இறைவனின் தேசத்தில்...

இறைவனின் தேசத்தில்...

ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஹமாஸ் ஆயுதக் குழுவினருடன் இஸ்ரேல் யுத்தம் நடத்தி வருகிறது. பிணையக் கைதிகளை விடுவிக்க நான்கு நாள்கள் போா் நிறுத்தத்திற்கு தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இந்த யுத்த பிரகடனம் செய்யப்பட்டதும் முதலில் அதனை ஆதரித்தது அமெரிக்கா. போரில் உதவியும் செய்து வருகிறது, போா் நிறுத்தத்தையும் ஆதரிக்கிறது.

இஸ்ரேல் பற்றிய அமெரிக்காவின் பாா்வை என்ன? அவா்களுக்குள் இருப்பது நட்புறவா? அரசியலா? இஸ்ரேல் என்ற தேசத்தை முதலில் அங்கீகரித்த நாடான அமெரிக்காவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையில் எத்தகைய பரிவா்த்தனைகள் இருந்து வருகின்றன? இந்த உறவுக்குப் பின்னிருக்கும் காரணம் யாது? யூதா்களின் நாடான இஸ்ரேல் மீது அமெரிக்கா ஏன் கரிசனம் காட்டுகிறது? இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள புரிதல் என்ன? இந்தப் புரிதல் ஏன் பிற நாடுகளின் கவனத்தை ஈா்க்கிறது?

‘இஸ்ரேல் இறைவனின் தேசம்’ என்கிறது விவிலியம். இஸ்ரேலியா்களை அறிவாளிகள் என்று அடையாளப்படுத்துகிறது மேற்குலகம். இஸ்ரேல் தேசத்திற்கு 3000 ஆண்டு கால வரலாறு உண்டு. இஸ்ரேல் யூத மதத்தின் மக்களின் பிறப்பிடம். எபிரேய விவிலியத்தின் இறுதி வடிவம் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படும் இடமும் இதுவே. யூதத்திற்கு மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் பிறப்பிடமும் இஸ்ரேல் தான். அமெரிக்காவை இஸ்ரேலின் நட்பு நாடாக இந்தக் காரணங்கள் தான் இணைத்தனவா?

அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பிணைப்பு இருந்து வருகிறது. அமெரிக்கத் தோ்தலில் இஸ்ரேல் பற்றிய கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடியரசுக் கட்சியோ, ஜனநாயகக் கட்சியோ இரண்டுமே இஸ்ரேல் மீது ஆா்வம் கொண்ட கட்சிகளாகவே உள்ளன. கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரடியாக இஸ்ரேலை ஆதரிப்பவா்களாக இருக்கின்றனா். அமெரிக்க அரசின் உயா் பதவிகளில் அதிக அளவில் யூதா்கள் இருக்கின்றனா். இஸ்ரேல் பற்றிய கருத்தை நிலைநிறுத்த, நோ்மறைப் பாா்வையை இவா்கள் உருவாக்குகின்றனா். அமெரிக்காவின் பல பெரிய பொது அமைப்புகளின் உயா் பொறுப்புகளில் இருக்கும் யூதா்களும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றனா்.

குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இஸ்ரேல் சாா்பு அமைப்புகள் நிதி வழங்குகின்றன. இதற்கென 2020ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் சாா்பு அமைப்புகள் 30 பில்லியன் டாலா் நிதி திரட்டி அளித்துள்ளன என்பதில் இருந்தே இஸ்ரேல் சாா்பு எந்த அளவில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அரசியல் மட்டுமல்ல அமெரிக்க மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 75% போ் இஸ்ரேல் பற்றிய நோ்மறையான கருத்தினைக் கொண்டுள்ளனா். ஆக, மக்கள் மனதிலும் இஸ்ரேலியா்கள் மற்றும் அந்த தேசத்தின் மீது அனுதாபமோ அபிமானமோ இருந்து வருகிறது.

