பொய் உரை அஞ்சுமின்!

பொய் உரை அஞ்சுமின்!

 வாழ்தல் வேண்டி, பூம்புகாரிலிருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தவர்களை வைத்து அரசியல் நடந்த கதையைச் "சிலப்பதிகாரம்' கூறுகிறது. வஞ்சிக் காண்டத்தின் இறுதியில் இளங்கோ அடிகளின் அருளுரை உள்ளது. அதில் ஒன்று "பொய் உரை அஞ்சுமின்'!
 பிறந்த ஊரிலேயே வாழ்ந்து நிறையும் வாழ்க்கை கொண்டாடப்படுவதாக இல்லை. கல்வி, போர், தூது, ஆகியவற்றோடு பொருளுக்காகப் பிரிதலுக்கும் இலக்கணம் சொல்கிறது தொல்காப்பியம். ஒருமுறை கூட, பிறந்த ஊரைவிட்டு வெளியே செல்லாத வாழ்க்கை இன்றைய நிலையில் சாத்தியம் இல்லை; தேவையும் இல்லை.
 இயற்கையும் பகல், இரவு, தட்ப வெப்பப் பருவ காலங்கள் என்று அடிக்கடி இடம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப பறவைகளும் தாவரங்களும் இடம் மாறிக் கொண்டிருக்கின்றன.
 மக்களும் தகுதிக்கும் வசதிக்கும் சூழலுக்கும் ஏற்ப இடம் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் மக்கள் அனைவரும் புலம் பெயர்ந்தவர்களே என்று சொல்ல இயலாது.
 குடியரசுத் தலைவர் முதல் ஆளுநர்கள், நீதியரசர்கள், இ.ஆ.ப., இ.கா.ப. அலுவலர்கள் வரை பிறந்த ஊரிலேயே பணியாற்றுவதில்லை. அவர்களை யாரும் புலம் பெயர்ந்தவர்கள் என்று சொல்வதில்லை. உடல் உழைப்பில் பொருள் தேடி இடம் பெயர்கிறவர்களை மட்டும் புலம் பெயர்ந்தவர்கள் என்று சொல்லலாமா?
 பிறந்த இடத்தை விட்டு வெளியேறுகிறவர்கள் இருவகை. வளமான வாழ்க்கை வேண்டி விருப்பத்தில் வெளியேறுகிறவர்கள் ஒரு வகை; இயற்கைப் பேரிடர்களாலும் செயற்கையான போர்க் கலவரங்களாலும் உயிர் வாழ்தல் வேண்டிய கட்டாயத்தில் வெளியேறுகிறவர்கள் இன்னொரு வகை. அவர்கள் எல்லோரையும் புலம் பெயர்ந்தவர்கள் என்று சொல்ல முடிவதில்லை.
 புலம் எனும் சொல் நிலம், இடம், அறிவு என்று பல பொருள் தருகிறது. ஆனாலும் விருப்பத்தில் வெளியேறுகிறவர்களையும் கட்டாயத்தில் வெளியேறுகிறவர்களையும் ஒரே நிலையில் கருத முடிவதில்லை.
 அதனால்தான் இருவகையினரையும் உள்ளடக்கி, அவர்களைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று கூறாமல் அயலகத் தமிழர்கள் என்று அழைக்கிறோம்.
 விருப்பத்தில் பிறந்த ஊரைவிட்டு வெளியேறுகிறவர்கள் இடம் பெயர்ந்தவர்களாக இருக்கிறார்களே தவிர புலம் பெயர்ந்தவர்களாக இல்லை.
 புலம் பெயர்ந்தவர்கள் என்றால் ஒரு அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்ந்தவர்கள் கட்டாயத்தால் இடம் பெயர்ந்து வேறு ஒரு அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு வாழ நேர்ந்தவர்கள் என்று கருதலாம் போலும்.
