

"எல்லாரும் எளிதென்று நினைக்கிற தமிழ் அவ்வளவு எளிதானது இல்லை என்று அனுபவத்தில்தான் தெரிகிறது' என்று ஆரம்பித்தார் என் நண்பர். அவர் பொறியியல் துறையில் வல்லுநர். அவர் தன் பேத்திக்குத் தமிழ் சொல்லித் தர முயற்சி செய்திருக்கிறார். எழுத்துப் பயிற்சிக்காக, மரபுத் தொடர்களையும் பழமொழிகளையும் சொல்லிக் காட்டியிருக்கிறார். அதில் ஒன்று, "விளையும் பயிர் முளையிலேதெரியும்' என்பது.
"விளக்கம் சொல்வதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன். பயிர் விளையும் இடம் வயல் என்று தொடங்கி, நெல், நாற்று என்றால் ஒன்றும் புரியவில்லை. அன்றாடம் சாப்பிடும் உணவில் இடம்பெறும் சோறு அதில் இருந்துதான் வருகிறது என்று புரியவைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது' என்றார். இப்படியான அனுபவங்களை, ஐம்பது வயது கடந்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். காரணம் முன்பு நாம் பயன்படுத்தி வந்த பல சொற்களைப் பயன்படுத்தாமல் விட்டதுதான்.
தேவைக்கு மீறி அதிக அளவில் நம்மால் வலிந்து சேர்க்கப்படும் ஆங்கிலச் சொற்கள் அடிப்படைத் தமிழ்ச் சொற்களைக் காவு கொண்டுவிட்டன. இதற்கு இடையில் ஹிந்தி வேறு. இன்றைக்கு, பிற மாநிலத்தவர்களும் வந்து குடியேறுகிற பகுதியாகத் தமிழ்நாடு ஆகிய நிலையில், வெகு இயல்பாகப் பிறமொழிச் சொற்கள் அனைத்தும் பேச்சு வழக்கில் வந்துவிட்டன.
இன்னும் சொல்லப்போனால், வடமொழிச் சொற்கள் என்று நாம் நினைக்கிற பல சொற்கள், உருது, பிரெஞ்சு, மராட்டியச் சொற்களாக இருக்கின்றன. தூய தமிழ்ச் சொற்களைப் பேசும் வழக்கம் அரங்க நிகழ்வுகளில் கூடக் குறைந்து வருகிறது. தனித்தமிழ்ச் சொற்களை விடுங்கள், பேச்சு வழக்குக் கடந்து எழுத்துத் தமிழில் எல்லாருக்கும் புரியும்படியாகத் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கையும் அருகி வருகிறது.
ஒருபொருள் தரும் பல சொற்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்துவமான விளக்கங்கள் உண்டு. நீர்நிலைப் பெயரான குளம் வேறு; ஊருணி வேறு; பொய்கை வேறு; தடாகம் வேறு; ஏரி வேறு; கண்மாய் வேறு; ஏந்தல் வேறு. இத்தகு நீர்நிலைகள் அதிகம் கொண்ட ஊர்களுக்கு இந்தப் பெயர்களே இடப்பெற்றிருப்பதையும் பார்க்கலாம்.
நகர்மயமாகிவிட்ட பிறகு, இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டு, அவற்றுக்கான பயன்பாடுகளும் இழக்கப்பட்டன. சொற்களும் பொருள் இழந்து போயின. ஆங்கிலப்படுத்தப்பட்ட தமிழ்ச்சொற்கள் பின்னர்த் தமிழ்ப்படுத்தப்படுகிறபோது, அபத்தமான பெயர்களாக அவை ஆகிவருகின்றன. எடுத்துக்காட்டாக, குளத்துப்பட்டி என்பது ஆங்கிலத்தில் புகுந்து தமிழாக்கம் செய்த நிலையில், குலத்துப்பட்டி ஆகிவிட்டிருக்கிறது. புழுதிபட்டி "புளுதிபட்டி' ஆகிவிடுகிறது. குறில், நெடில் பேதம் இழந்து பல பெயர்கள் இந்த அவலத்திற்கு ஆளாகியிருக்கின்றன.
ஊர்ப்பெயர்கள் போக, நாம் வீட்டில் சொல்லும் பல பெயர்களும் வழங்குமுறைகளும் இப்போது வழக்கொழிந்து போயின. தமிழில் மங்கல வழக்கு என்று உண்டு. மந்திரத் தன்மை வாய்ந்த மொழி, தமிழ் என்பதால், அமங்கலமான சொற்களைக் கூட, மங்கலச் சொல்லாக மாற்றிப் பயன்படுத்தியிருக்கின்றனர் நம் முன்னோர். அதற்கு இணையான சொற்களையும் உருவாக்கியிருக்கின்றனர். இடுகுறிப் பெயர் கூட, காரணத்தை ஒட்டியே அமைந்திருப்பதும் உண்டு. பல சொற்களைப் பயன்பாட்டு நிலையிலேயே நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
குப்பையைக் கூட்டுதல், வாசலைப் பெருக்குதல், தரையை மெழுகுதல் ஆகிய மரபுசார் சொற்றொடர்களை ஆங்கிலச் சொல் வந்து "க்ளீன்' பண்ணி விட்டது. "குப்பை' அற்புதமான தமிழ்ச் சொல். மிஞ்சிய நிலையில் பெருகுபவை, குப்பை. அதற்குச் செல்வம் என்றும் பொருள் உண்டு. "குப்பை' போல, நெல் குவிந்த ஊர் என்பதால், "நெற்குப்பை' என்றே பெயர்பெற்ற ஊரும் தமிழகத்தில் உண்டு.
