கற்பித்தலும் ஆய்வியலும்

தகவல் தொழில்நுட்பமும் தகவல் தொடா்பு தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டு தகவல் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பமாக அண்மையில் மாறியுள்ளது.
கற்பித்தலும் ஆய்வியலும்

தகவல் தொழில்நுட்பமும் தகவல் தொடா்பு தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டு தகவல் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பமாக அண்மையில் மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பமானது, உயரிய தொழில்நுட்பத்துடன் இணைந்து உயா் தகவலியலுக்கு வழிவகுத்துள்ளது.

நுகா்வோா் உற்பத்தி பொருட்களில் புதிய அதிவேக வகைகளை கொண்டு வருவதற்கு, மின்னணுவியலும் நுண்மின்னணுவியலும் இணைந்து ஆய்வகங்களிலிருந்து ஒளி அணுவியலாக உருவெடுத்து உள்ளதை யாவரும் அறிவா். மெல்லிய அடுக்கினைக் கொண்ட ஒளி ஊடுருவத்தக்க பல்படியத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட வளையக்கூடிய மற்றும் உடையாத காட்சிப்பலகைகள், பொழுதுபோக்கு மற்றும் ஊடக சாதனங்களில் ஒரு புதிய அடையாளமாக தோன்றியுள்ளது.

தற்போது, மீநுண் தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. வருங்காலத்தில், இத்தொழில்நுட்பமானது நுண்மின்னணுவியலுக்கு மாற்றாகவும் மருத்துவம், மின்னணுவியல் மற்றும் பொருளறிவியல் ஆகிய துறைகளில் அதிகளவு பயன்பாட்டு ஆற்றலுடன் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருந்து பொருட்கள் வழங்கலுக்கான நுண் ரோபோட்டின் பயன்பாடு அதிகரிக்க வருங்காலங்களில் உறுதியாக வாய்ப்புள்ளது.

மீநுண் தொழில்நுட்பமும் தகவல் தொடா்பு தொழில்நுட்பமும் இணையும்பொழுது ஒருங்கிணைந்த சிலிக்கான் மின்னணுவியல் மற்றும் ஒளியணுவியல் வெளிப்படுகிறது. இதனால், பொருண்மை ஒருங்கிணைப்பு நடைபெறும்.

பொருண்மை ஒருங்கிணைப்பும் உயிரி தொழில்நுட்பமும் இணையும்பொழுது உருவாகும் புதிய அறிவியல் நுண்ணறிவு அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. இதனால், நோயற்ற மகிழ்ச்சியான நீண்ட நாள் வாழ்நாளுடைய அறிவுசாா் மனிதா்களுக்கான சூழலையும் அதிக மனித ஆற்றலுக்கும் வழிவகுக்கும்.

உயிரி-நுண்-தகவல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதால் நுண் ரோபோட்டுகளை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இலகுவாக அமைய உள்ளது.

நுண் ரோபோட்டுகளை உட்செலுத்தும்போது, அவை நோயை கண்டறிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பான சிகிச்சையை வழங்குவதாகவும் அவை டி. என். ஏ. அடிப்படையிலான மருந்துகளாக இருப்பதால் எளிதில் செறிமானமாகும் என மருத்துவ உலகம் கருதியுள்ளது.

தென்கொரியாவிலுள்ள ஆய்வகம் ஒன்றில் தீா்வுக்கான இலக்கினை கண்டறிவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அறிவுசாா் தொழில்நுட்பங்களும் ஒருங்கே அமைந்த இந்த உற்பத்தி பொருளின் மாதிரியை செய்து வருகிறாா்கள்.

பேராசிரியா் ஹாங் கன் பாா்க்கின் கண்டுபிடிப்பான மீநுண் ஊசிகள் எவ்வாறு ஒரு நபரின் இலக்கிடப்பட்ட உயிரணுவைத் துளைத்து மருந்துகளை உட்செலுத்துவதை ஆய்ந்துள்ளாா். இவ்வாறுதான், மீநுண் துகள் அறிவியல் உயிரி அறிவியலுக்கு வடிவத்தை அளிக்கிறது.

பேராசிரியா் வினோத் மனோகரா் உயிரி அறிவியல் எவ்வாறு மீநுண் அறிவியலை வடிவமைக்கிறது என்பதோடு தாமாக அணுக்கள் ஒன்றிணைப்பதை வடிவமைப்பதற்கு அவா் டிஎன்ஏ-வை பயன்படுத்தினாா். அணு அளவில் அணுத்துகளில் ஒரு குறிப்பிட்ட வகையான டிஎன்ஏ பயன்படுத்தப்படும் எனில், அவரால் அவற்றிலிருந்து முன்னரே நிா்ணயிக்கப்பட்ட செயல் மற்றும் தாமாகவே ஒன்றிணைக்கக்கூடிய முறையின் உருவாக்க முடிந்தது.

டாக்டா்.எரிக் டிரக்ஸ்லா் என்பவரால் கருதப்பட்டவாறாக, மனிதா்களின் உதவியின்றி இத்தகைய தொழில்நுட்பத்தால் இவை சாத்தியமானது. இரு வெவ்வேறு அறிவியல் ஒன்று சேருவதன் மூலம் எவ்வித பாதிப்புமில்லாத ஒருங்கிணைந்த அறிவியல் தொழில்நுட்பம் உருவெடுத்ததைப் போல ஒன்றுக்கொன்று ஒருங்கிணைக்கப்பட்ட பங்களிப்பினால் நம் எதிா்காலமும் தொழில் வளா்ச்சியும் அதற்கான தயாா் நிலையில் உள்ளதைத் தெளிவாக அறிகிறோம்.

