பல்லுயிர் பேணுதல் மானுட அறம்

பல்லுயிர் பேணுதல் மானுட அறம்

 உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டிவிட்டது. மனிதர்களைத் தவிர, மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகள் திரட்டப்பட வேண்டியுள்ளது. இந்தப் பூமியானது மனிதர்களுக்கு எந்த அளவுக்கு உரிமையுடையதோ, அதே அளவுக்கு எறும்பு முதல் யானை வரை - மரம், செடி, புழுப் பூச்சிகளுக்கும் உரிமை உடையது.
 பூமி வெப்பமடைவதால் ஆர்டிக் பனிப் பாறைகள் உருகி வருகின்றன. அதனால் கடல் மட்டம் 1.5 % அதிகரித்தால்கூட, கரையோர ஊர்கள் பல மூழ்கிப் போய்விடும் என்கிறார்கள். பருவநிலை மாற்றத்தால் பல ஊர்கள் அழிந்து போய்விடும்.
 தொன்மையான காலத்தில் பூமியில் வாழ்ந்த டைனோசர்கள் அழிந்து போய்விட்டன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளில் கூறப்பட்டுள்ள அன்னப்பறவை இப்போது இல்லை; அனிச்ச மலர் இல்லை; சிட்டுக்குருவிகளைக் காண முடிவதில்லை. நமது பூமியில் பத்தில் ஓர் உயிரினம் தொடர்ந்து அழிந்து வருகிறது.
 சுயநலத்துக்காக இப்பூமிக் கோளுக்குக் கேடு செய்யும் ஒரே உயிரினம் மனித இனம் மட்டும்தான். காட்டு விலங்குகளால் காடுகளுக்குக் கேடு வருவதில்லை. பூச்சிகளால், பறவைகளால் பூமிக்குக் கேடு இல்லை.
 நில நடுக்கம், புயல், சூறாவளி, எரிமலை போன்றவை இயற்கைப் பேரிடர்கள் மட்டுமே. பூமியின் மீது அவை சேதம் விளைவிக்கின்றன. பூமியில் உள்ள கடலை, ஆகாயத்தை, காற்றை, மண்ணை அவை கெடுப்பதில்லை. வேளாண்மையைக் கண்டறிந்து பயிர் செய்யக் கற்ற மனித இனம்தான் பூமியைக் கெடுக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும், கார்பன் கழிவுகளையும், அணுக் கழிவுகளையும் உருவாக்குகின்றது. கடலுக்குள் 15 லட்சம் கோடி பிளாஸ்டிக் கழிவுகள் மக்கிப் போகாமல் அப்படியே கிடப்பதாகக் கூறப்படுகிறது.
 பல்லுயிர்களுக்கான பூமியைக் காப்பாற்ற வேண்டுமானால், மனித இனத்தைத்தான் கட்டுப்படுத்தியாக வேண்டும். பூமியைக் காப்பதற்கான முயற்சியைத் தொடங்க சீன தேசம் முன்வந்துள்ளது. சீன சுற்றுச்சூழல் அமைச்சர் ஹூவான் ரன்கியுவின் முன்னெடுப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியது.
 இயற்கையுடன் சமாதானமாக வாழும் வழி பற்றி ஏழு மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மகத்தான ஒப்பந்தம் ஒன்றும் கனடாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 200 நாடுகள் இதில் கையொப்பமிட்டுள்ளன.
 அமெரிக்காவும் வாட்டிகனும் அதில் கையொப்பமிடவில்லை. சீனாவின் குண்மிங் நகரில் இந்த மாநாடு 2020-லேயே நடந்திருக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்றால் நடக்கவில்லை. அதைத்தான் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் சீன தேசம் 2022-இல் நடத்தியுள்ளது.
 சீன தேசம் தனது 146 கோடி மக்களைப் பாதுகாக்க வேண்டுமானால், பிற நாடுகளில் உள்ள 600 கோடிக்கும் அதிகமான மக்களுக்குத் தீமை செய்யக்கூடாது. இப்புரிதல் சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது என்று நம்பலாம்.
