வட்டி வாகனத்திற்கு வேகக் கட்டுப்பாடு தேவை!

சமீபகாலமாக, செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கும் "பணவீக்கம்', ட"வட்டி உயர்வு' போன்ற வார்த்தைகள் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.
வட்டி வாகனத்திற்கு வேகக் கட்டுப்பாடு தேவை!

சமீபகாலமாக, செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கும் "பணவீக்கம்', ட"வட்டி உயர்வு' போன்ற வார்த்தைகள் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. அதில் நடுநாயகமாக விளங்குவது அமெரிக்காதான். பொருளாதாரம் சார்ந்த இந்த வார்த்தைகள், நடுத்தர மக்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கரோனா காலகட்டத்தில், பொருளாதாரத் தளர்வு நிலையை தவிர்க்க, ஏராளமான பணத்தைப் புழக்கத்தில் விட்ட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், அந்த நடவடிக்கைகளின் பக்க விளைவுகளிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. அந்த நடவடிக்கைகள் "சக்கர வியூகம்' போன்றது என்பது புரிந்ததும், அந்த வியூகத்திலிருந்து விடுபட முயன்று கொண்டிருக்கின்றன. 

இந்தியா போன்ற வளரும் நாடுகள் அது போன்ற பொருளாதார நடவடிக்கைகளை பெருமளவில் மேற்கொள்ளவில்லை என்றாலும், உலக பொருளாதார எதிர்மறை நிகழ்வுகளிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. 

அளவுக்கு அதிகமான பணப்புழக்கத்தால் பற்றிய "பணவீக்கம்' என்ற தீயை அணைப்பதற்கு, அமெரிக்கா போன்ற நாடுகள் போராடி வருகின்றன. அந்த போராட்டத்தின் ஒரு பகுதிதான், "வட்டி உயர்வு' என்பதாகும். சுருங்கச் சொன்னால், "வட்டி உயர்வு' என்பது, பணவீக்கம் என்ற பொருளாதார அஜீரண கோளாறை குணப்படுத்த, அனைத்து நாடுகளும் பின்பற்றும் ஒரே வைத்திய முறையாகி விட்டது.  

வட்டி உயர்வு என்பது, காலங்காலமாக மத்திய வங்கிகளால் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை. 1847-ஆம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, பணப்புழக்கத்தை பெருக்கவும் சுருக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டது.  அதன் பிறகு, அந்த ஆயுதத்தின் பயன்பாடு மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. 

இந்தியாவில், பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றாக, ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்கள் ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படுகின்றன. வங்கிகளிடமிருந்து கடன் பத்திரங்களைப் பிணையமாகப் பெற்று, குறுகிய கால கடன் வழங்கும்போது,  ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் வட்டி விகிதம்தான் ரெப்போவாகும். 

கடன் பத்திரங்களின் மூலம், ரிசர்வ் வங்கி கடன் வாங்கும்போது ரிவர்ஸ் ரெப்போ பயன்படுத்தப்படுகிறது. ரெப்போவுக்கும், ரிவர்ஸ் ரெப்போவுக்கும் இடையே நிலவும் இடைவெளி, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டுக் கொண்டிருக்கும். தற்போதைய ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்கள் முறையே 6.5 மற்றும் 3.35 சதவீத அளவில் இருக்கின்றன.

இது குறுகிய கால வட்டி விகிதத்தின் போக்கிற்கான அடையாளமாகும். பொதுவாக, இதன் அளவு அதிகமானால், டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி, மேல்நோக்கியும், குறைந்தால் கீழ்நோக்கியும் பயணிக்கும் எனலாம். 

வட்டியை உயர்த்தினால், பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும் என்று எண்ணி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள், அந்த வழிமுறையைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. வட்டி உயர்வால், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் நிகழ்வுகள், உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அது போன்ற நிகழ்வுகள் மற்ற நாட்டின் பொருளாதாரத்திலும் அரங்கேறும் வாய்ப்புகள் உள்ளன என்பதுதான், அந்த கவன ஈர்ப்புக்கான காரணம்.   

வட்டி நிலையை உயர்த்துவதால், பணவீக்கம் உடனடியாக கட்டுக்குள் வந்துவிடுமா என்ற கேள்விக்கான பதில், பல துணை கேள்விகளை உருவாக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, பூஜ்ஜிய நிலையில் நிர்ணயிக்கப்பட்டிருந்த அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம், பின்னர் படிப்டியாக  ஒன்பது முறை உயர்த்தப்பட்டு, தற்போது 5 % அளவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

வட்டி உயர்வு நடவடிக்கை, முதலீடுகளின் வேகத்தை குறைக்கும். அதனால், வேலைவாய்ப்புகள் குறையும். வேலைவாய்ப்பு குறைந்தால், வருவாய் குறைந்து, நுகர் பொருள்களின் தேவையும் குறையும். அது, விலைவாசி குறைவதற்கு வழி வகுக்கும். இதுதான் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார அனுமானமாகும். இந்த அனுமானத்திற்கு பல கொடுக்குகள் இருக்கின்றன. ஒரு கொடுக்கைத் துண்டித்தால், மற்றொரு கொடுக்கு வளராது என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

உதாரணமாக, கடந்த ஓராண்டு வட்டி உயர்வு நடவடிக்கைகளால், அமெரிக்காவில் பணவீக்கம் ஓரளவுதான் குறைந்திருக்கிறது. வட்டி விகிதத்தைப் பல மடங்கு உயர்த்தியபோதும், வேலைவாய்ப்புகளுக்கான குறியீட்டு காரணி வளர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வருவாய் குறைவும், நுகர் பொருள்களின் தேவை குறைவும் பெருமளவில் நிகழவில்லை.

