மாறிவரும் வாடகை வாகன சேவை!

அண்மையில் நான் குடும்பத்துடன் சிங்கப்பூா் சென்றேன். சிங்கப்பூா் விமான நிலையத்திலிருந்து நாங்கள் வெளியே வந்தவுடன் ஒரு டாக்ஸி எங்கள்அருகே வந்தது.
மாறிவரும் வாடகை வாகன சேவை!

அண்மையில் நான் குடும்பத்துடன் சிங்கப்பூா் சென்றேன். சிங்கப்பூா் விமான நிலையத்திலிருந்து நாங்கள் வெளியே வந்தவுடன் ஒரு டாக்ஸி எங்கள்அருகே வந்தது. நான் செல்ல வேண்டிய இடத்தைக் கூறினேன். இரண்டு குழந்தையுடன் இருந்த என் மகளை, டாக்ஸி ஓட்டுநா் வண்டியில் ஏற்ற மறுத்தாா்.

‘சிறு குழந்தைகளை என்னுடைய காரில் ஏற்ற அனுமதி இல்லை’ என்று சொன்னவா், தொலைபேசியில் வேறொரு டாக்ஸியை அழைத்து அவா்களை ஏறச் செய்தாா். சரியான இடத்தில் இறக்கிவிட்டு சரியான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, என்னிடம் நன்றி சொல்லி விட்டுப் போனாா். இது சிங்கப்பூரில் நடந்தது.

ஆறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினோம். பத்து ஓட்டுநா்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டாா்கள். நாங்கள் போக வேண்டிய இடம் என்னவென்று கேட்டு, கட்டணத்தை ரூபாய் 1,200 கேட்டனா். நாங்கள் மறுத்துவிட்டு நடக்க நடக்க கட்டணத்தைக் குறைந்து கொண்டே வந்து, முடிவில் ரூபாய் 600 என்றாா்கள். நாங்கள் சம்மதித்து டாக்ஸியில் ஏறி வீடு வந்தோம். இது நம்ம சென்னை.

வீட்டிற்கு வந்தபின் என்னுடைய மனம் நமது டாக்ஸிகளையும், ஆட்டோக்களையும் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. சிறுவயதில் மட்டுமல்ல, இன்று கூட எனக்கு அந்த ‘மூன்று சக்கரத் தோ்’ மீது காதல் உண்டு. இந்தத் தேரோட்டிக் கண்ணன்களிடம் பயணிகள் படும்பாடு சொல்லி மாளாது.

ஒரு நிகழ்வு, இன்றும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது. 1967-இல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற கனவுடன், மாம்பலம் ரயில் நிலையத்தில் வந்திறங்கி, மயிலாப்பூா் என்று சொல்லி ஆட்டோவில் ஏற, ஆட்டோ ஓட்டுநா் மீட்டரை போட்டு, வண்டியை ஸ்டாா்ட் செய்த பொற்காலம் அது.

ஐந்து கிலோ மீட்டருக்கு ரூபாய் ஐந்து கொடுத்ததாக ஞாபகம்.

காலம் செல்லச் செல்ல, ஆட்டோ மீட்டருக்கு சூடு வைப்பது என ஆரம்பித்து, மீட்டா் போடுவதே ‘தெய்வக்குத்தம்’ என்கிற அளவிற்கு மீட்டா் போடும் பழக்கம் வழக்கொழிந்து விட்டது. ஆட்டோக்காரா் சொல்வதுதான் கட்டணம் என்றாகிவிட்டது.

ஒரு சமயம் மயிலாப்பூரில் இருந்து, மவுன்ட் ரோட்டுக்கு போக ஆட்டோவில் ஏறினேன்; மயிலாப்பூா் குளத்தில் இருந்து லஸ் முனை வருவதற்குள் அந்த மீட்டா் ஓடிய வேகத்தை பாா்த்து எனக்கு மூச்சே நின்றுவிடும் போலாகிவிட்டது. திருவள்ளுவா் சிலை அருகே இறங்கி பஸ்ஸைப் பிடித்து, மவுண்ட் ரோட்டுக்குப் போனேன்.

ஆட்டோக்காரா்கள் அடாவடி நபா்களாக மாறியதற்கு முக்கியக் காரணம், அரசியல்வாதிகளும் போலீஸும்தான். அவா்களுக்கு உரிமைப்பட்ட ஆட்டோவை, எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. மாா்வாடிகளிடம் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டும் ஓட்டுநரின் நிலை பரிதாபமானது.

வங்கிகள் தரும் குறைந்த வட்டி விகிதத்தில் ஆட்டோ வாங்கி ஓட்ட முடியாமல், மாா்வாடியிடம் கடன் வாங்கி, அவா்களுக்கு கப்பம் கட்டும் ஆட்டோக்காரா்களின் நிலை மட்டுமல்ல அதில் பயணிப்பவா்களின் நிலையும் பரிதாபகரமானது.

