எல்ஐசி பங்கு: வீழ்ச்சியும் ஆலோசனையும்

எல்ஐசி பங்கு: வீழ்ச்சியும் ஆலோசனையும்

 எல்ஐசி ஆஃப் இந்தியாவின் புதிய பங்கு வெளியீடு சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் அரசு தனது பங்கின் மூன்றரை சதவீத பகுதியை பொதுமக்களுக்கு சுமார் 21,000 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டது. ஒவ்வொரு பங்கினையும் எல்ஐசி ரூபாய் 949-க்கு வழங்கியது. இதில் சில்லறை முதலீட்டார்களுக்கும் எல்ஐசியின் பாலிசி வைத்திருப்பவர்களுக்கும் சில சலுகைகளையும் வழங்கி குறைந்த தொகையைப் பெற்றுக் கொண்டு பங்கை வழங்கியுள்ளது.
 ஆனால் "சிகிச்சை வெற்றி நோயாளி மரணம்' என்பது போல், இந்த முதலீட்டில் பங்குபெற்ற சில்லறை முதலீட்டார்கள் தற்போது பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். ரூபாய் 949-க்கு வெளியிடப்பட்ட பங்குகள், பங்குச் சந்தையில் வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து சரிவை சந்தித்து வருகிறது. ஜூன் 15-ஆம் தேதி, இந்த பங்கு, தேசிய பங்குச் சந்தையில் ரூபாய் 688-க்கு முடிவுற்றது. இது கிட்டத்தட்ட வெளியிடப்பட்ட விலையிலிருந்து 27 சதவீதம் குறைவு.
 இதுபோன்ற சூழ்நிலைக்குக் காரணம், எல்ஐசி தனது பங்கினை அதிக விலைக்கு சந்தைப்படுத்தியதே ஆகும். இதற்கு முன்பாக வந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய வெளியீட்டு பங்கின் விலையினை விட எல்ஐசி தனது பங்கினை அதிக விலைக்கு வெளியிட்டுள்ளது.
 அந்த நிறுவனங்கள் தங்களின் ஒரு பங்கின் வருவாயினை போல் எவ்வளவு மடங்கு அதிகமாக வெளியீட்டு தொகையினை நிர்ணயித்ததோ அதை விட மிக அதிமாக எல்ஐசி நிர்ணயித்துள்ளது.
 அதே போல அந்த நிறுவனங்கள் தனது புத்தக மதிப்பை போல் எவ்வளவு மடங்கு அதிகமாக நிர்ணயித்ததோ, அதை விட அதிக விலைக்கு எல்ஐசி நிர்ணயித்துள்ளது. எனவே பங்குச் சந்தையில் எல்ஐசியின் பங்கு வீழ்ச்சி அடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
 பல சில்லறை முதலீட்டார்கள் தற்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். தற்போது நஷ்டத்துடன் வெளியேறுவதா அல்லது வரும் காலங்களில் விலை ஏறும் என்று காத்திருப்பதா என்பது உடனடியாக விடை சொல்ல முடியாத கேள்வி.
 இதுபோன்ற சில்லறை முதலீட்டார்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் விட்டு விட்டால் வரும் காலங்களில் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையே நிறுத்திவிடுவார்கள். தனியார் நிறுவனங்கள் போல் அரசு நிறுவனமான எல்ஐசி அலட்சியமாக இருந்துவிட முடியாது. முதலீட்டார்களுக்கு சந்தையில் பங்கின் மதிப்பு அதிகமானால் மட்டுமே பயன் உண்டு. அதை கருத்தில் கொண்டு சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
 எல்ஐசி போனஸ் பங்குகளை வெளியிடலாம் என்பது ஒரு யோசனை. போனஸ் பங்குகள் என்பது பங்குதாரர்களுக்கு இலவசமாக பங்குகளை கொடுப்பது. எடுத்துக்காட்டாக, தற்போது ஒருவரிடம் நூறு பங்கு இருக்குமானால் அவருக்கு இன்னும் ஒரு நூறு பங்குகளை இலவசமாகக் கொடுக்கலாம். இதை ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று சொல்லலாம்.
