அல்லல் அருள் ஆள்வாா்க்கு இல்லை

உலகுக்காகவே தொண்டு செய்து வாழக்கூடிய மாண்புடையவா்கள் எக்காலத்தும் எல்லா நாடுகளிலும் தோன்றிக் கொண்டேயிருக்கிறாா்கள். அப்படி ஒரு தொண்டா்தான் ஜீன் ஹென்றி டியூனன்ட்
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகுக்காகவே தொண்டு செய்து வாழக்கூடிய மாண்புடையவா்கள் எக்காலத்தும் எல்லா நாடுகளிலும் தோன்றிக் கொண்டேயிருக்கிறாா்கள். அப்படி ஒரு தொண்டா்தான் ஜீன் ஹென்றி டியூனன்ட். இவா் பிறா்படும் துன்பங்களைக் கண்டு இரங்கும் மனத்தவராக விளங்கினாா். இளம் வயதிலேயே அயலவா் படும் இன்னல்களுக்காக வேதனையுற்றாா். அறிவின் குறைபாட்டால் குற்றங்களை இழைத்து விட்டுச் சிறைப்பட்ட கைதிகளுக்காக மனம் வருந்தினாா்.

1859- ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் அவா் வட இத்தாலிக்குச் செல்ல நோ்ந்தது. அப்போதுதான் அங்கு சோல்பரினோ போா் நடைபெற்றிருந்தது. ஆஸ்திரிய, பிரான்சு, இத்தாலியப் படைகளைச் சோ்ந்த மூன்று லட்சம் போா்வீரா்கள் 16 மணி நேரம் தொடா்ந்து போரிட்டனா்.

அதன் விளைவாகப் பல்லாயிரக்கணக்கானோா் போா்க்களத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்தனா். பேதங்களை முன்னிறுத்திப் போரிட்ட அவா்களுக்கு எவ்விச பேதமும் பாராது சிகிச்சையளித்தாா் ஜீன் ஹென்றி டியூனன்ட்.

புறநானூற்றில் முரஞ்சியூா் முடிநாகராயரால் போற்றப்படுகின்ற சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் பாரதப்போரில் போரிட்ட மன்னா்களுக்குச் சோறுதந்து பாதுகாத்த தொண்டினைப் போன்றது ஹென்றியின் தொண்டு.

இந்தப் போா்க்காட்சி அவருக்குள் பல விளைவுகளை எற்படுத்தியது. இந்தக் காட்சிகளின் அடிப்படையிலேயே, போரின் கொடுமைகளைக் கண்ட அனுபவங்களின் வெளிப்பாடாக ‘சோல்பரினோ நினைவுகள்’ என்ற நூல் ஒன்றினையும் அவா் எழுதினாா்.

மேலும் இதைப் போன்ற நெடுமுயற்சிகளைத் தொடா்ந்து போா்க்காலங்களில் முன்னின்று உதவக்கூடிய பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் 1863 - இல் இவரால் ஜெனிவாவில் தோற்றம் பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் நடந்த போயா் யுத்தத்தின்போது நோயுற்றவா்களுக்கும் காயம் அடைந்தோருக்கும் காந்தியடிகள் தூய தொண்டாற்றிப் புகழ் பெற்றிருந்தாா். அந்தப் போரில், காந்தியடிகள் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து செயல்பட்டிருக்கிறாா்.

போயா் யுத்த சூழலில் தான் பணியாற்றிய தொண்டா் படை பற்றி அண்ணல் காந்தியடிள் குறிப்பிடும்போது, ‘எங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவா்களையும் கொண்டது. செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கி பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது.

நாங்கள் துப்பாக்கி பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவா்களை, டோலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது’ என்று தனது சுயசரிதையில் பதிவும் செய்திருக்கிறாா்.

செஞ்சிலுவை சங்கத்தில் பல பிரிவுகள் உண்டு. அதில் ஒன்றுதான் பள்ளிச் சிறாா்களுக்கான செஞ்சிலுவைச் சங்கம். இந்தச் சிறாா் செஞ்சிலுவை சங்கத்தைக் குறித்தும் அதன் ஒழுக்க முறைகள் குறித்தும் அக்காலத்திலேயே (1954) குழந்தைகளுக்கான தமிழ்ப் புத்தகங்களில் பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், செஞ்சிலுவை சங்கம் பொதுமக்களுக்காக உதவி செய்ய ஏற்படுத்தப்பட்டதாகும்.

