ஒரு காலத்தில், செயற்கரிய சாதனைகளைச் செய்தவர்களுக்குத்தான் சிலைகள் நிறுவப்பட்டன. நிலையில்லாத உலகத்தில், நிலைத்து நிற்கும்படியான அரும்பெருஞ்செயல்களை செய்து முடித்துவிட்டு மாய்ந்தவரே, மாண்புடையவர்களாகத் திகழ்கின்றனர். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே' என்பது புறநானூறு. வீரபத்தினி கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் தங்களுக்குச் சிலை வைத்துக் கொள்ளவில்லை.
மகாத்மா காந்தியடிகளுக்கு ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் சிலைகள் எழுப்பப் பெற்று இருக்கின்றன. அவருடைய சிலையைப் பார்ப்போர் எல்லாம் அவரை வணங்குகிறார்கள். வேறு சிலருடைய சிலைகளைக் காக்கைகளைத் தவிர ஏரெடுத்துப் பார்ப்பார் எவரும் இல்லை. லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் எனும் இடத்தில் டிரபால்கர் சதுக்கத்தில், நெப்போலியனைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி நெல்சனுக்கு ஒரு நினைவுத் தூண் எழுப்பியிருக்கிறார்கள். அந்தத் தூணின் தலையில் நெல்சனுடைய தலையை மட்டும் அமைத்திருக்கிறார்கள். ஆனால், அச்சிலை பார்ப்போருக்கு ஒரு வரலாற்றையே சொல்லுகிறது.
இங்கிலாந்தை நோக்கி கப்பல்களில் படையெடுத்து வந்த நெப்போலியனைக் கடல்போரில் வல்ல தளபதி நெல்சன், வாட்டர்லூவில் மிக எளிதாகக் தோற்கடித்து விடுகிறான். பிரெஞ்சுப்படை முற்றாகத் தோற்று, தாம் பயணித்து வந்த கப்பல்களை எல்லாம் விட்டுவிட்டுப் பறந்தோடி போய்விடுகிறது.
அந்தக் கப்பல்களை எல்லாம் ஆங்கிலேயர் உடைத்து அவற்றிலிருந்த இரும்புகளை எல்லாம் எடுத்து உருக்கி, அவற்றைக் கொண்டு ஒரு பெரிய தூணை கட்டமைத்தார்கள். அந்தத் தூணில், தங்களுடைய வெற்றி வரலாற்றைச் செதுக்கினார்கள். அதுதான் டிரபால்கரில் நட்டுவைக்கப்பட்ட தூண். அத்தூணில் உச்சியில் நெல்சனில் தலை வடிவம். லண்டனுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அத்தூணைப் பார்க்காமல் செல்வதில்லை. அந்த வரலாற்றைப் படிக்காமல் செல்வதில்லை.
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் புத்துயிரும், புதுரத்தமும் பாய்ச்சிய நான்கு அதிபர்கள், ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், ஆபிரகாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோர். தெற்கு டெகொடா மாநிலத்தில் இருக்கும் "கறுப்புமலை' என அழைக்கப்படும் ரஸ்மோர் மலையில், 800 அடி உயரத்தில் குறிப்பிட்ட நான்கு அதிபர்களின் முகங்களை மட்டும் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
1927-ஆம் ஆண்டு 2,50,000 டாலர் ஒதுக்கீட்டில் தினமும் 400 ஆட்களைக் கொண்டு தொடங்கப்பட்ட அப்பணி, 1941-ஆம் ஆண்டுதான் முற்றுப்பெற்றது. சமூகவிரோதிகள் அவற்றைச் சிதைத்து விடாமல் இருப்பதற்குக் கடுமையான பாதுகாப்பு அரணும் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா வருகின்ற சுற்றுலாப் பயணிகள், அதனை ஒரு திவ்விய தேசமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர். அமெரிக்கர்கள் எதிர்காலவியலில் வல்லவராயிற்றே! (இதனைத் திட்டுமிட்டுச் செதுக்கிய சிற்பி உல கப்புகழ் பெற்ற கட்ஸன் போர்க்கலம் ஆவார்).