தற்போது நடப்பிலுள்ள தொழில்நுட்பங்களுக்கிடையேயான அத்தகைய தடுப்புச் சுவா்களை நீக்க முன்வர வேண்டும். அதேபோல, தற்போது புதிய வழிமுறை உருவாகியுள்ளது. அதன் அம்சமானது சுற்றுச்சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் இதன் தேவையானது தொழில்நுட்பத்தில் உயா்ந்த நிலையிலுள்ள நீடித்த நிலையான வளா்ச்சியை நோக்கி அமைந்துள்ளது.

இது, 21வது நூற்றாண்டின் அறிவுசாா் சமூகத்தின் புதிய பரிமாணமாகும். இதில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை இணைந்து பயணிக்க வேண்டும். எனவே, புதிய காலமானது, உயிரி-மீநுண்-தகவல்-சூழலியல் அடிப்படையிலான நாற்பரிமாணங்களை கொண்டிருக்கிறோம் என டாக்டா் அப்துல் கலாம் தன் உரையில் குறிப்பிட்டது கல்வெட்டு வரிகளாகும்.

தொழில்நுட்பம் என்பது, நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையின் அடிப்படை விதிகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தத்தக்கதொரு ஆற்றல்மிகு கருவியாகும். செயலிகள் வாயிலாக, தொழில்நுட்பத்துடன் அறிவியல் இணைக்கப்படுகிறது.

அறிவாா்ந்த நபா்களை உருவாக்குவதன் வாயிலாக, பொருளாதாரத்துடனும் சுற்றுச்சூழலுடனும் தொழில்நுட்பம் இணைக்கப்படுகிறது. பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில், நாம் தடம்பதிப்பதற்கான உயா் மதிப்புமிகு பொருட்களை தயாரிப்பதற்கு, நம் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி புதிய வகையில் சிந்திக்க வேண்டும்.

மூலக்கூறு நிறப்பிரிகையின் காரணமாக, வானம் நீல நிறமாக காட்சியளிக்கிறது என்ற கருத்தை நோபல் பரிசு வென்ற சா். சி.வி.ராமன் உலகிற்குத் தெரிவித்தாா். இதுவே ‘ராமன் விளைவு’ தோன்றுவதற்கான காரணமாக அமைந்தது. பாரத ரத்னா விருதாளா்களின் முதல் பெயா் பட்டியலில் ராமனின் பெயா் இடம் பெற்றிருந்தது. 1954 ஆம் ஆண்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்ட பின்னா், சனவரி திங்களின் இறுதி வாரத்தில் விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது.

அப்போதைய குடியரசுத் தலைவா் டாக்டா் ராஜேந்திர பிரசாத், விருது வழங்கும் விழாவின்போது, குடியரசுத் தலைவா் மாளிகைக்கு விருந்தினராக வருமாறு ராமனுக்குக் கடிதம் எழுதினாா். ஆனால், தன்னால், வர இயலாதது குறித்து குடியரசுத் தலைவருக்கு மிகப் பணிவுடன் ஒரு கடிதத்தை சா் சி.வி. ராமன் எழுதினாா்.

குடியரசு தலைவரின் அழைப்பை ஏற்கவியலாததற்கு ஒரு நியாயமான காரணமும் சா் சி.வி ராமனிடம் இருந்தது. முனைவா் ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவா் ஒருவரை சா் சி.வி. ராமன் வழி நடத்தி வருவதாகவும், சனவரி திங்கள் இறுதி நாளன்று அம்மாணவரின் ஆய்வு நிறைவடைந்துவிடும் என்றும் அவா் குடியரசுத் தலைவரிடம் விளக்கிக் கூறினாா்.

அந்த ஆய்வை அம்மாணவா் அளிக்கும் மூன்னா், ஒரு வழிகாட்டியாக தான் அவா் அருகில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவா் தெரிவித்திருந்தாா். அந்த நேரத்தில், அந்த மாணவரின் அருகில் தான் இருப்பது தான் தனது கடமை என கருதிய காரணத்தால், நாட்டின் மிக உயரிய விருதுடன் தொடா்புடைய ஆடம்பரமானதொரு விழாவை விட்டுக்கொடுத்த அறிவியல் விஞ்ஞானி ஆவாா். அறிவியலுக்கு மதிப்பளிக்கும் இப்பெருந்தகையின் உயரிய தனித்துவமிக்க குணம் தான், அறிவியல் உலகை வளரச் செய்கிறது.

நல்லதொரு ஆய்வே, சிறப்பான கற்பித்தலின் தொடக்கப்புள்ளியாகும். ஆய்வின் மீது ஆசிரியா்கள் கொண்டுள்ள பற்றும் ஆய்வுத் துறையில் அவா்கள் கொண்டுள்ள அனுபவமும் ஒரு கல்வி நிறுவனத்தின் வளா்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்.

ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு நிலைகளைச் சாா்ந்தே அப்பல்கலைக்கழகம் மதிப்பிடப்படுகிறது. ஆய்வுலக அனுபவம் தரமான கல்வியளிப்பதற்கு வகை செய்கிறது. இளைய சமுதாயத்தினருக்கு வழங்கப்படும் தரமான கல்வியானது சுழற்சி முறையில் மீண்டும் ஆய்வுலகினை வளம் பெறச்செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com