

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்' என்று பாடுகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இலக்கியங்கள் எல்லாமே பெண் என்பவள் சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவள் என்றுதான் குறிப்பிடுகின்றன. தமிழ் மண்ணில் காவல் தெய்வங்களும் பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன.
பெண்கள், சமூகப் பொறுப்பு கொண்டவர்களாக சங்க இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். போருக்குச் சென்ற வீரர்களின் மனைவியருக்கு நல்ல வார்த்தைகளைச் சொல்லி அவர்களை அரவணைத்து முதிய பெண்கள் ஆற்றுப்படுத்துவதை முல்லைத்திணையில் காண்கிறோம்.
மூதின்முல்லைத் துறையில் தேசத்தின் நன்மைக்காக குடும்பத்தில் தகப்பன், தமையன், கணவன் என ஆண்கள் வரிசையாக வீர மரணம் அடைந்த பின்னும் மகனின் கையில் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பும் பெண்ணைப் புறநானூறு கொண்டாடுகிறது.
குடும்பம் என்ற அமைப்பிலும் பெண் முதன்மை பெறுவதைக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு எடுத்துச் சொல்கிறது. இல்லத்தின் தலைவியாக அவள் விருந்தோம்பிப் பெருமை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான் கணவன். மன்னரிடம் பரிசு பெற்று வந்த புலவர் பெருஞ்சித்திரனார், தான் பெற்று வந்த செல்வத்தை மனைவியிடம் தந்து, "என்னைக் கேட்க அவசியமில்லை உன்னுடைய விருப்பம் போல செலவு செய்துகொள்' என்று கூறுகிறார்.
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி}மனைகிழ வோயே
(புறம்:163)
இப்படிப் பெண்கள் குடும்பம் சமூகம் இரண்டிலும் தலைமை ஏற்று பொறுப்புடன் வழிநடத்துவத்தைக் காண்கிறோம்.
பெண்ணின் தலைமைத்துவம் என்பது நமக்குப் புதிதல்ல. குடும்பம் என்ற அமைப்பில் இன்றியமையாதது பெண்ணின் இருப்பே. ஆண் இல்லாத குடும்பங்கள் கூட பெண்ணின் முயற்சியால் கரை சேர்ந்துவிடும். சமூகம் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. குடும்பங்கள் பெண்ணை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. பெண் இல்லாவிட்டால் குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் போய்விடுகிறது.
மனிதன் சமூக விலங்காகப் பார்க்கப்படுகிறான். குழுவாக இயங்குவது மனித இயல்பு. குழு வாழ்க்கை என்பது குழு விளையாட்டுப் போல அனைவரின் பங்களிப்போடு தான் வெற்றி அடைய முடியும். பெண் தன்னுடைய ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் சமூகம் ஏற்றத்தைக் காண்கிறது. பெண்ணின் பங்களிப்பு முழுமையாக சாத்தியமாகும் காலகட்டங்கள் வரலாற்றில் பொற்காலம் என்று அறியப்படுகிறது.
தமிழக வரலாற்றில் சோழர்கள் காலத்தைப் பொற்காலம் என்று குறிப்பிடுகிறோம். தொடர் போர்கள், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கான பணிகள், ஆலயங்கள் எழுப்புதல் முதலான சமூகம் சார்ந்த செயல்பாடுகள் என்று முழுமையாகத் தங்கள் உழைப்பை மக்கள் வெளிப்படுத்திய காலம் சோழர்கள் காலம்.
தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பித் தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய முதலாம் ராஜராஜன் காலத்தில் பெண்கள் "அதிகாரிச்சிகள்' என்ற பெயரில் அரசு அதிகாரிகளாகப் பணியாற்றிய செய்தி இருக்கிறது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானம் பற்றிய குறிப்பிலும் மன்னருக்கு அடுத்து அவருடைய தமக்கையின் பெயரே இடம் பெற்றுள்ளது. பல கோயில்களுக்கும் மருத்துவ சாலைகளுக்கும் பெண்கள் தானமாக தங்கள் சொத்துகளை வழங்கியதற்கான சான்றுகளும் இருக்கின்றன.
பெண்கள் சிறப்பான முறையில் கெüரவிக்கப்பட்டதாகவே வரலாற்றில் காண்கிறோம். இத்தகைய கலாசாரம் கொண்ட சமூகத்தில் அரசியல், சமூகக் காரணங்களால் பெண்கள் பின்தங்கியுள்ளனர். என்றாலும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு பெண்ணிடமிருந்து இன்றளவும் மாறிவிடவில்லை.
பாதுகாப்புதான் செயல்பாட்டை விட முக்கியம் என்று இருந்த காலகட்டத்தில் பெண்கள் சார்பு நிலைக்கு உட்பட்டிருந்தனர். நாளடைவில் சார்பு நிலை வேறு பரிமாணங்களைப் பெறுவது இயல்பே. இதனால் சமூகத்தில் பெண்களின் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. மகாகவி பாரதி போன்ற சிந்தனையாளர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதையும் படிக்கிறோம்.
தொடர் முயற்சிகளால் பெண்கள் சாதிக்காத துறை எதுவும் இல்லை என்ற நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. நாட்டில் அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை சுரேகா என்ற பெண்மணி இயக்குகிறார். உலகில் ஏர் இந்தியா நிறுவனமே அதிகமான பெண் விமானிகளைக் கொண்ட விமானப் போக்குவரத்து நிறுவனமாக உள்ளது. ராணுவத்திலும் போர் விமானங்களை இயக்கும் பெண் விமானிகளாக பாவனா, மோகனா, அவனி என்று மூன்று பெண்கள் உள்ளனர். பெண்களின் பங்களிப்பு ராணுவத் துறையில் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டு வருகின்றது.
