தமிழ் அறியாத தலைமுறை?

தமிழ் அறியாத தலைமுறை?

"மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்' என்று எவனோ ஒருவன் கூறியதைக் கேட்ட மகாகவி பாரதியார் வெகுண்டெழுந்தார். "இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று அறைகூவல் விடுத்தார்.
அன்று யாரோ ஒருவன் சொன்ன வார்த்தைகள் பாரதியாரை வேதனைப்படுத்தியது. இன்று, தமிழ்நாட்டில் தமிழ் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நினைக்கும்போது நமக்கும் அத்தகு வேதனை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இக்கால இளைய தலைமுறையினர் தமிழ்மொழியை உணர்ச்சிபூர்வமாக அணுகுகின்றனரே தவிர, உணர்வு ரீதியாக அணுகவில்லை என்றே தோன்றுகிறது. செம்மொழி தமிழின் சிறப்புகளை வாட்ஸ்ஆப்பில் புகழ்ந்துதள்ளும்போதும், பிற மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவோரை நிந்திக்கும்போதும் அவர்களின் தமிழ்ப் பற்று கிளர்ந்தெழுகிறது.
அதில் தவறு ஏதுமில்லை. ஆனால், நம்மவர்களே தமிழை தவறாகப் பேசும்போதும், தவறாக எழுதும்போதும் அதை திருத்தவேண்டும் என்ற எண்ணமோ, கடமை உணர்வோ பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. போகிறபோக்கில் தமிழில் பற்பல தவறுகளை செய்துவிட்டு, அது குறித்த கவலையோ, குற்ற உணர்ச்சியோ சிறிதுமின்றி இருக்கின்றனர்.
கைப்பேசி அறிமுகமான புதிதில், அதில் தமிழ் மொழியில் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான வசதி இருக்கவில்லை. அதனால், ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ் வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பிவந்தனர். அது அவர்களுக்கு எளிதாக இருந்தது. இன்று தமிழில் தகவல் பரிமாற்றம் செய்வது எளிது. ஆயினும், சிலர் இன்றும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தே அனுப்புகின்றனர். இவர்களில் பலரும் பள்ளி, கல்லூரி மாணவர்களாக உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர், முன்னணி தமிழ் இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழ்மொழியில் எழுத்துகள் அதிகம் என்பதால், அவற்றைக் கற்றுக்கொள்வதும், தமிழில் எழுதுவதும், தமிழில் தட்டச்சு செய்வதும் சிரமமாக உள்ளது.
ஆனால், ஆங்கிலத்தில் குறைந்த எழுத்துகளே உள்ளன. எனவே, தமிழ் வார்த்தை உச்சரிப்புக்கு ஏற்ற ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி, எழுதும் முறையை கொண்டு வரலாம் என்ற யோசனையை அவர் அக்கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் அந்த எழுத்தாளருக்கும், இதழுக்கும் தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
எனினும், இன்று ஒருவர் தமிழ் பேசத் தெரிந்தவராக இருந்து, தமிழை எழுதத் தெரியாதவராக இருந்தாலும் அவர் அது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்ற நிலையை கணினி மென்பொருள்கள் ஏற்படுத்திவிட்டன.
தமிழில் பேசினாலே அதை தமிழ் எழுத்துருவாக மாற்றவும், தமிழ் வார்த்தைகளை ஆங்கில எழுத்துகளால் தட்டச்சு செய்தாலே, அவற்றை தமிழ் எழுத்துருவாக மாற்றவும் மென்பொருள்கள் வந்துவிட்டன. இதனால், குறைந்தபட்ச தமிழ் எழுதும் பழக்கமும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் மட்டுமின்றி, பொதுவாக தமிழர்களிடமே குறைந்துவருகிறது. இது வருங்காலத்தில் தமிழ் கற்றலிலும் தமிழ்ப் பயன்பாட்டிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.
உதாரணமாக ஒன்று. அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்தது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது நடந்திருக்கக்கூடாத ஒரு சோக நிகழ்வு. அந்த மாணவி, தான் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்று பொதுவெளியில் பகிரப்பட்டது.
அவருடைய வாக்குமூலம் என்று கருதத்தக்க அக்கடிதம் தெளிவான கையெழுத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் உள்ள எழுத்துகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அந்த எழுத்துகள் தரும் உச்சரிப்பு பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளுக்கானவை.
இந்தக் கடிதம் குற்ற வழக்கில் ஒரு சாட்சியமாக மட்டுமே அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால், அது இன்றைய மாணவர்களுக்கு ஆங்கிலம் எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது, தமிழ் எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமாகவும் அக்கடிதம் இருக்கிறது.
முற்காலங்களில் கிராமப்புற, நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் தமிழ்வழி கல்வி மட்டுமே இருந்தது. ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். என்றாலும், அதை நன்றாக கற்றுக்கொண்டு வாழ்வில் வெற்றி கண்டவர்கள் நம் முந்தைய தலைமுறையினர்.
ஒரு சில கிராமப்புற பள்ளிகளில் மட்டும் மாணவர்களுக்கு முழுமையான ஆங்கிலம் கிடைக்காமல் இருந்தது. அவர்கள் மட்டும் உயர்கல்வியில் சிறிது தடுமாறுவார்கள். ஆனால், அவர்கள் தமிழில் நன்றாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது.
இன்று பெரும்பாலான குழந்தைகள் மெட்ரிகுலேஷன் பள்ளி அல்லது சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். அங்கெல்லாம் அவர்களுக்கு தமிழ் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது. மற்ற அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் இருப்பதால், அவர்கள் தமிழை முழுமையாகக் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படாமல் போகிறது.
அதே நேரத்தில், தாய்மொழி தமிழாகவோ, ஆங்கிலம் அல்லாத வேறு மொழியாகவோ இருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலத்தை முழுமையாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போகிறது. இதனால், அந்த மாணவர்கள் தமிழையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளாமல், ஆங்கிலத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இவர்கள் ஏதேனும் ஒரு பட்டம் பெற்று ஒரு நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெறும்போது, முழுமையான மொழியறிவு இல்லாமல் தடுமாறும் நிலையை பல இடங்களில் கண்கூடாகக் காண முடிகிறது.
இது அந்த சில மாணவர்கள் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்னையல்ல; அடுத்த தலைமுறை தமிழறியாத தலைமுறையாக இருக்குமோ என்பதுதான் பிரச்னை. இந்த பிரச்னைக்கான தீர்வு என்ன?

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com