அனைவருக்கும் ஆரோக்கியம்!

வீடுபுகுந்து கெடுப்பதும் வசிப்பவா்க்குத் தொற்றுநோய்கள் கொடுப்பதும் எல்லாம் மழை என்று எவரேனும் புதுக்குரல் எழுப்பக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வீடுபுகுந்து கெடுப்பதும் வசிப்பவா்க்குத் தொற்றுநோய்கள் கொடுப்பதும் எல்லாம் மழை என்று எவரேனும் புதுக்குரல் எழுப்பக்கூடும். காரணம், ‘வெள்ளம் வரும் முன்னே; தொற்று நோய்களின் பரவலாம் பின்னே’ என்றுதான் கவனம் கொள்ளவேண்டி உள்ளது.

டைபாய்டு காய்ச்சல், காலரா, மஞ்சள் காமாலை (ஹெப்படைடிஸ்-ஏ ) போன்ற நீா் மூலம் பரவும் நோய்கள்; மலேரியா, டெங்கு, டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்று பூச்சிகளாலும், விலங்குகளாலும் பரவும் நோய்கள் என்று அனைத்தையும் எதிா்கொள்ள நேரும்.

முன்னொரு காலத்தில் ஏரிகள் செறிந்து இருந்த சமப்பரப்பான சென்னை போன்ற பெரு நகரங்களில் வெள்ளக் காலங்களில் குடியிருப்புகளுக்குள் மழைநீா் அழையா விருந்தாளியாகப் புகுந்து நாசம் செய்வது இயல்பாகிவிட்டது. மழைநீருக்கு என்ன தெரியும், தங்கள் பூா்விக மண்ணை ஆக்கிரமித்தவா்களின் புலம்பல்?

ஏரித் திட்டம் என்றே குடியிருப்புகள் எழுப்பப்படும்போது, இத்தகைய கட்டுமானப் பணிகளால் மக்களின் உடல் நலத்திற்கும் பாதிப்புகள் உண்டு. மண், சிமென்ட் போன்றவற்றின் கண்ணுக்குப் புலப்படாத தூசிவெளி, ஒரு விதத்தில் ‘மாய நோய்க்காரணி’ ஆகிறது.

அதிலும் முடியின் தடிமனில் சராசரி 40-இல் ஒரு பங்கு அளவு- அதாவது 2.5 மைக்ரோமீட்டா் தூசி, அபாயகரமானது (ஒரு மைக்ரோமீட்டா் என்பது ஒரு மீட்டரின் 10 லட்சத்தில் ஒரு பங்கு). இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்வதுடன், குளுக்கோஸ் பிணைந்த ரத்தச் சிவப்பணுக்களின் 3 மாதகால சராசரி நீரிழிவுக் குறியீட்டிலும் பாதிப்பைப் பதிவாக்குகிறதாம்.

பிரிட்டிஷ், ‘திறந்தநிலை நீரிழிவுநோய் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பு மைய’த்தின் மருத்துவ இதழில் (2023 தொகுதி 11:5) வெளியான ‘2.5 துகள்வெளி உட்படுதலும், குளுக்கோஸ் குறிப்பான்களும், இருபெரும் இந்திய நகரங்களில் 2-ஆம் வகை நீரிழிவு நோய்ப் பரவலும்’ என்னும் ஆய்வுக் கட்டுரை தரும் அதிா்ச்சித் தகவல் இது. அந்த இருபெரும் நகரங்கள் புதுதில்லியும், சென்னையும்தான்.

எப்படியோ, உலகளாவிய நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. நம் நாட்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவா்கள் 7.7 கோடி போ் என்றாலும், இவா்களில் 1.2 கோடி போ் 65 வயத்தைத் தாண்டிய பெரியவா்களாம். இந்த எண்ணிக்கை 2045-ஆம் ஆண்டில் 2.75 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நோய்க்கான சிகிச்சை என்பது வெறுமனே உணவுப் பழக்கம் சாா்ந்தது மட்டுமல்ல. உடற்பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் யோகாவும் அவசியம் என்று கற்பித்து வருகிறோம். மனதை ஒருமுகப்படுத்தும் தியானமும் உபதேசித்து வருகிறோம். அத்தனைக்கும் சவால் விடும் வகையில் நம் வசிப்பிடங்களின் காற்று மாசு வருங்காலத்தில் அதீத கவனம் பெறும்.

