சமூகத்திற்கான அறிவியல் தேவை!

சமூகத்திற்கான அறிவியல் தேவை!

 அண்மையில் சமூக அறிவியல் மாநாடு ஒன்று நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் ஒரு சில விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று அறிவியலைப் பாகுபாடின்றி பார்க்க ஒரு அணுகுமுறையை உருவாக்க வேண்டும். காரணம் அறிவியலில் சமூகத்தில் உள்ளதுபோல் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். இதைச் செய்தவர்கள் படிக்காதவர்கள் அல்ல. நன்கு கற்ற அறிவியலாளர்கள்தான் இதைச் செய்துள்ளனர். சமூகமும் அதையே நம்புகிறது.
 மருத்துவமா அது உயர்ந்தது, அறிவியலா அது உயர்ந்தது, ராக்கெட் அறிவியலா அது உயர்ந்தது, சந்தைப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமா அது உயர்ந்தது என்கிற பார்வையை உருவாக்கியதன் விளைவு, அறிவியல் உலகத்திலும் எல்லையற்ற ஏற்றத்தாழ்வுகளை நாம் சந்திக்கின்றோம். இவற்றை நாம் பெரும்பாலும் பொதுத்தளத்தில் விவாதிப்பதில்லை.
 ராக்கெட் அறிவியல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சுகாதார அறிவியல் (சானிடரி சயின்ஸ்). இருந்தும் இந்த சுகாதார அறிவியலை யாரும் ஒரு பொருட்டாகவே கருதுவது கிடையாது. இதற்குக் காரணம், எந்த அறிவியலுக்கு அதிக நிதி கிடைக்கிறதோ, அந்த அறிவியல் மரியாதை பெற்றுவிடுகிறது. அந்த அறிவியல் நிகழ்வுகளை குடியரசுத் தலைவரோ, பிரதமரோ, ஆளுநரோ தொடங்கி வைப்பதும், அந்த அறிவியல் நிகழ்ச்சிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு நிதி கொடுப்பதும் இந்த ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தியுள்ளது.
 இதுபோன்ற அறிவியலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் சமூக அறிவியலுக்குக் கிடைப்பதில்லை. சமூக அறிவியலும் சமூக மேம்பாட்டுக்குத்தானே ஆய்வுகளை மேற்கொள்கிறது. அது ஏன் நம் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை? அதேபோல் சமூக அறிவியலுக்கு நிதியும் கிடைப்பதில்லை. இருந்தும் அதில் ஒரு பாகுபாடு. எந்த அறிவியல் பணம் ஈட்டக் காரணியாக இருக்கின்றதோ அந்த அறிவியலுக்கு நிதி தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.
 சமூக அறிவியல் என்பது சமூகம் மேம்பட ஆய்வு செய்வது. ஆனால் அது தரம் தாழ்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதை மாற்றுவதற்காகவே "இந்திய சமூக அறிவியல் கழகம்' என்ற அமைப்பு ஏறத்தாழ 48 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இக்கழகத்தின் இந்த ஆண்டின் மாநாடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 27 முதல் 31 வரை நடைபெற்றது.
 பொதுவாக அறிவியல் மேற்கத்திய நாட்டிலிருந்து வந்தது; அந்த அறிவியல்தான் நமக்கு வழிகாட்டும் என்ற சிந்தனையையோடுதான் இன்று வரை நம் அறிவியலாளர்களும், மக்களும், அரசியல்வாதிகளும் இயங்கி வருகின்றனர். அதேபோல் அறிவியல் என்பது, கல்வியாளர்களுக்கு மட்டும் புரியக்கூடியது, சாதாரண மனிதர்களுக்குப் புரியாது என்ற கருத்தும் உள்ளது. அறிவியல் உலகம் என்பது வேறு உலகம். அதற்கும் சமூகத்திற்கும் எந்த உறவும் இல்லை என்ற சிந்தனைப்போக்கில் தான் இன்றுவரை நம் சமூகம் இயங்கி வருகிறது.
