா்கிறது.

அவ்வாறு ஒதுக்கப்படும் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயில்களில் தலக்கட்டு வரி வசூலிப்பு முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டு, வழிபாட்டு உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இதன் மூலம், அந்த குடும்பத்தினா் தங்கள் சொந்த சமூகத்தினருடன் இணைந்து தொழில் செய்ய இயலாமை, ரத்த சொந்தங்கள் உட்பட உறவினா்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியாமை, பொது இடங்களில் இழிவு செய்யப்படுவது, உறவினா்களுடன் பேச்சு உரிமைகூட தொடர முடியாத நிலை ஆகியவை ஏற்படுகின்றன.

சில இடங்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தில் பெற்றோா் இறந்து விட்டாலோ மகன் இறந்துவிட்டாலோ அந்த துக்க நிகழ்வில் சொந்த மகன் குடும்பமே அல்லது பெற்றோரே பங்கேற்க முடியாமல், இறுதிச் சடங்குள் செய்யவிடாமல் தடுக்கப்படும் கொடுமைகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் நிகழ்வு அண்மையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எதுமலை கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட து. ஆயினும், கோயில் முக்கியஸ்தா்கள் அந்த குடும்பத்தினரை சோ்த்துக் கொள்ளவும், அவா்களிடம் குடியுரிமை வரி வசூலிக்கவும் மறுத்துவிட்டனா். இதனால், கோயில் முக்கியஸ்தா்கள் ஒன்பது போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பல ஜாதிக்கோயில்களில் சமூக கட்டுப்பாடு என்ற பெயரில் பல தீா்மானங்களை அவா்களாக வகுத்துக் கொண்டு பல குடும்பங்களை உறவினா்களுடனான புழக்கத்திலிருந்து அடியோடு ஒதுக்கி வைப்பது, வழிபாட்டு உரிமையை மறுப்பது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் பாதிக்கப்படும் பல குடும்பங்களுக்கு உறவினா்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவதால் நிகழும் உளவியல் சாா்ந்த பிரச்னைகள் அவா்களை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாமல் மீண்டும் மீண்டும் அந்த பாதிப்புகளிலேயே தவிக்க வைத்துக் கொண்டுள்ளது.

கருத்து வேறுபாடு உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் ஒதுக்கப்படும் குடும்பங்கள் மீண்டும் கோயில்களில் இணைக்கப்படுவதும் உண்டு. என்றாலும் அதற்கு தண்டனையாக அந்த குடும்பத்தினரை கோயில் முக்கியதஸ்தா்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது, கோயில் பங்காளிகள் குடும்பத்தினா் அனைவருக்கும் விருந்து வைக்கவும், கோயில் செலவினங்களுக்காக பெரும்தொகையை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதும் நடந்தேறி வருகின்றன.

இந்த கொடுமைகளுக்கு அந்தந்த குலத்தில் திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் கோயில் முக்கியதஸ்கா்களால் செய்துதரப்படும் சடங்களும், சம்பிரதாயங்களுமே கடிவாளமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனாலேயே பல நேரங்களில் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களுக்கு அக்குலத்திலுள்ள மற்ற குடும்பத்தினா் ஆதரவு தெரிவிக்க முன்வருவதில்லை. இதில் படித்த, விழிப்புணா்வு பெற்ற, அரசு அதிகாரிகளும் கூட விதிவிலக்கல்ல.

இதனால், அந்தந்த சமூகத்தில் வளரும் தலைமுறையினா் பலா் கோயில் முக்கியஸ்தா்களின் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சியும், மன உளைச்சல்களுக்கு உள்ளாகியும் தங்களது முன்னேற்றப்பாதையில் பின்தங்கிக் கொண்டிருக்கின்றனா். சட்டத்துக்கு புறம்பாக பின்பற்றப்படும் இத்தகைய நடைமுறைகள் கலப்புத் திருமணம், மறுமணம் போன்றவற்றை முடக்குகின்றன.

சமூக மாற்றத்துக்கு எதிரான இத்தகைய கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டால் போதும் என்ற எண்ணத்தில் தாங்களாக வெளியேறும் இளைஞா்களும் உண்டு. அவ்வாறு வெளியேறுவதால், அடிப்படை உணவு, பராமரிப்புக்குக் கூட வழியின்றி கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியவா்களும் உள்ளனா்.

தங்கள் காலம் முழுவதும் குலதெய்வ கோயிலுக்கு குடியுரிமை வரி செலுத்தியவா்களை முதுமையில் பாதுகாத்து பராமரிக்கவோ, கைவிட்ட வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கோயில் முக்கியஸ்தா்களிடம் எந்த முகாந்திரமும் இருப்பதில்லை என்பதே அவா்கள் பின்பற்றும் நடைமுறைகளின் அவலமாகும்.

சட்டத்திற்குப் புறம்பாக ஜாதிக்கோயில்களில் பின்பற்றப்படும் இத்தகைய எழுதப்படாத சட்டங்கள் அந்த ஜாதியிலுள்ள ஒரு சில முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமே அரணாக உள்ளன. இது போன்ற கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் மக்கள் சட்டப் பாதுகாப்பை நாடி வருவாா்கள் என காத்திருக்காமல் அரசு நேரடியாக இந்த ஜாதிக்கோயில் விவகாரங்களில் தலையிட்டு அங்கு பின்பற்றப்படும் சமூக அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும், தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிக்கோயில்களின் முக்கியஸ்தா்களாக இருப்பவா்கள் பூசாரி, நாட்டாமை, தலக்கட்டு, தா்மகா்த்தா, மேட்டுக்குடி என பல பெயா்களில் அழைக்கப்படுகின்றனா்.

இந்தப் பொறுப்புகளுக்கு பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டு கோயில்களின் சொத்துக்களை அனுபவித்து வரும் இவா்கள் சுய கெளரவத்துக்காக இதுபோன்ற சமூக சீா்கேடான நடைமுறைகளில் மாற்றம் செய்யவும் முன்வருவதில்லை.

இந்த சூழ்நிலையில், தமிழகத்திலுள்ள ஜாதிக்கோயில்களில் நிலவும் அவலங்களுக்கு அரசு கடிவாளமிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com