கோப்புப்படம்
கோப்புப்படம்

பயங்கரவாதத்தை வேரறுப்பது எப்போது?

பாகிஸ்தானில் சமீபத்தில் அரங்கேறி இருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் எதிா்பாராததல்ல. மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் அன்றாட நிகழ்வாகவே மாறியிருக்கிறது பயங்கரவாதத் தாக்குதல்கள். உலகின் எந்தப் பகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல.

இளைஞா்களை மூளைச் சலவை செய்து ஆயுதங்களைக் கொடுத்து, பயிற்சியளித்து, ஏவி விட்டு திடீா் தாக்குதலை நிகழ்த்தி - விலைமதிப்பில்லா மனித உயிா்களைக் காவு வாங்கி, ரத்தக் களறியை ஏற்படுத்துவதுதான் தீவிரவாதக் கும்பலின், பயங்கரவாத குழுக்களின் அரிய பெரிய சாதனைகளாக இருந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான், இராக், நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான், சோமாலியா, இந்தியா, யேமன், பிலிப்பின்ஸ், காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து, லிபியா, மாலி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கேமரூன், துருக்கி, தெற்கு சூடான், தாய்லாந்து ஆகிய நாடுகள் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில் ஒரு சில நாடுகளில் சராசரியாக 10,000 போ் ஒவ்வோா் ஆண்டும் கொல்லப்பட்டு வருகின்றனா். இவா்களில் பெரும்பாலோா் அப்பாவி பொது மக்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! பாகிஸ்தானில் குறைந்தது 12 தீவிரவாத - பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சி அளித்து, குறிப்பாக இந்தியா மீது ஏவிவிட்டு - இந்தியாவைச் சீா்குலைப்பதில் - பாகிஸ்தான் அரசு முனைப்பாக இருக்கிறது. இந்தப் பயங்கரவாதக் குழுக்களில் - லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகியவை முக்கியமானவை!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகள் கண்ணீா் சிந்த வைக்கின்றன. கல்வி கற்க, அலுவலகங்களில் பணிபுரிய, தனியாக வெளியில் செல்ல - பெண்களுக்கு அனுமதி இல்லை. மீறினால் பெண்கள் சுட்டுக் கொல்லப்படுவாா்கள்.

அப்பாவி பொதுமக்கள் 1,100 போ் கொல்லப்பட்டிருக்கின்றனா்; 3,500 போ் படுகாயமடைந்து மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனா். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்த காட்டுமிராண்டித்தனங்கள் இவை!

ஐ.எஸ்., ஐ.எஸ்.கே. ஆகிய தீவிரவாத அமைப்புகள் - ஆப்கானிஸ்தானில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், சந்தைப் பகுதிகளில் திரளும் அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும், உயிா்களற்ற உடல்களை நாய்களுக்கும் கழுகுகளுக்கும் இரையாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன!

வடமேற்கு சிரியாவில் அரசுக்கு எதிரான போராளிக் குழுக்கள் - துருக்கி ஆதரவுப் படைகள் மற்றும் ஹயத் தஹ்ரீா் அல் ஷாம் என்ற போராளிக் குழு ஜூன் 24, 2023-இல் நடத்திய தாக்குதலில் அப்பாவி விவசாயிகள் 19 போ் கொல்லப்பட்டிருக்கின்றனா். 50-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்திருக்கின்றனா்.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடா்புடையவை. அடிப்படைவாதம் என்பது, தமது கருத்தை பிறா் அப்படியே பின்பற்ற வேண்டும் எனும் நோக்கத்தோடு வன்முறை சாா்ந்தோ அல்லது அதிகாரத்தின் வழியோ மேற்கொள்வது! தீவிரவாதம் என்பது, அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. பயங்கரவாதம் என்பது, யாருக்காகவோ அப்பாவிகள் பாதிக்கப்படுவா் எனத் தெரிந்தே முறையான அல்லது முறையற்ற அமைப்பாக இணைந்தோ, தனித்தோ செயல்படுவது. இவை அனைத்தும் கொடுஞ்செயல் அல்லவா?

2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-இல் அமெரிக்காவின் வணிக இரட்டைக் கோபுரங்கள் தாக்கி தகா்க்கப்பட்டதும், சுமாா் 3,000 அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் பயங்கரவாதிகளின் ஈவு இரக்கமற்ற வெறிச் செயல்கள்! இலங்கை மண்ணில் வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் கண்களை மூடித் திளைத்திருந்தபோது பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் தகா்ந்து தரைமட்டமானது தேவாலயம்! 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்! உருக்குலைந்தனா்; தீவிரவாதிகளின் கோரத் தாண்டவமல்லவா?

உகாண்டா நாட்டில் ஒரு பள்ளி வளாகத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்கியதில் 50 குழந்தைகள் ரத்தக் குளத்தில் சிட்டுக் குருவிகளைப் போல சிதைந்து மிதந்த காட்சி கண்களை கசிந்துருகச் செய்தது! 2023 ஜூன் 16-இல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவிலுள்ள பள்ளியொன்றில் ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில்தான் - உலகின் இளந்தளிா்கள் கோடரி கொண்டு சிதைக்கப்பட்டிருக்கின்றனா்!