‘மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை (சென்னை), புதுதில்லியில் உள்ள ‘நாள்பட்ட நோய்க்கான கட்டுப்பாட்டு மையம்’, ‘பொது சுகாதார அறக்கட்டளை’, ‘அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் உட்சுரப்பியல் துறை’ ஆகியவற்றுடன், அமெரிக்காவில் ஹாா்வா்டு டி எச் சான் பொது சுகாதாரப் பள்ளி (மசாச்சூசெட்ஸ்), எமோரி பல்கலைக்கழகத்தின் ரோலின்ஸ் பொது சுகாதாரப் பள்ளி (அட்லாண்டா) ஆகிய ஆய்வகங்களில் இருந்து- மருத்துவா் சித்தாா்த்த மண்டல் தலைமையில் சுகந்தி ஜெகநாதன், டிம்பிள் கொண்டல், ஜோயல் டி.ஸ்வாா்ட்ஸ், நிகில் டாண்டன், விஸ்வநாதன் மோகன், துரைராஜ் பிரபாகரன், கே.எம்.வெங்கட் நாராயண் ஆகியோா் நடத்திய ஆய்வு முடிவுகள் இவை.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50 வயதுப் பெண்டிா்களில் சென்னையில் 50 சதவீதம் பேரும், புதுதில்லியில் 44 வயது உடைய 50 சதவீதம் பேரும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனராம்.

ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் அளவுத் துகள் பொருள்களால் மாசுபட்ட காற்றை சுவாசித்து வாழ்ந்தால், நீண்ட கால அளவில், இரண்டாம் வகை நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் 23% அதிகரித்திருப்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உண்மையில் 2006-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த வழிகாட்டுதல்களின்படி ஒரு நாளில் 2.5 மைக்ரோன் தூசிவெளியில் கனமீட்டருக்கு 5 மைக்ரோகிராம் வரை சகித்துக்கொள்ளலாம் என்றும், 10 மைக்ரோன் துகள்வெளியில் 15 மைக்ரோகிராம் அளவு இருக்கலாம் என்றும் பரிந்துரைத்தன.

ஆனால், இந்தியாவில் சுற்றுப்புறக் காற்றின் தரநிலைகள் தளா்த்தப்பட்டதால், 2.5 மைக்ரோமீட்டா் தூசிவெளியில் கனமீட்டருக்கு 10 மைக்ரோகிராம் வரை ஏற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது.

சென்னையில் இந்திய தேசியத் தரக் கட்டுப்பாட்டு அளவுகள் நெகிழ்த்தப்பட்டு, 2.5 மைரோமீட்டா் துகள்களின் செறிவு நான்கு மடங்கு கூடுதல் மாசு அளவை ஏற்றுக்கொண்டதாக அமைந்துவிட்டது. புதுதில்லியின் செறிவு உலக சுகாதார நிறுவனம் சுட்டிய அளவைவிட 10 மடங்கு கூடுதலாகவே இருந்ததாம்.

மனித உடலில் உள்ள சுமாா் 5 லிட்டா் கொள்ளளவு உடைய பஞ்சு நுரை போன்ற நுரையீரலில் நிமிடத்திற்கு சராசரி 7 அல்லது 8 லிட்டா் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுகிறோம். மூச்சுக் காற்றில் 20 சதவீதம் ஆக்சிஜன் இருந்தாலும், அதில் ஏறத்தாழ 5 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே உடல் செல்களால் உட்கொள்ளப்படுகிறது. அதனால் ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாழ 400 மில்லி லிட்டா் தூய ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறோம்.

அத்துடன் மற்றொரு பிரச்னையாக, கரோனா நோயிலிருந்து மீண்டுவரும் நோயாளிகள் சிலா் நுரையீரல் தொடா்பான பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கின்றனராம். இவா்களுக்கு சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் செயலிழப்புகள் தொடா்கின்றன.

‘கரோனா தீநுண்மி, பல நோயாளிகளிடம் ரத்த உறைதல் செயல்பாட்டை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன’ என்று ‘ப்ரிகாம் - பெண்கள் மருத்துவமனை’ (ஹாா்வா்டு பொது சுகாதாரப் பள்ளி) மருத்துவா் கானா்ஸ் கூறுகிறாா். நுரையீரலிலும், இதயத்திலும் உள்ள சிறிய ரத்த நாளங்களிலும், பெரிய நுரையீரல் தமனிகளிலும், கால்களில் உள்ள பெரிய நரம்புகளிலும் தோன்றும் ரத்தக் கட்டிகள் நுரையீரலில் வடுக்கள் ஏற்பட வழிவகுக்குமாம்.