 சென்ற 25 ஆண்டுகளுக்குள்தான் மனிதர்களுக்கு மத்தியில் இக்கருத்து உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு மட்டும் போதாது. இதனை அதிகமாகவும் அனுதினமும் ஏற்படுத்தியாக வேண்டும். இதில் தாமதமானால், நாம் நச்சுச் சூழலையும், அமில ஆறுகளையும், அசுத்தக் காற்றையும் அனுபவிக்க வேண்டியவர்களாவோம்.
 பூமியைப் போல சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனப் பல்வேறு கோள்களும் அண்டவெளியில் உள்ளன. பூமியைப் பற்றி நமக்குத் தெரிந்தவை குறைவே.
 எரிமலை எப்போது வெடிக்கும், நிலநடுக்கம் எப்போது ஏற்படும், கடல் ஏன் உள்வாங்குகிறது, சுனாமி எப்போது வரும் இப்படிப் பலவற்றையும் பற்றி நமக்குத் தெரியாது. கல்லாதது கடல் அளவு; கற்றது கைம்மண் அளவு.
 2030-க்குள் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி ரசாயன மருந்துகளின் உபயோகத்தை உலக நாடுகள் குறைத்தாக வேண்டும். ஐ.நா. சபையின் மதிப்பீட்டின்படி, பசுமைக்குடில் வாயுதான் பூமி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கிறது. அதன் தாக்கத்தால் 34 ஆயிரம் தாவரங்களும், 52
 ஆயிரம் விலங்கினங்களும், எட்டுக்கு ஒரு பறவை வீதமும் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடல்வாழ் உயிரினங்களும் செத்துமடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இந்த 52 ஆயிரம் உயிரினங்களில் 18 ஆயிரம் உயிரினங்கள் விரைந்து அழிந்துவிடும் ஆபத்தில் உள்ளன. நமது வனங்கள் வெறும் மரங்கள் நிறைந்த காடுகள் மட்டுமல்ல, காட்டு விலங்குகளுக்கு அவைதான் வாழ்வாதாரமாக உள்ளன. அவ்விலங்குகளில் 45 % விலங்குகள் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. பழங்குடியினர் வனப் பாதுகாவலர்களாக உள்ளனர். கனிமங்களுக்காக அவர்களை வனங்களிலிருந்து அப்புறப்படுத்துவது கண்டனத்துக்குரியது.
 சென்ற டிசம்பர் 19-இல் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த சி.பி.ஓ.-15 உச்சி மாநாட்டில் 200 நாடுகள் கலந்து கொண்டன. அம்மாநாட்டின் நோக்கம், இப்பூமிப் பரப்பில் உள்ள பல்லுயிர்களையும் சுற்றுச்சூழல் கேட்டிலிருந்து பாதுகாப்பதும், பேணுவதுமாகும். இது இன்றைய மனித குலத்துக்கு விடப்பட்டுள்ள மாபெரும் சவாலாகும்.
 பருவநிலை மாற்றமும் வெப்பநிலை உயர்வும் வளர்ந்த நாடுகள் செய்த தவறுகளால் நேர்ந்தவையாகும். அதற்கான பிராயச்சித்தமாக அவை முன்னேறுகிற வளர்முக நாடுகளுக்கு இழப்பீடாக உரிய நிதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்நிதி பருவநிலை மாற்றத்தைத் தவிர்க்கவும் பல்லுயிர்களைப் பேணவும் உபயோகிக்கப்பட உள்ளது.
 அம்மாநாட்டில் கையொப்பமான உடன்படிக்கையின்படி, இன்னும் ஏழு ஆண்டுக்குள் 30 % பூமியையும், 30 % கடலையும் 2030-க்குள் மீட்டெடுத்தாக வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட வளர்ந்த நாடுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதனை வடிவமைத்து ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
 2030-க்குள் ஆண்டுதோறும் செல்வ வளர்நாடுகள் ரூ. 30 ஆயிரம் கோடித் தொகையைப் பல்லுயிர் பாதுகாப்பிற்குச் செலுத்தியாக வேண்டும். இப்படிச் செய்தால்தான், கடல்நீரின் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க முடியும்.
 பாரத பிரதமர், இயற்கையைப் பேணும் வகையில் மரபுசாரா மின்சக்தியை உருவாக்கத் தீவிர நடவடிக்கை எடுத்துவருவது நினைவுகூரத்தக்கது.