வேளாண்துறையில் மறுசுழற்சிக்குப் பயன்படும் குப்பைக்கு இன்றளவும் அதிக மதிப்புண்டு. குடும்பம் நடத்துவதை, "குப்பை கொட்டுவது' என்றே மூத்தோர் சொல்வதுண்டு. பயன் கருதிப் பகுத்து, வகுத்து, தொகுத்து வைக்கும் வாழ்வியல் முறைமை அது. குப்பையைக் கூட்டுவதற்குப் பயன்படும் கருவி, "கூட்டுமாறு'.
பல நாட்கள் ஊருக்குப் போய் வந்த பிறகு, வீட்டு வாசல் தூய்மையின்றிப் பரப்பளவு குறைந்து கிடக்கும். புல்லோ, பூண்டோ முளைத்தும் இருக்கும். அவற்றைத் தூய்மைப்படுத்திப் பெருக்கப் பெருக்க, வாசல் விசாலமாகும்; வீடும் விளக்கம் பெறும்; தெருவுக்கும் வீட்டுக்கும் உறவு கூட்டி அழகு சேர்க்கும். இன்றைக்குச் சந்தும் பொந்தும் வீட்டு வாயிலாகிவிட்ட பிறகு, அடுக்ககம் என்ற கூண்டு வாழ்க்கை வந்த பின், "துடைப்பம்' வந்துவிட்டது.
ஓய்வு பெற்ற தமிழாசிரியரான மாமனார் வந்துவிட்டார் என்பதற்காகத் "துடைப்பம்' என்று தமிழில் பேசிய மருமகளுக்கு, அந்த மாமனார் நடத்திய பாடத்தை, அந்த மருமகளே வியப்போடு கூறியிருக்கிறார். கூட்டுவது, பெருக்குவது என்று சொன்னால் செல்வம் கூடும்; பெருகும். துடைப்பம் என்றால் அனைத்தையும் துடைத்துக் கொண்டு போய்விடும் என்பது அவர் தந்த விளக்கம்.
படிப்பறிவில்லாத அப்பத்தாக்களுக்கு இன்றும் உண்கலத்தை, தட்டு என்று குறிப்பிட்டால் கோபம் வரும். "வட்டின்னு சொல்லணும்' என்பார்கள். "தட்டில் சாப்பிட்டோம் என்றால் தட்டுப்பாட்டில் சாப்பிட்டதாக' பொருள். அதனால் உணவுத் தட்டுப்பாடு வந்துவிடுமாம். வருமானத்திற்கு வருமானமாக வரும் "வட்டி'யில் சாப்பிடுவது என்று சொல்லச் சொல்வார்கள் ஐயாக்கள்.
சோறிடும் கலம் அகன்றிருந்தால், அது வட்டில்; குறுகி இருந்தால் "கும்பா', தொட்டுக் கொள்ளும் வியஞ்சனக் கிண்ணத்திற்கு, "குழவி'யென்று பெயர். வட்டிலையும் குழவியையும் பிரிக்கக்கூடாது. இரண்டும் தாயும் சேயும் போல என்று சொல்வார்கள். இதுபோல், அம்மி -குழவி, ஆட்டுக்கல் - குழவி. இதில் ஆட்டு உரல் என்றும் ஒன்று இருக்கிறது. அது "டூ இன் ஒன்'. குழவியிட்டு ஆட்டும்போது அம்மியாகவும், உலக்கை கொண்டு குத்தும்போது உரலாகவும் பயன்படும். அஞ்சறைப் பெட்டி, தாளிதத் தட்டு, படி, உழக்கு, மரக்கால் எல்லாம் விடைபெற்றுவிட்டன.
வீட்டின் கடைசிப் பகுதியில் புழங்குவதற்கான இடம் "புழக்கடை' எனப்பட்டது. இயற்கைக் கடன் கழித்தலை, "ஒதுங்குதல்' என்று சொல்வர். அதற்கான இடம் "ஒதுங்கிடம்'. சென்னை விமான நிலையத்தில் இந்தப் பெயர் பயன்பாட்டில் உள்ளதையும் நினைவுகூரலாம்.