 இதை உடைக்கும் கருத்துகளைக் கொட்டியது இந்த மாநாடு. இந்திய சமூக அறிவியல் கழகம் தொடங்கப்பட்டதே அறிவியல் தளத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, பாகுபாடற்ற அறிவியல் கட்டமைப்பை உருவாக்குவதற்குத்தான். 3,000-க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தபோதும் அந்த உறுப்பினர்களிடையே இந்த விழிப்புணர்வை உருவாக்குவதே பெரிய போராட்டமாக இருந்தது.
 சமூகத்திற்கு பயனற்ற எந்த அறிவியலும் அறிவியலல்ல; சமூகத்திற்கு பயன்படும் எந்த அறிவியலும் சமூக அறிவியலே என்ற கருத்தாக்கத்தைக் கொண்ட கழகம்தான் இந்த சமூக அறிவியல் கழகம். இந்தக் கழகத்தில் சமூக அறிவியல் துறைகளைச் சார்ந்தவர்கள் மட்டும் உறுப்பினர்கள் அல்ல, மிகச் சிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
 இக்கழகத்தின் அடிப்படை நோக்கமே மனிதர்கள், சமூகம், இயற்கை ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவு பற்றி ஆய்வு செய்து அந்த உறவு முறையை சீராக்கி மேம்படுத்துவதுதான். இந்தக் கருத்தாக்கத்தை படித்தவர்களிடம் புரிய வைக்கவே நாற்பது ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. இந்த ஆண்டின் மாநாட்டிற்கு விவாதப் பொருளாக "75 ஆண்டில் இந்திய சுயராஜ்யம்' என்ற தலைப்பை எடுத்துக் கொண்டது இந்த அமைப்பு.
 75 ஆண்டில் நாம் சுயராஜ்யத்தில் எங்கு உள்ளோம், யாருக்கு சுயராஜ்யம் வசப்பட்டது, யாருக்கு வசப்படவில்லை, நம் சிந்தனை, நடத்தை, செயல் அனைத்தும் சுயராஜ்யத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கின்றனவா என்ற கேள்விகளை இந்த மாநாடு மையப்படுத்தியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்.
 தலைமையுரையாக நான் பேசியபோது, 75 ஆண்டு கால சுயராஜ்யம் பற்றி நாம் ஆய்வு செய்யும்போது, அதை சுய விமர்சனமாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, இது குறை காணும் மன்றமாக இருக்கக்கூடாது. நாம் அறிவியலில், தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டோம். அந்த வளர்ச்சி சாதாரண மனிதர்களுக்கு உதவியதா? அவர்களின் வாழ்க்கையை மேம்பட வைத்ததா என ஆய்வு செய்ய வேண்டும்.
 ராக்கெட் அறிவியலால் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளை உருவாக்கி விட்டோம். ஆனால் சாதாரண மனிதர்களுக்குத் தேவையான சுகாதார அறிவியலை உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு செல்லவில்லை. 75 ஆண்டு காலத்தில் மக்களை பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்றுவதற்கு பதில் பயனாளிப் பட்டாளமாக மாற்றி வைத்து விட்டோம். பகவான் அரவிந்தர் கூறியதுபோல நாம் பண்பட்ட நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்கள். அப்போது நாம் அறிவியல் இல்லாமலா இருந்தோம்? தொழில்நுட்பம் இல்லாமலா இருந்தோம்? அவையெல்லாம் எங்கே? எனவே, சாதாரண மக்களுக்கான அறிவியல் தொழில்நுட்பம் எங்கே என்று நாம் நம் வரலாற்றில் தேடவேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தேன்.
 ஆளுநர் உரையாற்றும்போது, "இந்தியாவுக்கு பூரண சுயராஜ்யம் வேண்டும் என்பதை நம் தலைவர்கள் சுதந்திர போராட்ட காலத்தில் உறுதி செய்தனர். அதை உறுதிபட நடைமுறைப்படுத்த, அடிமைச் சிந்தனையை போக்கி, நம் கலாசாரப் பெருமையை நிலைநாட்ட தேவையான ஆய்வுகளை நடத்திட வேண்டும்.
