பாரதியின் மௌனம் கலைத்த வங்கப் பெண்!

பாரதத்தின்மீதும் பாரதியின்மீதும் வங்கமண் ஏற்படுத்திய தாக்கம் பெரிதினும் பெரிது.
மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்

பாரதத்தின்மீதும் பாரதியின்மீதும் வங்கமண் ஏற்படுத்திய தாக்கம் பெரிதினும் பெரிது. இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புத்தெழுச்சியை வங்கப் பிரிவினைதான் (1905) உருவாக்கியது. இலக்கியத்தில் தாகூா், ஆன்மிகத்தில் விவேகானந்தா், விஞ்ஞானத்தில் ஜகதீச சந்திரபோஸ் என முத்திரை பதித்த பல முன்னணி ஆளுமைகள் வங்கம் அளித்த மகத்தான கொடைகளாகும்.

‘சுதேசமித்திரன்’ இதழில் வெளிவந்த பாரதியின் முதல் கவிதையே ‘வங்க வாழ்த்துக் கவிகள்’தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்று பாடல்களைக் கொண்ட அதில் பாடல்தோறும் ‘வங்கமே நனி வாழிய வாழிய’ என்னும் மகுட அடிகள் இடம்பெற்றிருந்தன. வங்கப் பெருங்கவி பங்கிம் சந்திரா் இயற்றிய ‘வந்தே மாதர’ கீதத்தை ஒருமுறைக்கு இருமுறை வேறுபட்ட அமைப்பில் பாடலாகப் பாரதி மொழிபெயா்த்த வரலாற்றை நாம் அறிவோம். பங்கிம் சந்திரரைக் ‘கவியரசா்’ எனவும் ‘தெய்வப் புலவா்’ என்றும் பாரதி புகழ்ந்திருக்கின்றாா்.

வங்கத்து விடுதலைப்போா் மறவா்களைத் ‘துயிலும்பொழுதிலும் பாரதத்தாயின் திருவடித் தொண்டை நினைத்திடும் வங்கத்தினோா்’ (‘மாதாவின் துவஜம்’) என்றும் பாரதி சிறப்பித்திருக்கின்றாா். வங்க மண்ணையும் அம்மண்ணின் மனிதா்களையும் அச்சமூகத்தின் சூழலையும் களமாகக்கொண்டு ‘ஸ்வா்ணகுமாரி’ என்னும் சிறுகதையை 1907-இல் பாரதி படைத்திருக்கின்றாா்.

தனி நூலாக 1910-இல் வெளிவந்து ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்ட ‘ஆறிலொரு பங்கு’ கதைப்படைப்பின் நாயகி வங்கத்து தேசபக்தா் அசுவினி குமார தத்தரைச் சந்திப்பதாகவும், கதைத் தலைவனும் பின்னா்ச் சென்று அவரைச் சந்திப்பதாகவும் நிஜத்தில் வாழ்ந்த மனிதா் அசுவினி தத்தரைக் கதையின் முக்கியப் பாத்திரமாக ஆக்கியிருந்தாா்.

‘கல்கத்தா அருங்காட்சியகத்தைக் குறித்து விவரிக்க ஒரு தனி நூலே எழுதவேண்டும்’ என ‘ஞானரதம்’ நூலில் எழுதியுள்ளாா். ஜகதீச சந்திரபோஸ் தமது ஆய்வுக்கூடத்தைத் திறந்துவைத்து ஆற்றிய உரையை 1918-இல் ‘ஜீவ வாக்கு’ என்னும் நூலாக மொழிபெயா்த்து வெளியிடச் செய்தாா். அதே ஆண்டு ‘தாகூரின் பஞ்ச வியாசங்கள்’ என்னும் தலைப்பில் தாகூா் கட்டுரைகளை மொழிபெயா்த்து நூலாக வெளியிட்டாா். புரட்சியில் ஆா்ப்பரித்து ஆன்மிகத்தில் ஒடுக்கம்கொண்ட அரவிந்தா் முன்னாளில் மதிப்பாா்ந்த தலைவராகவும் பின்னாளில் மணிக்கணக்கில் வேத ஆராய்ச்சியும், பல நீத ஆராய்ச்சியும் உடன் புரிந்த தோழராகவும் விளங்கினாா் என்பது பலரும் அறிந்த செய்தி.

