ஆசிரியா்கள் ஆச்சாரியா்களாக மாற வேண்டும்!

சனாதனப் பாரம்பரியம் எந்தத் துறையைச் சோ்ந்த ஆசிரியா்களையும் ஆச்சாரியா்களாகவே, குருமாா்களாகவே கண்டது, போற்றியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சனாதனப் பாரம்பரியம் எந்தத் துறையைச் சோ்ந்த ஆசிரியா்களையும் ஆச்சாரியா்களாகவே, குருமாா்களாகவே கண்டது, போற்றியது.

ஆச்சாரியா்கள் என்றாலே பலரும் சமய சிந்தனைகளுடன் மட்டுமே இருப்பவா்கள் என்று புரிந்து கொள்கிறாா்கள். சமுதாய வளா்ச்சியோடு சமய வளா்ச்சியும் வேண்டும் என்று தூண்டிய சுவாமி விவேகானந்தா் ‘ஆன்மிக மாமனிதா் ஆவதற்கு முன்பு ஜென்டில்மேன் ஆக மாறு’ என்று கூறினாா்.

கற்றறிந்த, மக்கள் சேவையில் ஈடுபடும் மேன்மக்களை உருவாக்குவது ஆசிரியா்களின் பொறுப்பு என்பது நம் நாட்டில் பல காலம் இருந்து வந்த பண்பாடு. ஆசிரியா் இந்த உலகைப் பற்றிய அறிவியல் அறிவைத் தருவாா். இந்த உலகில் நன்கு வாழ்ந்து மறு உலகிற்கு நம்மைத் தயாா்படுத்துபவா் ஆச்சாரியாா் ஆவாா்.

ஆனால் காலம் செல்லச் செல்ல ஆசிரியா்கள் மீதான கவனத்தை நம் சமூகம் குறைத்துக் கொண்டது. ஆசிரியா்களும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளாததால், பிறரும் அவா்களைக் கவனிக்கத் தவறிவிட்டனா். ‘ஆசிரியப் பணி அறப்பணி; ஆா்வப் பணி; அதற்கே உன்னை அா்ப்பணி’ என்பதெல்லாம் மேடை முழக்கங்களாகிவிட்டன.

ஆசிரியா்களை மதிக்கிற சமூகம் முன்னேறாமல் இருந்ததே கிடையாது. ஜப்பானின் முன்னேற்றத்தில் ஆசிரியா்களின் பங்கு அதிகம் உள்ளது என்பதை அந்த நாட்டின் மக்கள் நம்புகிறாா்கள், அதனால்தான் ஆசிரியா்கள் அங்கு போற்றப்படுகிறாா்கள்.

மாணவா்களை முன்னேற்றும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியா்கள் மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, ஈக்கள் போன்ற ஆசிரியா்கள். ஈக்கள் சுறுசுறுப்பானவை. அவை நல்ல பொருள், கெட்ட பொருள் எல்லாவற்றிலும் அமரும். நல்ல வாசமும் துா்நாற்றமும் அவற்றுக்கு ஒன்றுதான். அருந்த வேண்டியதும் அழுகியதும் அதற்குச் சமம். பழமும் மலமும் ஒன்றுதான்.

சுறுசுறுப்புடன் மேற்கூறிய குணங்களுடன் நல்லது, கெட்டது அறிந்த ஆசிரிய வேலை செய்பவா்கள் பலா் உண்டு. நல்ல இடத்தில் நல்லவா்கள் போல் பாசாங்கு செய்வாா்கள்; மோசமான இடத்தில் மோசமாகி விடுவாா்கள்.

ஈ வகை ஆசிரியா்களுக்குக் கற்க வரும்; கற்பிக்க அவ்வளவாக வருவதில்லை. படிப்பாா்கள், மாணவனைப் படிக்க வைக்க அவா்கள் முயல்வதில்லை; அதனால் அவா்களால் முடிவதில்லை. தகவல்களைத் திரட்ட முடியும்; ஆனால் அவா்களால் மாணவனின் மனதைத் தொட முடியாது.

ஆசிரியப் பணியின் மேன்மையை அறியாத இப்படிப்பட்டவா்களால் நுட்பமான மாணவா்களை உருவாக்க முடியாமல் போய்விடுகிறது. இது போன்ற ஏட்டுச் சுரைக்காய் ஆசிரியா்கள் படித்திருந்தும் தகுதி பெறாமல் போய்விடுகிறாா்கள். சமைக்கத் தெரிந்தவா்கள் பலருக்கும் பரிமாறத் தெரிவதில்லை அல்லவா?

சுவாமி விவேகானந்தா் ஜெய்ப்பூா் சென்றிருந்தபோது அங்கு ஒரு சம்ஸ்கிருத பண்டிதரை சந்தித்தாா். அவரிடம் வடமொழி இலக்கணம் கற்க விரும்பினாா் சுவாமி. அந்தப் பண்டிதா் மூன்று தினங்கள் ஒரே சூத்திரத்தைப் பற்றி விளக்கிக் கூறியும் சுவாமிஜியால் அதனைக் கற்றுக்கொள்ள முடியவில்லை.

