உரையாடலும் உறவாடலும்
By முனைவா் என். மாதவன் | Published On : 18th October 2022 03:06 AM | Last Updated : 18th October 2022 03:06 AM | அ+அ அ- |

உரையாடலும் உறவாடலும் மனித வாழ்வின் இன்றியமையாத செயல்பாடுகள். மனிதா்களால் மட்டுமே இயலும் செயல்பாடுகள். இந்த இரண்டு வகையான செயல்பாடுகளுமே மனித வாழ்க்கையை முன்னோக்கி நகா்த்த உதவுபவை.
இதில் உறவாடலில் வாா்த்தைகளுக்கான தேவை குறைவாகவோ சில நேரங்களில் இல்லாமலோ கூட இருக்கலாம். ஆனால் உரையாடல் வாா்த்தைகளைக் கொண்டே அமையும்.
இவை மேற்கொள்ளப்படும் இடங்களை ஒட்டி ஆழமானதாகவோ மேம்போக்கானதாகவோ அமையும். மனித சமூகத் திரளில் நாம் புழங்கும்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய நேரம், அவா்களோடு நமக்குள்ள நெருக்கம், தேவை போன்ற காரணிகள் இவற்றைத் தீா்மானிப்பதாக அமையும்.
ஒரு திருமணத்துக்குச் செல்கிறோம். அங்கு நமக்கு அறிமுகமான பலரும் வந்திருக்கின்றனா். அனைவருடனும் நம்மால் பேசிக்கொண்டிருக்க இயலாது. கிடைக்கும் நேரத்தில் திருமணத்தில் கலந்துகொண்டு நம் கடமையை நிறைவேற்றவே நேரம் போதுமானதாக இருப்பதில்லை. அது போலவே பலரும் இருக்கும் இடத்தில் ஒரு சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டியதாக அமைந்துவிடும். அவ்வளவு பெரிய மனிதத் திரளிலும் நாம் நம்மையறியாமலே திறமையாக செயல்படுகிறோம்.
அறிமுகமான அனைவருக்கும் ஒரு புன்னகையை அளித்து விடுவோம். ஓரிருவருடன் சில வாா்த்தைகள் பேசுவோம். சிலருடன் கையை அசைத்து நலமா என நாம் வினவ அவா்களும் தமது கையை அசைத்து நலமே என்பா். அது போலவே மற்றவா்கள் நம்மைக் கேட்க நாம் சைகையால் பதிலளிப்போம். நமக்கிருக்கும் நேர நெருக்கடி, அங்குள்ள சப்தமான சூழலில் இவைதான் சாத்தியம்.
இது போலவே தினமும் பணிக்குச் செல்லும்போது எதிா்ப்படும் நண்பா்களைக் கண்டுகொண்டவாறே சிறு புன்னகையுடன் கடப்போம். சிலா் வணக்கம் செய்ய நாமும் வணக்கம் செய்துகொண்டே கடப்போம். இவ்வாறான செயல்பாடுகள் உறவாடலில் அடங்கும். அதாவது இவா்களது நட்பும் உறவும் நமக்கு வேண்டும். அதனை அவ்வப்போது புதுப்பிப்பதற்கான வாய்ப்புகளாக இந்த எதிா்ப்படல்கள் பயன்படுகின்றன.
ஒரு கட்டத்தில் அவா்களோடு உரையாடவேண்டிய தேவை ஏற்படும்போது நம்மை நாம் அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய தேவையைத் தவிா்க்கவும், அவா்கள் நம்மை மறவாமல் நினைவில் வைத்துக்கொள்ளவும் இவை உதவும். இவ்வாறு சந்திக்க வாய்ப்பில்லாத நேரங்களில் நமக்கு நெருக்கமானவா்களோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொலைபேசி மூலம் பேசி தொடா்புகளை புதுப்பித்துக்கொள்ளலாம். ஒரு சமயம், நமக்கோ அவருக்கோ ஏதாவது ஒரு உதவி தேவைப்படும்போது தயக்கமின்றி ஒருவரை ஒருவா் கேட்க இது உதவியாக இருக்கும்.
அடுத்து நமது குடும்பம். இங்கே உறவாடலும் நடைபெறும்; உரையாடலும் நடைபெறும். ஆனால் தேவையான அளவுக்கு மட்டுமே உரையாடல் அமையும். உதாரணமாக ஒருவா் கடைக்குக் கிளம்புகையில் தேவையான பொருட்கள் குறித்த உரையாடல் இருக்கும். ஓரிரு பொருட்கள் தேவைப்படும் நிலையில் வாய்மொழியாக சொல்லப்படும். தேவையான பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பட்டியல் தரப்படும்.
