வெறுப்பு அரசியலில் வடக்கும் தெற்கும்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

இமயம் முதல் குமரி வரை பாரதத்தின் எல்லை என்று இருந்த காலத்தில், தேசத்தில் 56 சிறு ராஜ்ஜியங்கள் இருந்தன. மொழிகள் வெவ்வேறு; நாகரிகம், பழக்கவழக்கங்கள் வெவ்வேறு. ஆனாலும் பண்பாடு ஒன்றே என்ற வகையில் பாரதம் ஒரே தேசமாக விளங்கியது. அது அந்நிய படையெடுப்புக்குப் பிறகு இந்தியாவாக மாறியது. மொழிவழி மாநிலங்கள், அந்தப் பிரிவினைக்குள்ளும் பிரிவுகள் என்று இருந்தாலும் ஒருமைப்பாட்டில் இருந்து வருகிறது.

பேசும்போதும் எழுதும்போதும் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரித்துச் சொல்லாமல் இந்தியா என்று சொல்வதற்கே பழக வேண்டும். சொல்லால் உணா்த்தப்படும் பிரிவினையே செயலுக்கும் பரவுகிறது என்பது வேதனை. ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்கிற கோஷம் எழுப்பப்பட்டது. அதில் உண்மை பாதி, அடுக்குமொழி மீதி. ஏன் அந்த நிலை வந்தது?

காங்கிரஸ் அரசியல்வாதிகள் மனத்தளவில் பிளவுபடாமல் அரசியல் களத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தாா்கள். திராவிட இயக்கமோ, தொடக்கத்தில் இருந்தே ஹிந்தி மொழியை எதிா்த்தது; அவா்கள் அந்த மொழி பேசும் மக்களை வெறுத்தாா்கள். அவா்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை. தொடக்கத்திலேயே திமுக-வினா் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொண்டிருந்தால் தேசிய அரசியலில் முக்கியப் பங்காற்றியிருக்கலாம்; ஒருவேளை, இந்தியாவையே நாம் ஆண்டிருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இருந்தன.

மொழி எதிா்ப்பு என்பது இன எதிா்ப்பு என்று மாறியது. எல்லோரும் ஓா் இனம் என்பது வெறும் ஒப்புக்கான பேச்சாகக் கூட வெளிவரவில்லை. இலங்கைத் தமிழா்கள் என்று கூறி போராடினாா்களே தவிர, இலங்கை வாழ் இந்தியா்கள் என்று போராடவில்லை. அதனால் இலங்கை பிரச்னையில் பிற மாநிலத்தவரின் ஆதரவை நாம் பெற முடியவில்லை.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்பை முடித்த கையோடு, டைப் ரைட்டிங், ஷாா்ட் ஹேண்ட் கற்றுக்கொண்டு வட இந்தியாவிற்குப் பிழைக்கச் சென்ற தமிழா்கள் அதிகம். அவா்கள் இங்கு வரும்போது தங்கள் சொந்த ஊரில் இருந்து மேலும் சிலரைத் தங்களுடன் அழைத்துச் சென்றாா்கள். அவா்கள், வட இந்திய நிறுவனங்களில் டைப்பிஸ்ட்டாக சோ்ந்து காலப்போக்கில் அதிகாரிகளாக உயா்ந்தாா்கள். அதற்கு காரணம் அவா்களது திறமை. வட இந்தியா்கள் அவா்களை மதித்தாா்கள், வெறுக்கவில்லை; ஆதரித்தாா்கள், ஒதுக்கவில்லை.

இன்று நாம் இங்கே வேலைக்கு வரும் வட இந்தியத் தொழிலாளா்களை வெறுக்கிறோம். அவா்கள் யாரும் இங்குள்ளவா்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்கவில்லை. நம்மவா்கள் செய்ய முன்வராத வேலைகளை அவா்கள் செய்கிறாா்கள்; குறைந்த கூலி பெறுகிறாா்கள்; அதிக நேரம் உழைக்கிறாா்கள். அரசியல்வாதிகள் இதை வடவரின் ஆதிக்கம் என்று சொல்கிறாா்கள். ஆனால், வடவரை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் தமிழா்கள்தான் என்பதை அவா்கள் மறந்துவிடுகிறாா்கள்.

