அறிவியலில் நம்பிக்கையை உருவாக்குவோம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

அறிவியல், சமூக, அரசியல் பிரச்னைகள் குறித்த விவாதங்களில் பொதுமக்களையும் பரவலாக ஈடுபடுத்த வேண்டியதன் அவசியம் தற்போது எழுந்துள்ளது. இதற்கென ஆண்டுதோறும் நவம்பர் 10 அன்று அமைதிக்கும் வளர்ச்சிக்குமான உலக அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது.
அறிவியலை சமூகத்துடன் நெருக்கமாக இணைப்பதன்வழி உலக அளவில் அமைதியையும் வளர்ச்சியையும் உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். நம் அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் அடிப்படைத் தத்துவத்தையும் இந்நாள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2001-இல் "யுனெஸ்கோ'வால் அறிவிக்கப்பட்ட உலக அறிவியல் தினம், அறிவியல் தரவுகளின் தொகுப்பாய்வினால் தொழில்நுட்ப மேம்பாட்டினை வலியுறுத்துவதைப் போலவே, அறிவியல் சிந்தனைகளின் பகுப்பாய்வு மனிதர்களின் அகநுட்பத்தையும் வளர்க்க உதவும்.
1999-ஆம் ஆண்டு ஹங்கேரியின் தலைநகரான  புடாபெஸ்டில் நடைபெற்ற உலக அறிவியல் மாநாட்டின் விளைவுகளில் ஒன்றாக, அறிவியலுக்கும் சமூகத்திற்கும் அர்ப்பணிக்கத்தகும் நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்ற பிரகடனம் வெளியானது.
அந்த வகையில் "நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல்' (2022), "காலநிலை மாற்றங்களை  எதிர்கொள்ளத்  தயாரான சமூகங்களை உருவாக்குதல்' (2021), "உலகளாவிய நிலையில் தொற்றுநோயைக் கையாள்வதில் சமூகம் மேற்கொள்ள வேண்டிய அறிவியல் பொறுப்புகள்' (2020), "யாரையும் விலக்கிப் பார்க்காத வெளிப்படையான அறிவியல்' (2019), "அறிவியல் ஒரு மனித உரிமை' (2018), "உலகளாவிய புரிதலுக்கான அறிவியல்' (2017), "அறிவியல் மையங்களையும்  அறிவியல் அருங்காட்சியகங்களையும் கொண்டாடுதல்' (2016), " நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல்' (2015), "தரமிக்க  அறிவியல் கல்வியினால் அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்தல்' (2014),  "நீர் ஆதார ஒத்துழைப்புக்கான அறிவியல் தரவு, அறிவு, புதுமைகளைப் பகிர்தல்' (2013), "உலகளாவிய நிலைத்தன்மைக்கென பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, உருமாற்றம் ஊட்டும் அறிவியல் (2012) - போன்ற சிறப்பு நோக்கங்கள் கடந்த சில ஆண்டுகளில் வெளியிடப்பெற்றன.
இந்த ஆண்டு, உலக அறிவியல் தினம் "அறிவியலில் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற கோட்பாட்டில் கவனம் செலுத்துகிறது. அறிவியலில் நம்பிக்கை என்பது ஒரு சிக்கலான பிரச்னை. இது விஞ்ஞானிகள் செயல்படும் விதத்தை பாதிக்கிறது. மேலும், அறிவியலில் நம்பிக்கை இருந்தால் மட்டுமே நமது எதிர்காலத்தை வடிவமைப்பதில் அறிவியலின் பங்கை உறுதிப்படுத்த முடியும். 
1920-களிலேயே, அறிவியலைத் தேடித்தேடிப் படித்து அவற்றைத் தமிழில் தந்தவர் சட்டம் படித்த எழுத்தாளர் பெ.நா. அப்புசாமி. 1936-இல் காற்றடைத்த ராட்சச பலூன்களில் நடத்திய விண்வெளி யாத்திரை பற்றி உற்சாகத்தோடு எழுதிய அப்புசாமி, துணைக்கோள் (ஜியோ ஸ்டேஷனரி சாட்டிலைட்) பற்றி 1965-இல் அதே உற்சாகத்தோடு எழுதினார். அன்று பலரும் கிராமபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பெட்டி எப்படிப் பாடுகிறது என்று படம் வரைந்து எளிமையாக விளக்கியவர் அப்புசாமி. 
