நேர்மை என்பதோர் அணிகலன்

நேர்மை என்பதோர் அணிகலன்

நேர்மை என்பது ஓர் அருமையான அணிகலன். பொதுவாக நேர்மைப்பண்பு பணம் கொடுக்கல் வாங்கலோடு மட்டுமே தொடர்புப்படுத்தப்படுகிறது.

நேர்மை என்பது ஓர் அருமையான அணிகலன். பொதுவாக நேர்மைப்பண்பு பணம் கொடுக்கல் வாங்கலோடு மட்டுமே தொடர்புப்படுத்தப்படுகிறது. உண்மையில் பணத்தைத் தாண்டி மனம், வாக்கு, செயல் அனைத்திலுமே நேர்மையைக் கடைப்பிடிக்க இயலும். ஆனால் சமூக வாழ்வில் நேர்மையின் மீதான விருப்பத்தை அதிகரிக்காமல் நேர்மைப்பண்பை அதிகரிக்க இயலாது.

அண்மையில், வணிக மேலாண்மை பயிலும் நண்பர் ஒருவரின் அறைக்குச் சென்றிருந்தேன். அங்கே வணிக நெறிகள் (பிசினஸ் எதிக்ஸ்) என்ற நூல் இருந்தது. வணிகம் என்பதே லாப நோக்கோடு நடத்தப்படுவதுதானே, இதில் எப்படி நெறியோடு செயல்பட இயலும் என்று யோசித்தேன். சரி வணிகத்தில் லாபம் தேவைதான். ஆனால் கொள்ளை லாபம் ஈட்டாமல் வணிகம் செய்தலைப் பற்றிஅந்நூலில் இருக்கலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

சமூகம் இயல்பாய் இயங்கினாலே நேர்மையாய் செயல்படுவோரின் எண்ணிக்கையை அதிகரித்துவிட இயலும். மக்கள் புழங்கும் பல இடங்களிலும் போலித்தன்மையும், ஆடம்பரத் தன்மையும் அதிகரித்துவருகின்றன. இவ்வாறான கூறுகள் அதிகரிக்கும் வாழ்வியலில் நேர்மையாயிருப்பது சாத்தியமில்லாதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

நமது நேரப் பயன்பாட்டில் நேர்மையைக் கடைப்பிடிப்பது நம் கையில்தானே உள்ளது? ஒரு கூட்டத்திற்கான அழைப்பு வருகிறது. கூட்டம் பத்து மணிக்கு என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. பத்து மணியென்றால் பதினொரு மணிக்குத்தான் தொடங்குவார்கள் என்ற நினைப்பில் பதினொரு மணிக்கு சென்றடையும் விதத்திலேயே நாம் பயணத்தைத் திட்டமிடுகிறோம்.

பதினொரு மணிக்குத் தொடங்கிய கூட்டம், நிறைவடையும் நேரமான ஒரு மணிக்கு சரியாக நிறைவடையவேண்டுமென நினைக்கிறோம். அங்கு வந்துள்ள அனைவரும் நேரம் கடந்து கூட்டத்தில் இணைந்தாலும் நேரத்துடன் கூட்டம் நிறைவடைவதையே எதிர்பார்க்கின்றனர்.

கூட்ட அமைப்பாளர் என்னதான் தான் செய்யவேண்டிய பணிகளுக்கு நேர்மையாகத் திட்டமிட்டாலும் தர்மசங்கடப்படவேண்டியுள்ளது. இது ஏதோ அபூர்வமான நிகழ்வுதான் என்று எண்ண வேண்டாம். கூட்டங்களில் பலரும் நேரத்திற்கு இருக்கையில் வந்து அமர்வதில்லை. பத்து நிமிடமாவது தாமதத்தான் வந்து அமருகின்றனர். இவ்வாறு தாமதமாக வந்தபின், தாம் வந்த பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர் என யார் மீதாவது பழிபோட்டுத் தப்பிக்கவே முயல்கின்றனர்.

அடுத்தபடியாக உரையாடல்களிலும் நேர்மையைக் கடைபிடிப்பது எளிதானதாகும். மேல்பூச்சில்லாத இயல்பான பேச்சுகளே எப்போதும் நல்லது. ஆனால், இயல்பில் இப்படிப்பட்ட பேச்சுகளைவிட செயற்கைத்தன்மை கொண்ட உரையாடல்களே பெரிதும் நிகழ்த்தப்படுகின்றன. தனக்குத் தெரிந்து நடந்த விஷயங்களைப் பகிர்வதோடு நடக்காத விஷயங்களையும் உண்மையைப் போலவே பகிரப்படுவதையே பலரும் விரும்புகின்றனர்.