அதற்கு மாறாக, சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி போன்ற வங்கிகள் திவாலான நிகழ்வுகள் பொருளாதார சந்தையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. சிலிக்கான் வேலி வங்கி,  குறைவான வட்டி விகிதத்தில் முதலீடு செய்திருந்த அரசு கடன் பத்திரங்களின் சந்தை விலை, தொடர் வட்டி உயர்வால் பெருமளவில் வீழ்ந்தது அதற்கு முக்கியக் காரணமாகும். முதலீடுகளின் விலை குறைந்ததால், வங்கியால் வாடிக்கையாளர்களின் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அது போன்ற காரணத்தினால், திவால் நிலையை சந்தித்த கிரெடிட் சுவிஸ் என்ற சுவிட்சர்லாந்து வங்கியை, யூனியன் பாங்க் ஆஃப் சுவிட்சர்லாந்துக்கு மிக குறைந்த விலைக்கு விற்க நேரிட்டது. எனவே, வட்டி உயர்வால், பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் வலிமையான நேர்மறை பலன்களுடன், அதே வலிமையுடன் கூடிய எதிர்மறை நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த ஓர் ஆண்டில், ரெப்போ வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியால் ஆறுமுறை மேல்நோக்கி உயர்த்தப்பட்டிருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் அந்த உயர்வுகளின் முக்கிய நோக்கம் எனக் கூறப்பட்டது. இந்த நடவடிக்கையால் பணவீக்கம் 8 % -இல் இருந்து 6 % அளவுக்கு கீழ்நோக்கிப் பயணித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

ஆனால், அந்த நடவடிக்கை சார்ந்த பக்க விளைவுகள், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட  வாழ்க்கையில் பலத்த தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொன்னாலும், கரோனா காலத்திற்கு பிறகு படிப்படியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருள்களின் விலை, இதுவரை சிறிது கூட குறையவில்லை. சில அத்தியாவசியப் பொருள்களின் விலை, சுமார் 40 % வரை உயர்ந்துள்ளது. 

விலைவாசி ஏற்றத்திற்குத் தகுந்தாற்போல், பொதுமக்களின் வருவாய் அதிகரிக்கவில்லை. இதனால், வாங்கும் திறன் குறைந்து, உற்பத்திப் பொருள்களின் தேக்க நிலை உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் பொருளாதார மந்தநிலைக்கு அஸ்திவாரமாக அமையும்.

வட்டி விகித உயர்வால், தொழில்துறையில் கூடுதல் மூலதனங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, வேலைவாய்ப்புகள் குறையும். தொழில்துறையில் சுணக்கம் ஏற்பட்டால், அது வங்கிகளின் செயல் திறனை பாதிக்கும். இந்த சூழ்நிலை ஏற்பட்டால், வலிமையான மூலதனம் இல்லாத வங்கிகள் பாதிக்கப்படும்.  

நம் நாட்டில், இது போன்ற நிகழ்வுகளுக்கான அறிகுறிகள் இதுவரை, நம் கண்களுக்கு புலப்படவில்லை. என்றாலும், மற்ற நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் பின்னடைவு என்ற சூறாவளி காற்று, நம்மையும் தாக்கும் வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது.

உதாரணமாக, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளின் தொய்வடைந்த பொருளாதார நிலையால், அந்த நாடுகளுக்கான நம் ஏற்றுமதி பாதிப்படையும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. இதில், மென்பொருள் ஏற்றுமதியும் அடங்கும். இதனால், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு பலவீனமடையும். நாணய மதிப்பு குறைந்தால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரித்து, அதுவே பணவீக்கத்தை மேலும் கூட்டும்.

பொருளாதார வண்டியின் ஒரு சக்கரமான "வட்டி' தன் வேகமான சுழற்சியால் உலக, பொருளாதாரத்தை "தளர்வு நிலை' என்ற பள்ளத்தை நோக்கி வேகமாக நகர்த்திக் கொண்டிருப்பது போல், நிகழ்வுகள் நடந்தேறி கொண்டிருக்கின்றன. மற்ற பொருளாதார ஆயுதங்களைப் பயன்படுத்தி, வட்டி சக்கர சுழற்சியின் வேகத்தை கட்டுப்படுத்த, மத்திய வங்கிகள் முயல வேண்டிய தருணம் இது. 

உலகம் முழுவதும், தகவல் தொழில்நுட்பத் துறையில் கணிசமான வேலை இழப்புகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது, மற்ற துறைகளுக்கும் பரவும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட பொருளாதாரத்தை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டிய நேரம் இது என்று சொல்லலாம். ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை, அதிக வட்டி வருவாய் என்று அறிவிக்கும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

வங்கிகளில், குறைந்த வட்டி விகிதத்துடன் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட தங்கள் சேமிப்புகளை மறுபரிசீலனை செய்து, அதிக வட்டியுடன் கூடிய தற்போதைய திட்டங்களுக்கு மாற்றிட முயல வேண்டும். இந்த தருணத்தில், புதிய கடன் வலைகளுக்குள் சிக்காமல், சேமிப்பில் கவனம் செலுத்துபவர்களே புத்திசாலிகள் ஆவர்!

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com