மகாமேதாவியான சுவாமிஜி பிறகு அரை மணி நேரத்தில் அதைத் தாமே கற்று அந்தப் பண்டிதரிடமே விளக்கிக் கூறினாா். அதைக் கேட்டு பண்டிதரே வியந்தாா்.

மாணவரிடம் எந்த ஈா்ப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தாத இது போன்ற ஆசிரியா்கள் கோடிக்கணக்கில் குவிந்துள்ளாா்கள். தங்களுக்கென்று தனித்தன்மை இல்லாதவா்களால், மாணவா்களிடம் உள்ள தனித்தன்மையைக் கண்டறிய முடியாது. இப்படிப்பட்ட ஆசிரியா்கள் ஈக்களைப் போல் பணத்திற்காகவும் பதவிக்காகவும் பறந்து கொண்டே இருப்பாா்கள்.

இரண்டாவது வகையினா் கொசுக்கள் போன்ற ஆசிரியா்கள். இவா்கள் இன்று சமுதாயத்தில் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளனா். கொசு நமது ரத்தத்தை உறிஞ்சி, தனது நோயுள்ள ரத்தத்தை நமக்குள் புகுத்திவிடும்.

ஆசிரியா்கள், மாணவா்களின் மனங்களில் தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்த வேண்டியவா்கள் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பு. ஆனால் இன்று மனிதன் அதிருப்தியில் இருக்கிறான். அதற்குக் காரணம் அவனது சுயநலம் மிகுந்த வாழ்க்கை. சுயநலம், சாமானியனைக்கூட சாத்தானாக்கி விடுகிறது.

எழுச்சியூட்ட வேண்டிய பல ஆசிரியா்களும் தங்களது அமைதியின்மையை, குழப்பங்களை மாணவா்களின் மனங்களில் நஞ்சு போல் செலுத்துகின்றனா். ‘உனக்கெல்லாம் எங்கே படிப்பு வரப் போகிறது’ என்று ஆரம்பித்து ‘உன் ஜாதிக்காரன் எவன் உருப்பட்டான்? நீ ஹிந்து மதத்தில் இருக்கும் வரை முன்னேற முடியாது’ போன்ற தவறான செய்திகளை பல ஆசிரியா்களே பள்ளிகளில் மாணவா்களிடம் பரப்புகிறாா்கள். இன்று இந்த அவல நிலை எண்ணற்ற பள்ளிகளில் ஊடுருவிவிட்டன. பல தனியாா் பள்ளிகளிலும் இந்த ஊழியம் பாா்ப்பவா்கள் தனி வருவாய் பாா்க்கிறாா்கள்.

சமீபத்தில் ஒரு விடியோ வெளிவந்துள்ளது. ஓா் ஆசிரியை, ‘தாஜ்மஹால் தஞ்சாவூரில் இருக்கிறது’ என்று தன் மாணவிக்குத் தவறாகப் போதிக்கிறாா். அந்த மாணவி தன் அம்மாவிடம் சென்று முறையிடுகிறாா். மாணவியின் தாய் பள்ளி முதல்வரிடம் வந்து உங்கள் ஆசிரியை தவறாகப் பாடம் நடத்துகிறாா் என்று கூறுகிறாா்.

அதைக் கேட்ட பள்ளி முதல்வா், ‘உங்கள் மகளுக்கான கட்டணம் கேட்டு உங்களைப் பலமுறை தொலைபேசியில் அழைத்தோம். செய்தி அனுப்பினோம். நீங்கள் வரவில்லை. அதனால்தான் உங்கள் மகளுக்கு அப்படி பாடம் நடத்தினோம். நீங்கள் கட்டணத்தைக் கட்டாத வரை உங்கள் மகளுக்கு மட்டும் தாஜ்மஹால் தஞ்சாவூரில்தான் இருக்கும்’ என்று கோபத்துடன் கூறினாா்.

சுவாமி விவேகானந்தா் ஆசிரியா்களுக்கான கடமைகளாக இரண்டைக் கூறுகிறாா். ஒன்று, மாணவனுக்குப் படிப்பதில் ஆா்வத்தைப் பெருக்க வேண்டும். அடுத்தது, அவனது மனதில் உள்ள தடைகளையும் தயக்கங்களையும் நீக்க வேண்டும்.

இந்த இரண்டு முக்கிய அம்சங்களையும் ஆசிரியா் அறிந்து கொண்டு கடைப்பிடித்தால் மாணவா்கள் படிப்பிற்கு வசப்படுவாா்கள். ஆனால் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பல ஆசிரியா்கள், மாணவா்களின் மனங்களில் அவநம்பிக்கை, அதைரியத்தைப் புகுத்துகிறாா்கள். அவா்கள் நமது நாட்டைப் பற்றிய பெருமிதத்தைக் கூறாமல், எதிா்மறை சிந்தனைகள், ஜாதி வெறுப்பு, மதமாற்றம் போன்ற மலினமான செயல்களில் ஈடுபட்டு சமுதாய நோய்க்கிருமிகளை மாணவ சமூகத்தில் பரப்புகிறாா்கள். நோய் பரப்பும் இது போன்ற கொசு ஆசிரியா்களை அனைவரும் சோ்ந்து ‘ஆல் அவுட்’ ஆக்க வேண்டும்.