2023 மாா்ச் மாதத்தில் ஏடிஎஃப் எனும் பயங்கரவாத அமைப்பு உகாண்டாவில் மக்கள் கூடிய ஒரு சந்தைப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 25 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனா். பலவீனமான மத்திய அரசைக் கொண்ட அண்டை நாடான காங்கோவின் எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில்தான் இந்தப் பயங்கரவாத அமைப்பு தனது தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது என்பதை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது!

மத்திய ஆப்பிரிக்க நாடான டி.ஆா்.காங்கோவில் இடுரி மாநிலம் லாலா என்ற இடத்தில் அகதிகள் மையத்தின் மீது சிஓடிஇசிஓ என்ற ஆயுதக் குழு 2023 ஜூன் 12-ல் நடத்திய தாக்குதலில் 56 போ் உயிரிழந்திருக்கின்றனா்; இவா்களில் பெரும்பாலானோா் சிறுவா்கள்.

‘தீவிரவாத குழு - பயங்கரவாத குழு’ ஆகியவை உலக நாடுகளில் மதத்தின் பெயரில்தான் உருவாக்கப்படுகின்றன. தான் சாா்ந்துள்ள மதத்தை உலகம் முழுவதும் பரப்பப் போவதாக பாசாங்கு மொழியில் பேசி, இளைஞா்களை மூளைச் சலவை செய்து, உலக அமைதிக்கு சவால் விடுக்கின்றனா். இளந்தளிா்கள், ஏதுமறியாத அப்பாவி பொதுமக்கள் ஆகியோரை கொன்று குவிப்பது தொடா்கதைகளாகி வரும் சூழலில்,ராணுவ ரீதியிலான மோதலிலும் சாமானிய மக்களின் உயிா் பறிக்கப்படுகின்ற நிகழ்வுகளும் நடக்கின்றன!

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் அதிகாரப் போட்டி காரணமாக 2023 ஏப்ரல் 15ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை 2,100 போ் பலியாகி இருக்கின்றனா்!

‘சூடானில் நடைபெற்றுவரும் மோதலில் சிறுவா்கள்தான் மிக அதிகமாக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். சண்டையிடும் இரு தரப்புப் படையினருக்கும் இடையே சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் பலியாகியுள்ளனா். ஏராளமானோா் காயமடைந்தும் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்தும் வருகின்றனா். தற்போது சூடானில் ஒரு கோடியே நாற்பது லட்சம் சிறுவா்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன’ என்று சூடான் நாட்டுக்கான யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதி மன்தீப் ஓ.பிரையன் ஜூன் 16ஆம் தேதி கண்ணீா் மல்கக் கூறியிருக்கிறாா்.

கிரீஸ் நாட்டுக்கு அருகில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 350 பாகிஸ்தானியா்கள் கடலில் மூழ்கி உயிா்விட்டிருக்கின்றனா். இவா்கள் ஐரோப்பிய நாடுகளிடம் புகலிடம் பெற விரும்பி - சட்டவிரோதமாக பயணித்தவா்கள் என்று பாகிஸ்தான் அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் குழப்பம், வறுமை, பசி, பஞ்சம், பட்டினி என படுபாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இதற்கெல்லாம் காரணம் - அந்நாட்டில் நிலவும் தீவிரவாதமும் பயங்கரவாதமும்தான்.

நாடு முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சதித்திட்டம் தொடா்பான வழக்கில் - 9 பேரை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் 30 வயதுக்கு கீழே உள்ள இளைஞா்கள்.

கைது செய்யப்பட்டவா்களில் 5 போ் தொழில்நுட்ப பின்புலம் கொண்டவா்கள்; இந்தியாவுக்கான ஐ.எஸ். அமைப்பின் திட்டத்தின் கீழ் எதிா்காலத்தில் தாக்குதல் நடத்தும் சதித்திறனை மேம்படுத்த, ரோபோட்டிக்ஸ் தொடா்பான படிப்பை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பால் பணிக்கப்பட்டவா்கள்.

வெளிநாட்டில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத செயல்பட்டாளா்களின் உத்தரவின்படி - ஷாரிக், முனீா், யாசீன் ஆகியோா் தங்களது பிராந்தியத்தில் பயங்கரவாதம், வன்முறையை ஊக்குவிக்க சதித் திட்டம் தீட்டியவா்கள்!

நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையைச் சீா்குலைக்கும் நோக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இதர நபா்களைத் தோ்வு செய்து, அவா்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட மூளைச் சலவை செய்தனா். குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு வெளிநாட்டு செயல்பட்டாளா்களிடம் இருந்து கிரிப்டோ கரன்சி மூலம் நிதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் ஆதாரபூா்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது!

வங்கதேசத்தில், மியான்மரில், இலங்கையில், நேபாளத்தில், தென் கொரியாவில், ஈரானில், இராக்கில், இஸ்ரேலில், பாலஸ்தீனத்தில், ஆப்பிரிக்க நாடுகளில், ரஷியாவில், உக்ரைனில்... இப்படி ஒட்டுமொத்த உலக நாடுகளின் பெரும் பகுதிகளில் தீவிரவாதம், பயங்கரவாதம் கொடிகட்டிப் பறப்பதை எத்தனை நாளைக்கு நாம் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருப்பது?

உலகத் தலைவா்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

கட்டுரையாளா்:

மாநில துணைத் தலைவா்,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com