புறாக்களை வேட்டையாடும் புதிய ரஷியா!

புறாக்களை வேட்டையாடும் புதிய ரஷியா!

 உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்ல, உக்ரைனில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், "உக்ரைனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தவறாக கணக்குப் போட்டுவிட்டார். அவரது திட்டம் படுதோல்வியடைந்துகொண்டிருக்கிறது. உக்ரைன் தளராமல் மன உறுதியுடன் நிற்கிறது. உக்ரைனுடன் சேர்ந்து ஜனநாயகமும் தலைநிமிர்ந்து நிற்கிறது' என்றும் கூறியுள்ளார்.
 அவர் கூறியது சரிதான். நேட்டோ அமைப்பில் இணைவதற்கு வொலோதிமீர் ùஸலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்தது. தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதியது. அதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. தனது அண்டை நாடு என்றாலும் உக்ரைன் தனது அடிமை நாடு அன்று என்பதை ரஷியா எண்ணிப்பார்க்கவில்லை.
 அக்டோபர் புரட்சி முடிந்து, 1917-இல் புதிய ரஷியா உருவானபோது, இந்தியாவைப் போன்ற அடிமைப்பட்ட நாடுகள், அனைத்தும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தன. சோவியத் நாட்டிற்கு வந்த சுதந்திரம், அடிமைப்பட்ட நாடுகளுக்கு எல்லாம் புது நம்பிக்கையை ஏற்படுத்தியது.
 அடிமைத்தனம் எங்கிருந்தாலும் அதன் சிறகொடிக்க விரும்பிய பாரதி, "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி' என அதனை வாழ்த்தி, முதல் அங்கீகாரத்தைத் தந்தான்.
 குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
 மேன்மையுறக் குடிமை நீதி
 கடியொன்றில் எழுந்தது பார்; குடியரசென்று
 உலகறியக் கூறிவிட்டார்;
 அடிமைக்குத் தளையில்லை; யாருமிப்போது
 அடிமையில்லை அறிக
 என்று அடிமைப்பட்ட மக்களின் மனத்தில் நம்பிக்கை நட்சத்திரத்தை மிளிரச் செய்தார், அந்த மகாகவி!
 சோவியத் கவிஞனான மாயாகோவ்ஸ்கி,
 இன்றெனது தாய்நாடு
 என்பதனைப் பாடுகின்றேன்
 என்றாலும், இதைத் தொடர்ந்து
 இனிவருமோர் புதுயுகத்துப்
 பொன்னாட்டை முக்காலும்
 போற்றி செய்து பாடுகின்றேன்
 என பாரதியின் பல்லவிக்கு, அனுபல்லவியாகப் பாடினான். "அடிமைப்பட்ட நாடுகளின் சுதந்திரத்திற்கும் பாடுபடுவேன்' என்பது மாயாகோவ்ஸ்கியின் பாடலின் பொருளாகும்.
 கியூபாவிற்கு விடுதலையைப் போராடி கொடுத்த பின்பு, உடனே அம்மண்ணை விட்டுப் புறப்பட்டார் சேகுவரா. "எங்கே புறப்படுகிறீர்கள்' எனக் கேட்டார் காஸ்ட்ரோ. அதற்குச் சேகுவரா "அடிமைப்பட்ட நாடுதான் என் தாய்நாடு. அந்த நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தருவதுதான் என் பிறப்புரிமை' எனச் சொல்லி, பொலீவியாவை நோக்கிப் புறப்பட்டார். சேகுவராவைப் போன்ற சோஷலிஸ்ட்டாக இன்றைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் இருப்பார் என எதிர்பார்க்க முடியுமா?
 சோவியத் நாட்டிற்கு சுதந்திரம் வந்தவுடன் மகாகவி பாரதி, "வரப்போகும் யுகம்' என ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை வரைந்தார். "சோஷலிசம் என்று மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று, இங்குத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. என்றாலும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி, கெளரவமான வாழ்க்கை நடத்துவதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொதுவுடமையாக்கி, அதில் தொழிலாளிகளாகவும், கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்கம் ஆகும்' என வரைந்த அரசியல் சாஸ்திரத்தைப் புதினால் புரிந்து கொள்ள முடியவில்லை.
