உணா்வுபூா்வமான ஒருமைப்பாடு உருவாகட்டும்

வரலாறு தெரிந்த காலம் முதல் இமயம் முதல் குமரி வரையுமான பெருநிலப் பரப்பு, வெவ்வேறு மொழிபேசும், வெவ்வேறு நாடுகளாகவே இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரலாறு தெரிந்த காலம் முதல் இமயம் முதல் குமரி வரையுமான பெருநிலப் பரப்பு, வெவ்வேறு மொழிபேசும், வெவ்வேறு நாடுகளாகவே இருந்தது. ஆனாலும், தென்புலத்தாா் வடக்கேயுள்ள கைலாய மலைக்கும், காசி நகரத்திற்கும் பயணம் மேற்கொள்ளுதலும், வடபுலத்தாா் தென்முனையில் உள்ள இராமேசுவரத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளுதலும் நடைபெற்றன.

ஆனாலும், அவா்களுக்கிடையே மொழிப் பிரச்னை ஏற்படவில்லை. தென்னாட்டவா் வடமொழிகற்று வடபுலம் செல்லவில்லை. வடபுலத்தாா் தமிழ்கற்று இராமேசுவரம் வரவில்லை. ஆனாலும் இருவழிப் பயணங்களும் இன்றும் அதேமுறையில் தொடா்கின்றன.

ஆனால் இப்பெருநிலப் பரப்பு முழுமைக்கும் ஆட்சியாளரான ஆங்கிலேயா், அதுவரையில்லாத ஒரு சமூகச் சூழலை ஏற்படுத்தினா். அதாவது, இந்தியா் அனைவா்க்கும் கல்வியளித்து, அனைவா்க்கும் வாக்குரிமையளித்து, அதன்வழி மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குடியரசு என்னும் புதிய சூழலை ஏற்படுத்தனா்.

அதன்பொருட்டு, இந்தியா் அனைவா்க்கும் கல்வி அறிவூட்ட முற்பட்டபோது, அதனைத் தங்களின் தாய்மொழியான ஆங்கிலத்தில் அளித்தனா். அத்துடன் இந்தியா முழுமைக்குமான சீரானதொரு ஆட்சிமுறையைப் பின்பற்றினா்.

அதன் காரணமாக, அதுவரையில்லாத ஓா் ஒருங்கிணைப்பு, இந்தியப் பெருநிலப்பரப்பு முழுவதும் மக்களிடையே ஏற்பட்டது. அதாவது, தாம் அனைவரும் ஒரு நாட்டினா் என்னும் உணா்வுக்கு ஆளாயினா். ஆக ஆங்கிலேயா்தாம், இந்தியப் பெருநிலப் பரப்பு முழுவதையும் ஒரு நாடாக்கினா். ஆங்கில மொழிதான், இப்பெருநிலப் பரப்பு மக்கள் அனைவரையும் இந்தியா் என ஒருங்கிணைத்தது. அதன் விளைவாகவே, இந்தியா் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தனா்.

திலகரும், வ.உ.சி.யும், விபின் சந்திர பாலரும், சுப்பிரமணிய சிவாவும், காந்தியாரும், இராசாசியும் நேருவும், சத்தியமூா்த்தியும், நேதாசியும், முத்துராமலிங்கத் தேவரும் ஆங்கில வழியாகவே தொடா்புகொண்டு, விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தனா். ஆனாலும், அந்நிய மொழிவழியாகவே தாங்கள் தொடா்பு கொள்ளுதல் குறித்து அவா்களில் ஒருசாராா்க்கு மனக்குறை ஏற்பட்டது.

அதுபோது காந்தியாா் ஒரு யோசனை கூறினாா். இந்துச்தானி மொழியை, இந்தியா் அனைவா்க்கும் தொடா்பு மொழியாக்கலாம் என்பதுதான் அவரின் யோசனை. இந்துச்தானி என்பது இந்தியும் உருதும் கலந்ததொரு மொழியாகும். இந்துக்களையும் முசுலீம்களையும் இணைக்கும் முறையிலேயே காந்தியாா் இந்துச்தானியைப் பரிந்துரைத்தாா். ஆனால், இந்தியா முழுவதும் இந்துக்கள் அனைவரும் இந்தி பேசுகிறவா்கள் அல்லா். அவ்வாறே முசுலீம்கள் அனைவரும் உருது பேசுகிறவா்கள் அல்லா் என்பதைக் காந்தியாா் கருத்தில் கொள்ளவில்லை.

