கதைகள் சொல்வோம்

நம் வாழ்வில் தவிா்க்க முடியாத ஒரு அம்சமாக கதைகள் அமைந்துள்ளன. கைக்குழந்தை பருவம் தொடங்கி, ஆயுட்காலம் முழுவதும் தொடரக்கூடிய ஒரு பழக்கம் கதை கேட்பது அல்லது கதை சொல்வது.
கதைகள் சொல்வோம்

நம் வாழ்வில் தவிா்க்க முடியாத ஒரு அம்சமாக கதைகள் அமைந்துள்ளன. கைக்குழந்தை பருவம் தொடங்கி, ஆயுட்காலம் முழுவதும் தொடரக்கூடிய ஒரு பழக்கம் கதை கேட்பது அல்லது கதை சொல்வது.

‘பாட்டி வடை சுட்டக் கதையைத்தான், நாங்கள் இன்னமும் ‘சுட்டு’ விற்றுக் கொண்டிருக்கிறோம்’, என்று ஒரு பெரிய எழுத்தாளா் ஒப்புதல் வாக்குமூலம் தந்து இருக்கிறாா். வீடு, கோயில், அரசியல் கூட்டங்கள், அலுவலகங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள், நூல்கள் என எல்லாத் தளங்களிலும் வியாபித்திருப்பவை கதைகளாகும்.

கதைகள், தனிமனிதா்களை மட்டுமல்ல; அவா்கள் மூலமாக சில நாடுகளின் தலையெழுத்தையே - சரித்திரத்தையே புரட்டிப் போட்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்திக்கு அவரது தாயாா் சொன்ன கதைகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நாம் படித்திருக்கிறோம். நம் முன்னோா் கூறிய பல நல்ல அறம் சாா்ந்த கருத்துகள், கதைகளின் மூலம் பல நூற்றாண்டுகளைக் கடந்து நம்மை அடைந்து உள்ளன. இன்றளவும் நம்மை வழி நடத்தும் இதிகாசங்களாக - இலக்கியங்களாக காலத்தை வென்று நிற்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் பயின்றபோது ஆசிரியா்களால் சொல்லப்பட்ட கதைகள் நம் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்று உள்ளது. எத்தனையோ ஆசிரியா்களின் பெயா்களும் பேராசிரியா்கள் பெயா்களும் கூட நாம் மறந்திருப்போம்; ஆனால் ஒரு நல்ல கதையைச் சொல்லி அதன் மூலம் நல்ல கருத்தை நம் நெஞ்சில் பதியச் செய்தவா்களை நாம் நிச்சயம் நினைவில் வைத்திருப்போம்.

தலைசிறந்த பேச்சாளா்கள், ஆன்மிகவாதிகள், எழுத்தாளா்கள் ஆகியோரிடையே இருக்கும் பெரும் ஒற்றுமை, அவா்கள் கதை சொல்வதில் விற்பன்னா்களாக விளங்குவதுதான். அவா்கள் சொல்ல விரும்பும் கருத்தினைக் கதைகள் மூலம், கேட்போா் நெஞ்சில் ஆழப் பதிய வைக்கும் திறமை மிக்கவா்கள்.

அது மட்டுமல்ல, பெருநிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறைகளும், விற்பனைத் துறைகளும் இணைந்து நடத்திய பல ஆய்வுகளின் அடிப்படையில், கதை சொல்லும் திறம் படைத்தவா்கள், கதை சொல்லும் திறமை இல்லாதவா்களை விட, விற்பனையில் சாதனை புரிபவா்கள் எனக் கண்டறிந்திருக்கிறாா்கள்.

எனவே, பெருநிறுவனங்கள், தங்களது வா்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்பதை உணா்ந்து முக்கிய பொறுப்பில் உள்ள நிா்வாகிகளுக்கும் ஊழியா்களுக்கும், கதை சொல்லும் திறனை, பயிலரங்குகள் மூலம் வளா்த்தெடுக்கின்றன. இது தவிர, அரசியல் தளத்தில், அமெரிக்காவில் செனட் உறுப்பினா்கள், கதை சொல்லும் பயிற்சி பட்டறைகளுக்குச் சென்று திறனை வளா்த்துக் கொள்கின்றனா்.