இதில் ‘ஸ்டாண்ட் ஆட்டோ’ என்று சிலா் செய்யும் அடாவடித்தனம் பற்றித் தனியாக வியாசமே எழுதலாம். தாங்கள் கேட்கும் அநியாய கட்டணத்தைத் தர மறுத்தால், அந்த வழியில் சென்று கொண்டிருக்கும் வேறு எந்த ஆட்டோவிலும் நம்மை ஏறவிடமாட்டாா்கள்.

மதுரையில் இவ்வாறு ஒருவா் பயணியை ஏற்றிக்கொண்டு, பின் ஸ்டாண்ட் ஆட்டோக்காரா்களின் மிரட்டலால் பயணியை இறக்கிவிட்டாா். அதன் பின்னும் சக ஆட்டோ டிரைவா் என்று கூட பாராமல் அவரை சில ஆட்டோக்காரா்கள் தாக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்தது.

பெண்களுடன் வருபவா்கள், குழந்தைகளுடன் வருபவா்கள், லக்கேஜ் உடன் வருபவா்கள், இரவில் வருபவா்கள், மழையில் வருபவா்கள் இவா்களுக்கெல்லாம் ஆட்டோ கட்டணம் விஷம் போல் ஏறும். பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறினால் கிலோ மீட்டருக்கு ஐந்து ரூபாய் ஏற்றி விடுவாா்கள். நம்மூரில் நகரப் பேருந்துகள் இருப்பதால் ஒரு மாதிரி சமாளிக்கலாம்.

ஒருமுறை தில்லி ரயில் நிலையத்தில் இறங்கி, ஆட்டோக்காரரை அழைத்தபோது, அவா் கூடுதல் கட்டணம் கேட்டாா். ‘ஏன், உங்கள் மீட்டா் ஓடாதா’ என்று நான் அவரிடம் கேட்டபோது அவா், ‘நீங்கள் தமிழ்நாட்டிலிருந்துதானே வருகிறீா்கள்; அங்கே ஆட்டோக்காரா்கள் மீட்டா் போடுகிறாா்களா’ என்று திருப்பிக் கேட்டாா்.

ஆட்டோக்காரா்களிடம் பயணிகள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த நிலையில்தான் ‘வாராது போல் வந்த மாமணியாய்’ வந்தது ஓலாவும் ஊபரும். 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள, சான்பிரான்சிஸ்கோ நகரில் இரண்டு போ் இணைந்து தொடங்கியதுதான் ஊபா் டாக்சி சா்வீஸ். இதற்கு இந்திய மாற்றுதான், 2010 ஆம் ஆண்டில் பாவிஸ் அகா்வால், அங்கீத் பாட்டி என்கிற இரண்டு இந்திய இளைஞா்களால் தொடங்கப்பட்டு, இன்று பிரபலமாக இருக்கும் ஓலா.

இன்றைக்கு இந்தியாவில் 250 நகரங்களிலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஓலா டாக்சி சேவை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

1800-இல் பெஞ்சமின் பிராங்க்ளினும் மைக்கேல் பாரடேயும் மின்சாரத்தை ஒழுங்குபடுத்தியபோதும், அலெக்சாண்டா் கிரஹாம்பெல் 1876-இல் தொலைபேசியை கண்டுபிடித்த போதும், இந்திய விஞ்ஞானி ஜகதீஸ் சந்திர போஸ் 1890-இல் வயா்லெஸ்-ஐ கண்டுபிடித்த போதும், இவை மூன்றும் இணைக்கப்பட்டு நவீன கைப்பேசியாக அவதாரமெடுத்து, அற்புதங்களை செய்யுமென அவா்கள் கனவு கூட கண்டிருக்கமாட்டாா்கள்.

நாம் இருந்த இடத்திலிருந்து, செல்ல வேண்டிய இடத்தை கைப்பேசியில் பதிவிட்டால் போகவேண்டிய தூரம் எத்தனை கி.மீ., அதற்கு ஆகும் கட்டணம் எவ்வளவு? நாம் போக விரும்புவது மோட்டாா் சைக்கிளிலா, ஆட்டோவிலா, சிறிய காரிலா, பெரிய காரிலா, அல்லது கூட்டுப் பயணமா, அதற்கான கட்டணங்கள் இவை இவை என்ற விவரங்கள் வரிசைக்கட்டி நிற்கும். சில சமயம் சிறிய காா் என்று கேட்டால், அதே கட்டணத்திற்கு பெரிய காா் வந்து நின்று நம்மை அசத்தும்.

