அள்ள அள்ளக் குறையா அமிழ்தம் தந்தகவி!

ஒரு மொழிக்குச் சிறப்புத் தருவன அதன்கண் உள்ள நூல்களே.
அள்ள அள்ளக் குறையா அமிழ்தம் தந்தகவி!

ஒரு மொழிக்குச் சிறப்புத் தருவன அதன்கண் உள்ள நூல்களே. நம் தமிழ்மொழி நூல்வளம் சிறந்தது. அஃது உலகம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவதற்கு அதன் நூல்வளமே காரணமாகும். அங்ஙனம் நம் செந்தமிழ்  மொழியின் சிறப்புக்குக் காரணமாதற்குரிய நூல்களுள் "கம்பராமாயணம்' சிறப்பிடம் பெறுவதாகும்.

கம்பன் கவி அள்ள அள்ளக் குறையாத தமிழ் அமிழ்தம். காலத்தால்அழியாத கற்பகப் பெட்டகம்.  தமிழ்ஞாலத்தில் மட்டுமல்லாமல், கடல் கடந்தும் கற்போர் நாவில் களிநடம் புரியச் செய்யும் காவிய மொழி.

முன்னோர் மொழிப் பொருளை முறைதப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தக்கவை மாற்றம் செய்த புரட்சியாளர் கம்பர். சொந்த நாட்டின் பெருமையினையும் மொழியின் சிறப்பினையும் குன்றென நிமிர்ந்து நிற்கச் செய்த குதூகலக் கவிஞர்.  என்றும் இதயம் களிக்கும் ஏற்றமிகு தம் காவியத்தில் பல இடங்களில், தமிழ்நாட்டில் பத்திப்பயிரைச் செழித்து வளரச்செய்த ஆழ்வார்களின் அருளிச் செயல்களைப் பின்பற்றினார் என்பர்.

இராமாயணம் என்ற மாபெரும் இதிகாசத்தை, நாரதர் கருப்பஞ்சாராய், நல்ல வான்மீகர் பாகாய், சீர் அணி போதர் வட்டாய், காளிதாசர் பார் அமுது அருந்த பஞ்சதாரையாய்ச் செய்தனர்.  கம்பரோ, அம்பிலே சிலையை நாட்டி, அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த தம்பிரான் என்ன, கம்பனாடுடைய வள்ளல், கவிச்சக்கரவர்த்தி, தானும் தமிழிலே தாலைநாட்டி, பாமாலையாவே நரர்க்கும் அமுதம் ஈந்தவன்.

கம்பர், இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றிக் "கவிச்சக்கரவர்த்தி' என்று பெயர் பெற்றார். இந்த கம்ப சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் பலர். கம்பர் தந்த தமிழமிழ்தத்தை பருகி மாந்தியவர்கள் பற்பலர்.

கம்பன் கழகங்களின் தோற்றம்: காரைக்குடி 1939, நாட்டரசன் கோட்டை  1952, கள்ளிப்பட்டி 1959, தேரழுந்தூர் 1960, கோபிசெட்டிப்பாளையம் 1962, ராசிபுரம் 1964, புதுச்சேரி 1966, கோயம்புத்தூர் 1973, சென்னை 1974, சேலம் 1974, புதுக்கோட்டை 1975. 

வேலூர் 1976, திருப்பத்தூர் 1977, பட்டுக்கோட்டை 1977, திருச்சிராப்பள்ளி 1978, வாழியூர் 1979, திருச்செங்கோடு 1979, ராமேஸ்வரம் 1980, ராஜபாளையம் 1980, கரூர் 1981, விழுப்புரம் 1983, கண்டாச்சிபுரம் 1985, ஒசூர்1986, கும்பகோணம் 1986, அருப்புக்கோட்டை 1989, தஞ்சாவூர் 1990. 

பாளையங்கோட்டை 1996, பொன்னமராவதி 1996, இராமநாதபுரம் 1999, மதுரை 2003, அறந்தாங்கி 2004, விருதுநகர் 2006, சென்னை, அம்பத்தூர்  2008, திருப்பூர் 2008, திருநெல்வேலி 2008, தேவகோட்டை  2009. வெளிநாட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்சு, சுவிட்சர்லாந்து, மலேசியா.