 அதனால் உக்ரைன் உருக்குலைந்து போயிற்று. அடிமைப்பட்ட மக்களை வால்கா நதியாய் வாழ வைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு நெருப்பாறாய் வந்து, சுடுகின்றனர் நவீன சோஷலிஸ்டுகள். இன்றைய சோவியத், உக்ரைனிலிருந்த பள்ளிகள், மசூதிகள், அருங்காட்சியகங்கள் அனைத்தையும் அழித்து, நாட்டையே சுடுகாடு ஆக்கிவிட்டது.
 கவிஞர்களை தீர்க்கதரிசிகள் எனச் சொல்லுவார்கள். பிரெஞ்சு நாட்டுக்கு விடுதலை வரப்போவதை, முன்கூட்டியே சொன்னவர் கவிஞர் வேட்ஸ்வொர்த். ஆனால், வந்த சுதந்திரம் பயனில்லாது போனதைப் பார்த்துக் கண்ணீர் விட்டவரும் அவரேதான்!
 ஒன்றுபட்ட சோவியத் - சோஷலிஸ்ட் குடியரசு உருவானபோது, 16 குறுநாடுகள் சேர்ந்து உருவாயிற்று. ஒன்றியத்திலிருக்கும் குறுநாடுகள், விரும்பினால் பிரிந்து போவதற்குரிய அனுமதியையும் தந்தது ஒன்றியம். ஆனால், இன்றைய புதினுக்கு அது வரமாக இல்லாமல், சாபமாகத் தெரிகிறது.
 இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து, நமக்கு நேச நாடாகவும், தோழமை நாடாகவும் இருந்தது ரஷியா. நம்முடைய நெய்வேலிக்கு வேண்டிய கனரக இயந்திரங்களைத் தந்துவிட்டு, முந்திரி போன்றவற்றைப் பண்டமாற்றாகப் பெற்றுக் கொண்டது.
 கிழக்கு வங்காளத்திற்கு இந்தியா துணையாக நின்றபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏழாவது கடற்படையை அனுப்ப எத்தனித்தபோது, சோவியத் நாடு அதற்கிணையான கப்பற்படையை இந்தியாவிற்கு அனுப்பத் தயாரானது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அமெரிக்கா பின்வாங்கியது.
 அமெரிக்கா தனது பலத்தைக் கொண்டு கியூபாவை அடிமைப்படுத்த முயன்ற நேரத்தில், குருசேவ் அனைத்து உதவிகளையும் கியூபாவிற்கு தந்து அந்நாடு விடுதலை பெற உதவினார்.
 அமெரிக்கா வியத்நாமை தனது சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி அபகரிக்க நினைத்த நேரத்தில், ரஷியா சர்வதேச நல்லெண்ணங்களை வியத்நாம் பக்கம் உருவாக்கி அந்நாடு ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிக்க உதவியது.
 இவ்வாறெல்லாம் உலக சமாதானத்திற்கும் சமத்துவத்திற்கும் உதவிய சோவியத் நாடு, குருசேவிற்குப் பிறகு வந்த தலைவர்களால் கொண்ட கொள்கைகளை மறந்துவிட்டது. தனக்குக் கீழிருந்த நாடுகள் ஒவ்வொன்றாய் பிய்த்துக் கொண்டு போகத் தொடங்கின.
 சோவியத் ஒன்றியம், தம்மிடமிருந்த 15 நாடுகளில் போலந்து, வடகொரியா, ஹங்கேரி போன்ற பத்து நாடுகளை இழந்துவிட்டது. இன்னும் ஐந்து நாடுகளே சோவியத் ஒன்றியத்தில் உள்ளன.
 சோவியத் ஒன்றியத்தால் சுயாட்சி பெற்ற நாடு, கியூபா. அந்நாட்டின் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, ஒன்றியத்திலிருந்த நாடுகள் ஆதிக்க அதிகாரத்தால் அச்சுறுத்தப்பட்டபோது தலைமைப் பீடத்தை எச்சரித்தார்.
 சோமாலியா, சராயிவோ, செர்பியா, ஹெர்ஜிஹோவா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டபோது உள்நாட்டுச் சிக்கல்கள் ஏற்பட்டன. அப்பொழுதும் பிடல் காஸ்ட்ரோ அதிகார பீடங்களைக் கடுமையாக எச்சரித்தார். மேலும், தான் எப்படி ஆட்சி செய்கிறேன் என்பதையும் எடுத்துரைத்தார்.