மிகப்பெரிய ஆளுமைக்குரிய சகல சாதுரியங்களையும் பெற்றவர் சர்தார் வல்லபபாய் படேல். அந்த இரும்பு மனிதர் இல்லால் போயிருந்தால், ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானோடு, அம்மாநிலத்தை இணைத்திருப்பார். அந்த மாமனிதருக்கு குஜராத் மாநிலத்தில் சிலையெழுப்பி நினைவகமும் ஏற்படுத்தியமை, சாலச் சிறந்த செய்கையாகும்.
சில வியத்தகு நிகழ்ச்சிகளும் சிலைகள் வரலாற்றில் உண்டு. 1927-ஆம் ஆண்டு "நீல்' என்பவன் வாராணசியில் கவர்னராக இருந்தான். அவனைப் போன்ற கொடுங்கோலனை வரலாற்றில் காண்பதரிது. விடுதலைப் போராளிகள் யாரைக் கண்டாலும் சுட்டுத் தள்ளுவான் அல்லது தூக்கிலே போடுவான். வாராணசியிலே போதிய தூக்கு மரங்கள் இல்லாத காரணத்தால், மரக்கிளைகளில் தூக்குக் கயிற்றைத் தொங்கவிட்டு, அதில் போராளிகளை மாட்டித் தொங்கவிட்டான்.
விடுதலைப் போர், வெகுஜன ஆதரவைப் பெற்று வரும்போது, கொடுங்கோலன் நீல் சிலைகளைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற கருத்து தலைவர்களால் வற்புறுத்தப்பட்டது. காங்கிரஸ் கமிட்டியும் அதற்கு ஆதரவு தந்தது. ஆனால், காந்தியடிகள் அந்த வன்முறைக்கு இணங்க மறுத்தார். ஆனால் காமராசர், சோமயாஜுலு போன்ற தொண்டர்களை அழைத்துக் கொண்டு, நீல் சிலையைத் தகர்ப்பதற்குச் சென்னைக்கு விரைந்தார். அந்தச் செய்தி காந்தியடிகள் காதுகளுக்கு எட்டியது. அண்ணல் காந்தி, அந்த செயலை மென்மையாகச் செய்யும்படி பணிந்தார்.
அதனால், காமராசர் களிமண் உருண்டைகளைத் தயாரித்து சென்னையிலிருந்த நீல் சிலை மீது அவ்வுருண்டைகளை இரவு முழுவதும் விட்டெறிந்து, அவன் உடம்பு முழுமையும் உருண்டைகளால் நிரப்பினர்.
சிலை தகர்வில் சில அநியாயங்களும் நிகழ்ந்துள்ளன. முதல் உலகப்போர் முடிந்தவுடன் சோவியத் நாட்டிலிருந்த லியோ டால்ஸ்டாயினுடைய சிலையை, ஆத்திரக்காரர்களாகிய நாஜிக்கள் அடித்து உடைத்துத் தகர்த்து விடுகின்றனர். வார்சா மாநாட்டை முடித்துவிட்டு கோவை வழியாகக் கேரளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த வள்ளத்தோள் நாராயண மேனனுக்கு அச்செய்தி தெரிவிக்கப்படுகிறது. அதனைக் கேட்டு ஆவேசம் அடைந்த வள்ளத்தோள், அங்கேயே ஆங்கிலத்தில் ஒரு கண்டனக் கவிதை எழுதுகிறார்.
"ஓ எதேச்சாதிகார போர் வெறியர்களே! டால்ஸ்டாயை யார் என்று நினைத்தீர்கள்? அவர் ருசியாவிற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லையடா? அவர் உலகத்திற்கே ஆசான்! அவர் உலகநாடுகள் அனைத்தாலும் அங்கீகரிக்கப்பட்டவர்; கெளரவிக்கப்பட்டவர்! அவர் உலக மனிதர்களின் பிரதிநிதி. எதேச்சாதிகாரிகளே! உங்களுடைய வாழ்நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன' என ஆவேசத்தோடு வடிக்கப்பட்ட கவிதையை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு கேரளத்திற்குப் புறப்படுகிறார்.