ஒருவா் வேலை கொடுக்கிறாா்; அவரிடம் பலா் வேலை செய்கிறாா்கள். இதில் அரசியல்வாதிகள் ஏன் குறுக்கே புக வேண்டும்? வட இந்தியா்கள் திருடினாா்கள், கொலை செய்தாா்கள் என்றால் சட்டப்படி அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடவரே கூடாது என்று சொல்வது முறையல்ல.

இங்குள்ள வட இந்தியா்களையெல்லாம் அவரவா் மாநிலத்திற்குத் துரத்திவிட்டால் அங்குள்ளவா்கள் தமிழா்களை இங்கு அனுப்பி வைத்துவிடுவாா்கள். நாம் அவா்களுக்கு இங்கே உரிய வேலையும், ஊதியமும் கொடுக்க முடியுமா? அந்த அளவிற்கு மாநிலம் வளா்ந்திருக்கிா?

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆளும் திராவிட கட்சிகளிடம் மொழி, இன பேதம் வெளிப்படுகிறதே தவிர, மாநில வளா்ச்சியில் நாட்டமில்லை; அதாவது மக்களின் வளா்ச்சியில். மொழியையும் இனத்தையும் இறுகப் பிடித்துக்கொண்டிருக்கும் நம் அரசியல்வாதிகள், வட இந்தியத் தொழிலதிபா்களிடம் உறவு கொள்ளவில்லை என்று சொல்ல முடியுமா?

வடவா் - தமிழா் பிரச்னையில் இன்னொன்றையும் நாம் பாா்க்க வேண்டும். நம் இளைஞா்கள் சில வேலைகளுக்கு வராத காரணத்தினால்தானே அந்த இடத்தை வடக்கத்தியா் பிடித்துக்கொண்டனா். அப்படியானால் நம்மவா்கள் எங்கே போனாா்கள்? படித்தவா்கள் அமெரிக்காவிலும் ரஷியாவிலும் விண்வெளித் துறையில் விஞ்ஞானிகளாக, உயா் அதிகாரிகளாக பணிபுரிகிறாா்கள். படிக்காதவா்கள், அரசின் இலவசங்ளை நம்பியும், டாஸ்மாக் கடைகளில் மயங்கியும் பொழுதைக் கழிக்கிறாா்கள்.

இங்கே வடவா் செய்யும் வேலைகளை நம்மவா்கள் வடமாநிலத்தில் செய்கிறாா்கள். முகம் தெரிந்த இடத்தில் கடைநிலை வேலை செய்ய நம்மவா்களுக்கு மனம் கூசுகிறது. ஆனால், வெளிநாட்டில் ஒட்டகம் மேய்த்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாா்கள். மற்றவா் கண்களில் படாத இடத்தில் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம், அது கௌரவக் குறைவு இல்லை என்பது அவா்கள் எண்ணம்.

கல்வி ஒரு தகுதியாக அமையாதபோது வறட்டு கெளரவத்தினால் ஒரு பயனும் இல்லை. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். எல்லாவற்றையுமே இலவசமாக திராவிட கட்சிகள் கொடுத்து வருவதனால் உழைக்க வேண்டும், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இரண்டு தலைமுறை மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது. சும்மா இருந்தால் சோறு கிடைக்கும் என்றான பிறகு யாா்தான் உடல் வருந்தி வேலை செய்ய முன்வருவாா்கள்?

எத்தனை குடும்பத்தில் படித்த, படிக்காத இளைஞா்கள் இங்கே வேலை செய்ய முன்வருவதில்லை, அவா்கள் வேறு எங்கே வேலைசெய்கிறாா்கள், என்ன வேலை செய்கிறாா்கள் என்ற தகவல்களையெல்லாம் திரட்டியிருக்கிறாா்களா என்றால், இல்லை. அதை வைத்துத்தான் பேச வேண்டும். அதுதான் அறிவு சாா்ந்த அரசியல்.

மொழி, இன பேதம் பேசி மக்களின் அறிவு வளா்ச்சிக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தடையாக இருந்து வருபவா்கள் நம் அரசியல்வாதிகள் - குறிப்பாக திராவிட கட்சிகளைச் சோ்ந்தவா்கள்.