நவீன அறிவியல் கோட்பாடான "மேதைமை அமைப்பு' (எக்ஸ்பெர்ட் சிஸ்டம்) அடிப்படையில் இயங்கும் மின்னணு  மொழிபெயர்ப்பு பற்றி 1960-களில் தமிழில் முதலில் இவர்தான் எழுதினார்.
அது மட்டுமன்று,  கணினிப் புரட்சி உருவாவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே, 1969-ஆம் ஆண்டில் "நாம் வாழும் யுகம் கம்ப்யூட்டர் யுகமாகிக்கொண்டு வருகிறது' என்று கூறிய தீர்க்கதரிசி அவர்.
அறிவியல் தரும் செய்தித்துறையாக இன்றைக்கு விண்வெளித்துறை மட்டுமே  ஊடகங்களால் அடையாளம் காணப்படுகிறது. அதிலும் சில நேரங்களில் வணிக நோக்கில் செயல்படும் "கூகுள்' விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியல்வாதிகளாகவே மாறிவிடும் அதிமேதாவிகளும் அறிவியல் துறைகளில் உள்ளனர் .
விஞ்ஞானி எம்.ஜி.கே. மேனன் 20 ஆண்டுகளுக்கு முன் "சயன்ஸ்' இதழில் (25-10-2022) தெரிவித்த கருத்து, நாட்டின் தற்போதைய அறிவியல் வளர்ச்சிப் போக்கினை விவரிக்கிறது. அந்நாளில் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையினால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, இயற்கை அறிவியல் மற்றும் பொறியியலில் முதன்மையான பட்டதாரிகளின் சதவீதத்தில்  சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியது.
பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கான அரசின் நிதியுதவி தேக்கமடைந்து வருகிறது. இதன் விளைவாக ஆக்கபூர்வ அறிவியல் பார்வையில் ஒருவித சரிவு ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, விஞ்ஞான ஆய்வு வெளியீடு பற்றிய சமீபத்திய சர்வதேச ஆய்வில், அறிவியல் பன்னாட்டு இதழ்களில் வெளிவந்த இந்திய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை 1980-ஆம் ஆண்டு முதல் 24% குறைந்துள்ளது. 
அத்துடன், உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டின் ஆய்வு மதிப்பீடும் உலகளாவிய தரவரிசையில்  எட்டாவது இடத்தில் இருந்து 15-ஆவது இடத்திற்கு இறங்கிவிட்டது. 
மேலும், இந்திய ஆராய்ச்சிக் கூடங்களில் தலைமைப்  பொறுப்புக்கான நெருக்கடி தவிர்க்க முடியாததாகி  வருகிறது.
சீனா, தைவான், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள், வெளிநாட்டில் பணிபுரியும் தங்கள் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் திறமைகளைத் தேடிக்கண்டறிந்து பயன்படுத்த முயல்கின்றன. அந்த அணுகுமுறை, சோர்வுற்ற ஆய்வு நிறுவனங்களுக்கு புதுரத்தம் பாய்ச்சுவதற்கும், சர்வதேச ஒத்துழைப்புகளை வளர்ப்பதற்கும் ஏற்ற வழியாக இருக்கும். 
ஆனால், இந்தியாவில் இந்த வியூகம் சர்ச்சைக்குரியதாக அமையும். இங்குள்ள விஞ்ஞானிகள் அத்தகைய அயல்நாடுவாழ்  இந்தியர்களை இங்கு பணியமர்த்துவது, உள்நாட்டு திறமைகளை சந்தேகப்படுவதுபோல் ஆகும் என்று கருதுகின்றனர். 
இந்தியாவில் பணிபுரியும் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட விஞ்ஞானிகள், ஊதியக் குறைபாடு காரணமாக இங்குள்ள ஆய்வுக் கூடங்களில் பணியாற்ற முன்வருவதில்லை என்பதும் இந்திய விண்வெளித்துறைத் தலைவரின் கருத்தாக உள்ளது.
இதில் இன்னொரு செய்தியும் உள்ளது. பாதுகாப்பு, மேலாண்மை, அணுசக்தி, விண்வெளித் துறைகளில் தலைமைப் பொறுப்பில் இருப்போர்க்கு பதவி நீட்டிப்புகள் வழங்கப்படுவது வழக்கமாகிவிட்டது.  
அதனால், புதுமையை விரும்பும் சிந்தனைத்திறன் மிக்க விஞ்ஞானிகள், மன நிறைவின்றி ஒப்புக்குப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறனர். அதிலும், மொழி, இன, மத பிரச்னை ஏதுமின்றி, அறிவியல் ஒன்றே நமக்குப் பெருமிதம் என்று வாழும் அறிஞர்களும் ஆட்சியாளர்களைத் துதிபாடி, பணி ஓய்வுக்குப் பிறகும், புதிய அதிகாரப் பொறுப்புகளில் சகல வசதிகளுடன் வாழ விரும்பும் தன்னலவாதிகளாகி விடுகின்றனர். 
