மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் உடலில் ஏற்படும் நச்சுப் படிவுகளை அன்றாடம் அகற்றுவதும் முக்கியம்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Published on
Updated on
2 min read


நம் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் உடலில் ஏற்படும் நச்சுப் படிவுகளை அன்றாடம் அகற்றுவதும் முக்கியம். நம் உடலிலுள்ள நச்சுகளை அகற்றுவதற்கான சிறந்த வழி திரவங்களுடன் நாளைத் தொடங்குவதுதான். தண்ணீருடன் நாளை தொடங்குவது நச்சுகளை வெளியேற்ற உதவும். அதோடு தேவைக்கு  ஏற்ப நீரை எடுத்துக்கொள்வதும் முக்கியம்
உணவு உண்பதற்கு இடையில் ஆரோக்கியமான இடைவெளி தேவை.  முடிந்த அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். மதிய உணவு மற்றும் காலை உணவின் போது புரோபயாடிக்குகளை சேர்ப்பது அமில எதிர்வினைகளை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தையும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் நச்சுகளை வெளியேற்றுவது தான் ஆரோக்கியத்தின் அடிப்படை. 
உடற்பயிற்சிக்கு புற்றுநோய் வளர்ச்சியைக் குறைக்கும் திறன் உண்டு. அன்றாடம் உடற்பயிற்சி செய்தால், நாம் 13 வகையான புற்றுநோயிலிருந்து தப்பலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தினமும் முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி எதுவும் செய்யாதவர்கள் அடிக்கடி மன அழுத்தத்தை சந்தித்து வருகிறார்களாம். 
நமது உடலுக்கு நல்லது செய்யும் ஓர் அமிலம் "ஒமேகா 9'.  இது எந்த உணவிலிருந்தும் கிடைக்காது. நமது உடல் தானே அதை உருவாக்கிக்கொள்ளும். இது இருந்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது அல்லது உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் இது உடலில் ஊறும். 
காலையில் எழுந்ததும் சோம்பல் முறிப்பதுதான் முதல் உடற்பயிற்சி. சோம்பல் முறிப்பது. உடலை தளர்த்தி ரத்த ஓட்டத்தை சீராக்கும்.  தினமும் நம் உணவில் காய்கறிகளும் பழங்களும் சேர்ந்தால் நமக்கு இதய நோயும், பக்கவாத நோயும் வரும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறியும், 100 கிராம் பழமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளை பொறுத்தவரை 125 கிராம் கீரையும், 75 கிராம் கிழங்கு வகைகளும், 100 கிராம் இதர காய்கறிகளும் இடம் பெற வேண்டும். 
ஆரோக்கியத்தின் ரகசியம் ஆரோக்கியமான தூக்கத்தில் இருக்கிறது. தூக்கமின்மை நம் குடல் பகுதியிலுள்ள நுண்ணுயிர் குழுமத்தில் ஆரோக்கிய சீரழிவை ஏற்படுத்தி பலதரப்பட்ட நோய்கள் வருவதற்கு காரணமாகிறது. உடலின் பெரும்பாலான ஹார்மோன்கள் வயிற்றில்தான் சுரக்கின்றன. எனவே குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  
சூரிய ஒளி ஓர் ஆற்றல் மிக்க மருந்து. உடலில் சூரிய ஒளியே படவில்லை என்றால் வைட்டமின் டி குறை காரணமாக அடிக்கடி சோர்வு, பலவீனம், தசை வலி, மூட்டு வலி ஏற்படும். இருதய, நுரையீரல் செயல்பாட்டுக்கு வைட்டமின் டி போதிய அளவு இருக்க வேண்டும். 
தினமும் அதிகாலை 20 நிமிடம் வெயிலில் நிற்பது நல்லது. அதிகாலை வெயிலில் வைட்டமின் டி நிறைய உள்ளது. இளம் வெயில் பட்டால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி பெருகும். ரத்த சோகை தவிர்க்கப்படும்.  
இயற்கை மருத்துவத்தில் சிறந்த மருத்துவ முறை பட்டினி. இது உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சத்துகளையும், கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. வாரத்தில்  ஒருநாள் உண்ணாமல் பட்டினி இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக், பக்கவாதம், கேன்சர் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. 
ஒரு கோபம் பத்து நோயை உண்டாக்கும், ஒரு சிரிப்பு நூறு நோயை குணமாக்கும் என்பார்கள். நம் உடலில் எந்தப்பகுதியில் நோய் இருந்தாலும் சரி  டி -லைம்போசைட்ஸ்  எனும் பொருள்தான் நோயிலிருந்து நம்மை காப்பாற்றி வருகிறது. நாம் வாய்விட்டு சிரிக்கும்போது டி-லைம்போசைட்ஸ் செயல் திறனும் அதிகரிக்கிறது. இது குறைந்தால் கார்டிசோல் அதிகம் கலந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே தினமும் 20 நிமிடம் மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 
வயிறு குலுங்க சிரித்தால் உடலில் இறுக்கம் உண்டாக்கும் ஹார்மோன் கார்ட்டிசால் 30 சதவீதம், அட்ரீனல் 70 சதவீதம் குறையும். நலம் தரும் ஹார்மோன்களான எண்டார்பின்ஸ் 29 சதவீதம், வளர்ச்சி ஹார்மோன் 80 சதவீதம் கூடும் என்கிறார்கள். மன இறுக்கம், துக்கம், உடல் வலி அனைத்தையும் சரி செய்யும் ஆற்றல் உடையவை விளையாட்டும் சிரிப்பும் என்கிறார்கள். 
நேர்மறை சிந்தனையாளர்களின் ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கமும் வருவதாக ஆய்வில் தெரிய வந்தது.
நாம் நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கையும் ஒரு மருந்துதான். வருவது வரட்டும் என்று கவலைப்படாமல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி துடிப்புடன் செயல்படும் என்கிறார்கள் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதே வாழ்க்கையை வளமாக்க உதவும். 
மகிழ்ச்சியாக வாழ்பவர்களுக்கு, "இண்டா காமின் 6" என்ற பொருள்  உடலில் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை வீரியத்துடன் வைத்திருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நிகழ்காலமும், எதிர்காலமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் மகிழ்ச்சியான மனநிலையில் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்கிறார்கள். அப்படியே வாழ்வோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

இன்று (ஏப். 7) உலக ஆரோக்கிய நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com