 இடம் பெயர்ந்தவர்களை, ஒரே மொழி பேசும் இன்னொரு இடத்துக்குப் பெயர்ந்தவர்கள் என்றும் பிற மொழி பேசும் வேறு இடத்துக்குப் பெயர்ந்தவர்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
 ஒரே மொழி பேசும் இன்னொரு அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கட்டாயத்தால் வாழ நேர்ந்தவர்களையும் பிறமொழி பேசும் வேறு ஒரு அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கட்டாயத்தால் வாழ நேர்ந்தவர்களையும்கூட புலம் பெயர்ந்த மக்கள் என்றே சொல்லலாம்.
 இந்திய அரசமைப்புச் சட்ட ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள், இடம் பெயர்கிறவர்கள் இருக்கிறார்களே தவிர புலம்பெயர்கிறவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஏனெனில் ஒரே அரசமைப்புச் சட்டத்திற்குள் புலம்பெயர்ந்து வாழ வழி இல்லை.
 ஆனால் வளமான வாழ்க்கை தேடி, விருப்பத்தில் இடம் பெயர்கிறவர்களும் இயற்கைப் பேரிடர்களாலும் செயற்கைக் கலவரங்களாலும் கட்டாயத்தால் இடம் பெயர்கிறவர்களும் பெரும்பான்மை மக்களால் ஒரு மொழி பேசப்படும் இடங்களிலும் பல மொழிகள் பேசப்படும் இடங்களிலும் வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
 "பதி எழு அறியாப் பழங்குடி' என்று பூம்புகார் மக்களையும் "பதியெழு யறியாப் பண்புமேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்' என்று மதுரையையும் போற்றிய இளங்கோவடிகள், வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திராத கண்ணகி, பூம்புகாரிலிருந்து கோவலனுடன் மதுரைக்கு இடம் பெயர்ந்த செய்தியையும் சொல்லியிருக்கிறார்.
 மருத நிலத்திலிருந்தவர்கள் நெல்லைக் கொடுத்து உப்பு வாங்க நெய்தல் நிலத்திற்குக் குடும்பத்தோடு இடம் பெயர்வதை "நற்றிணை' சொல்கிறது. ஒரு திணை மக்கள் மற்றொரு திணைக்கு விருப்பத்தால் இடம் பெயர்வதையும் புலம் பெயர்வதாகச் சொல்கிறது. இங்கு திணை வேறுபடுகிறது.
 பொருள் வேண்டி மன்னர்களை நோக்கி இடம் பெயர்கிறவர்களை மலைபடுகடாம் காட்டுகிறது. போர் காரணமாக மக்கள் இடம் பெயர்வதை "அகநானூறு' சொல்கிறது. இயற்கைப் பேரிடரில் வெள்ளப் பெருக்கில் இடம் பெயர்கிறவர்களை நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.
 இரண்டாம் உலகப் போரில் இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்த சர்வதேசக் குடியேற்ற அமைப்பு 1951 இல் உருவாகி இருக்கிறது. இப்போதும் கட்டாயத்தால் இடம் பெயரும் மக்களுக்கான பணிகளை அது மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பின் பணிகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன.
 தமிழர்களின் புலம்பெயர்ந்த வாழ்கையைப் பாரதியார் பாடியிருக்கிறார். கி.பி.1777-இல் முதன்முதலாகத் தமிழர்கள், கரும்புத்தோட்டம் பயிரிட ஃபிஜித் தீவிற்கு அனுப்பப்படுகிறார்கள். பாரதியாருடைய "பிஜித் தீவிலே கரும்புத் தோட்டங்களில் ஹிந்து ஸ்திரீகள்' ( சுதேசமித்திரன், 12-3-1917) எனும் பாடல்தான் நவீன தமிழில் புலம்பெயர்ந்தோர் பற்றிய முதல் கவிதையாக இருக்கிறது.