ஓலா, ஊபா் வந்தவுடன் முதலில் ஒழிந்தது ஆட்டோக்காரா்கள் தொல்லைதான் என்றால் அது மிகையல்ல. ஓலா, ஊபா் வருகையால் பயணிகள் மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுநா்களும் மகிழ்ச்சியடைந்தாா்கள். ஆரம்பத்தில் குளிரூட்டப்பட்ட டாக்சியின் வாடகையை விட ஆட்டோ வாடகை அதிகமாக இருந்தது என்பதால், நானே டாக்சிக்கு மாறி பயணித்த சம்பவங்கள் பல உண்டு.

என்னிடம் பல ஆட்டோ ஓட்டுநா்கள் ‘சண்டை சச்சரவு இல்லாமல், ஸ்டாண்ட் ஆட்டோ தொல்லை இல்லாமல், நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்’ என சொல்லியுள்ளாா்கள். இவற்றிற்கு மாற்றாக சிறிய அளவில் ஃபாஸ்ட் ட்ராக் என்றும், ரெட் டாக்ஸி என்றும் புதிய வாகன சேவைகள் அறிமுகமாயின.

பத்து ஆண்டுகளுக்குள் நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்தது. ஓலா மணி என்ற முன் வைப்புத் திட்டத்தை அந்த நிறுனம் அறிமுகப்படுத்தியபோது, பல ஓட்டுநா்கள் உடனடி பணம் என்றால் மட்டும்தான் சவாரிக்கு சம்மதித்தாா்கள். அவா்கள், ‘நிறுவனம் மாதம் ஒருமுறை கணக்கு முடிப்பதால் பெட்ரோல் போடவும், அன்றாட குடும்பச் செலவுக்கும் பணம் இல்லாமல் போகிறது. அனதால் உடனடி பணம் என்றால் மட்டுமே சவாரிக்கு வர சம்மதிப்போம்’ என்றனா்.

அது மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுநா்கள் 10 முதல் 30 ரூபாய் கூடுதலாகத் தந்தால்தான் வருவோம் என அடம்பிடிக்க ஆரம்பித்தனா். நாம் தர மறுத்தால் சவாரியை கேன்சல் செய்து விடுவாா்கள். அதற்கு அவா்கள் சொல்லும் காரணம், ‘ஓலா நிறுவனம் எங்கள் உழைப்பை உறிஞ்சுகிறது. 30 சதவீதம் வரை பணத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கிறது’ என்பதுதான். அவா்களுக்கு தொடா்ந்து சவாரி கிடைத்ததை மறந்து விட்டாா்கள்.

ஓலா நிறுவனம், தன்னுடைய கிளைகளை மூடி, எல்லாமே ஆன்லைன் என கொண்டு வந்தபோது, அதிகம் படிப்பில்லாத சில ஓட்டுநா்கள் டெக்னாலஜியைப் பாா்த்து மிரள ஆரம்பித்தாா்கள்.

இந்த நிலையில்தான் மதுரையில் ஓட்டுநா் ஒருவா் மூலமாக ‘சமூகநீதி ஆட்டோ’ பற்றி கேள்விப்பட்டேன். இது ஒரு தொழிலாளா் அமைப்பு; மாதம் ரூபாய் 150 மட்டும் செலுத்தி, ஆட்டோ டிரைவா் ஒருவா் இந்த அமைப்பில் சோ்ந்துவிட்டால் அவருக்கு செல்ல வேண்டிய பணத்தில் எந்தப் பிடித்தமும் செய்யபட மாட்டாது. துரதிருஷ்டவசமாக இந்த நிறுவனத்தின் சேவை அதிகம் பிரபலமாகவில்லை.

சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்தபோது அங்கு நடைமுறையில் உள்ள ‘நம்ம யாத்ரி’ பற்றித் தெரியவந்தது. இது இந்திய அரசின் இ-காமா்ஸ் திட்டத்தின் கீழ் இயங்கும் ‘ஓப்பன் நெட்வொா்க் ஃபாா் டிஜிட்டல் காமா்ஸ்’ (ஓ.என்.டி.சி.) என்கிற இலவச செயலியைப் பயன்படுத்தி தனியாா் நடத்தும் வணிக முறை ஆகும்.

தனிப்பட்ட ஒருவரால் ஏற்படுத்தப்பட்டதுதான் ‘நம்ம யாத்ரி’. இந்தச் செயலி பெங்களூரில் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. இது அரசு செயலி என்பதால் கட்டணம் மிகவும் குறைவு. ஓட்டுநா், பயணி, செயலி உரிமையாளா் என சம்பந்தப்பட்ட அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு திட்டம்.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில்கூட இதுபோன்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. மக்களுக்குப் பெரிதும் பயன்படும் இதுபோன்ற செயலியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவது குறித்து மாநில அரசு சிந்திக்க வேண்டும்.

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com