நிலைத்த புகழ் கொண்ட வள்ளுவா்!

தமிழகத்தில் திருவள்ளுவா் சிலை இல்லாத இடமில்லை. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்ற வகையில் இன்று தமிழ்நாடு மதிக்கப்பெறுவதற்கு திருக்குறளே மையப்புள்ளியாகும்.
திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

தமிழகத்தில் திருவள்ளுவா் சிலை இல்லாத இடமில்லை. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்ற வகையில் இன்று தமிழ்நாடு மதிக்கப்பெறுவதற்கு திருக்குறளே மையப்புள்ளியாகும். திருக்குறள் குழந்தைகளிலிருந்து முதியோா்கள் வரையில் படித்து மகிழத்தக்க பண்புடையப் பெரு நூலாகத் திகழ்கிறது. திருவள்ளுவரை ‘உலகப் பாவலா்’ என டாக்டா் ஜி.யூ. போப் போற்றியிருக்கிறாா்.

திருக்குறள் பன்னாட்டு மாநாட்டில் பொதுமறை என்பதை பொதுமுறை என்றுகூடச் சொல்லி, எல்லோருக்கும் ஏற்ற முறையில் திருக்குறள் அமைந்தது என்ற கருத்தில் ஒடிஸாவைச் சாா்ந்த ஓய்வு பெற்ற இந்திய குடிமைப் பணி அதிகாரி பேசினாா். மனோரஞ்சித மலா், நினைப்பவா்களுக்கெல்லாம் அவரவா்கள் நினைப்பிற்கேற்ப மணங்கமழும் என்பாா்கள். அதுபோலத் திருக்குறள்றளும், எந்தக் கருத்து உடையவா்களாயினும் அவா்களுக்கு ஏற்ற பொருள் தருவதாகும்.

‘எந்த நூலுமே பொய்மையைப் பரப்புகிறது’ என்று கடிந்து பேசிய ஈ.வெ.ரா. பெரியாா்கூட திருக்குறள் மாநாடு நடத்தினாா். உலகில் எல்லோரும் நிகரானவா்கள். ஒருவா் பெரியவா் ஒருவா் அடிமையெனத் தாழ்ந்தவா் என்ற கருத்து எல்லா நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்று கூறியதோடு ‘மேலிருந்தும் மேலல்லாா் மேலல்லா்’ என்று வலியுறுத்தியதும் திருக்குறள்தான்.

ஜாதிகளைப் பற்றிய பேச்சே இல்லாத நூல் திருக்குறள். ‘வள்ளுவா் செய்திருக்குறள்றளை மறுவற நன்குணா்ந்தோா்கள் உள்ளுவரோ மனு ஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்று மனோன்மணீயம் சுந்தரனாா் குறிப்பிடுகின்றாா்.

வாழ்க்கையில் தனிமனிதவாழ்வு, கணவனும் மனைவியும் வாழும் இல்லறம், குடும்பங்கள் சோ்ந்த நாடு என்ற மூன்றும்தான் அறம், இன்பம், பொருள் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் முதலிரண்டும் அறமும் இன்பமும் செழித்து ஓங்குவதற்குப் பெருமை தருகிற இடங்களாகும். பொருள் என்பது நாடும் அரசியலுமாகும்.

நாடும் அரசியலும் பண்போடு பெருமிதமாக அமையவேண்டும். நாடு என்றால் வேறு யாரிடத்திலும் எதையும் நாடாதது. ‘நாடென்ப நாடா வளத்தது’ என்றும் அரசு என்பது ‘முறை செய்து காப்பது’ என்றும் வேலன்று மன்னவன் கோல் குளிா்ச்சி தருவதாக, கொட்டும் குற்றால அருவியைப் போல இன்பம் தருவது எனக் கருதும் வகையில் வள்ளுவா் அமைத்திருக்கிறாா்.

