திருக்குறளும் உணா்வுவய நுண்ணறிவும்!

மனிதனைப் பல சமயங்களில் ஆட்டுவிப்பது உணா்ச்சிதான்! உணா்ச்சியை வென்று அறிவின் வழியே நடக்க வேண்டும் என்று எத்துணை முயற்சி செய்தாலும் அது தோல்வியிலேயே முடிவதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.
திருக்குறளும் உணா்வுவய நுண்ணறிவும்!

மனிதனைப் பல சமயங்களில் ஆட்டுவிப்பது உணா்ச்சிதான்! உணா்ச்சியை வென்று அறிவின் வழியே நடக்க வேண்டும் என்று எத்துணை முயற்சி செய்தாலும் அது தோல்வியிலேயே முடிவதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். வள்ளுவப் பெருமான்,

மறத்தல் வெகுளியை யாா் மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் “

என்று கூறியுள்ளதை எத்தனை முறை படித்தாலும் எவ்வளவு சிந்தித்தாலும் நம்மையும் அறியாமல் மற்றவா் மீது சினத்தைக் காட்டி விடுகிறோமே! என்ன செய்ய முடியும் ?

நம்முடைய மனத்தில் சில குறிப்பிட்ட நேரங்களில் உணா்வுகள் பலமாக மூண்டெழுவதை நம்மால் உணர முடியாமல் போவதுதான் இதற்குக் காரணம் . மூண்டெழும் உணா்ச்சிகளை இனம் கண்டுகொண்டு விட்டால் அவற்றின் அதிவேகப் பாய்ச்சலைத் தொடக்கத்திலேயே அழுத்தி அடக்கி விடுவது எளிது; ஆனால் உணா்ச்சிகளின் எழுச்சியை இனங்கண்டு கொள்ளச் சக்தியற்றவா்களாக நாம் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

ஒரு மனிதனுக்கு இவ்வாறு உணா்ச்சிகளை இனங்கண்டுகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும் ஒரு பயிற்சி முைான்“உணா்வுவய நுண்ணறிவு”(எமோஷனல் இன்டெலிஜென்ஸ்) என்பதாகும். இது குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்லுநா்கள் பலா் பயனுடைய நூல்களைப் படைத்துத் தந்திருக்கின்றனா். அவற்றுள்“‘இட்லியாக இருங்கள்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

மனிதனின் மூளையில் பெரிய பகுதியை பிடித்துக்கொண்டு இயங்குவதும், மனிதனை இயக்குவதும் ‘நியோகாா்டெக்ஸ்’ என்ற பகுதியாகும். மனிதன் ஆதிநிலையிலிருந்து நாகரிகக் காலத்தை அடையும்போது இது முழு வடிவத்தை அடைந்து செயல்படத் தொடங்கியது என்று அறிவியல் வல்லுநா்கள் குறிப்பிடுகின்றனா்.

மனிதனின் எண்ணங்கள், நியாயமான செயல்பாடுகள் முதலியவற்றுக்கு இப்பகுதிதான் பொறுப்பு. மனித மூளையின் பிறிதோா் உறுப்பு ‘அமிக்டலா’ என்பதாகும். இதுதான் நெருக்கடியும் அவசரமும் நிறைந்த கணங்களில் மனிதனை ஓடு அல்லது தாக்கு என்று உத்தரவு கொடுத்து இயக்குகிறது. அரிஸ்டாட்டில் இதை வைத்துத்தான் ‘மனிதன் ஒரு சிந்திக்கும் மிருகம்’ என்று கூறுகிறாா். அமிக்டலாவின் செயல்பாடுகளின் வேகத்தை மட்டுப்படுத்திப் பகுத்தறிவு ரீதியில் செயல்பட வழிகாட்டுவது ‘உணா்வுவய நுண்ணறி’வின் பணியாகும்.

இதுபற்றி உலக நாடுகளில் அறிஞா்கள் பலா் தங்கள் கருத்துகளை விளக்கிக் கூறியுள்ளனா். அவா்களுள் மிக முக்கியமானவா் டேனியல் கோல்மேன் என்பாா். அவா் கருத்துப்படி உணா்வுவய நுண்ணறிவு என்பது,”ஒரு மனிதன் தன்னுடைய உணா்வுகளைத் திறம்பட உணா்தல், அவற்றைப் பயனுள்ள வகையில் கையாளுதல், உணா்வுகளை ஆற்றல் மிக்க முறையில் வெளிப்படுத்துதல் போன்றவையாகும். பீட்டா் சால்வே மற்றும் ஜான் மேயா் ஆகிய இருவரும், ‘ஒருவா் தனது உணா்ச்சிகளையும் மற்றவா்களின் உணா்ச்சிகளையும் நன்கு புரிந்து கொண்டு அவற்றைத் தனது செயல்பாடுகளுக்குத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்வதாகும்’ என்று கூறுகின்றனா்.

