மக்களாட்சி பழக்குவோம்!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

உலகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சொல் "மக்களாட்சி'. அந்தச் சொல் இன்றுவரை பல்வேறு புரிதல்களுடனும் பயன்பாட்டில் இருக்கின்றது. இன்றுவரை அறுதியிட்டு உறுதியாக அதற்கு ஒரு விளக்கத்தினை கொடுக்க முடியவில்லை. எல்லா வரையறைகளையும் தாண்டி இந்தச் சொல் வளர்ந்த வண்ணம் இருக்கின்றது.
 இந்தச் சொல்லுக்கான விளக்கங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. மக்களாட்சி என்பது ஆட்சிமுறையா? விழுமியமா? கோட்பாடா? கலாசாரமா? தத்துவமா? வாழ்க்கை முறையா? இப்படியெல்லாம் கேட்டால் இவை அனைத்துமே என்பதுதான் பதில். இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? அனைத்தும் கடந்த ஐயாயிரம் ஆண்டுகால மனிதகுல செயல்பாடுகளிலிருந்து வந்தவைதான்.
 இந்த அடிப்படைக் கூறுகள் ஒரு நாளிலோ இரண்டு நாளிலோ உருவாக்கப்பட்டவை அல்ல; ஐயாயிரம் ஆண்டுகளாக மக்களாட்சியை நடைமுறைப்படுத்திய நாடுகளில் நடந்த மக்கள் போராட்டங்களினால் உருவானவை. அது சுதந்திரத்தில் ஆரம்பித்து மெல்ல நகர்ந்து உரிமைக்கு வந்தது; அப்படியே சமத்துவத்தையும் சகோதரத்துவத்துவத்தையும் நோக்கிச் சென்றது.
 அதனைத் தொடர்ந்து நீதி, நியதி, நேர்மை, நியாயம், ஒழுக்கம், மாண்பு, மரியாதை, எதிர்க்கருத்தை மதித்தல் என விரிந்து கொண்டே வந்தது. இந்த அடிப்படைக் கூறுகள் எல்லாம் அரசியலுக்கு, ஆட்சிக்கு, ஆளுகைக்கு, நிர்வாகத்திற்கு மட்டும்தான் என்பதல்ல.
 இவை அனைத்தும் குடும்பங்களுக்கும், நாம் செயல்படும் நிறுவனங்களுக்கும், அமைப்புக்களுக்கும், ஏன் சமூகத்திற்கும் பொருந்தும். தனிமனிதரில் ஆரம்பித்து நாடாளுமன்றம் வரை அனைத்து இடங்களிலும் பணியாற்றும் அனைவருடைய சிந்தனையிலும், நடத்தையிலும், செயலிலும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டியவை.
 இத்தனை அடிப்படைக் கூறுகளையும் கொண்டதாக எல்லா சமூகங்களும் இயங்குகின்றனவா என்று கேட்டால், "இல்லை' என்பதுதான் பதில். ஏறத்தாழ ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் அனைத்துமே தாங்கள் மக்களாட்சியில் இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் மக்களாட்சிக்கான அடிப்படைக் கூறுகளை வைத்து ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலான நாடுகள் குறைந்தபட்ச மக்களாட்சியில்தான் இருக்கின்றன.
 தங்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை வைத்தே தாங்கள் மக்களாட்சியில் இருக்கின்றோம் என்று அந்நாடுகள் அறிவித்துக் கொள்கின்றன. அந்த நாடுகள் அதற்கு மேல் மக்களாட்சியின் அடிப்படை அம்சங்களை விரிவாக்க முயல்வதில்லை, அல்லது முடிவதில்லை. காரணம், சமூகத்தை மக்களாட்சிப்படுத்துவது என்பது ஒரு பெரும் போராட்டம்.
 மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நாடுகள்தான் அதிகமாக மக்களாட்சிக் கூறுகளைக் கொண்டு இயங்குகின்றன. பாகிஸ்தான், மக்களாட்சியில் இருப்பதாக பிரகடனப்படுத்திக்கொள்கிறது. நார்வே, சுவிட்சர்லாந்தும் மக்களாட்சியில் இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானின் மக்களாட்சிக்கும் சுவிட்சர்லாந்தின் மக்களாட்சிக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போலாகும்.