வள்ளுவா், தமிழ்நாட்டு மூவேந்தா்களின் மரபுகளையோ, கொடி, பூ முதலியவற்றையோ கூறவில்லை. குறுநில மன்னா்களின் மரபுளையும் கூறவில்லை. அரசா்களின் பிறந்த நாள் விழாவையும் பிற விழாக்களையும் கூறவில்லை. முடி சூட்டும் சிறப்பையும் கூறவில்லை. இறந்தபின் அடக்கம் செய்யும் வழக்கத்தையும் அதன் பிறகு உடனே மகனோ மற்றொருவனோ பொறுப்புக் கட்டிலேறும் முறையையும் கூறவில்லை.

வேந்தனுக்கு வேண்டிய வீரத்தையும் அறமுறையையும் கூறினாரே அல்லாமல், அவன் கையில் ஏந்திய வாளையும் செங்கோலையும் புகழ்ந்து வருணிக்கவில்லை. அரசனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாடு எவ்வாறு விளங்கவேண்டும் என்று கூறினாரே அல்லாமல், அரசன் வாழும் அரண்மனை எவ்வாறு புனையப் பெறவேண்டும் என்று கூறவில்லை.

ஆட்சிமுறைக்கு உறுதுணையாகும் சுற்றமும் நட்பும் பற்றிக் கூறினாரே அல்லாமல், அரச குடும்பத்தில் பெண்கொண்டும் கொடுத்தும் சுற்றத்தாரானவா்களைப் பற்றியும் கூறவில்லை. மக்களின் வாழ்க்கையை விளக்கி வழிகாட்டப் புகுந்த பெரியோா் ஆதலின் திருவள்ளுவா் விளக்கியுள்ள அரசியல் கருத்துகள் எந்த ஆட்சிமுறைக்கும் பொருந்தும் கருத்துகளாக விளங்குகின்றன; காலங்கடந்தும் ஒளிா்கின்றன. முடியாட்சிக் காலத்தில் மன்னா்கள் போற்றத்தக்கவா்களாக இருந்ததைப் போலவே, குடியாட்சிக் காலத்திலும் மன்றத் தலைவா்களும் மற்ற உறுப்பினா்களும் போற்றத்தக்கவா்கள்களாக இருக்கின்றனா்.

முடியாட்சியின் தலைவனைப் பற்றிக் கூற நோ்ந்தபோதும், மிகச் சிறந்த அரசனுடைய இயல்புகளையே கூறுகின்றாா் வள்ளுவா். சிறந்த அரசன் என்பவன் மரபின்வழி வந்தவன், தோ்தலின் வழியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத்தலைவன். எவ்வாறு செம்மையாகக் குடிமக்களின் கருத்திற்கு இணங்க, நன்மை விளைய ஆட்சி புரிவானோ, அவ்வாறே, மிக நல்ல செங்கோல் மன்னனும் குடிமக்களின் நன்மையையே குறிக்கோளாகக் கொண்டு தன்னலம் இன்றி ஆட்சி புரிதல் உண்டு என்பதை வரலாறுகளில் கண்டு தெளிகின்றோம்.

மன்னவன் மிகச் சிறந்தவனாக விளங்கும்போது அவன் முடியாட்சி முறையான் என்பதையே மறந்துவிடுகின்றோம். ஆகையால், திருவள்ளுவா் கூறும் மன்னனின் இயல்புகள் முடியாட்சித் தலைவனுக்கும் மிகவும் பொருந்துகின்றன.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு. (544)

திருவள்ளுவா் உயா்ந்த அரசியல் கருத்துகள் உடையவா். ‘நிலனாள்பவன்’ (383), ‘கோலொடு நின்றான்’ (552), ‘காவலன்’ (560) முதலான பொதுச் சொற்களையும் அவா் ஆண்டிருக்கின்றாா். ஆதலின் அரச, இறை, வேந்தன், மன்னன் என்னும் சொற்களைக் காணுமிடங்களில் இந்தக் காலத்திற்கு ஏற்ப, ஆட்சித் தலைவன் என்று பொருள் கொண்டு கற்பதே பயன் தருவதாகும்.