""தமிழுக்குக் கதியாக இருப்பவர் இருவர். ஒருவர் கம்பர், மற்றவர் திருவள்ளுவர். அப்பெருமக்களின் முதல் எழுத்துகளைச் சேர்த்தால் "கதி' என்ற சொல் வரும்'' என்று அறிஞர் செல்வக் கேசவராய முதலியார் எழுதினார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய கம்பராமாயணம் திருவரங்கம் அரங்கநாதர் சந்நிதியில் பங்குனி மாதம் அத்த நட்சத்திரத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது என தனிப்பாடல் மூலம் அறியலாம் (திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அரங்கநாதர் சந்நிதியில் என்று கூறுவாருமுளர்).

இராமவதாரம் என்ற கம்பர் காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தை  காண்டம், சுந்தர காண்டம், இலங்கைக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10 ஆயிரத்து 368 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடலுக்கு நான்கு சீர்களில் இருந்து, எட்டுச் சீர்கள் வரையிலான 4 அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டு கம்பர் கம்பராமாயணத்தை படைத்தார்.

இயல்பாகப்  பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒருவர் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரை இருக்கக் கூடும். ஒருசிலரால் ஐயாயிரம் சொற்கள் வரை அடையாளம் கண்டு கொள்ள முடியலாம்.

புகழ்வாய்ந்த எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இந்த மதிப்பீடு ஒன்றரை மடங்கிலிருந்து இரண்டு மடங்கு வரை கூடுதலாக இருக்கலாம். கவியரசர் கம்பர் இந்த வரைமுறைகளையெல்லாம் விஞ்சி நிற்கிறார். ஏறத்தாழ 40 ஆயிரம் சொற்கள் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன.

புதிதாகப் புனைந்த சொற்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் என ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னை ஆதரித்த திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளலை ஆயிரம் பாடலுக்கு ஒருமுறைப் போற்றிப் பாடுகிறார்.

தமிழ்நாடு அரசு மார்ச்சு 24-ஆம் தேதியை கம்பர் திருநாளாகப் போற்றும் வகையில், நேர் கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நிற்கும் தோற்றத்தோடுள்ள கம்பர் சிலைக்கு மார்ச்சு 24 - ஆம் தேதி மாலை அணிவிக்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு கம்பர் விருதைத் தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

வால்மீகி எழுதிய ஆதிகாவியத்தைப் பின்பற்றிக் கம்பர் தம் காப்பியத்தைப் படைத்தபோதிலும் கம்பராமாயணம் மொழிபெயர்ப்பும் அல்ல, தழுவலும் அல்ல, சார்பு நூலும் அல்ல. ஒரு புதுக் காப்பியத்தைப் போன்றே அமைத்திருக்கிறார்.

கம்பனின் காப்பியம் வால்மீகியின் இராமாயணத்திலிருந்து கதை சொல்லும் முறையிலும், பாத்திரப் படைப்பிலும், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதிலும், உவமை உருவகங்களிலும் பெரிதும் வேறுபடுகிறது.  இது பற்றியே வ.வே.சு. ஐயர், "கம்பர் படைத்துள்ள இலக்கியம் வால்மீகி இராமாயணம் அன்று, அதனினும் உயர்ந்த கவிதை' என்றார்.

கம்பரின் ஆரணிய காண்டத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜார்ஜ் ஹார்ட், "இவை இரண்டும் மூலமும் மொழிபெயர்ப்பும் அல்ல; இரு வேறு நூல்கள்' என்று விதந்துரைத்து, ஆரணிய காண்டத்தில் கம்பர் எவ்வாறெல்லாம் வால்மீகியிலிருந்து வேறுபடுகிறார் என்பதைப் பெரும் பட்டியலாகவே தருவார்.

வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோடு அமையாது, கம்பர் செய்த மாற்றங்களெல்லாம் பாராட்டுக்குரியவையென்றும் அவர் உலகக் கவிஞர்களில் தலைமையிடத்திற்கு உரியவர் என்றும் உறுதிபடக் கூறினார். இராமன், சீதை, கைகேயி, பரதன், இராவணன், வீடணன், அனுமன், குகன் ஆகிய பாத்திரங்களுக்கெல்லாம் கம்பன், வால்மீகியை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவில்லை.

