ஆதித்தமிழன் அளித்த கொடைகள்!

ஆதித்தமிழன் அளித்த கொடைகள்!

 பழந்தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். முல்லைப் பூக்கள் அதிகம் பூத்த காட்டுப் பகுதியை முல்லை நிலம் என்றனர். குறிஞ்சிப் பூக்கள் மிகுதியாக இருந்த மலைப் பகுதியைக் குறிஞ்சி நிலம் என்று கூறினர். மருத மரம் செழித்திருந்த விளைநிலப் பகுதிக்கு மருத நிலம் என்று பெயரிட்டனர். நெய்தல் பூக்கள் செழிப்புடன் காட்சி தந்த நிலப்பகுதியை (கடலோர நிலப் பகுதியை) நெய்தல் நிலம் என்றனர்.
 முற்றிய மூங்கிலில் கதிர்கள் தோன்றின. அவற்றில் அரிசி இருந்தது. முந்தைய தமிழன் இதனைக் கண்டான்; அந்த அரிசி உணவுப் பொருளாகும் என்பதை உணர்ந்தான். அதைச் சமைத்தான்; உண்டு மகிழ்ந்தான். "சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே' என்றார் கபிலர் (புறம்: 109).
 மூங்கில் நெல்லைப் பக்குவப்படுத்தினான் அதை வயலில் பயிரிட்டான். அந்த நெல் அரிசியை எங்கும் பரப்பினான். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அந்த அரிசிப் பயன்பாடு விரிவடைந்தது. சீனாவிலும் ஜப்பானிலும் அரிசி உண்பொருள் ஆனது. இது தமிழன் உலகுக்குத் தந்த கொடை.
 அவன் மேலும் சில விளைபொருள்களை இந்த நானிலத்துக்குக் கொடுத்தான். இங்கு அற்புதப் பொருளான மிளகு விளைந்தது. இதை மேலையர் விரும்பி வாங்கினார்கள். "பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' எனும் சங்கப் பாட்டு வரி, ரோம் நாட்டுக் கப்பல் தங்கம் கொண்டு வந்து தமிழகத்தில் தந்து விட்டுப் பண்டமாற்றாக மிளகை ஏற்றிக் கொண்டு போனது என்று தெரிவிக்கிறது.
 இஞ்சி என்ற தமிழ்நாட்டின் விளைபொருளும் தமிழரின் கொடையே.
 உண்பொருள் அல்லாதவற்றையும் தமிழகம் உலகுக்குத் தந்தது. மயில்தோகை, குரங்கு ஆகியவையும் மேலை நாடுகளுக்குச் சென்றன. சந்தனமும் இங்கிருந்து போனது; முத்தும் வரவேற்பைப் பெற்றது.
 வரலாறு கண் விழிக்காத முன்பு, நில நடுக்கடல் பகுதியை ஒட்டி பழந்தமிழர் குடியேறினார்கள். இவர்களை சுமேரியர், பினீஷியர் என்று வரலாறு கூறியது. எழுத்தறிவு இல்லாத முற்கால கிரேக்கர், பினீஷியத் தமிழரிடமிருந்த அன்று இருந்த எழுத்துமுறையைக் கற்றுக் கொண்டனர்.
 பின்பு, அது உரோமர் வழியாக ஐரோப்பாவில் பரவியது. தமிழ்ச் சொற்கள் சில, உலக மொழிகளில் இடம் பெற்றுத் திரிபு நிலையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மெல்லுதல் என்பதற்குரிய வினைச்சொல் 30 மொழிகளில் உள்ளன என்று, கிரீன் பெர்கு ஆய்ந்துரைத்தார்.
 தமிழகத்திலிருந்து வாசனை திரவியங்கள், முத்து முதலியவற்றை இறக்குமதி செய்து, அவற்றுக்கு விலையாக உரோம் நாட்டு மக்கள் பெருந்தொகை கொடுத்தனர் என்று பிளினி சொன்னார். பேரரசி ஷீபா, தமிழ்நாட்டிலிருந்து, தன்னாட்டுக்கு வந்த லவங்கம், மிளகு, மயில் தோகை முதலியவற்றை நண்பரான மன்னன் சாலமனுக்கு அன்பளிப்பாகத் தந்தார். இவை வரலாற்றுச் செய்திகள்.
 "அம்மா' என்பது அருமையான தமிழ்ச்சொல். உணர்வை வெளிப்படுத்தும் உன்னதச் சொல். இந்த அம்மா என்ற தமிழ்ச்சொல் 30 உலகமொழிகளில் சற்று மாறுபட்ட நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளது. எடுத்துக்காட்டு: அமா (பாங்கு மொழி), உம்மா (அரபி), மமா (ருமேனியன்), எம் (ஈப்ரு).