அறிவியல் மீது நம்பிக்கை வைப்பது குறித்த எண்ணத்தை நம்மிடையே எழுப்புவது முக்கியம். 
உண்மையில் எதார்த்த அறிவியல் கூட, கவிதை போல் உள்ளுணர்வு சார்ந்த விஷயமே. கவிஞராக பரிணமித்த பாரதியாருக்குள் அறிவியல் கனவு இருந்தது. கணக்காளராகப் பணியாற்றிய சர் சி.வி. ராமனுக்குள் ஒரு விஞ்ஞானி வாழ்ந்தார். டாக்டர் அப்துல் கலாமிடம், சோதிடம் பற்றி கேட்டபோது, "அந்தந்த கோள்கள் அதனதன் பாதையில் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன' என்றுதான் பதில் உரைத்தார். 
ஒவ்வொரு மனித உடலில் ஒன்றரை கிலோ மூளைக்குள் அடங்கியுள்ள வேதிம பொருட்களும், உயிரி மூலக்கூறுகளும் கோடிக்கணக்கானவை. அவற்றின் இடைவினைகளும் எண்ணற்றவை. அந்த வகையில், அணுக்களின் தொகுப்பான பொருள் வடிவம் உடம்பு. அது தூலமானது; தொட்டு உணரக் கூடியது. அணுக்களின் இடைவினைகள் வெளிப்படுத்தும் ஆற்றல் வடிவம், உயிர்; தொடாமல் அறியக் கூடியது. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று உடலுக்கும் உயிருக்கும் சார்புநிலையை உருவாக்குவது மனித சிந்தனை மட்டுமே.
இத்தகைய ஐயங்களுக்கு அறிவியலாளரே விடை சொன்னாலும், அதில் "மெய்ப்பொருள்' காண நாம் முயல வேண்டும். அமெரிக்க டாலரில் "இன் தி நேம் ஆஃப் காட் வி ட்ரஸ்ட்' என்று குறித்து, கடவுள்மீது "நம்பிக்கை' வைத்தே அதனைப் புழங்க விட்டுள்ளனர். நாமோ, வேண்டிய காரியம் நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் கடவுள் மீது வைக்கும் "பிலீஃப்' (நம்பிக்கை) வைக்கிறோம். 
அதிலும் நடக்காததை நடக்கும் என்று எண்ணுகிற நம்பிக்கை நமக்குள் இருக்கும் சித்தாந்தத்தோடு ஒத்துப்போவதால் அந்த நம்பிக்கை (ஃபெய்த்), ஒரு வகையில் மூடநம்பிக்கை ஆகுமல்லவா?
பழைமையான  நம்பிக்கையில் இருந்து விடுபட்டால்தான் வாழ்வில் எதிர்காலத்திற்கான நம்பிக்கை பிறக்கும். அதுவே நன்னம்பிக்கைக்கும் அப்பால் தன்னம்பிக்கையாக மாறும். இன்று அறிவியலில் அத்தகைய தன்னம்பிக்கை அனைவருக்கும் அவசியம். பழைமைவாதத்தை விட்டு விடுதலையாகிப் பறப்பவர்க்கே மனத்தில் அமைதி  உண்டாகும். 
அந்த வகையில் அமைதிக்கும் வளர்ச்சிக்குமான அறிவியல் என்ற தலைப்பில் அறிஞர்கள், அரசாங்க அதிகாரிகள், பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரையும் ஒன்றிணைக்க யுனெஸ்கோ ஊக்கம் அளிக்கிறது. 
இதற்கென உலகம் முழுவதும் அறிவியலுக்கான உறுதியான திட்டங்களும் வகுக்கப்பட்டன. குறிப்பாக, இஸ்ரேலிய - பாலஸ்தீனிய விஞ்ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும்  இடையே அறிவியலில் ஒத்துழைப்பினை வளர்க்க "இஸ்ரேலிய -பாலஸ்தீனிய அறிவியல் அமைப்பு' (இப்சோ) யுனெஸ்கோவால் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஜெருசலேமில் உருவாக்கப்பட்ட து என்பது வியப்பினும் வியப்பாகும்.

இன்று (நவ. 10) அமைதி - வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள்.
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com