கடந்த காலங்களில் பள்ளிக் கல்வியில் பெண்குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற்றாலும் உயர்கல்வியில் பெண்களின் விகிதாசாரம் குறைவாகவே இருந்தது. தற்போது அதிலும் 95 % பேர் பெண்கள்.
இதனால்தான் நமது பிரதமர் "பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்று இந்தியாவின் நிலைப்பாட்டை உலக அரங்கில் எடுத்து வைத்தார். குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முவும் சர்வதேச பெண்கள் தினத்தன்று ஆற்றிய உரையில், "பெண்கள் முடிவுகளை எடுக்கும் தலைமைத்துவத்தை நோக்கி முன்னேற வேண்டும்' என்ற கருத்தை முன்வைத்தார்.
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருந்தாலும், பெண்களுக்கான உரிமைகள் பற்றிய கருத்தாக்கங்களும் சமூகத்தில் ஒரு தரப்பினரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. பெண்கள் பணிக்காக வெளியில் வந்தாலும் சமையல், குடும்பப் பராமரிப்பு போன்றவை இன்றும் பெண்கள் கைகளில் இருப்பதால் இரட்டிப்பு சுமையோடு இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
சமீபத்திய திரைப்படம் ஒன்றில், சமையல் வேலைகளைச் செய்வதை ஒரு பெண் முகச்சுழிப்போடு எதிர்கொள்வது போன்று சித்திரிக்கப்பட்டிருந்தது. அது ஒரு சுமையாகப் பெண்கள் மீது திணிக்கப்படுவதான கருத்தாக்கம் எதன் பொருட்டு உருவாக்கப் படுகிறது? பெண்கள் மீதான கரிசனம் என்பதாக இதனை ஏன் பேச முற்படுகின்றனர்? உண்மையில் குடும்பத்திற்கான சமையல் பெண்ணுக்கு சுமையா?
மாத விடாய் காலங்களில் பெண்களைத் தனியறையில் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிப்பதை தீண்டாமை என்பது போல பெரிதுபடுத்துவதற்கான அவசியம் என்ன? குடும்பங்களில் பின்பற்றப்படும் சில நடைமுறைகளை சமயத்தோடு தொடர்புபடுத்திக் குற்றம் சொல்வதற்குப் பின்புலம் யாது? உண்மையில் இவையெல்லாம் பெண்கள் மீதான கரிசனமா? வேறு அரசியல் இந்தக் கரிசனத்திற்குள் ஒளிந்திருக்கிறதா?
இயற்கையின் படைப்பில் எந்த ஜீவராசியாயினும் பெண் அடுத்த தலைமுறையை ஈன்று தந்து ஊட்டி வளர்ப்பதாகவே அமைந்துள்ளது. பெண் அதற்கான தகுதியோடு படைக்கப்பட்டிருக்கிறாள். இயற்கை அத்தகைய தகுதியைப் பெண்ணுக்குத் தந்திருப்பதாலேயே தாய்மை மதிக்கப்படுகிறது.
தனது குட்டிகளின் பசியைத் தாயால் பொறுத்துக் கொள்ள இயலாத பண்பு இயல்பானதாக இருக்கிறது. அந்த உணர்வின் அடிப்படையிலேயே நமது கலாசாரத்தில் பெண் பசியாற்றும் பொறுப்பை உடையவளாக இருக்கிறாள். அன்னபூரணி என்று தெய்வத்தை வணங்குவதும் அதன் காரணமாகவே. தாகம் தீர்க்கும் நதிகளைப் பெண்ணாகக் காண்பதும் தாய்மையின் மகத்துவம் கருதியே.
பெரும் பொறுப்புகளில் அமர்ந்துவிட்ட பெண்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாயாக கருணை காட்டுவதிலும் அரவணைப்பதிலும் குறை வைப்பதில்லை. நிலைமை இப்படி இருக்க, சமைப்பது பெண்ணுக்கான சுமை என்று நம்ப வைப்பதும் அத்தகைய குடும்பச் சூழலில் இருந்து வெளியேறுவதை பெண்ணுக்கானசுதந்திரம் என்று நம்ப வைப்பதும் எதற்காக?
"பெண்களைக் குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், சமயம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது' என்ற தவறான கருத்தாக்கத்தை அவர்கள் மனதில் புகுத்தி சமயத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றி விடுதல் நோக்கமாகலாம். இதனால் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு குலையும். இங்கே பிற நாட்டு சமயம் பரப்புவோருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆண், பெண்ணுக்கு விரோதி என்பதான பிம்பத்தைக் கட்டமைத்து ஆணுக்கும் பெண்ணுக்குமான மோதலை ஊதிப் பெரிதாக்குவதற்குப் பின்னே பெண்ணுக்கான நன்மை இருக்க முடியாது.
இயற்கையின் படைப்பில் இணைந்து வாழவேண்டியவர்கள் முரண்பட்டு நிற்பதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை. மாறாக, இருபாலரின் வாழ்வும் அர்த்தமற்றுப் போகும். குடும்பத்தை உடைத்துத் தனித்து நிற்பவளல்ல புதுமைப் பெண்.
காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
என்று பாரதியார் சொல்லும் இந்த இலக்கணங்கள் அமையப்பெற்றவளே புதுமைப் பெண். ஓர் இடத்தை, சூழ்நிலையை விட்டு விலகுவது கோழைத்தனம். இருக்கும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு புத்திக்கூர்மையால், அரவணைக்கும் பான்மையால் தன் தேவைக்கேற்பத் திருத்தங்களைச் செய்து தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதே பாரதப் பெண்களின் தனிச்சிறப்பு.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.