

ஆட்டிசம் அல்லது மன இறுக்கம் எனப்படும் குறைபாடுள்ள குழந்தைகளை தற்போது நம்மால் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இக் குறைபாடுள்ள குழந்தைகளிடம், பிறரை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தல், தகவல் பரிமாற்றத்தில் உரிய புரிதலின்மை, புதிய நபர்களிடமிருந்து விலகி இருப்பது, சத்தமிட்டு சிரிப்பது அல்லது விசித்திரமான ஒலி எழுப்புவது, தம்மை சுற்றி நடைபெறும் செயல்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவது, நாய் பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை பார்த்து தேவையற்ற அச்சம் கொள்வது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது போன்ற மாறுபட்ட குணங்களைக் காணலாம்.
மரபணு, மூளையில் நரம்புகளின் ஒழுங்கின்மை, ரத்த பந்தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வது, உரிய வயதில் திருமணம் செய்யாதது, கர்ப்ப காலத்தில் தாய்க்கு எற்படும் அதிர்ச்சி, விபத்து ஆகியன ஆட்டிசத்துடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்களில் சிலவாகும். ஒரு தாய்க்கு, முதல் குழந்தை ஆட்டிச குறைபாடுடன் பிறந்தால், இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதற்கு 18.7% வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேலும், ஆட்டிச பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில்,பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் ஒரு சதவீத மக்களும் , நம் நாட்டைப் பொறுத்தவரை சுமார் பதினெட்டு மில்லியன் மக்களும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள நாடுகளில் கத்தார் நாட்டில் மிக அதிகபட்சமாக எண்பதேழு குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
'அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் ' எனும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட ஆட்டிச குழந்தைகள் முதலில் சாதாரணமாக இருக்கும்.
பருவ வயதை அடையும் போது ஆட்டிச குறைபாடு சிறிது சிறிதாக வெளிப்படும். "ரெட் சிண்ட்ரோம்' எனும் பெண் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் இக்குறைபாட்டால் தலை மிகவும் மெதுவாக வளர்ச்சி பெறும். கை, கால்களை பயன்படுத்துவதில் தடை ஏற்படும். "சைல்ட்வுட் டிஸ் இன்டகிரேட்டிவ் டிஸார்டர் ' எனும் கோளாறால் முதலில் சாதாரணமாக தோன்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாளடைவில் பேச்சுத் திறனையும், பழகும் திறனையும் இழக்கும்.
ஆக குழந்தைகளின் குழந்தைப் பருவத்தில் அவர்களிடையே காணப்படும் அசாதாரண மாற்றங்களை அடையாளம் கண்டு ஆரம்ப நிலையிலே சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை துவக்குதல் நல்லது.
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடு. எனினும், உளவியல், நோயியல், மனநலம் ஆகிய துறைகள் ஒருங்கினைந்து செயல்பட்டு இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய சிகிச்சையும், பயிற்சி அளிக்கும் பட்சத்தில் இக்குழந்தைகள் பிறர் வியக்கும் வண்ணம் குறிப்பிட்ட செயலிலோ, திறமையிலோ சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், சார்லஸ் டார்வின் ஆகியோர் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியோனோடோ டாவின்சி, ஆர்ஜென்டீனா நாட்டின் கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி ஆகியோரும் ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அவர்களின் தனித்துவ திறமை மேம்படுத்தப் பட்டதால் உலகப் புகழ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தப்படுத்துவதோடு இக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்தான சரிவிகித உணவு, உடல் மற்றும் மன ரீதியான முறையான சிகிச்சைகள், பயிற்சிகள் அழிப்பதான் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நலனை சிறப்பான அளவிற்கு மேம்படுத்தலாம்.
ஆட்டிசத்திற்கும்,மன நோய்க்கும் உள்ள வேறுபாடு தெரியாததால் சிலர் ஆட்டிச குறை பாட்டினையும் மனநோய் என்றே கருதி உரிய சிகிச்சை மற்றும் பயிற்சி தராமல் விட்டுவிடுவது வருந்தத்தக்கது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பொதுவெளியில் காணும் போது நம்மில் பலர் அக்குழந்தைகளை ஒரு காட்சி பொருளாக வேடிக்கை பார்க்கின்றனர்.
ஆனால், சமீபத்தில், பிரபலமான ஒரு துணிக்கடை ஒன்றுக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் அவன் தாயார் வந்த போது, கடையில் பணிபுரியும் பெண்கள், சிறுவன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன் என்பதை புரிந்து கொண்டு அச்சிறுவனின் மனநிலைக்கு ஏற்றபடி நடந்து கொண்டதோடு, அவர்களுக்கு உதவுவதில் அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொண்டதையும் பார்த்து மகிழ்ந்தேன்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் சமூகத்தில் இத்தகைய மென்மையான அணுகுமுறை கிடைக்குமானால், அது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன இறுக்கத்தை மட்டும் இன்றி, அவர்களின் பெற்றோர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் பெரிதளவு குறைக்க உதவும்.
தெலங்கானா மாநில உயர்நீதிமன்றம், பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் தானாகவே முன்வந்து, பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்து, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென தனியாக அரசு பள்ளிகள் இல்லாததை சுட்டிக் காட்டியத்தோடு, இதற்கென உள்ள சில தனியார் பள்ளிகளிலும் ஆயிரங்கணக்கில் கட்டணம் வசூலிப்பதால் ஏழ்மை நிலையில் உள்ள இக்குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி ஒன்று தமிழக அரசால் நிறுவப்படுவதோடு, அக்குழந்தைகளுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
நாளை (ஏப். 2) சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.