வால்மீகி வரைந்த ஆதிகாவியம், வடநாட்டிலேயே பிறந்து அங்கேயே முடிந்த காப்பியமாகும். கம்பரோ, தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் பிறந்த தமிழ் உணர்வாகவே எல்லாவற்றையும் பார்க்கின்றார். கம்பர் காட்டுகிற வயல்வளம் காவிரி நாடல்ல கழனி நாடாகவும், கோதாவரி ஆறு கூடச் சங்கப்பாடலாகவும், இராமன் ஏந்திய வில்லின் அம்புகூடத் தமிழ்ச் சொற்களாகவும், தமிழ் வழக்கன்ன தனிச் சிலையாகவும் வண்டு முரல்வது கூடத் தமிழாகவே அமைத்துள்ளார்.

சீதை திருமணத்தைக் காதல் திருமணமாகவே, கண்ணில் பேசிக்கொண்ட அகத்திணை அன்பாகவே கலைத் திருமணமாகப் பழந்தமிழர் இலக்கியப் பண்புக்கு ஏற்ப அமைத்துக் காட்டினார்.

"பிளாரன்சு மாநகர் இருள் சூழ்ந்து கிடக்கும் வேளையில், தாந்தே தம் நூலை விரித்துக் காட்டுகின்றார். அவ்வேளையில் அந்நூலிலிருந்து செல்லும் ஒளி வெள்ளத்தால் நகர் புத்துயிர் பெறுகின்றது. கம்பர் தரும் இராமாயணம் அத்தகைய ஓர் ஒளிப்பிழம்பு' என்று அறிஞர் தனிநாயக அடிகள் கூறினார். 
"மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றவை உள்ளவும் அல்லவும் அஃறிணை' என்று நம்பப்பட்டது. உயர்திணையில் அஃறிணைச் சிறுமைகளையும் அஃறிணையில் உள்ள உயர்திணைப் பெருமைகளையும் கண்டு தெளிந்து கலை செய்தவர் கம்பர்.
போர் வெற்றிதான் புகழின் கல்வெட்டு என்று நம்பப்பட்டது. இல்லை, "யாரோடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது' என்று எதிர்வினை ஆற்றியவர் கம்பர்.
ஆங்கிலத்தில் தமிழிலும் நிறைந்த புலமை நயம் வாய்ந்த பேராசிரியர் அ.செ. சுந்தரராஜன், தனி ஒருவராகவே வாழ்நாள் சாதனைத் தொகுப்பாக  அ முதல் ஒள வரை மற்றும் க முதல் ஞ வரை கம்ப இராமாயண அகராதியினை 862 பக்கங்களில் சற்றொப்ப 9,500 சொற்களைக் கொண்டு 22ஆயிரத்திற்கு அதிகமான தொடர் மொழிகளையும் அணி சேர்த்து 1971-ஆம் ஆண்டு வெளியிட்டார்.  
அவ்வகராதியை 2022-ஆம் ஆண்டில் மறுபதிப்பாக அறிஞர்கள் அகம் மகிழ தமிழ்ப் பரிசிலாக வெளியிட்டார் சிவாலயம் ஜெ. மோகன். அவரை எத்துணைப் பாராட்டினாலும் தகும்.
கம்பர் இராமாவதாரச் சரிதையை இயற்றமிழ்க் காவியமாக மட்டும் அமைக்கவில்லை.  நாடக இலக்கணத்திற்கு இயையப் பல காட்சிகளாக அமைத்து அவற்றைத் தொகுத்துத் தொடர்புறத் தொடுத்துக் காவியமாக முடித்திருக்கின்றார்.  ஒவ்வொரு காட்சியும் முறைப்படி தொடங்கி, நடந்து முடிகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் கம்பர் தாமே ஒவ்வொரு மாந்தராகவும் மாறி, மனவரங்கில் நடித்துப் பார்த்துக் கவியுலகில் வடித்து வழங்கியிருக்கும் கம்பர் காவியம் முழுவதும் பல காட்சிகள் அடங்கிய நாடகக் காவியமாக அமைந்திருப்பதால், அறிஞர்கள் அதனைக் "கம்ப நாடகம்' என்று போற்றுகின்றனர். கம்பர் கவிதை தமிழ் மக்கள் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுள்ளது.  
அவர் கவிதை இன்பத்தை நுகர்ந்து இன்புற்ற மக்கள் அனைவராலும் அவர் "கவிச்சக்கரவர்த்தி' எனப் பாராட்டப்பெற்றார். அதனால் அது பெருவழக்குப் பெற்று என்றும் எல்லார் இடையிலும் வழங்கலாயிற்று.

இன்று (மார்ச் 24) கம்பர் திருநாள்.

கட்டுரையாளர்: இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com