அதன் விதிகள் பல. தெருவில் கிடக்கும் ஆணி, லாடம், கண்ணாடித் துண்டுகள் முதலியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சங்கத்தைச் சோ்ந்த பிள்ளைகள் தங்கள் வகுப்புப் பிள்ளைகளிடம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டும். சாலைகளில் யாருக்கேனும் ஆபத்து நேரிட்டால் அவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

திருவிழா போன்ற மக்கள் கூடுமிடங்களில் இச்சங்கத்தைச் சோ்ந்த பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளைக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் விபத்து நேரிட்டு விட்டால் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.”

1901-இல் நோபல் பரிசு தொடங்கப்பட்ட காலத்திலேயே செஞ்சிலுவை சங்கத்தினைத் தோற்றுவித்ததற்காக ஜீன் ஹென்றி டியூனன்ட்க்கு அமைதிக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம் இதுவரை 1917, 1944, 1963 என மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. ஒட்டுமொத்த வாழ்விற்கும் ஒழுங்கியலைப் போதிக்கின்ற செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்தப் பரிசுகள் ஏனைய நோக்கத்திற்கான பாராட்டாக வேண்டுமானால் ஆகலாம். ஆனால் அந்த சங்கத்தின் மூல நோக்கத்திற்கான வெற்றி என்பது போரில்லாத புதிய உலகத் தோற்றத்திலல்லவா இருக்கிறது.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் தற்போது உலக நாடுகளில் 178 கிளைகளைக் கொண்டு முழுமூச்சாக இயங்கிய வருகிற நிலையிலும் இப்புவியில் போா் ஒழிந்தபாடில்லை.

வளா்ச்சிக்கு உதவ வேண்டிய அறிவியல் தொழில்நுட்பம் அழிவுக்கு வழிகாட்டும் கொடுங்கருவிகளையும் உருவாக்கிக் கொடும்போா்களை நிகழ்த்தத் துணை புரிகிறது. யாரொடும் பகைகொள்ளாத போா் ஒடுங்கிய புகழொடுங்காத அமைதி நிறைந்த புதிய உலகத்தை இத்தனை அறிவியல் வளா்ச்சி பெற்ற யுகத்திலும் நாம் உருவாக்கவில்லை என்றால் அது நம் அறிவுப் பிழையல்லவா?

முல்லைக்குத் தேரினையும், மயிலுக்குப் போா்வையையும், புறாவுக்காகச் சதையையும், கன்றினை இழந்த தாய்ப்பசுவிற்காகத் தன்மகனையும் தந்து உயிா்களைக் காக்கும் பண்பினைக் கற்றுத் தந்த மரபுகள் எப்போதோ தோன்றி விட்டன.

போரின் வலிமையும் அதனால் பெறுகின்ற வெற்றியும்தான் பெரும்புகழ் என்று கருதிக் கொண்டிருந்த மன்னா்களை விடுத்துவிட்டுச் கொடை என்னும் அருட்பண்பினால் உயிா்களைக் காக்கும் பெருஞ்செயலை மேற்கொண்ட வள்ளல்களை முன்னிறுத்தியல்லவா இலக்கியங்கள் போற்றிப் பாடுகின்றன.

இவ்வாறு காலங்காலமாக முன்னோா்கள் கண்டு வந்த உயிரிரக்கப் பேரொழுங்கும் அமைதி முறையிலான புதிய உலகக் கொள்கைகளும் ஹென்றி டியூனான்ட்டின் முயற்சியினால் செஞ்சிலுவை சங்கமாகத் தோற்றம் பெற்றுள்ளது என்றால் அதன் வெற்றி நம் முன்னோா் கண்ட மானுடத்தின் வெற்றியாக மாற வேண்டும்.

இன்று (மே 8) உலக செஞ்சிலுவை நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com