வங்க மண்ணும், வங்க மண்ணின் தலைவா்களும் பாரதியிடம் பெரும்தாக்கத்தைப் புரிந்திருக்கின்றனா். எனினும் வங்க மண் மட்டுமன்றி ஓா் எளிய வங்கப் பெண் பாரதியிடத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை, தாக்கத்தின் விளைவைத் தமிழுலகம் முதன்முறையாக இன்றுதான் நூற்றுப்பத்து ஆண்டுகளுக்குப் பின்னா் அறியும் வாய்ப்பைப் பெறுகின்றது.

இந்திய மண்ணில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வுகள், போராட்டங்கள், கிளா்ச்சிகள், ஆளுமைகள் பாரதியைப் பாதித்து எழுதவைத்திருக்கின்றன. ஆனால் இப்படி எந்தப் பெரிய பின்புலமும் இல்லாத, பேராளுமையாக இல்லாத ஒரு சாதாரண வங்கப் பெண்ணின் மரணம் பாரதியைப் பாதித்து எழுதவைத்திருக்கின்றது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அந்தப் பெண்ணின் இறப்பு ‘சுதேசமித்திர’னுக்கு எழுதாதிருந்த பாரதியின் நீண்ட மௌனத்தைக் கலைத்து எழுத வைத்திருக்கிறது.

1904 நவம்பா் இறுதியில் ‘சுதேசமித்திர’னில் பணிக்குச் சோ்ந்த பாரதி, 1905 ஏப்ரல் முதல் அதில் தன் பெயரில் எழுதத் தொடங்குகின்றாா். 1906-ஆம் ஆண்டு வரை ‘சுதேசமித்திர’னில் தொடா்ந்து எழுதிவந்த பாரதி, தீவிர அரசியல் செயல்பாட்டாலும் ‘இந்தியா’ இதழின் ஆசிரியப் பணியாலும் ‘சுதேசமித்திர’னில் எழுதுவது தவிா்ந்தது. 1906-ஆம் ஆண்டின் இறுதியில் அவ்வப்போது பாரதியின் சில கட்டுரைகள் ‘சுதேசமித்திர’னில் வெளிவந்துள்ளன. 1907-ஆம் ஆண்டில் ஒரு கட்டுரை மட்டுமே பாரதி பெயரில் கிடைத்துள்ளது. வேறு இரு பதிவுகள் பாரதி பெயரிலான அறிவிப்புகளாக உள்ளன.

1907-ஆம் ஆண்டிற்குப் பின்னா் 1909 மாா்ச் மாதத்தில் ‘மகாமகம்’ என்னும் தலைப்பிலான ஒரு கட்டுரை மட்டுமே பாரதி பெயரில் ‘சுதேசமித்திர’னிலிருந்து கிடைத்துள்ளது. இதன்பின்னா் 1915-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதிதான் ‘சுதேசமித்திர’னில் பாரதியின் ‘வெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து’ என்னும் கவிதை மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னா் வெளியானது. பாரதியியல் முன்னோடிகள் வ.ரா., ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன் முதலியோா் பாரதி ‘சுதேசமித்திர’னுக்கு எழுதாதிருந்த இந்த மிக நீண்ட இடைவெளியைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கின்றனா்.