 சுவிட்சர்லாந்து நாடு 700 ஆண்டு காலம் மக்களாட்சிக்காக முனைந்து செயல்பட்டுள்ள வரலாறு பலருக்கும் தெரிவதில்லை. நாட்டுக்கு நாடு மக்களாட்சியின் செயல்பாடு வேறுபடுகிறது. காலமாற்றத்தில் சமூகங்கள் மாறும்போது மக்களாட்சியும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருகின்றது. அந்த மாற்றங்களை உள்வாங்கி செயல்படத் தேவையான புரிதலை அந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும், குடிமக்களும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
 சமூகத்தை மக்களாட்சிப்படுத்தாத நாடுகளில் அரசியலில் மக்களாட்சியை அதன் உண்மைத் தன்மையில் எதிர்பார்க்க இயலாது. குறைகளுடன்தான் அரசியல் செயல்பாடுகள் அந்த நாடுகளில் அரங்கேறிக்கொண்டிருக்கும். சமூகத்தில் மக்களாட்சிக்கு பற்றாக்குறை ஏற்படும்பொழுது அரசியலில் முழுமையான மக்களாட்சியை எதிர்பார்க்க இயலாது. இந்தப் புரிதலுடன் நாம் மக்களாட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்.
 அப்புரிதல் சாதாரணமாக வந்து விடாது. மிகப்பெரிய போராட்டத்தின் மூலம் அடைய வேண்டும். சமூகம், நிறுவனங்கள், அமைப்புக்கள் தங்களை மக்களாட்சிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால், மக்கள் தங்களின் சிந்தனைப் போக்கில், செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். மக்களாட்சி பற்றி எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அது செயல்பாட்டில் இருக்கும்.
 அதே போல் எந்த அளவுக்கு ஒரு சமூகம் மக்களாட்சியில் புரிதல் அற்று இயங்குகிறதோ, அந்த அளவுக்கு மக்களாட்சி துஷ்பிரயோகமும் செய்யப்படும். நாம் மக்களாட்சியில் இருக்கிறோம் எனக்கூறிக்கொண்டே சமத்துவமும் சுயமரியாதையும் இழந்தவர்களாக மக்களை வாழ வைத்துக் கொண்டுள்ளோம். நமது அன்றாடச் செயல்பாடுகளில் மக்களாட்சிக்கான அடிப்படைக் கூறுகளை பிரதிபலிக்கின்றோமா என்று எண்ணிப் பார்த்தால் புரியும்.
 மக்களாட்சி ஏராளமான உரிமைகளை மக்களுக்கு வழங்குகிறது. ஆனால் அந்த உரிமைகளை சமூகம் வென்றெடுக்கின்றதா, அவற்றை வென்றெடுக்கத் தேவையான புரிதலைக் கொண்டுள்ளதா, அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளையும் ஒழுக்கங்களையும் வளர்த்துள்ளதா என்று பார்த்தால் பெரும்பாலான உரிமைகள் மீறப்படுவதைத்தான் அரசும், சமூகமும் வழக்கமாகக் கொண்டுள்ளன. சட்டங்களையும், விழுமியங்களையும் பின்பற்றி வாழ்வதை ஒரு கலாசாரமாக சமூகத்திலும் அரசியலிலும் நாம் வளர்த்தெடுக்கவில்லை.
 முதலில் மக்கள் தங்களை நல்ல குடிமக்களாக மாற்றிக்கொண்டு தங்களுடைய கண்ணியத்தை மீட்டெடுக்க வேண்டும். அரசு மக்களுக்குச் செய்யும் சேவைகளை, அரசு போடும் பிச்சையாகக் எண்ணிடாமல் தங்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை சேவைகள், மக்களுக்கான உரிமைகளாகும். ஆனால் அந்த உரிமைகளுக்கு அரசாங்கமே பிச்சை போடுவதுபோல் இனாம் என்று பெயரிடுகிறது.
 மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்குத் தரும் பொருள்களை அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அல்லது தாங்கள் வருகின்ற இடத்திற்கு மக்களை வரவழைத்து, அவர்களுக்கு பயனாளி என்று பெயர்சூட்டி ஏதோ தாங்கள் போடும் பிச்சைபோல் அப்பொருள்களை மக்களை வாங்க வைக்கின்றனர். மனதளவில் உரிமை இழந்தவர்களாய் அவர்களை எண்ண வைக்கிறார்கள்.