 மேலும், கொரியா, ஐஸ்லாந்து, பிரிகிரியன் ஆகிய மொழிகளில் "அம்மா' எனும் தமிழ்ச்சொல் அப்படியே உள்ளது. "இஞ்சி' எனும் தமிழ்ச்சொல் பின்வரும் மொழிகளில் சற்று மாறுபாடாக அமைந்துள்ளது. இஞ்சி ஃபெர (ஸ்வீடிஷ்), ஜிஞ்ஜெம்பர் (பிரெஞ்சு), ஜிஞ்ஜிபெசுர் (ஸ்பானிஷ்), ஜெம்பர் (டச்சு), ஜிஞ்ஜிபெரிஸ் (கிரேக்கம்), ஒய்னஸ் (பழைய லத்தீன்), உனஸ் (இன்றைய லத்தீன்), ஒளன் (ஐரிஷ்), என் (ஐஸ்லாந்து), என் (கோதிக்).
 டபுள்யு. டபுள்யூ. ஸ்கீட் என்பவர் ஆங்கில மொழியின் மூலச்சொல் அகராதியை வெளியிட்டார். மிகப்பல ஆங்கிலச் சொற்கள் தமிழ் மூலச் சொல் கொண்டவை என்று அவர் அறிவித்துள்ளார். ஹங்கேரி மொழியில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை முத்துக்குமாரசாமி எடுத்துக் காட்டினார்.
 கிரேக்க நாடகங்களில் தமிழ்ச்சொற்கள் காணப்பட்டதை இரா. மதிவாணன் சுட்டிக் காட்டினார். கிரேக்கத்திலும் லத்தீனிலும் உள்ள தமிழ்ச் சொற்களை ஞானகிரி நாடார் நூலாக வெளியிட்டார். ஸ்பெயின் நாட்டுப் பாங்கு மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை லோகாவரி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார்.
 ஜப்பான் மொழியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சுமு ஒனோவும் பொற்கோவும் ஆய்ந்துரைத்தனர். பிராகூய் மொழியில் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதை மெளலான கண்டுபிடித்தார்.
 ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழியில் உள்ள தமிழ்ச் சொற்களை ப. இராமநாதன் கண்டறிந்தார். கொரிய மொழியில் தமிழ்ச் சொற்கள் வாழ்வதை கொரிய அறிஞர் கிம் கண்டு வியந்தார். ஆப்பிரிக்க செனகல் நாட்டு மொழியில் தமிழ்ச் சொற்கள் விளங்குவதை அந்த நாட்டின் முந்தைய ஆட்சித் தலைவர் செங்கோர் அறிவித்தார்.
 ஞானப்பிரகாச அடிகள், மாகறல் கார்த்திகேய முதலியார், ந.சி. கந்தையா பிள்ளை, பாவாணர், சாத்தூர் சேகரன், அரசேந்திரன், இந்திராணி மணியன் முதலியோர் அயல்மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்வு செய்து அறிவித்தனர். ஐரோப்பிய மொழிகளுக்குரிய வேர்ச்சொற்கள் தமிழில் உள்ளன என்று ஞானப்பிரகாச அடிகள் அறிவித்தார்; அதனை அரசேந்திரனும் வழிமொழிந்தார்.
 பழங்காலத்தில், அரேபியர், தமிழருடன் வாணிகம் புரிந்து வந்தனர். அவர்கள் தமிழ் எண்களை ஏற்றுக் கொண்டனர். இந்தத் தமிழ் எண்கள் தமிழின் உயிரெழுத்துக்களின் அந்தக் கால வரி வடிவத்தின் அடிப்படையில் தோன்றியவை. அந்தத் தமிழ் எண்களை அரேபியரிடமிருந்து ஐரோப்பியர் ஏற்றுக் கொண்டனர். உண்மையை அறியாத அவர்கள் அவற்றை அரபு எண்கள் என்றனர். அந்த ஐரோப்பியர் மூலம், தமிழ் எண்முறை உலகம் முழுதும் பரவியது. இந்த உண்மையை மு. வரதராசனார் உரைத்தார். ஐரோப்பாவில் ரோமன் எண் முறை இருந்தது. இன்றும் இருக்கின்றன இந்த எண்கள்.
 பண்பாடும் செழுமையும் பழைமையும் பெற்றுள்ள மொழிகளில்தான் காப்பியம் உருவாகும். உலகின் முதல் காப்பியமாக, ஹோமர் படைத்த இலியட் போற்றப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாபிலோனியாவில் குடியேறி வாழ்ந்த சுமேரியத் தமிழர் படைத்த கில்காமேஷ் என்பதுதான் உலகின் முதல் காப்பியம். மொழி தெரியாத காரணத்தால் அஃது ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது. இந்தக் காப்பியக் கொடை போற்றுதற்கு உரியது.
 திருக்குறள் தமிழர் உலகுக்கு அளித்த அறிவுக்கொடை. பைபிளுக்கும் குரானுக்கும் அடுத்த படியாக உலகின் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட இலக்கியம் திருக்குறளே! பல நாட்டு அறிஞர்களும் திருக்குறளைப் பாராட்டுகின்றனர். மகாகவி பாரதியாரும் வள்ளுவரைப் புகழ்ந்து கூறினார்.
