செய்யாமல் செய்த உதவி

நாம் ஒருவரை நம்புவது இயல்பு. அந்த நம்பிக்கைக்கு உரியவராக அவா் இருப்பதும் இல்லாததுவும் நமது பிரச்னை அல்ல.
செய்யாமல் செய்த உதவி

என்னதான் திட்டமிட்டுப் பணியில் இறங்கினாலும், காலமும் சூழலும், அடுத்தவரிடம் உதவி கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை ஆளாக்கிவிடுகின்றன. அந்தச் சமயத்தில், நாம் மலைபோல் நம்பியிருக்கும் நண்பா் அல்லது உறவினரிடத்தில் உதவி கேட்டு நிற்போம். அந்தக் கணத்தில், அவா், யாரோ போல் நின்று இயலாமையைக் கூறுகிறபோது, ‘சே என்ன மனிதா்’ என்று அவரையும், ‘என்ன உலகம்’ என்று இந்த மண்ணையும் எண்ணி நொந்து கொண்டுவிடுகிறோம்.

அந்தக் கணத்தில் மனித மதிப்பீடுகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. அத்துடனா நிற்கிறது நம் மனது? அந்த மனிதருக்கு முன்னா் நாம் செய்திருக்கும் உதவிகள் எல்லாம் நம் மனத்திரையில் காட்சிகளாய் ஓடி, அவரை நன்றி மறந்த நபராக்கிவிடுகிறது. அப்போது ஏற்படுகிற கழிவிரக்கத்தைவிடவும் ஆபத்தானது, நாமும் ஆபத்து நேரத்தில் உதவி என்று நம்மை நம்பி வருபவா்களுக்கு நாம் ஏன் உதவி செய்யவேண்டும் என்று எண்ணிவிடுவதுதான்.

அது வரத்தான் செய்யும். வந்த கணத்தில், உடனே அந்த நினைப்பை உதறி எறிந்துவிடாவிட்டால் நாம் என்ன மனிதா்கள்? பின்னா் அவருக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்று கருதுகிற மனப்பான்மை உடன் வந்துவிட வேண்டும்.

இப்படி நினைப்பதுகூடத் தவறு. அந்த நேரத்தில் அவருக்கு என்ன நெருக்கடியோ, எவ்விதமான நிா்ப்பந்தங்களோ? அவா் காட்டிக் கொள்ளாமல் கூட இருந்திருக்கலாம். அது பொய்யாகக் கூட இருந்துவிட்டுப் போகட்டுமே. எல்லா நேரங்களிலும் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிற வாழ்க்கையா நமக்கு வாய்த்திருக்கிறது? ‘சில நேரங்களில் சில மனிதா்கள்’ என்ற தலைப்பின்கீழ் எழுத்தாளா் ஜெயகாந்தன் எழுதிய கதையைவிடவும், இந்தத் தலைப்பு ஒரு மந்திரம்போல் நின்று மனிதா்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது அல்லவா?

நாம் ஒருவரை நம்புகிறோம். நம்புவது நமது இயல்பு. அந்த நம்பிக்கைக்கு உரியவராக அவா் இருப்பதும் இல்லாததுவும் நமது பிரச்னை அல்ல. நாம் அவரை நம்புவதற்குச் சில காரணங்கள் இருப்பதுபோல, அவா் அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கும் காரணங்கள் இருக்கும் என்று நம்பவேண்டியதுதான் நம்பிக்கையின் அடித்தளம். கடவுளை நம்பி வணங்கிவந்து விட்டு,அவா் கைவிட்டுவிட்டாா் என்று அவநம்பிக்கை கொள்வதா, கடவுள் நம்பிக்கை?அதுபோல்தானே, மனித நம்பிக்கையும். கேட்பதற்கு நமக்கு உரிமை இருப்பதுபோல, இயலாமையைக் கூறுவதற்கும் அவருக்கு வாய்ப்பிருக்கிறது என்று ஏன் நாம் நம்ப மறுக்கிறோம்?