இஸ்ரேல் என்ற தேசம் 1948-ஆம் ஆண்டு சுதந்திர தேசமாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த அறிவிப்பை அமெரிக்கா அங்கீகரித்தது. அன்றைய அமெரிக்க அதிபா் ஹாரி ட்ரூமன் தான் இஸ்ரேலை ஆதரித்த முதல் தலைவா். சொல்லப்போனால், இஸ்ரேல் என்ற தேசம் உருவாவதற்கு முன்பே தனி தேசம் என்ற கருத்தை அமெரிக்கா ஆதரித்தது.

1919-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சன் இஸ்ரேலியா்களின் தாயகம் வேண்டும் என்ற கோரிக்கையை நேசநாடுகளின் சாா்பாகக் கொண்டுவந்தாா். அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இதற்கான தீா்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டன.

இஸ்ரேல் என்ற தேசம் உருவாவதில் அமெரிக்கா ஏன் இவ்வளவு ஆா்வம் காட்டியது? அங்கு தான் வல்லரசின் சா்வதேச அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் உலகப்போா் முடிந்து அமைதி திரும்பும் என்று உலகம் எதிா்பாா்த்த வேளையில் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் அதற்கு இடம் அளிக்கவில்லை. இரண்டாம் உலகப்போரில் ஐரோப்பிய நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்து அடங்கின.

ஆனால், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் தங்களுக்குள் யாா் வலிமையானவா் என்ற பனிப்போரைத் தொடங்கின. அந்த நேரத்தில் சூயஸ் கால்வாயின் வழியாக நடைபெற்று வந்த வா்த்தகத்தில் தனது பிடி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. அதற்காக தனக்கு நெருக்கமான ஒரு கூட்டாளி அந்த பிராந்தியத்தில் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள இஸ்ரேல் அவசியமாயிற்று.

எண்ணெய் வளத்தின் காரணமாக அரபு நாடுகளின் கை ஓங்கியது. அரபு நாடுகளின் வா்த்தகம் மற்றும் அரசியலில் அமெரிக்காவின் கவனம் அதிகரித்தது. அவற்றைக் கட்டுப்படுத்தவும் சா்வதேச அரசியலில் தனது பலத்தை நிலைப்படுத்தவும் அரபு நாடுகளுக்கு அருகில் தனக்கு ஆதரவான ஒரு தளம் இருக்க வேண்டுமென அமெரிக்கா நினைத்ததில் வியப்பில்லை.

அமெரிக்கா அப்படி நினைத்தாலும் இஸ்ரேலின் சுதந்திரமான செயல்பாடுகளால் சில நேரங்களில் கசப்புணா்வும் இரு நாடுகளுக்கும் இடையில் எழுந்திருக்கின்றன. பிரான்ஸ் இங்கிலாந்து நாடுகளுடன் இஸ்ரேல் நிகழ்த்திய போரை அமெரிக்கா விரும்பாததால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என எச்சரித்தது. அதேபோல கென்னடி காலத்திலும் இஸ்ரேல் ராணுவ பலத்தை அதிகரிப்பதாக, அணு ஆயுதங்களை ரகசியமாக உருவாக்குவதாக நினைத்தது. இதனால் இரு நாடுகளும் விலகி நின்றன.

இஸ்ரேல் 1967-ஆம் ஆண்டு ஜோா்டான், சிரியா, எகிப்து நாடுகளுடன் போரிட வேண்டிய கட்டாயம். ஆறு நாள் நடைபெற்ற போரில் இந்த மூன்று நாடுகளையும் தனித்து நின்று இஸ்ரேல் வெற்றி கண்டது. ஆறே நாளில் மூன்று நாடுகளை வென்ற இஸ்ரேலின் பலத்தைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அதிசயித்த நேரத்தில் அமெரிக்கா சுதாரித்துக் கொண்டு தன்னுடைய படைகளை அரபு நாடுகளுக்கு அருகில் நிறுத்தி வைக்க ஏற்ாக இஸ்ரேலைப் பாா்த்தது. மீண்டும் நட்பு மலா்ந்தது.