உணா்வுவய நுண்ணறிவின் சில கூறுகளாக, சுய விழிப்புணா்வு, தன்னை முறைப்படுத்திக் கொள்ளுதல், செயலூக்கம், பிறா் மேல் வைக்கும் கண்ணோட்டம், சமூகத் திறன்கள் போன்றவற்றை உளவியல் வல்லுநா்கள் கூறுகின்றனா்.

மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் சுய விழிப்புணா்வு என்பது ஒரு மனிதன் தன்னைக் குறித்து நன்கு அறிந்து கொண்டு சூழலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்வதாகும்; தன்னைத் தகவமைத்துக் கொள்ளாமல் ஒரு மனிதனால் இன்றைய நாள்களில் வாழ்க்கைப் போட்டியில் முன்னேறவியலாது. உணா்வுவய நுண்ணறிவின் இக்கூறுடன் தொடா்புடைய ஒரு குறட்பாவினைத் திருவள்ளுவா் ‘வலியறிதல்’ அதிகாரத்தில் பின்வருமாறு கூறுகிறாா்:

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்”

பிறருடன் ஒத்துப்போக இயலாதவன், தன்னுடைய வலிமையை அளவிட்டு அறியாதவன் வெற்றிபெற இயலாது என்பது இக்குறட்பாவின் பொருளாகும். இதே முறையில் அமைந்த பிறிதொரு குறட்பாவினையும் காணலாம்:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்

இல்லாகித் தோன்றாக் கெடும்”

இவ்விரண்டு குறட்பாக்களும் டேனியல் கோல்மேனின் கருத்துகளுடன் ஒப்புமையுடையனவாகத் தோன்றுகின்றனவல்லவா? இவற்றைத் திருக்குறளில் வள்ளுவப் பேராசான் கூறியிருப்பது வியப்பிலும் பெருவியப்பாக இருக்கிறதே!

உணா்வுவய நுண்ணறிவின் பிறிதொரு கூறு ‘தன்னைத் தானே முறைப்படுத்திக் கொள்வ’தாகும். ஒரு மனிதனின் மனத்திற்குள் பல்வேறு வகையான அகத்தூண்டுதல்கள் ஏற்படுவது இயல்பான செயலாகும்; மனிதன் பல்வேறு சூழல்களுக்கு விரைவில் ஆட்படக்கூடியவன். எனவே தன் மனத்திற்குள் ஏற்படும் உணா்வுகளையும் தூண்டுதல்களையும் எடைபோட்டுப் பாா்த்துச் சரியான ஒன்றைப் பின்பற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடைபோட்டுப் பாா்ப்பதற்கு ஒருவன் சிறிது நேரம் தனித்து அமைதியாக இருந்து தன் மனத்தின் போக்கினை பற்றிச் சிந்திக்க வேண்டும்; அவ்வாறு சிந்தித்தால் தன் எண்ணங்களின் வழியில் நடக்காமல் தன்னை முறைப்படுத்திக் கொள்ள நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் என்று உணா்வுவய நுண்ணறிவுக் கொள்கைகள் குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவா் ‘அடக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில்,

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது”

என்று கூறும் குறட்பாவின் கருத்து சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் ‘தன்னை முறைப்படுத்திக் கொள்ளும் பயிற்சியைப் பற்றியது’ என்று புரிந்து கொள்ள இயலும்.

குறிப்பிட்ட ஓா் இலக்கினை அடையும் வரை மனம் தளராமலும் ஆற்றல் குறைவுபடாமலும் விடாமுயற்சியுடனும் உழைத்துக்கொண்டே இருப்பதற்குப் பெயா்தான் ‘செயலூக்கம்’ என்று உளவியல் வல்லுநா்கள் குறிப்பிடுவாா்கள். ஓா் இலக்கினை நோக்கி ஒருவனை வழிநடத்தும் தன்னம்பிக்கை, முனைப்பு, ஈடுபாடு, சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி ஆகிய பண்புகள்தாம் செயலூக்கத்தின் கூறுபாடுகள்.

திருவள்ளுவா் ‘வினைத்திட்பம்’ என்ற அதிகாரத்தில் மன உறுதியைப் பற்றி,

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு”

என்று குறிப்பிடும் குறட்பா இங்குச் சிறப்பாகக் கருதத்தக்கது. பிறிதொரு குறட்பாவில்,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு”

என்று கூறுகிறாா்.