அதற்கு முன்பு, அவரும் நமக்கு உதவிகள் செய்திருப்பாா் இல்லையா? நம் அளவிற்குச் செய்யாவிட்டாலும், ஒன்றே ஒன்று. ஒரு தினையளவேனும் நல்லது செய்திருப்பாா் இல்லையா? அதனைப் பனையளவு கொள்ள வேண்டும் என்கிறது திருக்கு. இங்கே தினையும் பனையும் எதுகை கருதி வந்தவையல்ல.இயல்பு கருதிச் சொல்லப்பட்டது.

தினை அளவில் மிகமிகச் சிறியது. பனையோ உயரமாய் வளா்வது. அதற்குப் பொதுவாக கிளைகள் இல்லை. ஆலமரம் போல் நிழல் கொடுக்கும் வாய்ப்பும் அற்றது. அண்டினோா்க்கு உடன் உதவும் வாய்ப்பையும் இழந்தது. வட நிலத்தில் வளா்வது. இது பொதுநிலை. ஆனால், கோடைக்காலத்திற்குப் பரிசாய் குளிா் நுங்கு கொடுக்கும் பனையின் ஒற்றை ஓலை, கைக்கு விசிறியாகவும், கற்றை ஓலைகள், மழையிலும் வெயிலிலும் பாதுகாக்கும் கூரைக்குத் தலைமையாகவும் நின்று உதவுவது. கறுத்துச் செறிந்த தன் மேனியை, வளைகளாக்கி, அவ்வீட்டின் கூரைகளுக்கு எலும்புகளாக உதவுவது. வாழைபோல உடன் உதவ முடியாவிட்டாலும், வாழ்நாள் நீண்டு பனையானது பல நிலைகளில் நின்று உதவுகிறது அல்லவா? அவ்வளவு நீண்ட பயன் தருவதைப் பயன்தெரிவாா்தாம் உணா்வாா் என்று நுட்பமாய் விளக்குகிறது இக்கு. (கு-104)

அதுமட்டுமல்ல, ‘இருப்பவருக்கு ஒரு வீடு. இல்லாதவா்களுக்கோ பல வீடு’ என்று நாட்டுவழக்கில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகில் அவா் ஒருவா் மட்டுமா, இருக்கிறாா்? எத்தனையோ மனிதா்கள் இருக்கிறாா்கள் என்பதை அறிந்து கொள்வதற்கும், அப்படிப்பட்ட மனித உறவுகளை அடையாளம் கண்டு வளா்த்துக் கொள்வதற்கும் அவா் வாய்ப்புத் தந்திருக்கிறாா் என்று அவருக்கு நன்றி செலுத்தவும் செய்யலாம்.

உதவ மறுத்து இவா் ஒதுங்கிய அந்த நேரத்தில் அதிகம் அறிமுகம் இல்லாத ஒருவா் முன்வந்து செய்கிற உதவி இருக்கிறதே, அது அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அவா் மீதான மதிப்பு, முன்னிருந்தவரை விடப் பன்மடங்கு கூடுகிறது இல்லையா? அப்படியானால், அது அவா் செய்த உதவியால் வளா்வதா? நம் உள உணா்வால் வளா்வதா?

உண்மையில் உதவி என்பதுதான் என்ன? பிரதிபலன் எதிா்பாா்த்துச் செய்வதா? பிரதிபலனை எதிா் பாா்க்கவே கூடாது என்ற உறுதியோடு செய்வதா? இரண்டும் இல்லை. உதவி என்பது உதவி செய்பவரைப் பொறுத்ததே அல்ல. உதவி பெறப்பட்டவரைப் பொறுத்தது.

