கடற்பாசி விவசாயம் தேவை

உலகின் கடற்கரையோரங்களில் 25 சதவீதத்தை உள்ளடக்கிய கடற்பாசி காடுகள் மீன்கள், முதுகெலும்பில்லாத கடல் உயிரினங்கள், கடல் பாலூட்டிகள் ஆகியவற்றிற்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றை வழங்குகிறது.
கடற்பாசி விவசாயம் தேவை
Published on
Updated on
2 min read

உலகின் கடற்கரையோரங்களில் 25 சதவீதத்தை உள்ளடக்கிய கடற்பாசி காடுகள் மீன்கள், முதுகெலும்பில்லாத கடல் உயிரினங்கள், கடல் பாலூட்டிகள் ஆகியவற்றிற்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றை வழங்குகிறது. கடல் அரிப்பு, கரிமத் தன்மயமாக்கம் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பணிகளையும் கடற்பாசி காடுகள் செய்கின்றன. 

பழுப்பு கடல் பாசிகளை உள்ளடக்கிய பரந்த கடற்பாசி காடுகள் ஆண்டுதோறும் சுமார் 1.8 % குறைந்து வருவது சுற்றுச்சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள். காலநிலை மாற்றம், நீரின் மிகை ஊட்ட நிலையான கடல் மட்டம் உயர்தல், மனித செயல்பாடுகள் ஆகியற்றால் கடற்பாசி காடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  

பிரையோசோவா என்ற முதுகெலும்பில்லா கடல்வாழ் உயிரினம் கடற்பாசியை கடற்பரப்பில் மூழ்கடித்துச் சிதறச் செய்து கடற்பாசி காடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.  வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் தோன்றிய "தி ப்ளாப்' என்ற கடல்  வெப்ப அலை காரணமாக பிரையோசோவாவின் இந்த அச்சுறுத்தல் நிகழ்ந்ததாக அறிவியல் அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய நிலையில் கடற்பாசிகளின்  உற்பத்தி 2022 ஜூலை மாதம் வரை 3.5 கோடி டன்னாக இருந்தது என்றும் அதன் மதிப்பு ரூ. 1,36,392 கோடி (1,650 கோடி அமெரிக்க டாலர்) என்றும் இந்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. 2021-இல் 34,000 டன் குறைவாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் ஆண்டுக்கு 0.97 கோடி டன் கடற்பாசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நமது நாட்டில் கடல் தாவரங்களையும் பாசிகளையும் வளர்ப்பதற்கு சாத்தியமான 342 இடங்களை அடையாளம் காட்டியுள்ளது.

இந்திய கடல்களில் 434 வகையான சிவப்பு பாசிகள், 194 வகையான பழுப்பு பாசிகள், 216 வகையான பச்சை பாசிகள் உள்பட 844 வகையான கடற்பாசிகள் உள்ளன. சிவப்பு பாசிகள், பானங்கள், பால் பொருட்கள், ஆடைகள் தயாரிக்கத் தேவையான கடற்பாசிக்கூழ் (அகர்) தயாரிக்கவும்,  பழுப்பு பாசிகள், உரம், மருந்துப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. 

தற்போது இந்தியாவில் கிடைக்கும் கடற்பாசிகளின் அளவு நமது நாட்டுத் தொழிற்சாலைகளின் மூலப்பொருள் தேவையை பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள ஆழமற்ற நீரில் கடல் படுகையில் இருந்து கடற்பாசிகளின் விதைகள் சேகரிக்கப்படுகின்றன. கண்மூடித்தனமான ஒழுங்கமைக்கப்படாத தொடர்ச்சியான அறுவடையின் விளைவாக இந்திய கடற்பாசி வளம் குறைந்து வருவதாக எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

கடற்பாசிகள் ஆண்டுதோறும் சுமார் 17.5 கோடி டன் கார்பனை சேமித்து வைத்து காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுகிறது. நீண்ட கால கார்பன் தேக்கத்திற்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் உதவும் கடற்பாசிகள் தொழில்துறை பயன்பாடுகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

உலக வங்கியின் கூற்றுப்படி, கடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் கடற்பாசிகள் கடல் வள பயன்பாடு, பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு எனப் பல வகைகளில் நீலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2 % கடல் பரப்பில் செய்யப்படும் கடற்பாசி விவசாயம் 1,200 கோடி உலக மக்களின் உணவிற்கான புரதத்தை வழங்கும் என்று ஐ.நா. சபையின் குளோபல் காம்பாக்ட் என்ற அமைப்பு கூறுகிறது. புரதச்சத்து மிகுந்த கடற்பாசியில் வைட்டமின்கள், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்தும், கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் குறைந்தும் இருக்கும்.

தொற்றா நோய்களின் தாக்கத்தைக் குறைக்க உண்ணும் முக்கிய உணவாக கடற்பாசிகள் மாற சாத்தியம் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மனித நுகர்வுக்கு ஏற்ற சில வகை கடற்பாசிகள் ஜப்பானில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஜப்பானியர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை கடற்பாசி உணவு உண்கின்றனர். கொரியா, சீனா ஆகிய நாடுகளில் உணவுத் தயாரிப்பில் கடற்பாசி பயன்படுத்தப்படுகிறது.

கால்நடைத் தீவனத்தில் மூலப்பொருளாக கடற்பாசிகள் பயன்படுத்தப்படுவது ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. நிலம், நன்னீர், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் தேவையற்ற கடற்பாசிகள் சூரிய ஒளியுடன் உப்பு நீரில் செழித்து வளரும். கால்நடைத் தீவனமாக கடற்பாசிகள் பயன்படுத்தப்படும்போது மீத்தேன் உமிழ்வை 90 %  குறைக்கும். விலங்குகளின் செரிமானத்தை மேம்படுத்தி அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இது கால்நடைகளுக்கான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் தேவையைக் குறைக்கிறது.

கடற்பாசி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக "கெல்ப் ப்ளூ' என்ற நிறுவனம் நமீபியா நாட்டில் கடல் நீருக்கடியில் சுமார் 70,000 ஹெக்டேர் பரப்புள்ள கடற்பாசி காடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளது. 100 அடி உயரம் வரை வளரக்கூடிய கடற்பாசிகளைக் கொண்ட இந்த காடுகள் வேலைவாய்ப்பினை உருவாக்கும்; உலகின் உணவு நெருக்கடியை தீர்க்கும்; வளிமண்டலத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை அகற்றும். 

இந்தக் காடுகள் கடலின் மீன்வளத்தை 20 % வரை அதிகரிக்கும். சுமார் 200-க்கும் மேற்பட்ட கடல் வாழ் இனங்களின் வசிப்பிடமாகவும் இருக்கும். கடற்பாசி தயாரிப்புகளுக்கான தரம், பாதுகாப்பு குறித்து உலக அளவில் கோட்பாடுகள் இல்லாமல் இருப்பதும், கடற்பாசி விவசாயத்திற்கான ஒத்துழைப்பின்மையும் தொழில் முனைவோரும் சிறிய நிறுவனங்களும் தொழில் தொடங்க தயங்குவதற்குக் காரணங்களாகின்றன. 

இத்தயக்கத்தைக் களைய ஐ.நா குளோபல் காம்பாக்ட் அமைப்பு, புதிய முதலீட்டு முயற்சிகளுக்கான செயல்முறை, அரசு, அறிவியல் தொழிற்துறைக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்த கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உலக மக்கள் பசியைப் போக்கவும் கடற்பாசி தொழில் தழைத்து வளர வேண்டியது இன்றியமையாதது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com