 தமிழ் இலக்கியத்தின் அருந்தொடர்களும் உலகங்கும் பரவியுள்ளன. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் உன்னதப் பாடல் வரி, ரஷியாவின் அமும்பா பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவிலுள்ள ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தில், ஒளவையாரின் "கற்றது கைம்மன் அளவு' என்ற அருந்தொடர், இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
 லண்டன் மாநகரச் சுரங்கத் தொடர்வண்டிப் பெட்டிகளில் சங்க இலக்கியத் தொடர்களின் மொழிபெயர்ப்பு எழுதப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. நயகரா நீர் வீழ்ச்சி உள்ள இடத்தில் "வருக வருக' என்ற தமிழ்த்தொடர் இருப்பதாக ஒரு செய்தியும் உள்ளது.
 இந்திய பிரதமர் நரேந்திர மோடி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தொடரை ஐ.நா. சபையில் எடுத்துரைத்தார். மேலும், அவர் திருக்குறளையும் பாரதியாரின் பாட்டு அடிகளையும் தன் உரையில் கூறி வருகிறார். அது எங்கும் பரவுகிறது.
 சமயத் துறையிலும் தமிழரின் பங்களிப்பு அதிகம் இருந்தது. சிவன் வணக்கம் தமிழ்நாட்டுக்கு உரியது. "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்பது முன்பு தமிழ் மண்ணில் ஓங்கி ஒலித்த முழக்கமாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் சிவன் வழிபாடு தென் கிழக்கு ஆசியாவில் இருந்தது.
 சுமத்திரா தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்தபோது சிவனை வணங்கும் செயல்முறை அங்கிருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் சைவ சமயம் பரவி இருந்தது. மெக்சிகோ நாட்டில் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. எனவே அங்கு சைவ சமயம் போற்றப்பட்டது என்பது தெரிகிறது. புத்த மதத்தின் ஒரு பிரிவு சென் புத்த சமயம். இது சீனா, ஜப்பான் முதலிய நாடுகளில் நிலைகொண்டுள்ளது. இதைத் தோற்றுவித்தவர் போதி தருமர். இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
 சிந்துவெளி அகழாய்வில் யோக நிலையில் அமர்ந்த உருவ முத்திரை கிடைத்துள்ளது. எனவே அந்தக் காலத்திலேயே யோகக் கலை பற்றி தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. இந்தக் கலையை "ஓகம்' என்றார், பாவாணர். ஒன்றுதல் என்பது இதன் பொருள் என்று சொன்னார் அவர்.
 இந்தக் கலையை பதஞ்சலி வடபுலத்தில் பரப்பினார். பிரதமர் மோடி இதனை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும்படி செய்தார். ஆகவே, யோகக்கலையும் தமிழரின் கொடை ஆனது.
 கமில் சுவில்பெல் என்பவர் செக் நாட்டு அறிஞர். அவர் தமிழ் கற்றார்; ஆராய்ச்சி செய்தார். அவர் "தமிழ் கல்சர்' என்ற ஆங்கில இதழில் (அக். 1956), தமிழர் உலகுக்கு வழங்கிய ஏழு பெருஞ்செல்வங்களைப் பற்றி எழுதினார்.
 அவை சங்க இலக்கியம் (இவை பழைய கிரேக்க இசைப்பாடல்கள் சிலவற்றோடு மட்டும் ஒப்பிடத்தக்கவை), திருக்குறள் (இது பண்புடைய மனித ஆன்மாவின் தனிச்சிறப்பார்ந்த வெளிப்பாடு), சிலப்பதிகாரம் (இது மனித இனத்தின் தலைசிறந்த பெருக்காப்பியக் குழுவில் சேரும்), பக்தி நூல்கள், சைவ சித்தாந்தம் (இவை மிகுந்த விழுப்பமும் மதிநுட்பமும் படைத்த தத்துவ நெறிகள்), சோழர் கால தென்னக உலோக உருவங்கள் (இவை வியத்தகு படைப்புகள்), திராவிட பாணி கோயில் சிற்பக்கலை (தஞ்சை, சிதம்பரம், மதுரை).
 சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி நூல்கள், சைவ சித்தாந்தம், சோழர் காலத் தென்னக உலோக உருவங்கள், திராவிடக் கோயில் சிற்பக்கலை ஆகியவை.
 இன்று தமிழர்கள் ஏறத்தாழ 80 நாடுகளில் வாழ்கிறார்கள். தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள். உலகத்திற்குத் தமிழ் நாகரிகத்தை உதவிய தாயினம் தமிழினமே என்று வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆராய்ந்து அறிவித்தது எண்ணிப் பார்க்கத்தக்கது.
 
 கட்டுரையாளர்:
 பதிப்பாசிரியர் (ஓய்வு)
 தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழக அரசு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com