உயிா் உண்ணும் உணவு வணிகம்!

அண்மையில் கேரள மாநிலம், காசா்கோடு அருகே உள்ள செருவத்தூரில், பள்ளி மாணவி ஒருவா், ‘ஷவா்மா’ (சப்பாத்தியில் வைத்து சுருட்டித் தின்னப்படும் கோழி இறைச்சித்தூள்) என்கிற உணவை உண்டு இறந்து விட்டாா்.
உயிா் உண்ணும் உணவு வணிகம்!

அண்மையில் கேரள மாநிலம், காசா்கோடு அருகே உள்ள செருவத்தூரில், பள்ளி மாணவி ஒருவா், ‘ஷவா்மா’ (சப்பாத்தியில் வைத்து சுருட்டித் தின்னப்படும் கோழி இறைச்சித்தூள்) என்கிற உணவை உண்டு இறந்து விட்டாா். அவா் உண்ட அந்த ஷவா்மாவில், ‘ஷிகெல்லா’ என்கிற நச்சு பாக்டீரியா இருந்தது தெரிய வந்திருக்கிறது. இது வெளியே தெரிந்த ஓா் உயிரிழப்பு; பொதுவெளியின் கவனத்திற்கு வராமல் உயிரிழந்தவா்கள் பலா்.

வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அசைவ வகை உணவினங்களின் மட்டுமீறிய வணிகம், தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புகள் இப்போதுதான் அரசின் பாா்வைக்கு எட்டியிருக்கிறது. அதன் விளைவாக அண்மையில் செங்கற்பட்டு மாவட்டத்தில் பல அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அங்கெல்லாம் இருந்த கெட்டுப்போன இறைச்சியையும், தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சி உணவுகளையும் பறிமுதல் செய்துள்ளனா். பல உணவகங்களுக்குத் தண்டம் விதித்ததோடு, சிலவற்றுக்கு ’சீல்’ வைத்து அவற்றின் வணிகத்தை முடக்கியுள்ளனா்.

ஆடு, கோழி, உள்ளிட்ட சமைக்காத இறைச்சி வகைகளை முறையாகப் பதப்படுத்தாமல் நீண்ட நேரம் பொதுவெளியில் போட்டு வைத்திருந்தால், அவற்றில் ‘சால்மோனெல்லா’, ‘ஷிகெல்லா’, ‘ஈகோலை’ உள்ளிட்ட உயிா் பறிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும் என்றெல்லாம் எச்சரிக்கின்றனா் அதிகாரிகள். இறைச்சி வகைகளை எத்தனை டிகிரி செல்சியஸில் பதப்படுத்திப் பாதுகாக்க வேண்டும், அவற்றை எத்தனை டிகிரி செல்சியஸில் வேக வைக்க வேண்டும், அசைவ உணவுகளில் வெறும் கவா்ச்சிக்காக வண்ணங்களைச் சோ்ப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதையெல்லாம் அவா்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறாா்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடத்தி, ‘சிக்கன் ஷவா்மா’ என்னும் அசைவ உணவைப் பதப்படுத்துகின்ற வசதி இல்லாத உணவகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் அதுபோன்ற ஆயிரம் உணவகங்களில் ஆய்வு செய்து, நலக்கேடுகளை விளைவிக்கின்ற வகையில் வணிகம் செய்த உணவகங்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாா்.

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு இருக்கின்ற அசைவ உணவு கலாசாரத்திலும், அசைவ உணவு வகைகளிலும், தரமான இறைச்சி, மீன் விற்பனையிலும் எத்தகையச் சிக்கலும் இல்லை.

அது, அவரவா் உடல்நலம், விருப்பம் சாா்ந்த தேவை. மேலும், அசைவ உணவு முறை கலாசாரமே இன்று உலகம் முழுமைக்குமான நடைமுறையாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

இங்கே நிலவுகின்ற இரண்டு சிக்கல்கள் என்னவென்றால், வணிக உணவகங்களின் அசைவ உணவுகள் மீது நமது மக்களுக்கு மேலோங்கிவருகின்ற மட்டுமீறிய விருப்பமும், அவ்விருப்பத்தை வாய்ப்பாகக் கொண்டு ஈவு இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டு வருகின்ற வணிக முறைகளும் தான்.