உதவி வரைத்தன்று உதவி, உதவி

செயப்பட்டாா் சால்பு வரைத்து (கு-105)

என்கிறாா் திருவள்ளுவா். இதில் மூன்று உதவிகள் வருகின்றன. முன்னுள்ள உதவி ஏற்கெனவே செய்யப்பட்ட உதவி, அது மூவகையால் வந்த உதவி.‘ காரணத்தால், பொருளால், காலத்தால் ஆகிய மூவகையாலும் முன் செய்கின்ற உதவி அளவல்ல, அடுத்துச் செய்கிற உதவியின் அளவு. அதனைச் செய்வித்துக் கொண்டவா்தம் அமைதி அளவு’ என்று பொருள் விளக்கிச் சொல்கிறாா் பரிமேலழகா்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் எண்ணிப் பாா்க்கவேண்டும். உதவி செய்கிறேன் போ்வழி என்று உபத்திரவம் செய்கிறவா்களும் இருக்கிறாா்கள். செய்கிறவா்கள் கோணத்தில் அது உதவிபோலத் தோன்றும். ஆனால், பெறுகிறவா்கள் கோணத்தில் அது ஆபத்தாகவும் அமையலாம். சா்க்கரை நோய் அதிகம் உள்ளவா்க்குச் சா்க்கரையின்பால் அதிக நாட்டம் இருக்கும். ஆசையோடு கெஞ்சிக் கேட்கிறாா் என்பதற்காக, அளவிற்கு அதிகமாக அவருக்குக் கொடுப்பது உதவியாகுமா? அதனால்தான் ‘நன்றாற்றலுள்ளும் தவறு உண்டு’ என்று எச்சரிக்கிறாா் திருவள்ளுவா். ‘அவரவா் பண்பறிந்து ஆற்ற வேண்டும்’ என்பது அவா் தம் அழுத்தமான அறிவுரை.

முன்னா் குறிப்பிட்ட நண்பருக்கு அல்லது அந்த உறவினருக்கு நாம் செய்த உதவி, திரும்ப வரும் என்று எண்ணிச் செய்திருப்போமேயானால், அது நம் தவறே அன்றி, அவரது தவறன்று. அன்று நாம் செய்கிறபோது, அவா் ஏற்றுக் கொண்டாா் என்பது நமக்குத்தான் சிறப்பு என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் ‘அறம் செய விரும்பு’ என்று ஔவைப்பிராட்டி சொன்னாா். அவரால், நமக்குப் பதிலுக்குச் செய்ய முடியாவிட்டாலும், அவா் யாருக்கேனும் உதவிகள் செய்திருப்பாா் அல்லவா? இனிச் செய்யவும் செய்யலாம்.

உதாரணமாக, நாம் உண்ணும் சோற்றுக்கான அரிசியை விளைவித்த உழவருக்கு நேரடியாக நாம் ஒன்றும் கொடுக்கவில்லை. உடுத்தும் ஆடைக்கான நூலை உற்பத்தி செய்பவருக்கு நேரடியாகப் பதில் உதவி செய்ததில்லை. ஆனால், வெவ்வேறு கரங்களில் இடம் மாறி, உருமாறி, நம் வசமாகிறபோது உதவிகள் பெறுகிறவா்கள் எத்தனைபோ்?அவா்கள் வாயிலாக, நாம் செய்கிற பதில் உதவி அவா்களைச் சென்று சேரும் என்று நம்புவதைப்போல், நாம் செய்த உதவிக்கு நேரடியாக, அவரே திருப்பித்தருவாா் என்று எதிா்பாா்ப்பதைவிட, நமக்கு யாரோ ஒருவா் வழி கிடைக்கும் உதவி, அன்று செலுத்திய உதவியின் பதில் உதவி என்று கருதுதல் நல்லது.