 உலகத்தில் பல்லுயிர் பேணும் முதல் நாடு பிரேசிலாகும். அங்குள்ள அமேசான் காடுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்காடுகளில் 50 ஆயிரம் உயிரினங்கள் உள்ளன. வேறு எந்த நாட்டுக் காடுகளிலும் இத்தனை உயிரினங்கள் இல்லை. உலகத்தில் பிரேசில் நாடுதான் பல்லுயிர் பாதுகாப்பில் முதல் நாடாகத் திகழ்கிறது.
 இதேபோல நமது தமிழகத்தில் பல்லுயிர் பாதுகாப்புத் தலமாகத் திகழ்வது அரிட்டாப்பட்டி கிராமமாகும். இது மதுரை அழகர்மலைக்கு அருகில் உள்ளது. அங்கு 161 பறவை இனங்களும், பாம்பு வகைகளும், பன்றி, நரி, உடும்பு முதலிய பல்வேறு உயிரினங்களும் வாழ்கின்றன.
 அக்கிராமம் வருடம் முழுவதும் விவசாயம் செய்யும் பாசன வசதியுடன் உள்ளது. அக்கிராம மக்கள் அங்குள்ள வனங்களில் வேட்டையாட யாரையும் அனுமதிப்பதில்லை. இதனை, நமது தமிழக அரசு 2022-இல் பல்லுயிர் பாதுகாப்புத் தலமாக அறிவித்துள்ளது பாராட்டத் தக்கதாகும்.
 பல்லுயிர் என்ற சொல்லை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கையாண்டவர் வள்ளுவர். பல உயிர்களைக் காப்பாற்றுதல் என்ற பொருள் தருமாறு பகுத்துண்டு "பல்லுயிர் ஓம்புதல்' என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற உயிர்களைப் பேணுவதே மனித இனத்தின் தலையாய அற
 மாகும்.
 ஆனால், நவீன வரலாற்றுப் பதிவில் பல்லுயிரின் தந்தையாக எட்வர்டு வில்சன் பேசப்படுகிறார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானியான அவர் செய்த ஆய்வு எறும்புகளைப் பற்றியதாகும். அதற்காகவே புகழ்பெற்ற புலிட்சர் பரிசு பெற்றவர். இதேபோல வால்ட்டர் ரோசன் என்ற அமெரிக்கர்தான் பல்லுயிர் பாதுகாப்பை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்.
 இவர்கள் இருவரும் சிந்திப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனைப் பற்றி சிந்தித்தவர் வள்ளுவர்தான். பல்லுயிரின் ஆதித் தந்தையாகப் போற்றப்பட வேண்டியவர் அவர். அதற்கான மரபும் நமது தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ளது.
 ஒருமுறை ரசிகமணி டி.கே.சி. ஒரு வெள்ளைக்காரத் துரையுடன் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அந்த ஆங்கிலேயர் "நாங்கள் மரங்களை நேசிப்பவர்கள், இந்தியர்கள் அப்படி இல்லை' என்று கூறினாராம். அதற்குப் பதிலளித்த டி.கே.சி., "உங்களைப்போல நாங்கள் மரங்களை நேசிப்பவர்கள் அல்ல, மரங்களை பூஜிப்பவர்கள்' என்று பதில் கூறினாராம்.
 நமது கோயில்தோறும் தலவிருட்சங்கள் உள்ளன. மரங்கள் மட்டுமல்ல, நமது மயில் முருகனுக்கு வாகனம். மூஞ்சுறு, காளை, பசு எனப் பல விலங்குகள் தெய்வங்களோடு சம்பந்தப்பட்டவை. கழுகு பறவையைக் கருட வாகனமாக வணங்குகிறோம். தாமரை மலர் சரஸ்வதியின் உறைவிடம். எறும்புகளின் இரைக்காக வீட்டுவாசலில் மாக்கோலம் போடும் பழக்கம் இருக்கிறது.
 பல்லுயிர் பற்றிப் பேசிய வள்ளுவருக்குப் பிறகு வந்த வள்ளலார், "ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்' என்று பிரார்த்தனை செய்தார். பல்லுயிர் பேணுகிற அறம் மனித குலத்துக்கு உரியது. இன்று காற்றை, நிலத்தை, வெளியை, நீரை கெடுப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இயற்கைக்குக் கேடு செய்யாமல் தவிர்த்தால், பூமிக் கோளமானது நச்சடையாமல் காப்பாற்றப்படும்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com