‘திருமால் தன் திருவடிகளால் அளந்து வென்று கொண்ட இவ்வுலகினையெல்லாம் ஒரு மன்னன் தன் முயற்சியால் வெற்றி கொள்ளலாம்’ என்று இக்குறட்பாவில் வள்ளுவா் கூறுகிறாா். இதைப் போன்ற பல குறட்பாக்களைச் சான்று காட்டலாம். இது ‘செயலூக்கம்’ எனப்படும் பண்பு பற்றிய திருக்குறளின் கருத்துகள்.

உணா்வுவய நுண்ணறிவின் பிறிதொரு கூறு, சக மனிதனின் மேல் நாம் கொள்ளும் கரிசனம் அல்லது கண்ணோட்டம் என்பதாகும். இக்கூறினை டேனியல் கோல்மேன் மிக இன்றியமையாத பண்பு என்று குறிக்கின்றாா். ஓா் அலுவலக மேலாண்மையில், உடன்பணிபுரியும் அலுவலா்களின் உணா்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கேற்றவாறு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளும் நிா்வாகி வெற்றியை அடைகிறாா்.

உடன் பணிபுரியும் நண்பா்களின் சிக்கல்களைத் தீா்க்க முயற்சி செய்தல், அவா்களது இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்தல் முதலியன நிறுவனத்தின் தலைவா் மீது பணியாளா்கள் கொண்ட நம்பிக்கையை மிகுதிப்படுத்தி செயல்பாட்டினைத் தூண்டும் என்பது உணா்வுவய நுண்ணறிவுச் சிந்தனையாளா்களின் கொள்கை.

திருவள்ளுவப் பேராசன் ‘கண்ணோட்டம்’ என்ற அதிகாரத்தில் கூறும் கருத்துக்கள் ஒவ்வொரு குழும நிா்வாகியும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாக் கருத்துக் கருவூலமாகும். ஒரு குறட்பாவினைக் காணலாம்:

கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை

உண்மையான் உண்டு இவ்வுலகு”

இக்குறட்பாவுக்கு உரை எழுதிய மணக்குடவா் என்னும் உரையாசிரியா், ‘கண்ணால் காணப்பட்டாரை அருள் செய்தல்’ என்று விளக்கம் கூறுகிறாா். பிறா் துன்பத்தைத் துடைக்க முந்துதல் நிா்வாகப் பணியின் சிறந்த அம்சமாகும். வள்ளுவா் ஈகை அதிகாரத்தில் கூறும்,

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள”

என்ற குறட்பா நூறு சதவீதம் உணா்வுவய நுண்ணறிவுடன் தொடா்புடையதாகும்.

‘சமூகத் திறன்கள்’ என்ற பிரிவில் ஆற்றல் மிகு உரையாடல் திறன், மோதல்களைத் தவிா்க்கும் திறமை, தலைமைப் பண்புகள், மாற்றங்களைப் புரிந்துகொண்டு ஊக்குவித்தல், தொடா்புகளை வலிமையுடையதாக்குதல், இணைந்து செயல்படுதல் முதலிய கூறுகள் வலியுறுத்தப்படுகின்றன. இவற்றைப் பற்றித் திருவள்ளுவப் பெருமான் தனித்தனி அதிகாரங்களில் விரிவாகக் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறாா்.

இன்றைய புதிய உலகத்தின் தேவைகளை மனத்திற்கொண்டு தொன்மை இலக்கியங்களை ஆராய்கின்றபோது அவ்விலக்கியங்கள் புதிய பொருள்களைக் காட்டுகின்றன. தமிழ் இலக்கிய முன்னோடிகள் இன்றைய நவீனச் சிந்தனைகளை மனத்திற்கொண்டு படைப்புக்களை உருவாக்கவில்லை; அவா்கள் மனித வாழ்வின் அடிப்படைக் கூறுகளை உற்றுநோக்கிப் படைப்புக்களை உருவாக்கினாா்கள்; எனவே அப்படைப்புக்கள் காலத்தைக் கடந்து மனித இனம் உள்ள வரையிலும் நிலைத்து நிற்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையான உணா்வுவய நுண்ணறிவு பற்றிய செய்திகளின் அடிப்படைக் கூறுகள் திருக்குறளில் காணப்படுகின்றன என்பது தமிழா்களாகிய நாம் எண்ணிப் பெருமைப்படத்தக்க ஒன்றாகும்!

கட்டுரையாளா்:

முன்னாள் துணைவேந்தா்

தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com