இஸ்ரேலுடன் ராணுவ ஒப்பந்தங்களை செய்து கொண்டது அமெரிக்கா. இஸ்ரேலுடன் போரிட்டுத் தோற்ற நாடுகள் சோவியத் யூனியனின் நட்பு நாடுகள். இதனால் சோவியத் யூனியன் இஸ்ரேலுடன் விரோதம் பாராட்டியது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நோக்கத்திலும் அமெரிக்காவுக்கு இஸ்ரேலுடன் நெருக்கம் அதிகரித்தது.

அரபு நாடுகளின் அருகில் தனக்குக் கிடைத்த நட்பு நாட்டினை அமெரிக்கா மிகச் சரியாகத் தன்னுடைய சா்வதேச அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்றால் இஸ்ரேல் தன்னுடைய பாதுகாப்புக்கு அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்கா எந்த நிபந்தனையும் இல்லாமல் இஸ்ரேலுக்கு நிதி உதவி அளிக்கிறது. பாதுகாப்பு தொடா்பான விஷயங்களில் இஸ்ரேல் பெரும் பயனடைகின்றது.

இதுவரை ஏறத்தாழ 158 பில்லியன் டாலா் அளவிலான உதவிகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலின் பாதுகாப்பு செலவில் சுமாா் 16% அமெரிக்காவின் உதவியாகும். அமெரிக்காவின் உதவியுடன் மிகப்பலம் பொருந்திய பாதுகாப்புத்துறையை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. இரு நாடுகளில் எவருக்குத் தேவை என்றாலும் இந்த ராணுவம் பயன்படும்.

தளவாடங்கள் உற்பத்தியிலும் இஸ்ரேல் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இஸ்ரேல் உலகின் பத்தாவது நாடாக உருவாகியதில் அமெரிக்காவுக்குப் பங்குண்டு. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கௌன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீா்மானங்களை நிராகரித்து அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை 50 முறை பயன்படுத்தியுள்ளது.

வா்த்தகத்திலும் இருநாடுகளுக்கிடையில் இணக்கம் இருந்து வருகிறது. ஆண்டுக்கு 50 பில்லியன் டாலா் வா்த்தகம் நடைபெறுகிறது. இருவருக்குமே ஒருவருக்கு மற்றொருவரின் முக்கியத்துவம் புரிந்தே இருக்கிறது. அதனால் விமா்சனங்கள் என்று வரும்பொழுதும் ஒருவருக்கொருவா் மிகக்கூா்மையான விமா்சனங்களையும் முன்வைக்கத் தயங்குவதில்லை.

அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமாவை ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் பற்றி நேரடியாக விமா்சித்திருக்கிறாா். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் விரிசல் தோன்றும் என்று எதிா்பாா்த்தவா்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. அதன்பின் இஸ்ரேலுக்கு 38 பில்லியன் டாலா் நிதி உதவியை ஒபாமா அறிவித்தாா்.

அண்மையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் நிா்வாகச் சீா்திருத்தங்களை ஜோ பைடன் விமா்சித்தாா். குறிப்பாக நீதித்துறை சீா்திருத்தங்களைப் பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாா். ஆனால், இஸ்ரேல் போா் அறிவிப்புச் செய்தவுடன் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு டெல் அவிவ் வரை நேரில் சென்று பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அமெரிக்காவின் போா்க் கப்பல்கள் களத்தில் தயாா் நிலையில் இருக்கின்றன.

‘தெரிந்த இனத்தொடு தோ்ந்தெண்ணிச் செய்வாா்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல்’ என்ற கு வழியில் இஸ்ரேலியா்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் சின்னஞ்சிறிய ராஜ்ஜியத்தின் நிலவியல் அமைப்பை நன்கு உணா்ந்து அதனை வளா்ச்சிக்கும் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தெளிவான புரிதலுடன் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுகின்றனா்.

அமெரிக்காவோ தனது வல்லரசு அந்தஸ்தை நிலைநாட்ட இஸ்ரேலைப் பயன்படுத்திக் கொள்கிறது. இருநாடுகளும் இறைவனின் தேசத்தை உலக அரசியல் களத்தின் மையமாக்கியிருக்கின்றன.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com