உண்மை நின்றிட வேண்டும்!

இன்றைய காலம் சமூக வலைதளங்களின் காலமாக  இருக்கிறது. எந்த ஒரு கருத்தையும் எவரும் பொதுவெளியில் வைப்பதற்கான களம் முற்றிலுமாகத் திறந்திருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
3 min read

இன்றைய காலம் சமூக வலைதளங்களின் காலமாக  இருக்கிறது. எந்த ஒரு கருத்தையும் எவரும் பொதுவெளியில் வைப்பதற்கான களம் முற்றிலுமாகத் திறந்திருக்கிறது. தரவுகளற்றக் குற்றச்சாட்டுகளை எவரும் எவர் மீதும் சொல்லிவிட முடிகிறது. நாம் படிக்கும், கேட்கும், பார்க்கும் கருத்துக்கள், சம்பவங்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதும் சுலபமாக இல்லை.

எது குற்றச்சாட்டு எது அவதூறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் அனைவருக்கும் இருப்பதும் இல்லை. குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதனை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எதார்த்தம். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரூபித்துக் கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஓர் அமைப்போ அல்லது தனிமனிதரோ தனக்கான மரியாதையை, அங்கீகாரத்தைப் பெற பல ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கிறது. அதனை ஒரே காணொலி ஒன்றும் இல்லாமல் தகர்த்து விடுகிறது. ஒருவர் தனது சுய ஆதாயத்திற்காகப் பரப்பும் இத்தகைய உண்மைக்குப் புறம்பான செய்திகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றொருவரின் வாழ்வையே சிதைத்து விடுகின்றன. சேவை நிறுவனம் போன்ற அமைப்புகள் இத்தகைய குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரும் பொழுது பலரது பல்லாண்டு கால முயற்சியும் உழைப்பும் பொருளும் வீணாகின்றன.

சமூக வலைதளங்களில் அதிகம் பேர் ஒருவருடைய காணொலிகளைப் பார்க்கும் பொழுது பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் இருப்பதால் பரபரப்பாகவும் சற்றே கவர்ச்சிகரமாகவும் இருப்பதற்கு மெனக்கெடும் சூழ்நிலை இருக்கிறது. பொதுவாக மனிதர்களின் மனதின் இருண்ட பக்கங்கள் வெளிப்படும் பொழுது அச்ச உணர்வு நமக்குத் தோன்றுகிறது.

ஒருவர் மீது பழி சுமத்துவதற்கு அவரது நடத்தையைக் கேள்விக்கு உள்ளாக்குவது என்ற போக்கு சமூகத்தில் தொடர்கதையாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் சட்டப் போராட்டம் நிகழ்த்தி தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதற்குப் பலஆண்டுகள் வரை ஆகக் கூடும். அதுவரையிலான அவரது  மனஉளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பது? 

இதனினும் கொடியது ஓர் அமைப்பு மீதோ நிறுவனம் மீதோ சுமத்தப்படும் குற்றச்சாட்டு. சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடம் அடித்து நொறுக்கப்பட்டதை, பள்ளிப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டதைப் பார்த்தோம். அது சமூக ஊடகத்தால் நிகழ்ந்த தீங்குக்கான உதாரணம். 

ஓர் அமைப்பிலோ கல்வி நிறுவனத்திலோ அலுவலகத்திலோ பணியாற்றும் பலருள் எவரேனும் ஒருவர் குற்றம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. குற்றம் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அந்த நிறுவனத்தின் பொறுப்பு என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக ஒட்டுமொத்த நிறுவனத்தையும் குற்றம் சாட்டுவது எந்த வகையில் அர்த்தமுடையது? 
இது உணர்ச்சிவயப்பட்டவர்களின் வெளிப்பாடு மட்டும்தானா? அதற்குள் அரசியல் ஒளிந்திருக்கிறதா? எனில் அத்தகைய அரசியலுக்கான அவசியமும் காரணமும் யாது? 

தற்போது இது போன்றதொரு சிக்கலில் சென்னையில் கலாúக்ஷத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி சிக்கிக் கொண்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஆசிரியர் மீதான பாலியல் புகார்கள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. 

மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கலாúக்ஷத்ராவின் பின்னணி பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். 1936-ஆம் ஆண்டு ஜனவரி 6-இல் ருக்மிணி தேவி அருண்டேல், அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் ஆகிய இருவரும் சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபை வளாகத்தில் முதல் முதலாக "கலாúக்ஷத்ரா' அமைப்பைத் தொடங்கினர். 

சிறந்த இசை நடனக் கல்லூரியாக இதனை உயர்த்த உறுதிபூண்டு உழைத்தனர். ஒற்றை மாணவியோடு தொடங்கப்பட்ட இக்கல்லூரி இன்றைக்கு உலகமெங்கும் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவர்களோடு இயங்குகிறது. 1962 முதல் கலாúக்ஷத்ரா சென்னை திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத் தொடங்கியது. 1993-இல், இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி கலாúக்ஷத்ரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.