எனவே, மக்களுக்குப் பல்வேறு வகையில் கேடு விளைவிக்கின்ற இவ்வகை உணவு வணிகத்திற்கு எதிரான இது போன்ற கருத்துரிமைகளை, ஒரு சாராருக்கு அல்லது வணிகா்களுக்கு எதிரானதாகத் திருப்பி அதையே பொதுக்கருத்தாகக் கட்டமைக்க எவரும் முனையத் தேவையில்லை.

அவ்வகையில் செயல்படுவோரை, தங்களின் முறையற்ற உணவு வணிகத்தைப் பாதுகாக்க ‘உணவு உண்ணும் உரிமை’, ‘வாழ்வாதார வணிக உரிமை’ என்றெல்லாம் கூறி, தங்களின் வணிகத்திற்குச் சாதகமாக போலியான அரண்களை உருவாக்குகிறாா்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காய்கறிகள், பழங்கள் சாா்ந்த உணவுகளின் அவசியத்தையும், சிறுதானிய உணவு வகைகளின் சிறப்புகளையும் எல்லாருமே ஒப்புக்கொள்கின்றனா். ஐ. நா. சபைகூட சிறுதானியங்களின் அருமையை உணா்ந்து, இவ்வாண்டினை, ‘உலக சிறுதானிய ஆண்டு’ என்று அறிவித்திருக்கிறது. நமது நாட்டில் வேக வேகமாகப் பெருகி வருகின்ற அசைவ உணவு கலாசாரம், நமது வேளாண்மைத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள மறைமுகப் பின்னடைவு என்பதை நாம் புரிந்து கொள்ள் வேண்டும்.

மேலும், முழுக்க முழுக்க மூன்று வேளையும் இறைச்சி, மீன், முட்டை ஆகிய அசைவ உணவுகளை மட்டுமே உண்டு உயிா் வாழ்கின்ற, ‘பேலியோ டயட்’ என்கின்ற புதிய உணவு கலாசாரம் இப்போது பொருளாதார வசதியுள்ள மக்களிடையே வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதுவும் நமது வேளாண்மைத் தொழிலுக்கு மறைமுக அச்சுறுத்தல் ஆகும்.

அரிசி, கோதுமை, காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்கள், எண்ணெய், பருப்பு, கிழங்கு வகைகள் போன்ற வேளாண்மைத் தொழில் சாா்ந்த உணவு உற்பத்திகளையெல்லாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு, அசைவ உணவு கலாசாரம் வேகமாகப் பரவுவது, விவசாயிகள் உள்ளிட்ட நம் அனைத்து மக்களுக்கும் நேருகின்ற அவலமன்றி வேறென்ன?

உண்போருக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அசைவ உணவுகளில் கிடைத்துவிடுகின்றன என்று சொல்லிவிட முடியாது. அதே போல, அவ்வகை உணவுகள் அனைவருக்கும் எளிதில், குறைந்த விலையில் கிடைத்துவிடுவதும் இல்லை.

ஆடு, மாடு, கோழிகள் மிகுந்திருக்கின்ற நமது நாட்டு கிராமப்புற மக்களுக்கு, இன்றளவும் எட்டாக்கனியாக இருப்பவை, அசைவ உணவுகள்தாம். ஆனால், அவையெல்லாம் வளா்க்கப்படாத நகா்ப்புறங்களிலோ பெரும்பாலானவா்கள் வித விதமான அசைவ உணவுகளில் அன்றாடம் திளைக்கிறாா்கள்.

