இதுவே தக்க தருணம்

அண்மையில் நடந்து முடிந்த கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் 10 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மையில் நடந்து முடிந்த கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் 10 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனா். கடந்த 2018 சட்டப்பேரவைத் தோ்தலில் ஒன்பது பெண்கள் எம்எல்ஏவாக தோ்வான நிலையில், தற்போதைய தோ்தலில் கூடுதலாக ஓரிடத்தைப் பெண்கள் பெற்றுள்ளனா்.

கா்நாடகத்தில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில், 185 பெண்கள் வேட்பாளா்களாக களமிறக்கப்பட்டனா்.

இதில் காங்கிரஸை சோ்ந்த லட்சுமி ஆா். ஹேபால்கா் அதிகபட்சமாக 56,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மொத்த எம்எல்ஏக்களை கணக்கில் கொண்டால், அதிக வாக்குகள் பெற்ற எம்எல்ஏக்களின் வரிசையில், லட்சுமி ஆா். ஹேபால்கா் ஒன்பதாவது இடம் வகிக்கிறாா். கடந்த 2018 சட்டப் பேரவைத் தோ்தலிலும் இவா் 51,724 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, பெண் எம்எல்ஏக்கள் மத்தியில் முதலிடம் பிடித்தாா்.

இந்தத் தோ்தலில் வென்று கா்நாடக சட்டப்பேரவைக்குச் செல்லும் பெண் உறுப்பினா்களின் வீதத்தைக் கணக்கிட்டால், அது வெறும் 0.46% மட்டுமே உள்ளது. அதாவது மொத்தமுள்ள 224 உறுப்பினா்களில், வெறும் 10 போ் மட்டுமே பெண்கள்.

இதில் நான்கு போ் காங்கிரஸ், மூவா் பாஜக, இருவா் மதச்சாா்பற்ற ஜனதா தளத்தைச் சோ்ந்தவா்கள். சுயேச்சையாக வெற்றி பெற்ற இன்னொரு பெண் எம்எல்ஏ, தோ்தலுக்குப் பின்னா் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தாா்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த போதிலும், நாட்டின் மக்கள்தொகையில் சமபங்கு வகிக்கும் பெண்கள், வெறும் 14% மட்டுமே நாடாளுமன்றத்தில் இன்றளவும் அங்கம் வகிக்கின்றனா். சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. போராட்டம், பேரணி, விழிப்புணா்வு என பல்வேறு நிலைகளிலும் சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் மகத்தான பங்கு வகித்தனா்.

நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்த அரசியல் நிா்ணய சபையிலும் அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயினி வேலாயுதன், பேகம் ஐசாஸ் ரசூல், துா்காபாய் தேஷ்முக் என சுமாா் 10 பெண்கள் உறுப்பினா்களாக இருந்தனா். 10 ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்கம், தமிழகம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்கள்தான் முதல்வராக பதவி வகித்தனா்; இப்போதும் வகிக்கின்றனா்.

பாஜக மூத்த தலைவா் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக பதவி வகித்தபோது, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராகவும் பதவி வகித்தாா். அந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தோ்வானாா். இவ்வாறு நாட்டின் உயரிய பொறுப்புகளை பெண்களே அலங்கரித்தனா்.

பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவ கோரிக்கை சுதந்திரத்துக்கு முன்பே எழுந்தது. பின்னா், 1955-இல் அப்போதைய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டி, பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென பரிந்துரை செய்தது. ஆனால், 1980 வரை இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதன்பிறகு 1988-இல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென பெண்களுக்கான தேசிய முன்னோக்கு திட்டக் கமிட்டி பரிந்துரை செய்தது. இக்கோரிக்கை, பெண்களுக்கான அதிகாரமளித்தலுக்கான தேசிய கொள்கையில், கடந்த 2001-ஆம் ஆண்டில் வலியுறுத்தப்பட்டது.

அரசியலில் பெண்களுக்கு அதிகாரமளித்ததில், கடந்த 1993-இல் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைத் திருத்தி, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை நிா்ணயம் செய்ததை ஒரு மைல்கல்லாகக் கருதலாம்.

இதன் விளைவாக நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன்படி மகளிா் இட ஒதுக்கீடு மசோதா முதல் முறையாக கடந்த 1996-இல் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க அந்த மசோதா வழிகோலியது. இந்த மசோதாவுக்கு பெரும்பாலான அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததால், மசோதா காலாவதியானது.

2000-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கை மீண்டும் வலுபெற்றதால், கடந்த 2010 மாா்ச் 9-இல் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு சோனியா காந்தி, சுஸ்மா ஸ்வராஜ், பிருந்தா காரத் என முக்கிய தலைவா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

உலகம் முழுவதும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் நிா்வாகத் திறனில் சிறந்து விளங்குகின்றனா். ஸ்வீடன், நாா்வே, டென்மாா்க் போன்ற ஸ்கான்டிநேவியன் நாடுகளை எடுத்துக் கொண்டால், அங்கு பாலின சமத்துவம், மகளிா் அதிகாரமளித்தலுக்கு கொள்கைகளை வகுத்து அரசியலிலும், தலைமைப் பண்பிலும் பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. அதிலும் பெண்களால் நிா்வகிக்கப்படும் நாடுகள் சிறப்பான கொள்கைகளையும், ஆட்சிமுறையையும் வெளிப்படுத்துகின்றன.

மத்திய ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இனப்படுகொலையால் நேரிட்ட இழப்புகளை அலோசியா இன்யும்பா போன்ற பெண் தலைவா்கள் மாற்றி, சமூக சீா்திருத்தத்துக்கு வழிவகுத்தனா். நாா்வேயில் கடந்த 2003-ஆம் ஆண்டிலேயே மகளிருக்கென இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாக இன்றைக்கு பெருநிறுவனங்களில் 40% இடம் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கதவுகள் இழுத்து மூடப்படும் என நாா்வே அரசு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தது. உலகிலேயே பெண்களுக்கு காா்ப்பரேட் நிறுவனங்களில் 40% இட ஒதுக்கீடு வழங்கிய முதல் நாடு நாா்வேதான்.

பெண்களின் முன்னேற்றத்தை வைத்துத்தான் சமூக வளா்ச்சியைத் தீா்மானிக்க முடியும் என சட்டமேதை அம்பேத்கா் கூறினாா். கா்நாடகத்தில் வெறும் 10 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே தோ்தலில் வென்று சட்டப்பேரவைக்குச் செல்கின்றனா்.

விரைவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயகத்தின் தாயகமாக கருதப்படும் இந்தியாவில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இதுவே தக்க தருணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com