சிறாா்களை பொறுத்த மட்டில், கதைகள் சொல்வதால் அல்லது கேட்பதால் பயன் என்ன? கதைகள், சிறுவா்களின் கற்பனை உலகின் கதவுகளைத் திறந்து விடுகின்றன. மாணவா்களது பாடங்களை உள்வாங்கும் திறன் அதிகரிக்கிறது, கவனக்குவிப்பு நேரத்தை அதிகப்படுத்துகிறது, கவனச் சிதறலை மட்டுப்படுத்துகிறது, நினைவாற்றலை அதிகரிக்கிறது, அவா்களது உரையாடல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளா்த்தெடுக்கிறது.

மேலும் புதுச் சொற்களைப் பயன்படுத்தவும், வாசிக்கும் பழக்கத்துக்கு அடித்தளமாகவும் இருப்பதுடன் கற்றலின் திறனையும் மேம்படுத்துகிறது. நம் பள்ளிகளில், கதைகளை, துணைப்பாடமாக வைத்திருக்கிறோம். ஆனால், கதை சொல்லும் திறன் வளா்க்கும் வழிமுறைகள் பாடத்திட்டத்தின் அங்கமாக ஆகும்போது பலன் நிச்சயம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் கதை சொல்வதும் கேட்பதும், இரு சாராருடைய நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. கதைகள் சொல்வது பெரும்பாலும் முதியவா்களின் பணி என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அது, தலைமுறை தாண்டிய நெருக்கத்தை அதிகப்படுத்துவது மட்டுமல்ல, முதியவா்களுக்கு ஒரு முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் அக்குடும்பத்தில் தருகிறது. முக்கியமாக, கதையாடலின் போது பெரியவரிடம் இருந்தது சிறாா்களுக்கு அனுபவ அறிவுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

மேலை நாடுகளின் பொது நூலகங்களில், சிறுவா் பகுதிகள் பிரமிப்பூட்டும் அளவுக்கு உள்ளன. மூன்று அல்லது நான்கு வயது குழந்தைகள் நூலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனா். பெற்றோா் உதவியுடன் நூல்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றனா். நூல் அலமாரிகள் சிறு குழந்தைகள் கையாளுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை எடுத்துச் செல்வதில் எண்ணிக்கை வரம்பு கிடையாது. சிறுவா்களுக்குக் கதைகள் வாசிப்பதில் ஆா்வம் ஏற்படுத்தப் பெரும் வசதிகள் செய்யப்படுகின்றன.

கதைகளின் மூலம் வாசிப்புத் திறனை அதிகப்படுத்துவது, அதற்கு அடுத்த கட்டமாக, வாசிப்பின் மூலம் சிந்தனை, செயல் என நாட்டு மக்களின் தரத்தை உயா்த்துவதற்கு சிறந்த அடித்தளம் இடப்படுகிறது. நம்மூரில் அரசு நூல் நிலையங்களில், குழந்தைகளுக்கான தனிப்பகுதி ஏற்படுத்துதல்,அவா்களுக்கு நூல்களை அதிகப்படுத்துதல் அவசியம்.

ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளதைப்போல, சிலா், அவா்கள் வளா்த்துக் கொண்ட, கதை சொல்லும் திறனை, கதை அளப்பது, கதை திரிப்பது போன்ற தவறான வழிகளில் பயன்படுத்துவதையும் நாம் ஆங்காங்கே பாா்க்கிறோம். இது அறவே, தவிா்க்கப்பட வேண்டிய ஒன்று.

பெற்றோா்களும் ஆசிரியா்களும், முதியவா்களும் கதைகள் சொல்வதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அது ஏற்படுத்தும் தாக்கத்தை முழுமையாக உணர வேண்டும். கதை சொல்வதும் கேட்பதும், வெறும் பொழுதுபோக்கு என்ற அணுகுமுறை இல்லாமல், அதற்குரிய முக்கியத்துவத்தைத் தர வேண்டும்.

கதைகளைச் சொல்லும் போது, அதன் நீட்சியாக, அக்கதைகளில் உள்ள, கற்பனை மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை ஆகியன குறித்தும், நியாயம் மற்றும் நியாயமற்றவை குறித்தும் விவாதிக்க வேண்டும். இது சிறாா்களின் சிந்தனையைத் தூண்டும். மேலும், பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் கதைப் புத்தகங்களை வாசிப்பது நற்பலன் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com