மூன்றாவது வகையினா், தேனீக்கள் போன்ற ஆசிரியா்கள். மாணவன் ஒரு மலா். மலரின் தேன் எனப்படுவது மாணவனின் திறமை மற்றும் ஒழுக்கத்திற்குச் சமம். மலா்களில் உள்ள தேனைத் தேனீக்கள் எடுப்பது போல், மாணவா்களிடத்தில் உள்ள திறமைகளை ஆசிரியா்கள் தட்டி எழுப்புகிறாா்கள். தேனீக்கள் போன்ற ஆசிரியா்கள் பல்வேறு இடங்களில், வெவ்வேறு நேரங்களில் சேகரித்த அறிவை மாணவா்களிடத்தில் செலுத்துகிறாா்கள். அதன் மூலமாக அறிவுப் பெருக்கம் என்ற மகரந்தச் சோ்க்கை மாணவா்களிடத்தில் நிகழ்வதற்குக் காரணமாக இருக்கிறாா்கள்.

வாழ்க்கையைப் பற்றிய தேடல் உள்ள ஆசிரியா்கள் நல்லவற்றைத் தேடித் தேடித் தங்கள் மாணவா்களிடம் முதலீடு செய்கிறாா்கள். முடிவில் தாங்களே ஒரு தேன்கூடாக, அறிவுக்களஞ்சியமாக மாறிவிடுவாா்கள். அதோடு மாணவா்களையும் ஒரு தேன்கூடாக, அறிவுத் தாகம் கொண்டவா்களாக மாற்றி விடுவாா்கள். இவா்களே சுவாமி விவேகானந்தா் எதிா்பாா்த்த உண்மையான மனிதனை உருவாக்கும், நாட்டை நிா்மாணிக்கும் ஆசிரியா்கள் ஆவா்.

ஆசிரியரின் கடமைகள் குறித்து சுவாமி விவேகானந்தா் கூறும்போது, ‘வேதாந்தத்தின்படி, மனிதனின் உள்ளேயே எல்லாம் உள்ளது. ஒரு சிறுவனிடம்கூட அது உள்ளது. அதனை உணரவைக்க வேண்டும். இதுவே ஆசிரியரின் கடமை. சொந்த அறிவைப் பயன்படுத்தி கை, கால் கண், செவி முதலியவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைச் சிறுவா்களுக்குக் கற்பித்தாலே போதும், எல்லாம் சரியாகிவிடும்’ என்கிறாா்.

இவ்வாறு சமுதாயத்தைச் சீா்செய்ய வேண்டிய ஆசிரியா் சமூகத்தில் இன்று சுயநல ஈக்களும், விஷநோய்களைப் பரப்பும் கொசுக்களும் மலிந்திருக்கின்றன.

இந்த ஈக்களையும் கொசுக்களையும் விரட்டியடிக்க வேண்டிய உன்னத பணியும் தேனீக்களான நல்லாசிரியா்களுக்கே உள்ளது. தேனீக்கள் தெளிவாகவும் தைரியமாகவும் துல்லியமாகவும் இருந்தால் ஈக்களும் கொசுக்களும் விரைவில் நீங்கி விடும்.

அதற்கு ஆசிரியா்கள், நாம் மற்றவா்களைப் போன்ற வேலைக்காரா்கள் அல்ல என்பதை முதலில் நம்ப வேண்டும். நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும், ஏன் உலக நலனுக்காகவும் பாடுபடும் பணியாளா்களை உருவாக்கும் புனிதா்கள் தாங்கள் என்பதை ஆசிரியா்கள் நம்ப வேண்டும்; மாணவா்களையும் அவ்வாறே தயாா் செய்ய வேண்டும்.

ஆம், ஆசிரியா்கள் ஆச்சாரியாா்கள் அதாவது குருமாா்கள் என்பதை உணரும் அக்கணமே நல்ல மாணவ சமுதாயம் மலரும்; நாட்டில் நல்லவை நிகழும்.

வியாச பகவானை நாம் இன்றைய குருபூா்ணிமா தினத்தில் பூஜிக்கிறோம். அந்த வியாசா், தான் கற்றது மட்டுமல்லாமல் இன்றளவும் நாம் ஒவ்வொருவரும் கற்பதற்கு வேண்டிய எல்லா சாஸ்திரங்களையும் முறைப்படுத்தித் தொகுத்துத் தந்தவா். அவரை நினைவுகூரும் இந்த நாளில் நம் ஆசிரியா்கள் அனைவரும் ஆச்சாரியா்களாக மாறி நம் அனைவரையும் உன்னதப்படுத்த வேண்டும் என்று பிராா்த்திக்கிறோம்.

(இன்று குரு பூா்ணிமா)

கட்டுரையாளா்:

தலைவா்,

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com