 நாம் சமத்துவம் புரிந்தவர்களாக இருந்தால் இப்படிச் செய்ய மாட்டோம்; இப்படிச் செய்வதை அனுமதிக்கவும் மாட்டோம். இந்தச் செயல்பாடு, சமூகம் மக்களாட்சி பற்றிய முழுப்புரிதல் அற்று செயல்படுகிறது என்பதைத்தான் காட்டுகின்றது. எந்த அளவுக்கு ஒரு சமூகம் மக்களாட்சியை நன்கு புரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்துகின்றதோ அந்த அளவிற்கு அது மக்களுக்கு பயன்களை அளித்திடும்.
 மக்களாட்சி என்பது அது செயல்படுத்தப்படும் சிந்தனைச் சூழலில்தான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே மக்களாட்சியை மாண்புறச் செய்வதும் மாசுபடச் செய்வதும் அதனைப் பயன்படுத்துவோரின் புரிதலைப் பொறுத்ததேயாகும். எனவே உள்ளாட்சியிலிருந்து அரசுகள் வரை மக்களாட்சி எப்படிச் செயல்படும் என்றால் எந்த அளவுக்கு ஒட்டுமொத்த சமூகமும் மக்களாட்சி பற்றிய புரிதலுடன் செயல்படுகிறதோ அந்த அளவுக்குத்தான்.
 இதை மாற்ற, முதலில் நாம் மக்களாட்சி பழக வேண்டும். மக்களாட்சியின் அடிநாதமாக விளங்கும் அம்சங்களை நம் குடும்பங்களில், நம் சமூகத்தில் நாம் பணி செய்யும் இடங்களில் பரவச் செய்து ஒவ்வொருவரின் சிந்தனையில், நடத்தையில், செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவர முயல வேண்டும். அதற்கு முதல் படியாக நமது கிராமங்களில் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள கிராமசபையிலும் நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள ஏரியா சபையிலும் நாம் பொறுப்புமிக்க குடிமக்களாக பங்கேற்க முன்வர வேண்டும்.
 முதலில் அங்கு பங்குபெற்று நம் உரிமைகளை வென்றெடுக்கப் போராட கற்றுக்கொள்ள வேண்டும். நம் உரிமைகளுக்காகப் போராடும்போது குடிமக்களாக பொறுப்புடன், கட்டுப்பாடுடன், ஒழுக்கத்துடன் செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திர நாட்டில் மக்களாட்சியில் பங்கேற்று மதிப்புமிக்க வாழ்வை வாழ்வது ஓர்அறிவியல். அது சுதந்திரத்திற்கான அல்லது சுயாட்சிக்கான அறிவியல். அதை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 நாம் ஏழைகளாக இருக்கலாம்; ஆனால் சுயமரியாதை உடையவர்கள் என்ற உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும். நாம் சுதந்திரமான நாட்டில் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உருவாக்க வேண்டும். மக்களாட்சியை வலுப்படுத்த நாம் செய்ய வேண்டிய பணி கிராமசபையில் பங்கேற்க சாமானிய மக்களைத் தயார் செய்ய வேண்டும். அதே போல் நகரங்களில் ஏரிய ôசபையில் பங்கேற்க நகர்ப்புற ஏழை மக்களைத் தயார் செய்ய வேண்டும்.
 அவர்கள் இந்த இரண்டு இடங்களிலும் பங்கேற்று தங்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய சேவைகளை முறையாக செய்ய வைக்க அரசைப் பணிக்க வேண்டும். அதற்கு நாம் தெருவில் நின்று பயனாளியாகப் போராடாமல், நமக்காக உருவாக்கப்பட்ட மன்றங்களில் செயல்பட்டு நம் உரிமைகளைப் பெற வேண்டும்.
 தெருவில் முழக்கமிடுவது ஒலி எழுப்புவது மட்டும்தான். ஆனால் கிராமசபையில், ஏரியா சபையில் பங்கேற்பது நம் உரிமைகளை நிலைநாட்ட நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு. இந்தப் புரிதலை நாம் ஒவ்வொருவரிடமும் உருவாக்க வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com