இவற்றை மக்களும் ரசித்துக் கேட்பதால் பலரும் வாய்ப்புள்ள இடங்களில் தனது சொந்த கற்பனையையும் இணைத்து அடித்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நபருக்கு ஏற்படும் அவப்பெயர், இன்னல்கள் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. இதனை செவிமடுப்பதால் உரையாடுவோருக்கு உற்சாகம் அதிகமாகிவிடுகிறது.

செயலிலும் நேர்மையைக் கடைபிடிக்க இயலும். செயலோடு தொடர்புடைய நடை, உடை, பாவனை போன்றவற்றில் எளிமை இணையும்போது செயலிலும் நேர்மை பளிச்சிடும். அதே நேரம் அவற்றில் எவ்வளவுக்கெவ்வளவு செயற்கைக்கூறுகள் இணைகின்றதோ அந்த அளவுக்கு நேர்மை விலகிச் செல்லும்.

இதற்கு உதாரணமாக, சிலர் தாம் மும்முரமாக இருப்பதுபோல் செயற்கையாகக் காட்டிக்கொள்வது, பகட்டான ஆடைகளை அணிந்து பிறரைவிட மேலான நிலையில் தான் இருப்பதாகக் காட்டிக் கொள்வது, உலகையே மாற்றிவிட சிந்திப்பது போன்று பிறரைக் கவனியாமல் இருப்பது போன்றவற்றைக் கூறலாம்.

மனம், வாக்கு, செயல் ஆகிய கூறுகளில் நேர்மையோடு செயல்படுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இவர்களைப் பாராட்டும் பலரும் இவர்களைப்போல் நேர்மையான வாழ்க்கைக்கூறுகளைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாக நேர்மையாயிருப்போர்க்கு நல்லவர் என்ற பட்டம் அளித்துவிட்டு தங்கள் வழியில் தொடர்ந்து செயல்படுகின்றனர்.

ஒரு சிலர் நேரில் அவர்களைப் பாராட்டிவிட்டு மறைவில் "அவர்கள் காலத்திற்கு ஒவ்வாதவர்கள், எப்படி எல்லோரும் அவர்களைப்போல் இருக்க இயலும்' என்று கேலி செய்கின்றனர். இதனைக் கேட்கும் ஏனையோர் நமக்கேன் வம்பு என்று ஊருடன் ஒத்துவாழத் தலைப்பட்டுவிடுகின்றனர். அதாவது நேர்மையென்றால் என்ன என்று கேட்காத குறைதான்.

அறிவியல் யுகத்தில் நேர்மையாயில்லாமல் இருக்க முடியாது என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், அனைத்தும் டிஜிட்டல் மயம், அனைத்தும் இயந்திரமயம், எதிலும் ஒளிவு மறைவு இல்லை போன்ற தோற்றங்களும் ஏற்பட்டுவருகின்றன. இது ஒரு விதத்தில் ஆறுதலான விஷயம்தான் என்றாலும் மனிதர்கள் சேவைகளைத் தரவும் பெறவும் மட்டும் படைக்கப்பட்டவர்களல்லர். சக மனிதரை நேசித்து, தாமும் அவர்களால் நேசிக்கப்பட்டு வாழ விரும்புகின்றவர்கள்.

ஒருவர் நேர்மை என்னும் அணிகலனை அணிந்துகொள்ளும்போது வேறு எவற்றையும் விட அதனால் அவருக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. நாம் உண்மையையே பேசுவதால் பிறருக்கு நம்மால் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை என்ற மனநிம்மதி கிடைக்கிறது.

இந்த மனநிம்மதி விலை மதிப்பு மிக்கது. மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை அண்டவிடாதது. எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்தோரை சார்ந்து நிற்பதைக் குறைக்கும். இவ்வாறான நிலையை அடைந்தோர் தமக்கு அடுத்துள்ளோர் அதனை அடைய வழிகாட்டுவதும் அவசியமானதாகும். தம்மைச் சுற்றி நேர்மையாளர்களை வைத்திருப்பதே ஒருவரது நிம்மதி நிரந்தரமானதாக இருக்க உதவும்.

முதலில் கடினமானதாகத் தோன்றும் இச்செயல்பாடுகள் காலப்போக்கில் எளிமையானதாக மாறிவிடும். திட்டமிட்ட வாழ்க்கை வாழவும் உதவிகரமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com