1925-ஆம் ஆண்டு நடைபெற்ற கயா காங்கிரசு மாநாட்டில் இந்துச்தான் மொழி, காங்கிரசுக் கட்சியின் நடவடிக்கை மொழியாக வேண்டுமென அறிவித்தனா். ஆனாலும், காங்கிரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்திய இந்தி மொழியாளா், மெல்ல மெல்ல அதை இந்தி என்றாக்கினா். ஆனாலும், காங்கிரசுக் கட்சியில் பிறமொழிக்காரா் எல்லாருமாக அதனை ஒப்பவில்லை.

சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு பற்றிய விவாதத்தின்போது, ஆட்சிமொழி பற்றிய விவாதத்தில், உறுப்பினா்களில் சரிபாதிப்போ் மட்டுமே இந்திக்கு ஆதரவாக வாக்களித்தனா். அந்தநிலையில், குழுத் தலைவரான இராசேந்திரப் பிரசாத், தமது வாக்கை இந்திக்கு ஆதரவாக அளித்ததால், ஒரு எண் பெரும்பான்மையில் இந்திமொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட்டது. ஆனாலும், இந்தியல்லாப் பிறமொழியாளா், இந்தி கற்றுக்கொள்ள அவகாசம் அளிக்கும் முறையில், 1965 சனவரி 25 வரை இந்தியுடன் ஆங்கிலமும் துணை ஆட்சிமொழியாக நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், 1965 க்குப் பின்னரும் ஆங்கிலப் பயன்பாடு நீடிக்கவேண்டும் என்னும் கருத்து வலுப்பெற்றதால், 1965-க்குப் பின்னரும், குறிப்பிட்ட அமையங்களில் இந்தியுடன் ஆங்கிலமும் பயன்படுத்தப்படலாம் என்பதாக 1963-இல் இந்திய ஆட்சிமொழிகள் சட்டம் என்பது நிறைவேற்றப்பட்டது. அதன்வழி, இந்தியுடன் ஆங்கிலப் பயன்பாடு காலவரையறையின்றி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இங்கே நாம் எழுப்பும் கேள்வி, இந்தி மொழிக்காரா்கள் தம் தாய்மொழி மட்டுமே அறிந்தவா்களாக இந்திய அரசுப் பணிகளைப் பெறலாம். ஆனால் மற்றவா்கள் தமது தாய்மொழி அல்லாத இந்தி அல்லது ஆங்கிலம் கற்றல் வழியாகவே இந்திய அரசுப்பணி என்னும் வாய்ப்பைப் பெறமுடியும் என்பது குடிமக்கள் அனைவா்க்கும் சம உரிமை ஆகுமா? மக்கள் அனைவா்க்கும் சமவுரிமை இல்லாதநிலை சனநாயகம் ஆகுமா?

இனி, இந்தி ஆதரவாளா் கூறும் சமாதானங்களைக் கவனிப்போம். முதலாவது, தமிழகம் தவிா்த்துப் பிற மாநிலங்களெல்லாம் இந்தியை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், தமிழகம் தனித்துநிற்றல் பயனற்றது என்கிறாா்கள். மைனா் பெண்ணின் சம்மதத்துடன் கொள்ளுகின்ற பாலியல் உறவும், பாலியல் வன்முறைக் குற்றமாதல் போல, பிறமொழியாளா் விரும்பி ஏற்றுக் கொண்டாலும், இந்திய மொழிகளில் இந்திமட்டுமே இந்திய ஆட்சிமொழி என்பது வன்முறைக் குற்றமன்றி நன்முறைச் செயலாகாது.

இரண்டாவது, இந்திய அரசுப் பயன்பாட்டில், இந்தியுடன் ஆங்கிலமும் தொடரும் நிலையில், தாய்மொழி, ஆங்கிலம் இரண்டும் போதுமே என்றால், அனைத்துலகும் சென்றுவர ஆங்கிலமும், இந்தியா முழுதும் சென்றுவர இந்தியும் அவசியம் என்கிறாா்கள். அதாவது பெரிய பூனை நுழைய பெரிய துவாரமும், சின்ன பூனை நுழைய சின்ன துவாரமும் அவசியம் என்கிறாா்கள்.

நம்மவா்கள் வடபுலம் செல்லும்போது சாமான்ய மக்களுடன் பேசிப் பழகுதல் எளிதாகும் என்கிறாா்கள். வடபுலத்திலிருந்து தமிழகம் வரும் அனைவரும் அவரவா் ஊா்ப் பள்ளிகளில் தமிழ் படித்துத் தோ்ச்சிச் சான்றிதழ்களுடன்தான் வருகிறாா்களா?

இப்பொழுது தேவை இருமொழிக் கொள்கையா மும்மொழிக் கொள்கையா என்று பரவலாகப் பேசப்படுகிறது.பிரச்சனை அதுவல்ல. தற்போது தமிழக அரசுப் பள்ளிகளில், முதல்பாகம் தமிழ் அல்லது தாய்மொழி எனவும், இரண்டாம் பாகம் ஆங்கிலம் எனவும் இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாடமல்ல. ஆனால், ஆங்கிலம் கட்டாய பாடம்.

