உறக்கம் முக்கியம்

உறக்கம் முக்கியம்
Updated on
2 min read

 இரவு நேரம் மனிதர்கள் உறங்குவதற்கானது என்பதை நவீன தொழில்நுட்பம் மாற்றி அமைத்துவிட்டது. மனிதர்களின் மனம் மற்றும் உடலின் நலனுக்கு அவசியமான விஷயங்களில் தூக்கமும் ஒன்று. நிம்மதியான தூக்கம் இருந்தால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, இதய குறைபாடுகள் முதலிய பல நோய்களைத் தவிர்க்கலாம்.
 "வைகறைத் துயில் எழு' என்பது ஆன்றோர் வாக்கு. "வைகறை' என்பது பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படும் அதிகாலை நேரமாகும். சூரிய உதயத்துக்கு சற்று முன்வரை சூரியக் கதிர்களின் தாக்கமில்லாத இந்நேரத்தில்தான், நம் உடலுக்கு தேவையான, தூய்மையான பிராணவாயு கிடைக்கிறது. அப்போது நாம் செய்யும் உடற்பயிற்சி, நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக அமைய உதவுகிறது.
 அதிகாலையில் நாம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியாகவே இருப்பதால் அதிகாலையில் எழுவது நமது வாழ்வில் வெற்றிக்கு முதல்படியாக அமையும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுவதை வழக்கமாக கொண்டிருந்தவர்களாக இருப்பார்கள்.
 அதிகாலையில் மனம் தெளிவாக இருப்பதால் அன்றைய வேலைகளை திட்டமிடுவது எளிதாக இருக்கும். மேலும் அதிகாலை எழுவதால், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், மன அமைதி ஆகியவையும் கிடைக்கும். அமைதியான அதிகாலை வேலையில் ஆழ்மனம் செய்யும் பிரார்த்தனைகளை பிரபஞ்ச சக்திகள் நிறைவேற்றும் என்பது ஞானிகளின் நம்பிக்கை.
 தினமும் அதிகாலை எழுபவர்களால் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அவர்கள் எந்த காரியத்தையும் திட்டமிட்டு கட்டுப்பாட்டுடன் செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தினமும் அதிகாலை எழுவது என்பது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அதிகம் கிடைக்க வழிசெய்கிறது. அந்த ஒரு மணி நேரத்தை பயன்படுத்தினால், ஒரு ஆண்டுக்கு 365 மணி நேரம் நமக்கு கூடுதலாக கிடைக்கும்.
 நமக்குக் கிடைக்கும் அதிகப்படியான நேரத்தைக்கொண்டு குடும்ப முன்னேற்றத்துக்காகவோ, வேறு ஒரு வேலையை பகுதி நேர வேலையாகவோ செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையில் முன்னேறியவர்களைப் பார்க்கும்போது அவர்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் வேலை செய்து முன்னேறியிருப்பதை அறியலாம்.
 பொதுவாகவே காலையில் எழுந்தவுடன் நமது மூளை விழித்துக் கொள்ளாது. அதுவும் எழுந்து அதன் கடமைகளைத் தொடங்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். விழித்த பிறகு 10 முதல் 15 நிமிஷம் வரை நமக்கு தூக்க சோர்வு நீடிக்கலாம். ஆனால், அது தொடர்ந்தால் நமது அன்றாட வேலைகளில் நமது ஆற்றல் பாதிப்படையும்.
 சோர்வுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்துகொள்ளாவிட்டால், அது நமக்கு காலப்போக்கில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். பொதுவாக, சரியான தூக்கமின்மை, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்பது, தூக்க சுழற்சி மாறி கொண்டிருப்பது போன்ற தூக்கம் சார்ந்த ஒழுங்கீனங்களே நாம் விழித்த பிறகு ஏற்படும் சோர்வுக்கு காரணமாகின்றன.
 நாம் பயன்படுத்தும் கைப்பேசிகள், கணினிகள் போன்றவற்றின் திரையிலிருந்து வரும் நீலக்கதிர்கள் நம்மை நெடுநேரம் தாக்குகின்றன. இது நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் "மெலடோனின்' எனும் சுரப்பியை பாதித்து, நமது தூக்க சுழற்சியை கெடுக்கிறது. இதன் விளைவாக நாம் விழிக்கும்போது, உடலில் சோர்வை உணருகின்றோம்.
 மேலும், தூக்கத்தில் குறட்டை விடுவது, நெடுநாள் இரவு தூக்கமின்மை, தூக்கத்தில் நடத்தல், தூங்கும்போது நமக்கே தெரியாமல் சுவாசம் தடைபடுவது போன்ற தூக்க ஒழுங்கீனங்களும் நாம் காலையில் விழித்த பின்பு நமக்கு சோர்வினை ஏற்படுத்தலாம்.
 நாம் உறங்கப் போவதற்கு முன்பு காஃபின் அதிகமாக உள்ள பொருட்களை உண்பது நமது தூக்கத்தைக் கெடுக்கும். காஃபினில் உள்ள கூறுகள் நமது மூளையை விழிப்போடு வைத்திருந்து, நீண்ட நேரத்திற்கு நம்மை தூங்க விடாமல் செய்யும். அது மட்டுமல்ல, நள்ளிரவில் அதிக முறை நம்மை விழித்தெழவும் செய்யும்.
 முதுமை, கொசுக்கடி, குளிர், புழுக்கம், நோய், மன அழுத்தம், பயம் போன்றவற்றால் நாம் பல நேரம் தூக்கத்தைத் தொலைக்க நேரிடுகின்றது. அப்போது, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படி தூங்குவதற்காக நாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மாத்திரை ஒரு பழக்கமாக மாறாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
 சிலர் தூங்குவதற்காக மது குடிப்பதாகக் கூறுவர். மது, அவர்களின் தூக்கத்தின் அளவை குறைத்துக் கொண்டே வரும். மதுவில் உள்ள கூறுகள், அவர்களை உடனே தூங்க வைத்தாலும், ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் அவர்களின் மூளையை விழிப்புடன் வைத்திருக்கின்றன.
 முதியோர்களுக்கு முதுமை காரணமாக காணப்படும் புரொஸ்டேட் வீக்கம் அவர்களை இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுப்பி, அவர்களின் தூக்கத்தை கெடுக்கிறது. அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
 தூய்மையான, சரியான அளவிலான படுக்கை நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். அதிக வெளிச்சமோ, அதிக சப்தமோ இல்லாத இடத்தில் உறங்குவது நல்லது. சப்தம் நிறைந்த இடத்தில் நாம் தூங்கும்போது, அது நமது காதுகள் வழியாக மூளைக்கு சென்று நமது தூக்கத்தை கெடுக்கும். சரியான வெப்பநிலை உள்ள அறையில் உறங்குவது, நமக்கு ஆழ்ந்த, நிம்மதியான உறக்கத்தைத் தரும். மேலும், இது காலையில் நாம் புத்துணர்வுடன் விழிக்கவும் உதவும்.
 நமது உணவுமுறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிய பின்னரும் இரவு தூக்கமின்மையும், காலையில் சோர்வும் தொடர்கிறது என்றால், நாம் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டியது அவசியம். தினமும் போதிய நேரம் தூங்குவதே நாம் உற்சாகத்தோடு இயங்குவதற்கு துணையாய் நின்று, நமது ஆற்றலைப் பெருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com