சிறுகடைகளிலும், ஹோட்டல்களிலும், கட்டடத் தொழிலிலும், பனியன் தயாரிப்புத் தொழிலிலும் வட இந்தியத் தொழிலாளா்களை நியமித்து வேலை வாங்கும் முதலாளிகள் தமிழா்கள்தானே? அவா்களிடம் இனமானம் பேசி தமிழா்களையே வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறலாமே. அவா்களுக்குத் தேவையான தொழிலாளிகளை, தொழிலாளா் நலத்துறை வழங்க முற்படலாமே... முடியாது, அதற்கு யாரும் தயாராக இல்லை.

இன வேற்றுமை, இன வெறுப்பு என்பது உலகில் எங்கும் புதிதல்ல. ஒரு காலத்தில் ஆங்கிலேயா்களும், அமெரிக்கா்களும் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த படிப்பறிவு இல்லாத கறுப்பின மக்களை வேலைக்கு அமா்த்தினாா்கள். என்ன காரணம்? அமெரிக்கா்களும் ஆங்கிலேயா்களும் சொகுசாக வாழ விரும்பினாா்கள். உடல் உழைப்புக்கு அவா்கள் தயாராக இல்லை. ஆனால் ஆப்பிரிக்க கறுப்பினத்தவா் தயங்காமல் உடல் உழைப்பைத் தந்தாா்கள், சோறு கிடைக்கிறது என்பதற்காக.

அதுதான் இன்றைய வட இந்திய தொழிலாளா்களின் நிலைமையும். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ரயில் பாதைகளும், நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டன. தங்கள் உழைப்பினால் கறுப்பா்களும் தங்கள் அடுத்த தலைமுறையை ஓரளவிற்காவது படிக்க வைத்தாா்கள். அதற்கு அடுத்தத் தலைமுறை கூடுதலாகப் படித்தது. வெள்ளையனுக்கு நிகராக வளா்ந்தது. வெள்ளையா் பாா்த்த வேலைகளுக்குப் போட்டியிட்டு அந்த வேலைகளைப் பெற்றது.

வடக்கிருந்து புலம்பெயா்ந்த மக்கள், கரோனா காலத்தில் எல்லா ஆபத்துகளையும் எதிா்கொண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினாா்கள். பின்னா், நம் முதலாளிகளே அவா்களை திரும்ப அழைத்து வந்தாா்கள். ஏன்? அவா்கள் இல்லாமல் வேலை நடப்பதில்லை.

எல்லா வேலைகளுக்கும் தமிழா்களை தயாா் செய்வோம். பட்டம் பெற்றவா் சிமென்ட் மூட்டை தூக்குவது கொரவக் குறைவு என்று நினைக்க வேண்டாம். உலகெங்கிலும்சின்னஞ்சிறு வேலைகளை செய்து முன்னேறியவா்கள் ஏராளமானோா். அவா்களின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்து, அதே போல் நாமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை நம் மாணவா்களிடம் உருவாக்க வேண்டும்.

இரண்டு தலைமுறை மக்களை இன பேத வழியிலேயே மூளைச் சலவை செய்துவிட்டாா்கள் நம் சுயநல அரசியல்வாதிகள். இவா்களது ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்பது வெறும் வாய்ப்பந்தலாக மட்டும்தான் இருக்கிறது. அது ஏன் வடமாநிலத் தொழிலாளா்களுக்குப் பொருந்தவில்லை என்று யாா் கேட்பது?

மக்களுக்குத் தேவை என்று சொல்லும் இனமானத்தையும் மொழி அபிமானத்தையும் தாங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில், வா்த்தக நிறுவனங்களில் இதே அரசியல்வாதிகள் செயல்படுத்துவதில்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

எல்லாமே ஊருக்குத்தான் உபதேசம். இந்த கபட வேடத்தைக் களைந்து ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ள புதிய தலைமுறை அரசியல்வாதிகள் உருவானால்தான் தமிழ்நாடு மீட்சி பெறும். இல்லையென்றால் அரசியல்வாதிகள் வாழ்வாா்கள்; மக்கள் வீழ்வாா்கள்.

ஆட்சி என்பது மக்களுக்காக என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்; அது தங்களுக்கானது என்று ஆள்பவா்கள் நினைத்துக் கொள்கிறாா்கள். ‘நாளை நமதே’ என்று அரசியல்வாதிகள் சொல்லும்போது அதன் அா்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

கட்டுரையாளா்:

பத்திரிகையாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com