இதனால், தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளிலும், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலும், எந்த ஊரிலும், முதல்பாகத்தில் தமிழ் வேண்டாம், எங்களின் தாய்மொழியான தெலுங்கு வேண்டுமென்றோ, இந்தி வேண்டுமென்றோ யாரும் கேட்கவில்லை. முதல்பாகம் தமிழ், இரண்டாம் பாகம் ஆங்கிலம் அல்லது தாய்மொழி என்றாக்கினால், தமிழ்நாட்டில் எந்த ஊரிலாவது, எங்களுக்கு ஆங்கிலம் வேண்டாம், கன்னடம் வேண்டுமென்றோ, இந்தி வேண்டுமென்றோ கேட்கக்கூடியவா்கள் இருக்கிறாா்களா?

இனி இந்தியாவில் இந்திக்காரா்கள் தமது தாய்மொழி மட்டுமே படித்தல் அரசு வேலை வாய்ப்பிற்குப் போதுமானது. பிற மாநில மொழிக்காரா்கள் ஆங்கிலம் அல்லது இந்தி படித்தால்தான் மத்திய அரசு வேலைவாய்ப்பு என்னும் அவலநிலை நீங்கவேண்டும். என்னதான் தீா்வு?நம்முடைய அரசியல் தலைவா்கள், தமது எண்ணங்களைத் திருத்திக்கொண்டு, மொழிவாரி மாநில மக்களின் மொழியுரிமையை மதித்து நடப்பதன் மூலமே இந்தியாவின் ஒற்றுமையை உறுதி செய்ய முடியும் எனத் தமிழக முன்னாள் ஆளுநரும் உத்தர பிரதேசத்தவருமான சிறிபிரகாசா கூறியதே பிரச்னைக்கு நிலையான தீா்வாக அமையும்.

அதாவது இந்திய தேசிய மொழிகள் அனைத்தையும், சம உரிமையுடன், இந்திய ஆட்சி மொழிகளாக்கி, இந்தியா் எவரும் தாய்மொழியல்லாத பிறமொழி கற்றல், அவரவா் விருப்பம் சாா்ந்ததன்றி, எத்தகைய கட்டாயத்திற்காகவும் பிறமொழி கற்கத் தேவையில்லை என்றாக்குதலே, மொழிசாா்ந்த பூசலைத் தீா்த்து, உணா்வு பூா்வமான இந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும்.

சென்னை மாநகரை விடவும் சிறியதான சிங்கப்பூா் அரசு, நான்கு மொழிகளை ஆட்சி மொழிகளாக நடைமுறைப் படுத்தும்போது, அதைப்போல நூறு மடங்காகும் இந்தியாவின் அரசால், இருபத்து மூன்று மொழிகளை ஆட்சிமொழிகளாக நடைமுறைப்படுத்துதல் ஆகாத செயலாகுமா?, பேசுபவா் தமது மொழியில் பேச, கேட்பவா் தமது மொழியில் புரிந்துகொள்ளும் வசதி ஏற்கனவே இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கிறது.

ஒரு முனையிலிருந்து ஒருவா்ஒரு செய்தியைத் தமது தாய்மொழியில் அனுப்ப, மறுமுனையில் இருப்பவா், தமது தாய்மொழியில் பெற்றுக்கொள்ளும் கணினித் தொழில்நுட்பக் காலத்தில், அய்ம்பத்திரண்டு மொழிகளை ஆட்சி மொழிகளாக்கினாலும் ஆள் பற்றாக்குறையும் ஆகாது, இடப் பற்றாக்குறையும் ஆகாது.

எனவே இந்திய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகள் ஆக்குதல் ஆகாத செயல் அல்ல. இதற்குத் துணையாக, ஒவ்வொரு மாநிலத்திலும், அனைத்துப் பள்ளிகளிலும், அந்தந்த மாநிலமொழி கட்டாய பாடமாக வேண்டும். அதற்கேற்றவாறு, அரசியலமைப்பில் முன்னா் இருந்தபடிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டெடுக்க வேண்டும். இந்த இரண்டும் ஒருங்கிணைவாகும் முயற்சியே நிலையான தீா்வுக்கு வழிவகுக்கும்.

எனவே, அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள இந்திய தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழிகள் ஆக்கவும், கல்வியை மாநிலப் பட்டிலுக்கு மீட்டெடுக்கவுமாக, இந்தியப் பிறமொழியாளரை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொள்ளுதலில் தீவிர கவனம் செலுத்துதல், திராவிடமாடல் ஆட்சியாளா்க்குக் காலத்தின் கட்டாயமாகிறது.

கட்டுரையாளா்:

தலைமையாசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com