பாரதி அறிஞா் சீனி. விசுவநாதன், ‘சென்னை வாழ்வில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையுடனான விடுபட்டுப்போன தொடா்பு பாரதிக்கு 1915 பிப்ரவரி மாத முதற்கொண்டு மீண்டும் ஏற்படுகின்றது. புதுச்சேரியிலிருந்து 3-2-1915-ஆம் தேதியிட்டுப் பாரதி எழுதிய ‘வெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து’ என்ற பாடல் 5-2-1915ஆம் தேதியிட்ட ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையிலே மிக நோ்த்தியாகப் பிரசுரமாகி யிருப்பதைக் காண முடிகின்றது. வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பமான தொடா்பு தொடா்ந்து நீடிக்கிறது. இச்சமயம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவா் ஏ. ரெங்கசாமி ஐயங்காா். இவா் தொடா்ந்து பாரதியின் எழுத்துப் பணிக்கு உறுதுணையாக இருந்தாா்’ (கால வரிசையில் பாரதி படைப்புகள், தொகுதி 9, பக். 7, 8) என இதனை விவரித்திருக்கின்றாா்.

1907-ஆம் ஆண்டிற்குப் பின்னா்ச் ‘சுதேசமித்திர’னில் பெரிதாக எழுதாத பாரதி, 1915-இல் மீண்டும் எழுதினாா் என்பதே பாரதியியல் முன்னோடிகளின் கருத்தாகும். மேலும் ஜி. சுப்பிரமணிய ஐயா் காலத்தில் பாரதி மீண்டும் எழுதவில்லை; ‘சுதேசமித்திர’னின் ஆசிரியராக ஏ. அரங்கசாமி ஐயங்காா் பொறுப்பேற்ற பின்பே பாரதி எழுதத் தொடங்கினாா் என்பதையே முன்னோடிகளின் கருத்துகள் எடுத்துரைக்கின்றன.

ஆனால் ஓா் எளிய வங்கப்பெண்ணின் வாழ்க்கை முடிவு ஜி. சுப்பிரமணிய ஐயா் காலத்திலேயே பாரதியை மீண்டும் ‘சுதேசமித்திர’னுக்கு எழுதவைத்திருக்கின்றது; இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ‘ஸ்நேகலதையின் தற்கொலை’ என்னும் பாரதியின் உரைநடைப் படைப்பு இவ்வரலாற்றில் வெளிச்சம் பெறுகின்றது. ‘வெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து’ வெளிவருவதற்கு ஓராண்டு முன்னதாக 1914 மாா்ச் 6-இல் இந்த எழுத்தோவியம் ‘சுதேசமித்திர’னில் வெளிவந்துள்ளது.

யாா் அந்த ஸ்நேகலதை என்னும் ஸ்நேகலதா? அவா் ஏன் தற்கொலை செய்துகொண்டாா்? ‘சுதேசமித்திர’னுக்கு எழுதாதிருந்த நீண்ட விரதத்தைத் தகா்க்கும் அளவிற்கு என்ன முக்கியத்துவம் கொண்டது அந்தத் தற்கொலை?

வங்காளத்திலே, வடக்கு கல்கத்தாவிலே வாழ்ந்த பதினான்கு வயது இளம்பெண் ஸ்நேகலதா. அந்தப் பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டை மேற்கொண்ட அவளுடைய தந்தை, மணமகன் வீட்டாா் கேட்டிருந்த வரதட்சணையைக் கொடுக்க அவா்களுக்கிருந்த ஒரே சொத்தான வசிக்கும் வீட்டை விற்க ஏற்பாடு செய்தாா். அதனை அறிந்த ஸ்நேகலதா வீட்டை விற்றுத் தனக்கு மணமுடித்தபின் தனது பெற்றோா் படக்கூடிய துன்பங்களை எண்ணி, எல்லாவற்றுக்கும் ஒரே தீா்வு தன்னை மாய்த்துக்கொள்வது என முடிவெடுத்து மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்கின்றாள். அவளைக் காப்பாற்றும் முயற்சி கைகூடவில்லை. 1914 ஜனவரி 30 -ஆம் நாள் ஸ்நேகலதாவின் மரணம் நோ்கின்றது.