எதேச்சாதிகாரிகள் செய்த கொடுங்கோன்மைக்கு நிகரான ஒரு செயலைக் குடியரசிலும் ஒரு பெருமகன் கூச்சமில்லாமல் நிகழ்த்துகிறார். அக்டோபர் புரட்சியில் மாவீரன் லெனினோடு தோளோடுதோள் நின்றவர் ஜோசப் ஸ்டாலின். குருசேவ், சோவியத்தின் அதிபரான பிறகு, சோவியத் நாட்டிலிருந்த ஜோசப் ஸ்டாலினுடைய சிலைகளை எல்லாம் தகர்த்தெறியச் செய்கிறார். தனிமனிதர்களுக்கிடையே இருந்த ஆணவம், அகந்தையே இதற்குக் காரணம். அதனைக் கேட்டு உலகநாடுகள் வருந்தினவே தவிர, கண்டிக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் மலைப்பாறைகளில் செதுக்கப் பட்டிருந்த புத்த பகவானின் திருமுகங்களை எல்லாம் சிதைத்தெறிந்த செய்திகளை ஊடகங்களில் பார்த்தோம்.
சில சாதனையர்களுக்குச் சமூகம் கொடுக்கின்ற முக்கியத்துவம் குறித்துச் சம்பந்தப்பட்டவர்கள், நாணி தலைகுனிய வேண்டுமே தவிர அகங்காரம் கொள்ளக்கூடாது. "தம்புகழ்க் கேட்டாற்போல் தலை சாய்ந்து மரம் நிற்க' எனக் கலித்தொகை பாடல் (119) சொல்லும். கலித்தொகைப் பாடல், பிரெஞ்சு நாட்டின் விக்டர் ஹியூகோவிற்குத் தெரியாது என்ற காரணத்தால், புகழ் போதை தலைக்கேறி நின்றார். விக்டர் ஹியூகோவை "பிரெஞ்சு இலக்கியத்தின் பிராணவாயு' எனச் சொல்லுவார்கள். சிறந்த கவிஞர், நாவலாசிரியர். "தி ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டாம்' எனும் புகழ் பெற்ற நாவலைப் படைத்தவர்.
அவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பேரவை உள்ளே நுழைந்தபோது, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினராம். பிரெஞ்சு முறைப்படி மிகப் பெரிய மனிதர் பேரவைக்குள் நுழையும் போது, உறுப்பினர்கள் உட்கார்ந்த நிலையில், தங்களுடைய தொப்பியைச் சற்றே மேலே நகர்த்தி மரியாதை செய்வார்களாம். ஆனால், விக்டர் ஹியூகோ எனும் மாபெரும் இலக்கியகர்த்தா நுழைந்தபோது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்களாம்.
இவற்றால் எல்லாம் புகழ் போதை தலைக்கேறிய ஹியூகோ, ""இனி "பாரிஸ்' என்ற பெயரை எடுத்துவிட்டு, அதற்கு "விக்டர் ஹியூகோ' எனப் பெயர் சூட்டவேண்டும்'' என்று தீர்மானம் கொண்டு வந்தாராம். அன்றே அவர் புகழ், அதலபாதாளத்தில் வீழ்ந்தது.
ஐரோப்பாவின் நோயாளியாகக் கிடந்த துருக்கிக்குப் புதுரத்தம் பாய்ச்சி, அதனைப் பூலோக சொர்க்கம் ஆக்கியவர், கமால் அத்தாதுர்க். அவர் ஆற்றிய தொண்டுகளுக்காகவும், சேவைகளுக்காகவும், மக்கள் எப்படி தங்களுடைய வீரவணக்கத்தைத் தெரிவித்தார்கள் தெரியுமா? கமால் அத்தாதுர்க் போட்டியிட்டு வென்று கொண்டு வந்த தொகுதியில், இனிமேல் தேர்தலே கிடையாது எனச் சொல்லி, இன்றுவரை அத்தொகுதியைக் காலியாகவே வைத்திருக்கிறார்கள்.
