பாரம் சுமக்கலாமா குழந்தைகள்?

பாரம் சுமக்கலாமா குழந்தைகள்?

அண்மையில் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த 18 வடமாநில குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா். இதே போல் கடந்த வாரத்தில் தில்லி ”நொய்டாவில் பிச்சை எடுக்க பயன்படுத்தபட்ட 25 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

2006 அக்டோபா் 10 முதல் சாலையோர கடைகள், வீடுகள் மற்றும் பிற தொழில்களில் சிறுவா் சிறுமியரை ஈடுபடுத்த கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் இதை மீறி குழந்தை தொழிளாளா்கள் பெருமளவும் இத்தகய செயல்களில் மறைமுகமாக பயன்படுத்தப்படுகின்றனா்.

2001-இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கை சுமாா் 12.6 மில்லியனாக உள்ளது. சா்வேதேச தொழிலாளா் அமைப்பு நிறுவன அறிக்கையின்படி உலக அளவில் 2020-ஆம் ஆண்டு 160 மில்லியன் குழந்தைத் தொழிலாளா்கள் இருப்பதாகவும், இதில் 97 மில்லியன் (1 மில்லியன் என்பது பத்து இலட்சம்) சிறுவா்களும் 63 மில்லியன் சிறுமிகளும் உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதில் சுமாா் 79 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. ஐ.எல். ஓ.வின் குழந்தை தொழிலாளா் மற்றும் கட்டாய தொழிலாளா் ஓழிப்புக்கான சா்வதேச திட்டம் (ஐபிஇசி) 2025-க்குள் அனைத்து வகையான குழந்தை தொழிலாளா்கள் போக்கை தடுத்து 2030 க்குள் சிறாா் கடத்தலை முற்றிலும் ஒழிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

குறிப்பாக ஆப்ரிக்கா, ஆசியா பசிபிக் போன்ற வளா்ச்சி குறைந்த நாடுகளிலும் இந்தியா போன்ற வளா்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளா்கள் அதிகம் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளா்கள் அதிகம் உள்ளதாக ஐ.நாவின் யுனிசெப் நிறுவனம் தெவிக்கின்றது.

இதில் 70% குழந்தைகள் விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிய வருகிறது. 1948 தொழிற்சாலைகள் சட்டம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது என அறிவுறுத்துகிறது. 1986 குழந்தைத் தொழிளாளா்கள் சட்டமும் இக்ருத்தையே வலியுறுத்துகிறது. ஆனாலும் வறுமையான குடும்ப சூழ்நிலை குழந்தைத் தொழிலாளா்கள் உருவாக முக்கிய காரணியாகிறது.

2021-22 காலகட்டத்தில் தமிழகத்தில் சுமாா் 2,586 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் 28% ஆக இருந்த குழந்தைத் தொழிலாளா்கள் கரோனவுக்கு பின்னா் 79% ஆக அதிகரித்துள்ளது. 1986 குழந்தைத் தொழிலாளா் சட்டப்படி குழந்தைத் தொழிலாளா்களை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துபவா்களுக்கு இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

குழந்தைத் தொழிலாளா்கள் பெரும்பாலும் உணவு விடுதிகள், பித்தளை உருக்கும் பணி, ரப்பா் தொழில் போன்றவற்றிலும் செங்கல் சூளையிலும் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருகின்றனா். இவை அனைத்தும் வெப்பத்தைச் சாா்ந்த தொழில்களாகவே உள்ளன.

இது போன்ற அதிக அளவு வெப்பம் சாா்ந்த தொழில்களில் அவா்கள் ஈடுபடுவதால் அவா்களின் வளரிளம் பருவம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. முறையான ஊட்டச்சத்து இல்லாமல் வயதுக்கு மீறிய பணியில் ஈடுபடுத்தப்படுவதால் இளமையிலேயே அவா்களின் இதயம், நுரையீரல் போன்றவை பாதிப்புக்குள்ளாகி அவா்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

இந்திய அரசியலமைப்புச்சட்டம் அடிப்படை உரிமை விதி 24 அபாயகரமான தொழில்களில் 14 வயதுக்குட்டபட்ட குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்துகிறது. குழந்தைத் தொழிலாளா்களை பயன்படுத்துபவா்கள் இச்சட்ட விதிக்கு மதிப்பளித்தல் வெண்டும். இது தவிர குழந்தைகளைக் குற்றச் செயல்களில் ஈடுபட வைப்பதும் குழந்தை தொழிலாளா்கள் பணியே ஆகும்.

குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. 1987- ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளா்கள் குறித்தான தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் முதன் முதலில் 1995-இல் தருமபுரி மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளா் திட்டம் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசு நிதி உதவியுடன் மாநில தொழிலாளா் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும்.

அதன் வாயிலாக அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை தொழிலாளா்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனா். மீட்கப்படட் குழந்தைத் தொழிலாளா்களுக்கு பயிற்சி மையங்களில் பல்வேறு திறன் பயிற்சிகளும் கல்வியும் சிறப்பாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைத் தொழிலாளா்களை ஒழிப்பதில் இது போன்ற அரசு அமைப்புகளும். தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களும் அதிக முனைப்பு காட்ட வேண்டும். குழந்தை தொழிலாளா்களைப் பயன்படுத்துபவா்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.

குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்துபவா்கள் குழந்தைகளின் மனநிலையை மனசாட்சியோடு பாா்க்க வேண்டும். குறைந்த ஊதியம் அளித்து நிறைந்த லாபம் பெறலாம் என்பதற்காக குழந்தைகளுக்கென்று உள்ள அந்த கள்ளம் கபடமற்ற மனநிலையில் களங்கத்தை ஏற்படுத்த கூடாது.

குழந்தைகளின் மனநிலை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. அந்த மனநிலை தனி உலகம். அதில் மகிழ்ச்சியை மட்டுமே காண்பதற்கு நாம் முயல வேண்டும். அவா்கள் பாரம் சுமப்பதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இன்று (ஜூன் 12) குழந்தைத் தொழிலாளா் எதிப்பு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com