இவைபோக, "பொலி', "குன்று', "சிறுகுடி', "வேலி', "படப்பை', "சாரல்' போன்ற எத்தனையோ பழந்தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருந்தன. "கொடுந்திண்குன்றம்' என்ற சங்கச் சொல்லைக் கொண்ட "கொடுங்குன்றம்பட்டி' என்ற ஊர்ப்பெயர் இருக்கிறது. சங்ககாலப் பறம்புமலைக்குச் சமய இலக்கியக் காலம் தந்த பெயர் "திருக்கொடுங்குன்றம்', "யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலைத் தந்த "பூங்குன்றனார்' என்ற பெயரையும், "பூங்குன்றம்பட்டி' என்ற ஊர்ப்பெயரையும் இவற்றுடன் இணைத்துப் புரிந்துகொள்ளலாம்.
சங்க காலம் தொடங்கி, சமகாலம் வரைக்கும் புழக்கத்தில் இருந்த "வாழ்க்கை' (என்ற சொல்லை)யை, "லைஃப்' வந்து ஒழித்தேவிட்டது. "இப்படி ஒரு டான்ஸை என் லைஃப்லயே பார்த்ததில்லை' என்று பிஞ்சுக்குழந்தையின் மழலை ஒலிக்கிறது.
ஒற்றை நெல், கற்றை நெல்லை விளைவிக்கும் ஆற்றல் வாய்ந்தது; நெல்மணியைப் பயிர்வளர்க்கப் பயன்படுத்த வேண்டுமெனில், களத்தில் போட வேண்டும்; உயிர் வளர்க்கப் பயன்படுத்த வேண்டுமெனில் அரிசியாக்கி, உலைக்களத்தில் போட வேண்டும்.
எதற்கும் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக, பானையிலோ, களஞ்சியத்திலோ, பாதுகாத்து வைத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அது செமித்துப் போய்விடும். நெல் மட்டுமல்ல, எந்தத் தானியமணியாக இருந்தாலும், அது பயன்பாடில்லையெனில் உள்ளீடற்றுப் பொக்கையாய்ப் போய்விடும்.
தேர் நிற்கும் இடம் "தேரடி'. அதுபோல் ரயில் நிற்கும் இடம் "ரயிலடி'. இன்றைக்கும் தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வழங்கிவரும் பெயர். விமானத்தை "பிளேன்' என்று சொல்வதனால், விமான நிலையத்தை, "பிளேனடி' என்றே செட்டிநாட்டார் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன்.
நடக்கப் பயன்படுத்தும் காலணிக்கு, "நடையன்' என்றே பெயர். இவ்வாறு, தொழிற்கருவிகளுக்கு வழங்கும் பெயர்கள் அந்தந்த மூலச் சொற்களில் இருந்தே பல சொற்களாக விளைந்தவை. ஆங்கிலச் சொற்களாக வந்து புகுந்த சொற்களையும் தமிழாக்கி விட்ட போக்கும் உண்டு. "நடு சென்டர்', "கேட்டுவாசல்' ஆகியவை சான்றுகளாகும்.
இன்றுவரை, கபிலர் பாடலோ, கம்பராமாயணப் பாடலோ, பக்திப் பாசுரமோ, எதுவாயினும் மூலத்தைப் படித்தே புரிந்துகொள்ளும் அளவிற்கு, பிறமொழிக் கலப்பில்லாத, பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் என் கிராமத்து வாழ்க்கை உதவியிருக்கிறது. இன்றைக்கு அந்த நிலை இல்லை. தற்கால இலக்கியத்திற்குக் கூடக் கையேடு கொண்டு படிக்க வேண்டிய நிலை, இந்தத் தலைமுறைக்கு இருக்கிறது.
மொழிப்பாடம் அல்லாத, கலை, அறிவியல் பாடங்கள் படிப்பவர்களுக்குத் தமிழ்ப்பாடம் எதற்கு என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. முறையான ஆங்கிலமும் தெரியாமல், சரியாகத் தமிழும் தெரியாமல், ஹிந்தியும், ஜெர்மனியும் கற்கிற தலைமுறையினராகத் தமிழ்க் குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள்.
"விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்கிற தொடரை எளிதாகப் புரிந்துகொள்ள என் நண்பருக்குத் தந்த விளக்கம் இருக்கட்டும். விளையும் பயிரை முளையிலேயே கவனிக்காமல் விட்டால் என்னாவது என்ற கவலைதான் வருகிறது.
வேலியைப் பலப்படுத்துவதிலேயே அக்கறை கொண்ட நாம் பயிர் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டவில்லையோ என்ற ஐயம் எழுகிறது. எனவே,பிறமொழித் தாக்குதலில் இருந்து தாய்மொழியைக் காப்பதிலே நாம் செலுத்துகிற கவனத்திற்குச் சற்றும் குறையாமல் தாய்மொழியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதில் செலுத்த வேண்டியது இன்றைய இன்றியமையாக் கடப்பாடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.