 "கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் நாட்டின் மக்கள் மீது எந்தவிதமான அடக்குமுறையும் பயன்படுத்தப்படவில்லை. தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் யாரும் அடக்குமுறைக்கு உள்ளானதில்லை. கடந்த நாற்பதாண்டுகளாகக் காவலர்களோ, ராணுவத்தினரோ மக்களை அடித்துத் துன்புறுத்தியதில்லை. மூன்றாம் உலக நாடுகளில் நடப்பதுபோல், புகைக்குண்டோ, ரப்பர் குண்டோ வீசப்பட்டதில்லை. இந்த அடிப்படையில்தான் கேட்கிறேன், கியூபாவை விட மனித உரிமைகள் சிறப்பாக வேறு எந்த நாட்டில் பாதுகாக்கப்படுகின்றன?'
 பிடல் காஸ்ட்ரோ சொன்ன அறிவுரை, வல்லரசுகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டியவை. உக்ரைன் அதிபர் ùஸலென்ஸ்கி செய்த ஒரே செயல் நேட்டோவுடன் தன்னை இணைத்துக் கொள்ள முயன்றதுதான். அந்த ஒன்றிற்காக சோவியத் நாடு, இன்றைக்கு ஜார் மன்னன் எந்தெந்த கொடுமைகளைச் செய்தானோ, அவற்றைவிடக் கேவலமான செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டது. "செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில்' என பாரதி ஜார் மன்னன் ஆட்சியைப் பாடியதை, அப்படியே புதின் உக்ரைனில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
 உக்ரைனில் வடபகுதியில் இருந்த "கிவ்' நகரில் "புட்சா' என்ற ஊரில் ரஷிய ராணுவத்தினர் அணுசக்தி ஆயுதங்களை எல்லாம் பயன்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகிய அனைத்தையும் தகர்த்தெறிந்தனர்.
 அப்போர் நடவடிக்கையில் 10,000 மனிதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 430 மழலையர், பள்ளி மாணவ மாணவியரும் குண்டு வீச்சில் மாண்டு போயினர். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். அக்கொடுமை நிகழ்ந்த ஏப்ரல் 3-ஆம் நாளை (2022) புட்சா மக்கள் "ரத்த நாளாக' எழுதி வைத்துள்ளனர். ஐ.நா.வின் எச்சரிக்கைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ராணுவம் நடத்திய நிகழ்ச்சி நெருப்பாறாக நெஞ்சைச் சுடுகிறது.
 கொடுமையிலும் கொடுமை, உக்ரைனில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களைப் பயமுறுத்தி, "இனிமேல் உக்ரைன் மொழி கற்பிக்கக்கூடாது. ரஷிய மொழிதான் கற்பிக்க வேண்டும்' என எச்சரித்ததுதான். அத்துடன் பத்திரிகையாசிரியர்களை அழைத்து, இனிமேல் அங்கு நடக்கின்ற எதனையும் எழுதக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துச் சென்றது ரஷிய ராணுவம்.
 பாவேந்தர் பாரதிதாசன் ரஷியாவின் நடப்பை முன்கூட்டியே உணர்ந்து "வரிசை கெட்ட உருசிய நாடு' எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். சோவியத் தொழிலாளி ஒருவர் எழுதியதை அடிப்படையாகக் கொண்டு பாவேந்தர் எழுதுகிறார்.
 உருசிய நாட்டில் ஒரு தொழிலாளி
 பொதுவுடமைத் தாள் ஒன்றில் புகலுகின்றான்.
 எழில் நிலவு நோக்கி ஏவுகணைகள்
 ஏவுகின்றதால் என்னைப் போன்ற
 ஏழைகளுக்கு என்ன கிடைக்கக் கூடும்
 என்றான்; உருசியாவில் ஏழைகள் இல்லை.
 என்று கூறும் இழிந்த அறிவினர்
 இதனை எண்ணி அடங்க வேண்டும்
 எனப் பாவேந்தர் பாடியிருப்பது, ரஷியாவின் ஒரு போக்கைப் பற்றித்தான். புதின் இனி புலிகளை வேட்டையாடட்டும்; புறாக்களை வேண்டாம்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com