"சதிராட்டம்' என்று ஒரு பிரிவினர் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த நடனத்தை ரஷியாவின் பாலே நடனத்துடன் இணைத்து ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்து "கலாúக்ஷத்ரா பாணி' எனும் தனிப்பாணியை உருவாக்கி இன்றைக்கு நாம் காணும் பரதத்தின் தெய்வீகமான வடிவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ருக்மிணி தேவி. அதற்காக அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள், எதிர்ப்புகள், அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அப்போது ருக்மிணி தேவியின் முயற்சியை அன்றைய புகழ்பெற்ற நடனக்கலைஞரான பாலசரஸ்வதி "தெய்வீகப்பணி' என்று பாராட்டினார்.

கலாúக்ஷத்ராவின் மேன்மைக்கு அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர் ஜார்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி.பி. ராமஸ்வாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர்கள் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கலைப்பணிக்கான ருக்மிணி தேவி அருண்டேலின் அர்ப்பணிப்பைக் கண்டு டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி போன்ற தலைசிறந்த இசைக்கலைஞர்கள் அவருடன் இணைந்து ஆசிரியப் பணியாற்ற முன்வந்திருக்கிறார்கள்.

பரதக்கலை மீது கொண்டிருந்த பேரன்பால் ருக்மிணி தேவி பல அவமானங்களைத் தாங்கி உருவாக்கிய கலைக்கோயில் கலாúக்ஷத்ரா. வரும் தலைமுறைகளை மனதில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையோடு நிறுவப்பட்ட நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்ட நுண்கலைக் கல்லூரி. கலாக்ஷேத்ராவில் பணியாற்றிய ஆசிரியர்கள் நால்வர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கலாக்ஷேஷத்ராவில் பாலியல் துன்புறுத்தல் விவகாரங்கள் தொடர்வதாக கல்லூரியின் முன்னாள், இந்நாள் மாணவ - மாணவிகள் ஒருங்கிணைந்து குற்றம்சாட்டப்பட்ட நால்வர் மீது நடவடிக்கை கோரி இணையதளத்தில் ஒரு கையொப்ப இயக்கத்தைத் தொடங்கினர். 

அதில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவர், காவல்துறையில் புகார் பதிவு செய்தனர். தேசிய மகளிர் ஆணையமும் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முயன்றது.

மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வர் "இந்தக் குற்றச்சாட்டு உண்மையானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என சட்டப்பேரவையில் உறுதியளித்தார். 

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலாúக்ஷத்ரா வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில், மூன்று உறுப்பினர் கொண்ட குழுவை கலாúக்ஷத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரில் உதவிப் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றுமுள்ள மூவரும்  பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

புகார் குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கலாúக்ஷத்ரா அறக்கட்டளையின் நிர்வாகத்தை வலுப்படுத்த மாணவர் தரப்பில் ஒரு புதிய ஆலோசகர் மற்றும் ஒரு சுதந்திரமான  ஆலோசனைக் குழு உடனடியாக அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.

சட்டப்படியான நடவடிக்கைகள் வெகுசீக்கிரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும். 

இப்படி நுண்கலைக்கென ஒரு கல்லூரியை உருவாக்க உழைத்தவர்கள் உழைப்பு, அவர்கள் உருவாக்கிய நற்பெயர், பலரின் தியாகம் ஆகியவை இந்தப் பெயருக்குப் பின்னே இருக்கின்றன. ஒரு சிலரின் தவறான நடத்தையோ நடவடிக்கையோ எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் ஒரு கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதில் அர்த்தமில்லை. 

தனிநபர்கள் தவறு செய்யும் பொழுது அதனை நிறுவனத்தின் மீது ஏற்றாமல் தனிமனிதத் தவறாகப் பார்க்கும் மனப்பான்மை வளர வேண்டும். அதைவிடுத்து அதைக் கொண்டும் மலினமான அரசியல் செய்ய முற்படுவதும் ஜாதிய அடையாளம் பூச முயல்வதும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துவதும் அருவருக்கத்தக்கன. சமூக வலைதளங்களில் இதுகுறித்தான காணொலிகளைப் பதிவிட்டு ஒரு கல்லூரியின் மீது சேற்றைவாரி இறைத்து அதன்முலம் பணம் ஈட்ட முயல்வது அறமல்ல. 

அற உணர்வு என்பதே பண்பட்ட சமூகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் ஏற்படும் சீர்கேடுகளை எவராலும் சரிசெய்ய இயலாது. சமூகத்தின் அழிவுக்கான வழியாக அது அமைந்துவிடும். இது போன்ற பரபரப்புச் செய்திகளை ஒதுக்கி அறத்தின் பக்கம் நிற்க வேண்டியவர்கள் நாம்தான். 

இந்த சமூகத்தின் மேன்மைக்கான செயல்பாடுகளை, அரும்பெரும் பணிகளை முன்னெடுத்துத் தங்கள் வாழ்வையே அர்பணித்த பெருங்குணம் கொண்டவர்களின் கனவைச் சிதைக்கும் அற்பத்தனத்தை சில காசுகளுக்காகச் செய்வது மாபாதகமாகும். 

தமிழகம் போன்றதொரு பண்பாட்டுப் பாரம்பரியம் கொண்ட மண்ணில் அறம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com