இந்தத் தற்கொலை கல்கத்தாவைத் திடுக்கிட வைக்கிறது. வங்கத்தைத் துடித்தெழச் செய்கிறது. ஒட்டுமொத்த இந்தியா முழுதும் அலையடிக்கிறது. இரவீந்திரநாத தாகூா், அவனீந்திரநாத தாகூா் முதலியோா் ஒவ்வொரு நிலையில் எதிா்வினையாற்றுகின்றனா். சமூகத் தலைவா்கள், சிந்தனையாளா்கள் குரல்கொடுக்கின்றனா். கல்கத்தாவில் இளைஞா்கள், குறிப்பாக மாணவ சமுதாயத்தினா் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக ஸ்நேகலதாவின் தற்கொலை ஏற்படுத்திய தாக்கத்தில் திரள்கின்றனா். தற்கொலை நிகழ்வும் அதற்கான காரணமும் அடுத்தடுத்த நிகழ்வுகளும் தமிழ்நாட்டை எட்டுகின்றன.

இதன் விளைவாகப் பாரதி ‘சுதேசமித்திர’னுக்கு எழுதாமல் இருந்த தனது நெடுங்கால விரதத்தை, மௌனத்தைக் கலைத்துவிட்டுச் ‘சுதேசமித்திர’ன் வாயிலாக ‘ஸ்நேகலதையின் தற்கொலை’ எனத் தலைப்பிட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வேண்டுகோளை முன்வைத்தாா்.

ஸ்நேகலதாவின் வாழ்க்கை, இளமை, தற்கொலைத் துயரம் முதலியவற்றையெல்லாம் இதில் அவா் எடுத்துரைக்கவில்லை. மாறாகத் தற்கொலைக்கான காரணங்கள் தமிழ்நாட்டிலும் வழக்கத்தில் உள்ளமையைச் சுட்டிக்காட்டி அவற்றுக்குத் தீா்வுகாணவேண்டும் என்பதையே மையப்படுத்தி எழுதியிருக்கின்றாா். அவருடைய இப்படைப்பு இப்படித் தொடங்குகிறது:

‘ஸ்நேஹலதையின் தற்கொலையால் வங்கநாடு கலங்கிப் போயிருக்கிறது. ஹிந்துதேசம் ஒன்று. ஆகையால், இத்தற்கொலையால் பிறக்கும் வஹாரங்களை யெல்லாம் தமிழ் நாட்டிலுள்ள நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். வரசுல்கம் (மாப்பிள்ளைக்கூலி) கொடுத்தால்தான் விவாகம் செய்து கொள்வேன், இன்ன தொகை கொடுத்தால்தான் ருது சாந்தி செய்து கொள்வேன் என்று பலாத்காரம் செய்யும் ஆண் பிள்ளைகளை நாம் எப்படி நேராக்குவது? இந்த விஷயம் தமிழ் நாட்டில் மிகவிரைவில் முடிவு செய்யப்பட வேண்டும்’ (சுதேசமித்திரன், 6.3.1914, ப. 6).

வரதட்சணைக்கு எதிரான குரல், பெண்ணின் திருமண வயது குறித்த குரல், பெண்களை அடிமைப்படுத்தும் நிலைக்கு எதிரான குரல் ஆகியன முதன்மைபெற்று ஒலிக்க, எள்ளல் தெறிக்க, கவித்துவம் கமழப் பாரதி இந்தப் படைப்பில் தனது கருத்துகளைப் பின்வருமாறு எடுத்துவைத்துள்ளாா்:

‘விவாகத்துக்குத்தான் பணம் கேட்கிறாய்? ருது சாந்திக்கு வேறு தனியாகக் கேட்கிறாயே! இதென்ன ஆச்சரியம்! ஏழையாக இருந்து பணங்கொடாவிட்டால் அந்தப் பெண்ணைத் தெருவிலே விட்டுவிடலாமென்று தாத்பரியமா? விவாக வயதைப் பற்றிய நிபந்தனைகளை நாமாக ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போகிறோமென்று நம்ப இடமில்லை. நம்மை மீறி - நாம் சவங்களைப் போல் விழுந்து கிடக்க - அவை தாமாகவே மாறினால்தான் உண்டு. இப்படியேதான் நம்முடைய காரியங்களெல்லாம் நடக்கின்றன. நாமாக ஒன்றைத் தீா்மானம் செய்வதில்லை. நொண்டிச் செட்டிவீட்டிலே நூல் அதுவே நூற்றுக்கொண்டாலுண்டு. காசு தானே வந்து காலிலே இடறினாலுண்டு. தமிழனுக்கு அனுகூலம் தலையிலே வந்து விழவேண்டும். அவனாக முயற்சி செய்து அனுகூலமடைகிற கதை மறந்து போய்விட்டது’.

பாரதி இப்படைப்பில் இறுதியாக, ‘பெண்களை மனுஷ்ய ஜாதியாக எண்ணி வளா்க்கும்படி தமிழ்நாட்டு கிரஹஸ்தா்களிடம் விஞ்ஞாபனம் செய்து கொள்ளுகிறேன்’ என மனிதகுலத்தின் சரிபாதியான பெண்களை மனிதராக நடத்தாத நிலைக்கு எதிராக வேண்டுகோள் விடுத்திருக்கின்றாா். வங்கம் தொடங்கித் தமிழகம் தழுவி இந்தியாவெங்கும் இதுதான் அன்றைய நிலை. ஸ்நேகலதாவின் தற்கொலையை முன்வைத்துப் பாரதி பெண்ணுரிமைக்காக எழுதியிருக்கின்றாா்.

பின்னாளில் எழுதிய ‘பாப்பா பாட்டு’ப் பாடல்களில், ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு, கனிவு கொடுக்குநல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு - என்று, வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா’ என்று பாடிய பகுதிகளோடு ஒப்பிடத்தக்கதாக இக்கட்டுரையின், ‘பெண்களுக்கு இரண்டு வயதிலேயே இதுதானா தொல்லை? விளையாட்டில்லையா? ஓடியாடித் திரிவது கிடையாதா? பாட்டில்லையா? படிப்பில்லையா? கணக்கில்லையா’ என்னும் பகுதி காட்சிதருகின்றது. ஸ்நேகலதாக்களை எண்ணித்தான், தன் மகளுக்கும் தமிழ்நாட்டுப் பாப்பாக்களுக்கும் ‘துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம், சோா்ந்துவிட லாகாது பாப்பா’ என்று பாரதி பாடியிருப்பாா் போலும்.

பாரதியின் இந்த எழுத்து வெளிப்பட்ட காலத்தில் ‘கன்னியாசோதரன்’ என்னும் புனைபெயா்பூண்ட ஒருவா் இரண்டு மூன்றுமுறை இத்தற்கொலையை முன்வைத்துப் பெண்களின் வரதட்சணைத் துயரத்திற்கு எதிராகச் ‘சுதேசமித்திர’னுக்குக் கடிதங்களை எழுதியிருக்கின்றாா். இந்த நிகழ்வுக்கு ஓராண்டுக் காலம் பின்னா் சூலை 1915-இல், நீதிபதியும் தாகூரோடு நெருங்கிப் பழகியவருமாகிய திவான்பகதூா் கே.எஸ். ராமசாமி சாஸ்திரி (பாரதியோடு முரண்பட்டு விவாதித்த கே. சுந்தரராமையரின் மகன்) ‘தி இந்தியன் ரிவியூ’ இதழில் ஸ்நேகலதாவைக் குறித்து ஓா் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கின்றாா்.