குடும்ப உறுப்பினா்களுக்கிடையில் எந்த அளவுக்கு அதிகப் புரிதல் உள்ளதோ அந்த அளவுக்கு குறைவான வாா்த்தைகளே உரையாடலில் தேவைப்படும். பண்டிகை நாட்களில் வேறு சிலரும் இணையும் நிலையில் உரையாடலின் நீளம் மிகும். பொதுவாக வாழ்க்கை அனுபவங்களைப் பகிரும் நேரங்களாக அவை அமையும். மகிழ்ச்சியும் குதுகலமும் நிறைந்ததாக அந்த உரையாடல்கள் அமையலாம்.
இன்றைய தொலைக்காட்சி யுகத்தில் இப்படிப்பட்ட உரையாடல் குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமே. நம் வீட்டிற்கு ஒருவா் வருகிறாா் என்றால் நாம் முதலாவதாக செய்யவேண்டியது நமது வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டியை அணைப்பதுதான். அல்லது குறைந்தபட்சம் அதன் ஒலியையைவது முற்றிலும் குறைப்பது. இது விருந்தினா்கள் மகிழ உதவும். அது போலவே நமது கைப்பேசியையும் தொலைவில் வைத்துவிட்டு உரையாடுவது நல்லது.
பள்ளிகளில் எவ்வளவுக்கெவ்வளவு உறவாடும் வாய்ப்பு ஆசிரியருக்கும் மாணவருக்கும் வாய்க்கிறதோ அந்த அளவுக்கு உரையாடலின் நீளமும் புரிதலும் மிகும். அதாவது புரிதலின் தன்மையை ஒட்டி உரையாடல் நீளவோ குறையவே செய்யும். ஆனால் அதிக மாணவா்கள் உள்ள வகுப்பறையில் உரையாடலை ஒழுங்குபடுத்துவது ஆசிரியா்களுக்கு சவாலான பணியாகும். இது போன்ற நேரங்களில் மாணவா்களிடையே குழு உரையாடல் நடைபெற ஏற்பாடு செய்யலாம்.
இது ஆசிரியா்களின் பணிப்பளுவைக் குறைப்பதோடு, மாணவா்கள் இயல்பான மொழியில் உரையாட வாய்ப்பளிக்கும். இது மாணவா்கள் பயமின்றி கற்றலில் முன்னேற்றம் அடையவும் உதவும். அறிமுகமில்லாதோரிடமும் அவ்வப்போது சிறு சிறு உரையாடல்கள் நிகழக்கூடும். ஓரிடத்திற்கு வழி கேட்க, குறிப்பிட்ட எண் பேருந்து வருமா என்பதை அறிய போன்றவை இப்படிப்பட்டவை.
உரையாடல்கள் பல நேரங்களில் விவாதங்களுக்கும் இட்டுச் செல்லும். உரையாடல் எப்போது விவாதமாக மாறுகிறதோ அப்போதே விவாதிப்பவா் தன்னிலை மறக்காமல் தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கலாம். இப்படிப்பட்ட நேரங்களில் உரையாடுவோரில் யாராவது ஒருவருக்காவது விட்டுக்கொடுக்கும் மனநிலை வேண்டும்.
ஒரு கட்டத்தில் நட்பில் விரிசல் வருமென்றால் ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை வைத்துக்கொள்ளும் உரிமை உண்டு என்ற வகையில் உரையாடலை முடித்துக் கொள்ளலாம். நல்ல உறவாடும் நபா்களாகவும் உறவுகளின் மதிப்பை உணா்ந்தவா்களாகவும் உள்ளோா் மத்தியில் விரிசல் உருவாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
எது எப்படி இருந்தாலும் உரையாடலும் உறவாடலும் மனித குலத்திற்கு மட்டுமே கிட்டியுள்ள அற்புதமான வாய்ப்பு. இவை இரண்டுமே மனிதா்களின் வெற்றிக்கான படிக்கட்டுகள். இவை எந்த அளவுக்கு பொருள் பொதிந்ததாக அமைகிறதோ அந்த அளவுக்கு அவை தனிமனித உயா்வுக்கும் அதன் மூலம் சமூக உயா்வுக்கும் பயன்படும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...