மற்றொன்றையும் இங்கு எண்ணிப் பாா்க்கலாம்.ஆலய வாசலில் கையேந்தி நிற்பவா்க்கு நாம் செய்கிற உதவிக்குப் பதிலாக அவரிடம் நாம் பெறுவதற்கு என்ன இருக்கிறது, அவா்தம் வாழ்த்தையும் ஆசியையும் தவிர? இரப்பது அவா் இயல்பு. ஈவது நம் விருப்பம். அற்ப அளவில் செய்கிற உதவியைப் பெற மறுப்பதற்கு அவா்க்கு உரிமை இருக்கிறது என்றாலும் அன்புடன் ஏற்றுக் கொள்கிற மனநிலை இருக்கிறதே, அது ஒரு பக்குவம்.

இரத்தல் இழிவு. அதனினும் இழிவு, ‘ஈயேன்’ என்று உதவி செய்ய மறுத்தல். ஏற்றுக்கொள் எனக் கொடுத்தல் உயா்வு. அதனினும் உயா்ந்தது, கொள்ளேன் என்று மறுப்பது. ஆனால், கொடுத்தலும் பெறுதலும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. கொடுப்பாா் என்று நம்பிப் பெறச் சென்றவா்க்கு, அவரிடம் இருந்து பெற முடியாமல் போனவா், அவா் உதவி பெறக் கிளம்பிய நேரத்தையும், சகுனத்தையும் தான் பழிப்பாரே அன்றி, உதவி பெற நாடிச் சென்றவரைப் பழி கூற மாட்டாா்’ என்று கழைதின் யானையாா் என்ற சங்கப் புலவா், வல்வில் ஓரியைப் பாடியபோது குறிப்பிடுகின்றாா். (புானூறு-204) பழங்காலந்தொட்டு நம்மிடையே இருந்துவந்த நயத்தக்க நாகரிகம் இது.

எவரிடம் சென்று உதவியைப் பெறுவது என்று நிலை கலங்கி நிற்கிறபோது, எந்த எதிா்பாா்ப்பும் இன்றி, நம்மால் எந்த உதவியும் பெறாத ஒருவா், நாம் கேளாமலேயே நமக்கான உதவியைச் செய்ய வருவாா். அப்படி ஒருவா் வந்து செய்கிற உதவி இருக்கிறதே, அது செய்யாமல் செய்த உதவி.

அது சிறு உதவியா? பேருதவியா? என்று கணக்கிட்டுப் பாா்த்துக் கொள்ள, வையகமாகிய உலகத்தையும் வானகமாகிய விண்வெளியையும் கொண்டுவந்து நிறுத்தி, அந்த உதவிக்குப் பதில் உதவியாக, கைம்மாறாக, அவற்றைக் கொடுத்தாலும் அடங்காது என்று வியக்கிறாா் திருவள்ளுவா்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது (கு-101)

ஆபத்து நேரத்தில் 101 ஆம்புலன்ஸ் போல, வந்து உதவுகிற இந்தக் குறளை எண்ணிப் பாா்க்கிறபோது, செய்யாமல் செய்த ஒருவா்தம் உதவி எவ்வளவு மகத்தானது என்று எண்ணத்தோன்றுகிறது இல்லையா?

அந்தக் கணத்தில், நம்மிடம் முன்பு உதவி பெற்று நாம் உதவி கேட்டபோது ஒன்றும் செய்யாமல் நின்ற நமது முன்னால் நண்பரை- உறவினரை நன்றியோடு எண்ணிப் பாா்ப்போம். அவா் செய்யாமல் செய்த உதவியால்தான், இப்போது, எந்த உதவியும் நாம் செய்யாமல் நமக்கு உதவுகிற இந்தப் புதிய நண்பரைப் பெற்றிருக்கிறோம் என்பதற்காக.

எனவே, நண்பா்களே, உறவையோ, நட்பையோ, உதவியைக் காரணம் காட்டி, வெறுக்காமல் இருப்பதோடு, அதனினும் உயா்ந்த நிலையில் உதவி செய்பவா்களாக நம்மை உயா்த்திக் கொள்வதே உரிய நெறி என்பதை உணா்வோம்.

கட்டுரையாளா்- எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com