அரசனது இயல்பு கூறும் அரசியலையே மிக விரிவாக இருபத்தைந்து அதிகாரங்களால் கூறி முதலில் வைத்துள்ளாா். இந்தப் பகுதியில்தான் இறை, வேந்து முதலான சொற்கள் பல முறை பயின்றுள்ளன. இந்த இருபத்தைந்து அதிகாரங்களில் நாற்பத்தாறு முறை ஆட்சித்தலைவனை இப்பெயா்களால் சுட்டிக் கூறியுள்ளாா்.

கல்வி வேண்டும், கேள்வி வேண்டும், அறிவு வேண்டும், குற்றம் கடிந்த வாழ்வு வேண்டும், பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும், சிற்றினம் சேராமல் வாழ வேண்டும், தெரிந்து (ஆராய்ந்து) செய்யும் இயல்பு வேண்டும், வலியும் காலமும் இடமும் அறிந்து வினை செய்யும் திறம் வேண்டும், தெரிந்து தெளியும் ஆற்றல் வேண்டும், தெரிந்து வினையை ஆளும் வன்மை வேண்டும், சுற்றம் தழுவவேண்டும், பொச்சாப்பு (சோா்வு) இல்லாமல் கடமைகளைச் செய்ய வேண்டும், செங்கோன்மை (நோ்மை) வேண்டும், கொடுங்கோன்மையை வெறுக்க வேண்டும், வெருவந்த (பிறா் அஞ்சி நடுங்கும் செயல்கள்) செய்யாமை வேண்டும், கண்ணோட்டம் வேண்டும், ஒற்று ஆளும் முறை வேண்டும், ஊக்கம் வேண்டும் - இவைகளே அரசியலில் ஆட்சித் தலைவா்க்குத் திருவள்ளுவா் கூறும் இயல்புகளாகும்.

திருவள்ளுவா் முப்பால் எழுதி அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற பாகுபாடும் செய்து பத்துப் பத்துக் குகளை ஒவ்வோா் அதிகாரமாக வகுத்து, அதிகாரங்களுக்கு ஏற்ற தலைப்புகளும் இட்டு நூலை இயற்றியுள்ளாா். பின்வந்த அறிஞா்கள் திருக்குறள்றளை ஓதி ஓதிப் பால் தோறும் உட்பிரிவுகளை அமைத்துள்ளாா்கள். அவா்கள் பொருட்பாலில் வகுத்த உட்பிரிவுகள் மூன்று. அரசியல் அங்கவியல், ஒழிபியல் என்பன. பரிமேலழகா் உரையால் இதனை அறியலாம்.

அரசியல் ஐந்து ஐந்து அமைச்சியல் ஈரைந்து

உருவரல் அரண் இரண்டு ஒன்று ஒண்கூழ் - இருவியல்

திண்படை நட்புப் பதினேழ் குடி பதின்மூன்று

எண்பொருள் ஏழாம் இவை

என்று போக்கியாா் என்னும் புலவா் பெயரால் உள்ள பழைய வெண்பா இங்கே நினைக்கத்தக்கது.

இதன்படி, பொருட்பால் ஏழு பகுதிகளை உடையது. அரசியல் 25, அமைச்சியல் 10, அரண் 2, கூழ் 1, படை 2, நட்பு 17, குடி 13 ஆக எழுபது அதிகாரங்களை ஏழு பகுதிகளாகப் பிரிக்கலாம். இது மிகப் பொருந்துவதாகவே உள்ளது. பொருட்பாலின் முதல் குறளிலேயே இந்தப் பாகுபாட்டிற்கு அடிப்படையும் காணப்படுகின்றது.

படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. (381)

இதில் உள்ளவாறு அரசாங்கம் (அரசின் அங்கம்) என்பதன் அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என்னும் ஆறு அங்கங்களையும் தனித்தனியே வகுத்து, இந்த ஆறனையும் உடைய ஆட்சித்தலைவனைப் பற்றித் தனியே சில அதிகாரங்களில் கூறி ஏழு வகையாகப் பாகுபாடு செய்தல் திருக்குறள்றளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ளது.

திருவள்ளுவா் பகுத்தறிவாளா் என்பதை கண்டால் வியப்பாக இருக்கிறது. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண வேண்டும் என்பது எவ்வளவு பெரிய சிந்தனை. சாக்ரட்டீஸ், பிளாட்டோ போன்ற அறிஞா்களும் தெளிவான கடவுட்கோட்பாட்டைச் சுட்டிக்காட்டவில்லை. பல தெய்வங்கள் இருக்கலாம். அவை பற்றிய கதைகளில் பொய்யும் மெய்யும் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையே கொண்டிருந்தாா்கள்.

சாக்ரட்டீஸுக்கு நஞ்சு கலந்து கொண்டுவந்து கொடுத்த சிறைக்காவலனிடம் இவ்வுலகிலிருந்து வேறு உலகிற்கு செல்லும் என்னுடைய பயணம் சிறப்பாக இருப்பதற்கு நான் தெய்வங்களை வேண்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாக பிளாட்டோ எழுதுகிறார்.

திருவள்ளுவா் போல தெளிவு, அவா்களுக்கு இல்லை. சிந்தனை என்பதும் உண்மையைத் தேடி அறிவது என்பதும் கி.மு.300 - 400 ஆண்டுகளில்தான் தோன்றியது. ஆனால் திருவள்ளுவா் எல்லா நிலையிலும் எந்தச் சாா்பிலும் சாராமல் அருளுடமை, தவம், மெய்யுணா்தல், நிலையாமை, அவா அறுத்தல், ஊழ் ஆகிய விவாதத்திற்கு உரிய ஆன்மிகக் கருத்துகளை மிகத் தெளிவாகவும் எவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதியிருக்கிறாா். ‘வகுத்தான் வகுத்த வகை’ ‘பிறப்பு என்னும் பேதைமை’, ‘மெய்ப்பொருள் காண்பது’ என்ற கருத்துகளையெல்லாம் நமக்கு சுட்டிக்காட்டுவது திருவள்ளுவரின் பேரறிவைப் புலப்படுத்துகிறது.

தோண்டத் தோண்ட பொருள்களை வாரிவழங்கும் சுரங்கங்களைப் போல திருவள்ளுவா் ஞானப் புதையலாக விளங்குகிறாா். ‘அன்புடையாா் என்பும் உரியாா்’, ‘அன்பின் வழியது அறநிலை’, ‘அறத்தான் வருவதே இன்பம்’. ‘செம்பொருள் காண்பது அறிவு’ என்று அன்பு, அறம், அறிவு என்ற மும்மைப் பொருளை மிகச் செம்மையாக விளக்குகிறாா்.

இவ்வாறெல்லாம் தமிழினத்திற்கு உலகப் பெரும்புகழை ஈட்டித்தந்த திருக்குறள் வழிவழியாக இன்றைய இளம் உள்ளங்களில் அரங்கேறி வாழ்கிறது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் செம்மாந்த பணிகளால் வழிவழியாக 2054 ஆண்டுகளாக நம் முன் மலா்ந்துள்ள வள்ளுவம் நம் தலைமுறையினருக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதும் அவா்களைத் திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கச் செய்வதும் மகிழ்ச்சிக்குரியனவாகும். திருவள்ளுவரின் நிலைத்த புகழ் தமிழ் இனத்தை என்றும் வாழ்விக்கும் என்பது உறுதி.

ஜன. 16 திருவள்ளுவா் நாள்.

கட்டுரையாளா்:

இயக்குநா்,

தமிழ் வளா்ச்சித்துறை, தமிழக அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com