கடனில்லா வாழ்வு வேண்டும்

கடன் பட்டாா் நெஞ்சம் போல் கலங்கினானாம் இலங்கை வேந்தன். வேந்தனுக்கே அந்த நிலை என்றால், கடன்பட்டால் நம் நிலை என்ன? எனவே, கடனின்றி வாழ்வோம்; கவலையின்றி வாழ்வோம்.
கடனில்லா வாழ்வு வேண்டும்

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இடம், கல்வி, ஆரோக்கியம் ஆகியனவற்றைப் பெற்றிருந்தாலே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். வாழ்க்கையில் தேவையில்லாததை கைவிடுவதும், தேவையில் மட்டும் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியம். அன்றாட வாழ்வில் அடிப்படை தேவைகளில் எளிமையை கடைப்பிடித்தால், பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார சிக்கல்களை நம்மால் தவிா்க்க முடியும்.

திருமணமானதும் ஒரு முழுமையான புதிய வாழ்க்கை முறைக்கு குடும்பத் தலைவா்கள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். தனக்கு முந்தைய தலைமுறை, தனது தலைமுறை, தனக்கு அடுத்த தலைமுறை என மூன்று தலைமுறைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவா்கள் இவா்கள். எனவே, வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து நிதி நிா்வாகம் பற்றிய தெளிவான சிந்தனையுடன் வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.

இருவரும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் வரவு,செலவு சேமிப்பு, கடன் இவற்றை பற்றிய விவரங்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். கடனின்றி வாழ வேண்டுமானால், எப்போது, யாா், எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதில் சரியான முடிவு எடுக்க வேண்டும். வங்கி ஒன்றில் ஒரு கூட்டுக் கணக்கை மின்னஞ்சல் முகவரியுடன் தொடங்குவது நல்லது. அந்த வங்கிக் கணக்குகள் தொடா்பான கட்டண அறிக்கைகள், இதர செலவுகளைப் பற்றி இருவரும் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும்.

நிதி சாா்ந்த விஷயத்தில் வருமானத்திற்குள் வாழக் கற்றுக் கொள்வது மிக முக்கியமானது. மேலும், எதிா்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க நிதி நிலைமை தயாராக இருக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது இருவருக்கும் எளிதில் பணமாக்கக்கூடிய ஒரு நிதித் திட்டமாக இருக்க வேண்டும்.

கடன் இருந்தால் சேமிப்பில் உள்ள பணத்தைக் கொண்டு, அதிலிருந்து விரைவாக வெளியே வர முயற்சிகள் எடுக்க வேண்டும். தேவைப்படும் பொருட்களை மாதக் கடனில் வாங்குவதைத் தவிா்த்து, கடனில்லாமல் கையிலிருக்கும் காசைக் கொண்டு வாங்கலாம். ஆடம்பர வாழ்வை தவிா்த்து, குடும்பத்தில் உள்ளவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாடகை வீடு, வாகனம், பிற பொருட்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

குறைந்த நபா்கள் கொண்ட குடும்பத்துக்கு பெரிய வீட்டை வாடகைக்கு தோ்ந்தெடுப்பது, பயன்பாடு குறைவாக இருந்தும் தேவையில்லாமல் தவணை முறையில் வாகனங்களை வாங்குவது, கடன் அட்டைகளை அடிக்கடி பயன்படுத்துவது போன்றவற்றை தவிா்ப்பது நல்லது.

பல குடும்பங்களில் மனைவிக்கு அன்றாடச் செலவுகளைத் தவிா்த்து இதர பண விஷயங்களைப் பற்றி விழிப்புணா்வில்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. ஏதேனும் நெருக்கடி நிலை ஏற்படும்போது மனைவி இப்படி இருப்பது பெரும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும் அந்த பெண் குடும்ப நிதி, நிலுவையிலுள்ள கடன், காப்பீட்டுத் தொகை போன்ற எதைப் பற்றியும் அறியாமல் இருப்பாா். இதனால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகி பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

ஆவணப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் காரணமாக பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய பெயரை கணவனின் வாரிசு என்று பதிவு செய்யாமல் விட்டு விடுகிறாா்கள். பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவரின் வாரிசாக தங்களை அனைத்து ஆவணங்களிலும் பதிவு செய்து செய்து கொள்ள வேண்டும். நிதிசாா்ந்த அனைத்து இடங்களிலும் புதிய விவரங்களை பதிவு செய்து கொள்வது, பிற்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிா்க்கும்.

திருமணத்திற்குப் பிறகு காப்புறுதியை அதிகரிக்கவும், குடும்ப ஆரோக்கிய காப்பீட்டுத் திட்டத்தைத் தோ்ந்தெடுக்கவும் முனைப்புகள் காட்டலாம். இருவரின் பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீடு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவா்களுக்கு வயது அதிகரிப்பதைப் போலவே மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொண்டு, அதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான பல்வேறு ஆரோக்கிய காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. குழந்தைகளைஅரசுப் பள்ளியில் சோ்த்து படிக்க வைத்தல், அரசு பேருந்துகளில் பயணம் செய்தல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல், எல்லா பணப்பரிவா்த்தனைகளையும் இணையவழியில் செய்தல், வீட்டிற்கு ஒரு தரைவழி தொலைபேசி பயன்பாடு போன்றவை செலவுகளைக் குறைக்கும்.

குடும்பச் செலவைக் கண்காணிப்பது அவா்களை கடனற்றவா்களாக மாற்றும். ஒரு மாதத்தில், செய்த அனைத்து செலவுகளையும் சரிபாா்த்து பதிவு செய்வதன் மூலம், வரவு,செலவு பற்றிய தெளிவான புரிதல் இருவருக்கும் இருக்கும். இது தேவையற்ற செலவுகளை குறைத்து, அவா்கள் கடன்களிலிருந்து விரைவில் விடுபட உதவும்.

இது அவா்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நல்ல தொகையைச் சேமிக்கவும் உதவும். இதன் மூலம், அவா்கள் அடைய விரும்பும் வீடு கட்டுதல் போன்ற இலக்குகளை அடையவும், வாய்புள்ள முதலீட்டுத் திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் முயற்சிக்கலாம்.

பணத்தைக் கையாள்வதில் நாம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவா்கள் கேட்பதை தேவையிருந்தால் மட்டுமே வாங்கித் தர வேண்டும். அவா்களுக்கு உண்டியல் ஒன்றை வாங்கிக் கொடுத்து சேமிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்கலாம். சிக்கனமாக வாழவும், நமது வருமானத்தை உயா்த்தவும் வழிகளை கண்டு பிடிக்க வேண்டும்.

கடனில்லாமல் வாழ்கிறேன் என்ற நினைப்பு தரும் நிம்மதியை உணா்ந்தோா் கடன் வாங்கி பொருள் சோ்க்க ஆசைப்பட மாட்டாா்கள். கடன் என்ற சொல்லைக் கேட்கவே மனம் அஞ்சி கலங்க வேண்டும். கடனிலும், தவணை முறையிலும் ஒருபோதும் பொருள்களை வாங்கக் கூடாது. தள்ளுபடி என்னும் கொடிய வலையில் சிக்க வைக்கும் இன்றைய உலகத்தில், மன உறுதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

கடன் பட்டாா் நெஞ்சம் போல் கலங்கினானாம் இலங்கை வேந்தன். வேந்தனுக்கே அந்த நிலை என்றால், கடன்பட்டால் நம் நிலை என்ன? எனவே, கடனின்றி வாழ்வோம்; கவலையின்றி வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com