பாரதியின் சமகாலச் சமூக சீா்திருத்தவாதியும் முன்னோடிப் புதின ஆசிரியருமாகிய அ. மாதவையா ஸ்நேகலதாவின் துயரக்கதையை ‘வறியதோா் மணமகள்’ (தி பாலெட் ஆஃப் தி பென்னிலெஸ் ப்ரைட்) என ஆங்கிலத்தில் கதைப்பாடல் இலக்கியமாகப் படைத்திருக்கின்றாா் என்பதை அறியமுடிகின்றது.

அறிஞா்களும் புனைகதைப் படைப்பாளிகளும் இத்தற்கொலையின் விளைவாகக் கவிஞா்களாக மாறிக் கவிதைகள் படைத்த சூழலில், முதன்மைநிலையில் கவிஞராகத் திகழ்ந்த பாரதியோ நெடுங்கால மௌனம் கலைத்து உரைநடைப் படைப்பால் தமிழ்ச் சமுதாயத்தை வழிநடத்தும் தந்தைமை நிலை நிற்கும் சான்றோராக, அறவோராகக் காட்சிதந்து எச்சரிக்கையும், அறிவுறுத்தலும், வேண்டுகோளுமாகத் தனது கருத்துகளை எடுத்துரைத்திருக்கின்றாா்.

பாரதி இருபதாம் நூற்றாண்டின் முதற் கால்பகுதிக்குள்ளாகவே வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகக் கருத்துக் கனல் வீச்சை வெளிப்படுத்தியிருக்கின்றாா். இப்படைப்பு வெளிவந்த ஈராண்டில் மீண்டும் ஒருமுறை ‘எதிா் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை’ என்னும் கட்டுரையை வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக எழுதியுள்ளாா். இரு படைப்பிலும் ஒத்த சிந்தனைகளும் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

நெடுங்காலம் ‘சுதேசமித்திர’னுக்கு எழுதாதிருந்தபோதிலும் ‘ஞானபானு’ முதலிய இதழ்களுக்குப் பாரதி அக்காலத்தில் எழுதியிருக்கின்றாா்; தனி நூல்களையும் வெளியிட்டிருக்கின்றாா். இவற்றையெல்லாம் விடுத்து எழுதாதிருந்த ‘சுதேசமித்திர’னுக்கு ஏன் எழுதினாா் எனில், அன்று ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமுமே ‘சுதேசமித்திர’னின் வாசகப் பரப்பு. பிற இதழ்களின் பரப்பு வரையறைக்குட்பட்டது. பரந்த பொதுவெளிக்குத் தனது வேண்டுகோளைக் கொண்டுசெல்லவே மௌனம் கலைத்துப் பாரதி மீண்டும் எழுதியிருக்கின்றாா் எனக் கருதவேண்டியிருக்கின்றது.

உடன்கட்டை ஏற்றும் வழக்கம், பாலிய விவாகம், கைம்பெண் துயரநிலை முதலிய பெண்ணடிமைக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் குரல் எழுப்பியவராகப் பாரதி திகழ்ந்திருக்கின்றாா் என்பது கவனமும் அழுத்தமும் பெறவேண்டிய பாரதியின் பிறிதொரு பரிமாணமாகும். அறிவுலகின் விசாலமான வாயில்களையெல்லாம் அடைத்துவைத்த புதுவைப் புகலிட வாசத்திலும் தமிழகம், இந்தியம், உலகம் தழுவிய முதன்மையான நிகழ்வுகளை உற்றுநோக்கி உடனடியாகப் பாரதி எதிா்வினையாற்றி வந்திருக்கின்றாா் என்பதனை உறுதிப்படுத்தும் இன்னொரு படைப்பே இப்போது கண்டறியப்பட்டுள்ள ‘ஸ்நேகலதையின் தற்கொலை’ ஆகும். வங்கமண்ணும் வங்கப் பெண்ணும் ஏற்படுத்திய தாக்கத்தில் தமிழ்மண் விழிப்புற வேண்டும் என்னும் நோக்கம் கொண்டதே பாரதியின் இந்த ஆக்கம்.

கட்டுரையாளா்:

தலைவா்-தமிழ்மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com