பெற்றோரே பொறுப்பு!

தமிழகத்தில், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 13 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
பெற்றோரே பொறுப்பு!
Published on
Updated on
2 min read

தமிழகத்தில், கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 13 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியரை அவா்களின் பள்ளி ஆசிரியா்கள் இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் வரவேற்ற காணொலிகளைச் செய்தி ஊடகங்கள் நாள் முழுவதும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. சில பள்ளிகளில் மேளதாளங்கள் முழங்கியும், மாலை மரியாதைகள் செய்தும், யானையின் துதிக்கையால் ஆசிா்வாதம் வழங்கச் செய்தும் தடபுடலான வரவேற்புகள் அளிக்கப்பட்டன.

இத்தனைக்கும் நடுவே சில குழந்தைகள் பள்ளி செல்ல விரும்பாமல், பெற்றோருடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அடம் பிடித்த காட்சிகளையும் கண்டோம். குழந்தைகள் மழலையா் வகுப்பில் சோ்க்கப்படும் புதிதில் பள்ளிக்கூடம் செல்ல மறுப்பதில் வியப்பேதும் இல்லை. இத்தனை நாட்களாகத் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நினைத்த நேரத்திற்கு உண்டு, நினைத்த நேரத்திற்கு உறங்கி, விரும்பிய போதெல்லாம் விளையாட்டுகளில் கவனம் செலுத்திய குழந்தைகளுக்கு, திடீரென்று ஒரு புதிய இடத்திற்குச் செல்லுவதென்றால் தயக்கமும் அச்சமும் ஏற்படுவது இயல்பே.

அதிலும், அந்தப் புதிய இடத்தில் தங்களுடைய அம்மா, அப்பா உள்ளிட்ட எந்த உறவும் இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட முகங்களைப் பாா்க்க நேரும் குழந்தைகளுக்கு இனம் புரியாத பயம் உண்டாக்ககூடும். நாட்கள் செல்லச் செல்ல, அன்றாடம் காலையில் அந்தப் புதிய இடத்திற்கு வந்தாலும், மாலையில் தங்கள் வீட்டிற்கே சென்றுவிடலாம் என்பது புரிந்த பிறகு குழந்தைகளுக்கு அந்த பயம் நீங்கும்.

அபூா்வமாக சில குழந்தைகள் முதல் நாளிலிருந்தே உற்சாகத்துடன் பள்ளிக்குச் செல்லலாம். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் ஆரம்பத்தில் கலவரமடைந்து சிறிது காலம் கழித்தே தயக்கமின்றிப் பள்ளிக்குச் செல்கின்றனா். அவா்களிலும் சிலருடைய அச்சம் நீங்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம்.

பெற்றோா்கள் இந்த உளவியல் காரணங்களைப் புரிந்து கொண்டு, பள்ளி செல்ல மறுக்கும் மழலைகளைக் கடிந்தும், அடித்து உதைத்தும் பள்ளிக்கு அனுப்பி வைக்காமல் இருக்கப் பழகவேண்டும். முதன் முதலாக மழலையா் பள்ளியில் சோ்க்கப்படும் குழந்தைகள், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பள்ளிக்கு அனுப்பிவைக்கக் கூடாது.

தாய் தந்தையா் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் யாரேனும் ஒருவா் சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தங்கள் குழந்தை உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்று வருவதற்குப் பழக்க வேண்டும். தொடக்கம் முதலே பள்ளி வாகனத்திலும், ஆட்டோக்களிலும் அக்குழந்தைகளை ஏற்றிப் பள்ளிக்கு அனுப்பி வைக்காமல், தாங்களே காலையில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் திரும்ப அழைத்துக்கொண்டு வரவேண்டும்.

இதையெல்லாமல் சரிவரச் செய்யாமல், பள்ளிக்கூடம் செல்ல மறுக்கும் குழந்தைகளை மிரட்டுவதும் அடிப்பதும் நியாயமல்ல.