 அடிமைச் சிந்தனையிலிருந்து வெளியேற நமக்கு ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. எனவே நம் தேவைகளை பூர்த்தி செய்ய நம் அறிவுத் தளத்தை விரிவுபடுத்தி ஆய்வுகளை நடத்திட வேண்டும்' என்று கூறினார்.
 இந்தக் கருத்தரங்கில் எண்ணற்ற விஞ்ஞானிகளும், களச் செயல்பாட்டாளர்களும், ஆய்வாளர்களும் உரையாற்றினர். மேலும், ஒவ்வொரு நாளும் பல துறைகளைச் சார்ந்த மிகப் பெரிய ஆளுமைகள் மாநாட்டில் கருத்துரையாற்றியது ஒரு மிகப்பெரிய கண்திறப்பாக அமைந்தது. அண்ணல் அம்பேத்கர் வேண்டியது பிரதிநிதித்துவம். ஆனால் இன்றுவரை அதை மறைத்து விட்டு அவர் கேட்டது இட ஒதுக்கீடு என்பதாகவே பேசிவரும் அரசியலை அப்பட்டமாக்கியது, முன்னாள் தேசிய சட்டக் கழகத் தலைவரும் முன்னாள் தேசிய சட்டப் பள்ளியின் துணைவேந்தருமாகிய மோகன் கோபாலின் பேச்சு
 அதேபோல் மூத்த பத்திரிகையாளர் மாலன், "நாட்டின் விடுதலைக்கு வித்திட்டதில் பெரும்பங்கு பத்திரிகையாளர்களுக்கே' என்பதை தன் சிறப்புச் சொற்பொழிவில் ஆதாரங்களுடன் விளக்கியது வித்தியாசமாக இருந்தது. அதேபோல் நீதிநாயகம் சந்துரு தன் உரையில் நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் உள்ள முரண்பாடுகளையும், சாதாரண மக்களுக்கான நீதிபெறும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தது பலருக்கு நீதித்துறை பற்றி ஒரு வகுப்பில் பங்கு கொண்டதுபோல் இருந்தது.
 இந்த மாநாட்டில் ஒரு அமர்வு பொது அமர்வு. அதில் அனைவருக்கும் கருத்துக்களை பதிவிட வாய்ப்பளிக்கப்பட்டது. அதை நெறிப்படுத்திய இந்திய சமூக அறிவியல் கழகத் தலைவர் ஒரு கருத்தை முன்வைத்து விவாதிக்குமாறு கூறினார். அவர் "இவ்வளவு அறிஞர்கள் கூடினோம், விவாதித்தோம். இந்த ஐந்து நாளும் பெரும் பொருள் செலவு செய்து மாநாட்டை நடத்தியுள்ளோம். இது நம் பணி மேம்பாட்டுக்கு உதவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இந்த நிகழ்வு எந்த மாறுதலை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
 இறுதியாக முத்தாய்ப்பு வைத்ததுபோல், நிறைவு உரையாற்ற வந்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தன் நிறைவுரையில் ஒரு கேள்வியை முன் வைத்தார். "இவ்வளவு விவாதங்களும் கருத்துகளும் எந்த மொழியில் நடைபெறுகிறது? நம் தாய்மொழியில் அல்ல, அன்னிய மொழியில். இது எப்படி பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். தாய்மொழியில் வராத எந்த அறிவியலும் மக்கள் வாழ்க்கையை மாற்றப்போவது கிடையாது.
 நாம் என்று தாய் மொழிக்குத் திரும்புகிறோமோ அன்றுதான் நம் செயல்பாடுகள் மக்கள் பக்கம் நோக்கிச் செல்லும், எனவே தாய்மொழியில் ஆய்வு அறிக்கைகள் வெளிவர வேண்டும். இல்லையெனில் அறிவியல் அறிந்தோர்க்கு மட்டுமே அது பயன்படும்' என்பதை அழுத்தமாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
 மொத்தத்தில் அம்மாநாடு, ஆய்வுக் கருத்தரங்கங்கள் மக்களுக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. சமூகத்திற்கான அறிவியலைத் தேடும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது மிகவும் சிறப்பு.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com