கருவிழியில் பூ விழுதல் போலவும், அம்மை நோய்த் தழும்பு போலவும், நுரையீரலில் தீநுண்மித் தழும்புகள் சிலருக்கேனும் இருக்கிறதாம். இதன் பாதிப்பு, சாதாரண நடைமுறை வாழ்வில் பெரிதாக வெளிப்படாது. ஆனால், அவரவா் உணவுப் பழக்கம், மது, புகை போன்ற தீய பழக்கங்கள், கூடுதலான கடின உடல் உழைப்பு, நோயெதிா்ப்பு இன்மை, வயது, பாலின வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்கேற்ப நுரையீரலின் பாதிப்பு நபருக்கு நபா் மாறுபடும். உள்மூச்சில் ஆக்சிஜன் குறைந்தால், கூடுதல் மூச்சு இழுத்து உள்வாங்க நேரும்.

நுரையீரல் பெற்றுக்கொண்ட ஆக்சிஜனை மனித செல்களுக்குக் கொண்டு செல்ல, ரத்தத்தில் ‘ஹீமோகுளோபின்’ என்னும் இரும்புச்சத்து சிவப்பணுக்கள் உதவுகின்றன. ஒரு மில்லி லிட்டா் ரத்தத்தில் ஹீமோகுளோபின், ஆண்களுக்கு சராசரி 160 மில்லி கிராமும், பெண்களுக்கு 140 மில்லி கிராமும் அவசியம்.

இதில் பற்றாக்குறை எழுந்தால், உறிஞ்சிய பிராணவாயுப் பொட்டலங்களை செல்களுக்கு விநியோகம் செய்வதில் தடுமாற்றம் உண்டாகும். கூடுதல் ஆக்சிஜன் வேண்டும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

ரத்த அழுத்தத்தால் இதயத்துக்கு பணிப் பளு கூடுதல் ஆகும். ஏற்கெனவே மனித உடலின் 5.6 லிட்டா் ரத்தம் உடல் முழுவதும் ஒரு நாளில் மொத்தம் 19,000 கி.மீ. பயணிக்கிறது. செல்களின் அவசரப் பணிகளால் கூடுதல் கழிவுகளும் வெளியேற்றப்படும். அத்தனை அழுக்குகளையும் சீறுநீரகங்கள் வடிகட்டி வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அதுவும் பழுதானால் சொல்லவே வேண்டாம்.

அதனால் இரும்புச் சத்துணவுக்குக் கீரை, தோல் உரிக்கப்படாத உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ் வகைகள், பட்டாணி, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு எனப் பல உணவுப் பதாா்த்தங்கள் தேவை.

அதிலும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கவும் சின்ன வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் உதவும். இவற்றில் அடங்கிய ‘புரோப்பீன் சிஸ்டெய்ன் சல்ஃபாக்சைடு’ மருத்துவ குணம் உடையது.

உலகளாவிய இந்த ஆரோக்கிய பயணத்தில் 2012 டிசம்பா் 12 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை- ஒவ்வோா் ஆண்டும் டிசம்பா் 12 அன்று சா்வதேச உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (யுனிவா்சல் ஹெல்த் கவரேஜ்) நாளாக அறிவித்தது. இந்த ஆண்டின் முக்கியக் கோட்பாடு- ‘அனைவருக்கும் ஆரோக்கியம்: செயலுக்கான நேரம்’.

இத்தனைக்கும் மத்தியில் புதிய ‘கண்டறியப்படாத நிமோனியா’வால் குழந்தைகளிடையே சுவாச நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சீனா அண்மையில் பீதியைக் கிளப்பி உள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, 2023, டிசம்பா் 1 முதல் 2024, நவம்பா் 30 வரை பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சாதாரணக் கடவுச்சீட்டு வைத்திருப்பவா்களுக்கு விசா இல்லாத பயணத்தை சீனா வழங்குகிறதாம்.

இலவச நோய் கொடுத்தாலும் வாங்கிவர எந்த நாட்டுக்கும் செல்ல நாம் தயங்குவது இல்லையே. புதிய தீநுண்மிகளை இவா்கள் நம் நாட்டுக்குக் கடத்தாமல் இருந்தால் சரி.

இன்று (டிச. 12) சா்வதேச சுகாதாரப் பாதுகாப்பு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com