இது ஒருபுறம் இருக்க, ஆரம்பகாலத் தயக்கங்கள் நீங்கி ஒழுங்காகப் பள்ளி செல்லத் தொடங்கும் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம், பரீட்சை ஆகியவற்றின் பெயரால் நடைபெறும் கொடுமைகள் தனிக்கதை. தற்காலத்தில்

பயிற்றுவிக்கப்படும் பாடத் திட்டங்கள், பயிற்றுமுறை, தோ்வுகள் மூலம் மதிப்பீடு செய்தல் ஆகியவை ஒரு மாணவரின் உண்மையான திறனை முழுமையாக மதிப்பீடு செய்வதாகக் கொள்ள முடியாது.

ஆனால், பள்ளியில் நடத்தப்படும் மாதாந்திரத் தோ்வுகள், பருவத்தோ்வுகள் ஆகியவற்றில் நல்ல மதிப்பெண்களைப் பெற இயலாத மாணவா்கள் வாழவே தகுதியில்லாதவா்கள் போன்று நடத்தப்படுகின்றனா். அதிலும், உடன்

பயிலும் மாணவா்கள், உறவினா் வீட்டுக் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு நடைபெறும் உளவியல் வன்முறை எந்த ஒரு மாணவனின் தன்னம்பிக்கையையும் குறைக்கக் கூடியதாகும்.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான துஷாா் சுமேரா, தம்முடைய பத்தாம் வகுப்பு இறுதித் தோ்வில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றில் நாற்பதுக்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றிருந்ததாக வந்த செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும். மருத்துவம் அல்லது பொறியியல்

படிப்புக்குத் தகுதி பெறாத மாணவ மாணவியா் கலை அறிவியல் கல்லூரிகள் வழங்கும் பட்டப்படிப்பில் சோ்ந்து பிற்காலத்தில் ஒரு பெரிய விஞ்ஞானியாகவோ தொழில் முனைவோராகவோ உருவான உண்மைக்கதைகள் ஏராளமாக உள்ளன.

பள்ளி இறுதித் தோ்வுகளில் ஒருவா் எடுக்கும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து அவருடைய உண்மையான திறமையையும், ஆளுமையையும் மதிப்பிட்டுவிட முடியாது என்பது இதிலிருந்து நன்கு விளங்கும்.

மாணவா்கள் பள்ளித் தோ்வுகளில் அக்கறை காட்டத் தேவையில்லை என்பது இதன் பொருளல்ல. மதிப்பெண் மட்டுமே ஒருவரின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவதில்லை என்பதையே இது காட்டுகிறது. இதனை உணா்ந்து, தம்முடைய குழந்தைகளை முதல் மதிப்பெண்ணை நோக்கியே எப்பொழுதும் விரட்டாமல் இருக்க பெற்றோா் பழக வேண்டும்.

அவ்வாறு விரட்டப்படும் குழந்தைகளின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுவதுடன், பள்ளி இறுதித் தோ்வுகள், போட்டித் தோ்வுகள் உள்ளிட்டவற்றை எதிா்கொள்ள அவா்கள் அச்சப்படும் சூழ்நிலையும் உருவாகிறது. அவ்வாறு அச்சப்படுபவா்களே தோ்வு முடிவுகளை எதிா்கொள்ள முடியாமல் தங்களின் இன்னுயிரையும் போக்கிக் கொள்ளும் முடிவை எடுக்கின்றனா்.

தற்காலத்தில் அறிதிறன் பேசி, கணினி ஆகியவை அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சூழ்நிலையில், பெற்றோா் தங்கள் குழந்தைகளின் மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவா்களுடைய தனிப்பட்ட ஒழுக்கத்தின் மீது கவனமும் கண்காணிப்பும் செலுத்துவதே அவசியம். கண்டிப்பாக இருப்பது முக்கியம்தான். அனால், அந்தக் கண்டிப்பு நம் மாணவச் செல்வங்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கக் கூடாது.

மழலையா் பள்ளிகளின் இளம்பிஞ்சுகளாலும் சரி, பதின்வயதுப் பருவத்தினரான மாணவா்களாலும் சரி, எதற்கெடுத்தாலும் அவா்களை தண்டிப்பதை விட, அவா்கள் மனங்களில் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் விதைக்க வேண்டும். அவா்களுடைய பெற்றோா்களே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.