 கரும்புத்தோட்டத்திலே. . . என்று தொடங்கும் அந்தப் பாடலில்,
 "நாட்டை நினைப்பாரோ? - எந்த
 நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
 வீட்டை நினைப்பாரோ? - அவர்
 விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்
 கேட்டிருப்பாய்க் காற்றே - துன்பக்
 கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
 மீட்டும் உரையாயோ? - அவர்
 விம்மி யழவும் திறல்கெட்டுப் போயினர்'
 என்று எழுதியுள்ளார்.
 இதன்பின் பாரதியின் துன்பக்கேணியைத் தலைப்பாகக் கொண்டு எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய கதையில் திருநெல்வேலியிலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்துக்குப் புலம் பெயர்ந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் துயரம் சொல்லப்பட்டிருக்கும். இப்படிப் புலம் பெயர்ந்தவர்களின் துன்பங்களை அறிந்தவர்கள் தமிழர்கள். அதனால் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களைத் தமிழர்கள் இணக்கமாகவே நடத்த விரும்புவது இயல்பு.
 இமயம் வரை படையெடுத்துச் சென்று கனகவிசயர் தலையிலே கல் ஏற்றிவந்து கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் எழுப்பியவன் சேரன் செங்குட்டுவன். விழா முடிந்ததும் சிறையிலிருக்கும் கனகவிசயரை விடுவித்து அரச விருந்தினர் மாளிகையில் தங்க வைத்திருக்கிறான். அரசர்கள் என்ற முறையில் அவர்களுக்கு உரிய தகுதியான சிறப்புகளோடும் பாதுகாப்போடும் நாடு திரும்பிச் சென்று ஆட்சி செய்ய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தளபதி வில்லவன் கோதைக்கு ஆணையிட்டுள்ளதைச்"சிலப்பதிகாரம்' சொல்கிறது (நடுகல்காதை).
 சங்க இலக்கியங்களில் , புலம்பெயர் மாக்கள், மொழிபெயர் தேயத்தார், மொழிபெயர் தேயம், "வேறுபுலம்' (புறம் 254), "அறியாத் தேயம்' (அகம் 369) ஆகியவை இடம் பெறுகின்றன. புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலைமைகளையும் சூழல்களையும் பற்றிக் கூறுகிற முதல் தமிழ் நூலாகப் பத்துப்பாட்டில் ஒன்றான "பட்டினப்பாலை' இருக்கிறது.
 பூம்புகார் துறைமுக நகரம். வணிக வளம் மிக்க நகரம். அங்கே பல மொழிக்காரர்கள், பல்வேறு நாட்டிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் பூம்புகார் மக்களோடு கலந்து கரிகால் பெருவளத்தான் காலத்திலேயே இனிது வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை,
 மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
 புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்
 முட்டாச் சிறப்பிற் பட்டினம்
 என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பதிவு செய்துள்ளார்.
 இதைச் சிலப்பதிகாரமும்,
 கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
 கலந்தினிது உறையும் இலங்குநீர் வரைப்பு
 (கடலாடு காதை)
 என்று வழிமொழிகிறது.
 இவ்வாறு இடம் பெயர்தலிலும் புலம் பெயர்தலிலும் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் உலக மக்களுக்கு உணர்த்துகிற வகையில் பண்பாட்டு விழுமியங்களையும் வாழ்க்கை முறைகளையும் கடந்த காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பதோடு இப்போதும் கொண்டிருக்கிறார்கள் என்பதை முதல்வரின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
 இளங்கோ அடிகள் "பொய் உரை அஞ்சுமின்' என்றார். அதற்குப் பொய் சொல்லப் பயப்படுங்கள் என்பதோடு இப்போது பொய்யைப் பரப்புகிறவர்களைப் பார்த்துப் பயப்படுங்கள் என்றும் பொருள் சேர்கிறது. கூடுதலாக அரசின் நடவடிக்கைகள் பொய்யைப் பரப்புகிறவர்களையும் அச்சமடையச் செய்திருக்கிறது.
 ஆகவே வதந்தி அரசியலிலும் பொய் உரை அஞ்சுமின்!
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் துணைவேந்தர்,
 தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com