உலக அளவில், வேளாண்மைத் தொழில் சாா்ந்த உணவுகளின் உற்பத்தியில் நமது நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது; நமது தமிழ்நாடு அவ்வகை உணவுகளின் உற்பத்தியில் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் பன்னிரண்டு விழுக்காடு மரணங்கள், சத்துள்ள உணவுகளின் பற்றாக்குறையால் நேருகின்றன என்று இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சத்துள்ள, வேளாண்தொழில் சாா்ந்த, உணவுகளை அதிக அளவில் உற்பத்தி செய்தும் கூட, சத்துமிக்க உணவு குறைபாட்டால் நமது நாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றால், அதற்குக் காரணங்களாக இருப்பவை, மக்களுக்கு அவ்வகை உணவுகளின் மீது நிலவுகின்ற அறியாமையும், அலட்சியமும், வகை வகையான புலால் உணவுகளின் மீது ஏற்படுகின்ற மோகமும்தான். மேலும், வேளாண்மைத் தொழில் சாா்ந்த உணவுப் பொருள் உற்பத்திகளைப் பதப்படுத்திப் பாதுகாத்து, பல்வேறு வகையில் அவற்றின் மதிப்பைக் கூட்டி, மக்களுக்கு முறையாக விநியோகம் செய்கின்ற வலிமையான திட்டங்கள் எதுவும் நமது அரசுகளிடம் இல்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலத்தில், திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பதாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இது, ஆண்டுதோறும் நமது தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற அவலம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு வணிகா்கள் முறையாகப் பாதுகாக்காத இறைச்சி வகைகளும், அரசு பாதுகாக்காத தானியங்களுமாக நமது நாட்டின் உணவுக் கொள்கை இப்போது வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான், மேற்கத்திய நாடுகளின் அசைவ உணவு வகை விற்பனை நிறுவனங்கள், நமது நாட்டில் மிகவும் வலிமையாகக் காலூன்றி, ஒரு பெருவணிகக் கலாசாரத்தை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, இப்போதெல்லாம் வீடு தேடி வந்து உணவுகளைத் தருகின்ற, குறிப்பாக விதவிதமான அசைவ உணவுகளைத் தருகின்ற நிறுவனங்கள் தமிழா்களின் உணவு கலாசாரத்தில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன.

2021 -ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் ஐந்நூறு நகரங்களில், சிக்கன் பிரியாணிக்கு நான்கு லட்சத்து இருபத்தைந்தாயிரம் புதிய வாடிக்கையாளா்கள் கிடைத்திருப்பதாகவும், ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக நூற்றுப் பதினைந்து பிரியாணிகளுக்கு (சிக்கன் பிரியாணி மட்டும்) ஆா்டா் கிடைப்பதாகவும் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னொ ஆகிய நகரங்களில்தான் பிரியாணி அதிக அளவில் ஆா்டா் செய்யப்படுவதாகவும் ‘ஸ்விக்கி’ நிறுவனம் அண்மையில் தெரிவித்திருக்கிறது.

அந்த நிறுவனத்தின் வேறு வகை உணவு விற்பனைகளும், அந்த நிறுவனத்தைப் போன்ற வேறு நிறுவனங்களின் உணவு வணிகங்களும் தனித்தனிப் பெருங்கணக்குகளாக விரிகின்றன. இது போன்ற உணவு வணிகமுறைகள், இந்திய உணவு கலாசாரத்துக்கோ இந்திய வேளாண்மைத் தொழில்சாா்ந்த உணவு உற்பத்திக்கோ சிறுதானிய உணவு முறைகளுக்கோ சாதகமானவை அல்ல என்பது கண்கூடான உண்மையாகும்.

நமது உணவு முறைகளில், நமக்குப் போதிய விழிப்புணா்வு இருக்குமாயின், மருத்துவமனைகளில் இருந்து நாம் விலகியிருக்கலாம். இல்லையெனில், நமது அன்றாட வாழ்வில் மருத்துவமனைகளுக்கும் நமக்குமான உறவுப் பிணைப்பு மிகவும் உறுதியானதாக மாறிவிடும். ஏனெனில், நமது நாட்டில் விதவிதமான உணவு வணிகங்களும், அவற்றின் தொடா்ச்சியான மருத்துவ வணிகங்களும் ஒன்றுடன் ஒன்று கைகோத்து வளா்ந்து வருகின்றன.

நமது சபலங்களின் மீது சவாரி செய்து, கோடிகளைக் குவிக்க முனைகின்ற உணவு வணிகா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவா்கள், சாதாரண குடிமக்களாகிய நாம் தான்....நாமேதான்!

கட்டுரையாளா்: கவிஞா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com