நம் நாட்டிலும் அப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். இசைப்பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, கிண்டியில் மகாத்மா காந்தியடிகளுக்காக ஒரு நினைவாலயம் கட்டுவதற்குப் பல இசை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அவருடைய ஆதரவினால்தான், காந்தி மண்டபத்தின் அடித்தளமே நிற்கிறது. ஆனால், அம்மாதரசி அரசு வழங்கிய எந்தப் பதவியையும் ஏற்கவில்லை. திருப்பதி தேவஸ்தானம் அவரை தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவானாக இருக்கும்படி வேண்டிபோது மறுதலித்து விட்டார். சங்கப்புலவர் "உண்டால் அம்ம இவ்வுலகம்' என அன்று பாடியது, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மேதைகள் வரப்போவதை எண்ணித்தானோ என்னவோ! திருப்பதியில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருந்தாலும், திருமலையில் தினமும் ஒலிக்கும் அவரின் சுப்ரபாதமே, அவருக்கான சிறந்த நினைவுச்சின்னமாகும்.
காரைக்காலம்மையார் திருவாலங்காட்டைச் சென்றடையும்போது, தலையாலே நடந்து சென்றதை நாடறியும். ஏன் தலையாலே நடந்து சென்றார் தெரியுமா? அம்மையும் அப்பனும் வதிந்திருக்கும் இடத்தைப் புனிதமாகக் கருதியதால், அவ்விடத்தைக் காலால் மிதிக்கக் கூடாதென்று தலையாலே நடந்தேகினாராம். ஓர் அடக்கத்தையும் அருங்குணத்தையும் அடுத்தடுத்து வென்ற நிகழ்ச்சிகளும் பெரியபுராணத்தில் உண்டு.
திருஞானசம்பந்தர் திருவாலங்காட்டு இறைவனை வணங்க வரும்போது, திருவாலங்காட்டுக்குள்ளே நுழையவில்லை. எல்லைப்புறத்திலேயே நின்று பதிகம் பாடிப் பரவசப்பட்டுச் சென்றார். காரணம், அம்மையார் தலையாலே நடந்தேறிய இடத்தைக் காலால் மிதித்து நடக்க அஞ்சியமைதான்,
அதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனார், சீர்காழி சிவனை எல்லையில் நின்றே வணங்கிச் செல்கிறார். காரணம், சீர்காழி திருஞானசம்பந்தர் அவதரித்த மண் என்பதால்! அவ்வாறே திருநாவுக்கரசர் அவதரித்த மண்ணை மிதிக்க அஞ்சி சித்தவடமடத்திலேயே தங்கி, அங்கிருந்துத் திருப்பாதிரிப்புலியூரானை வணங்கிச் செல்கிறார், சுந்தரர்.
சோவியத் அதிபர் குருசேவ் இந்தியாவிற்கு வந்தபோது, பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அவரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். குடியரசுத் தலைவருடைய மாளிகையில் முன்னாள் கவர்னர் ஜெனரல், வைஸ்ராய் இவர்களின் படங்களை எல்லாம் பார்த்து எரிச்சலடைந்த குருசேவ், "இவர்களுடைய படங்களை எல்லாம் ஏன் இங்கே இன்னும் வைத்திருக்கிறீர்கள்? இவர்கள்தாமே உங்களை அடிமைகளாக வைத்திருந்தவர்கள்' என்று கேட்டார். அதற்குப் பண்டித நேரு, "வரலாற்றை அவ்வளவு எளிதாகக் தூக்கியெறிய முடியாது' என்றார். புத்தன் பிறந்த மண்ணில் அதுதானே முறை? அதுதானே பண்பாடு?
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).