 இவ்வாறு செய்யும்போது நிறுவனம் தனது ரிசர்வ் கணக்கில் உள்ள தொகையை பங்கு கணக்கிற்கு மாற்றி போனஸ் பங்குகளை வெளியிடும். அதாவது போனஸ் பங்கினால் நிறுவனத்தின் அடிப்படை பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் நிகழாது. ஒரு நிறுவனத்தின் மொத்த நிதியான பங்கு கணக்கு பிளஸ் ரிசர்வ் கணக்கில் எந்த மாற்றமும் இல்லை.
 இது போன்று இலவச பங்குகள் வெளியிட்டால், அதே அளவுக்கு பங்குச் சந்தையில் பங்கின் விலை குறைந்து விடும். ஆதலால் முதலீட்டார்களுக்கு எந்த ஆதாயமும் ஏற்பட வழியில்லை.
 மற்றொரு ஆலோசனை, ஒரு சிறப்பு ஈவுத்தொகை வழங்கலாம் என்பது. இதுபோன்று செய்தால் நிறுவனத்தின் நிதி குறையும். நிறுவனத்தின் லாபம் ஈட்டும் திறமையும் குறையும். மேலும் எந்த அளவு ஈவுத்தொகை வழங்கப்பட்டதோ அந்த அளவு பங்கின் புத்தக மதிப்பும் குறையும். இது பங்குச் சந்தையில் விலையை குறைக்கும். எனவே இந்த யோசனையும் சரியல்ல.
 வேறு என்னதான் வழி? எல்ஐசி நிறுவனம் உரிமைப் பங்கு வெளியீடு (ரைட் இஷ்யூ) பற்றி பரிசீலனை செய்யலாம். "உரிமைப் பங்கு வெளியீடு' என்பது தற்போது உள்ள பங்குதாரர்களுக்கு மேலும் பங்குகளை சலுகை விலைக்கு வழங்குவது.
 உதாரணமாக, தற்போது எல்ஐசியின் பங்கின் விலை 700 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் எல்ஐசி சலுகை விலையில் பங்குகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக ரூபாய் 350-க்கு வழங்கலாம். தற்போதைய பங்குதாரர்களுக்கு அவர்களிடம் தற்போது உள்ள பங்கின் அடிப்படையில் எவ்வளவு உரிமை என்பதை முடிவெடுக்கலாம்.
 உதாரணமாக, ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் தற்போது நூறு பங்கு வைத்திருந்தால் அவருக்கு மேலும் நூறு பங்குகளை சலுகை விலையில் வழங்கலாம். இதனால் தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். அரசு இந்த உரிமைப் பங்கு வெளியீட்டில் பங்கு பெறாமல் தனக்கு உரிமையான 96.5 சதவீத உரிமையை விட்டு விடலாம்.
 அதனால் எல்ஐசியில் அரசின் பங்கு குறையும்; பொதுமக்களின் பங்கு அதிகமாகும். மேலும் இந்தத் திட்டத்தில் எல்ஐசிக்கு மேலும் ரிசர்வ் அதிகமாகும். இது போன்ற தீர்வு, அரசு மேலும் தனது நிறுவனங்களின் பங்குகளை பொதுமக்களுக்கு வழங்க உதவி செய்யும்.
 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டின் நிதிநிலை முடிவுகளை இந்திய எல்ஐசி வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டில் எல்ஐசி ரூ. 2,409 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்தது. இது இதற்கு முந்தைய ஆண்டின் லாபத்தை விட 17.41 சதவீதம் குறைவு. ஒரு நிறுவனத்தின் சமீபத்திய லாப ஈட்டலைப் பொறுத்தே பங்குச் சந்தையில் அதன் விலை அமையும். லாபம் குறைந்துள்ள நிலையில் எல்ஐசியின் பங்குகள், தானாகவே விலை அதிகமாகும் என்று எதிர்பார்க்க முடியாது.
 எல்ஐசியின் நிர்வாக இயக்குநர் ராஜ்குமாரின் அறிக்கையில், எல்ஐசியின் லாபம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களைப்போல் உயர இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்க வேண்டியதாகும். எனவே தற்போதுள்ள எல்ஐசி முதலீட்டார்களுக்கு உதவ உரிமைப் பங்கு வெளியீடே சரியான தீர்வாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com