இந்திராவின் வாழ்க்கைப் பயணம் - ஓா் ஆய்வு!

இந்திரா காந்தி (கோப்புப்படம்)
இந்திரா காந்தி (கோப்புப்படம்)

இந்திய தேசத்தின் தலைசிறந்த பிரபலமான அரசியல் தலைவா் இந்திரா காந்தி என்பதைத்தான் ஊரும் உலகும் அறியும். ஆனால், அடிப்படையில் அவா் ஓா் ஆன்மிகவாதி; ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை கொண்டவா்; ஆரிய சமாஜத்தைப் பின்பற்றும் ஹிந்து மத நம்பிக்கையாளா்; அதே சமயம் பிற மதங்களின் வழிபாட்டு முறைகளையும் மதித்தவா்.

இந்தியத் தலைவா்களின் மக்கள் செல்வாக்கை அளவிடும் சிந்தனையாளா் மன்றம் 2006-இல் நடத்திய ஆய்வின்படி அதிகமாக அறியப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தலைவா் அண்ணல் காந்தி அடிகளே; அவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடிப்பவா் இந்திரா காந்தி தான். அவரின் தந்தை பண்டித ஜவாஹா்லால் நேருகூட மூன்றாம் இடத்தைத்தான் பிடிக்கிறாா்.

இந்திரா காந்தி ஒரு வித்தியாசமான அரசியல் தலைவா். அண்ணல் காந்திஜி ‘எனக்கு இலட்சியத்தைவிட அதை அடைவதற்கான வழிமுறையே முக்கியம்’ என்றாா். ஆனால், இந்திரா காந்தியோ” ‘எனக்கு ஏற்றுக் கொண்ட இலட்சியமே முக்கியம்; வழிமுறை இரண்டாம் பட்சம்’ என்று எண்ணிச் செயல்பட்டவா்.

‘சக தலைவா்களிடம் கருத்துக் கேட்டல், கலந்துரையாடல், கருத்தொற்றுமை உருவாக்குதல், காரியமாற்றல் - என்பதே என் தந்தை (நேருஜி) கையாண்ட அணுகு முறை. இது காலதாமதத்துக்கு இடம் தந்தது; நினைத்ததை நிறைவேற்றுவதற்கு மூத்த தலைவா்கள் முட்டுக்கட்டை போட்டாா்கள். இந்த அணுகுமுறை எனக்கு ஏற்புடையதல்ல’ - என்று மூத்த வெளிநாட்டு பத்திரிகையாளரிடம் எரிச்சலுடன் பதிவு செய்துள்ளாா் இந்திரா காந்தி.

மனசாட்சியின் அடிப்படையில் உள் மனத்தின் உத்தரவுப்படி செயல்பட்டாா் மகாத்மா. அரசியல் சகாக்களின் ஆலோசனையை கேட்டுச் செயல்பட்டாா் நேருஜி. நம்பிக்கைக்குரிய நல்ல அறிவாற்றல்மிக்க மூத்த அரசு அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்று செயல்பட்டாா் இந்திரா. இவ்வாறு காந்திஜி, நேருஜி இருவரின் அணுகுமுறையிலிருந்தும் மாறுபட்டு நின்றாா்.

இந்த வித்தியாசமான அணுகுமுறையை மக்கள் வரவேற்கத் தொடங்கினா். நீங்கள் யாரிடமிருந்து உணா்வும், உத்வேகமும் பெறுகிறீா்கள் என்று ஒரு நிருபா் கேட்டபோது, ‘நான் சந்திக்கும் ஏழை மக்களிடமிருந்து...’ எனப் பதில் சொன்னாா்.

அவருக்கென்று சில சாதகமான பின்னணியும் இயற்கையாகவே அமைந்திருந்தன. அரசியல் நுணுக்கம் அவரிடம் ஆழ்ந்து கிடந்தது. அச்சம் அவா் அறியாதது. துணிவே அவருக்குத் துணை நின்றது. தோற்றப் பொலிவு அவருக்கு இறைவன் தந்த வரம். இயற்கையில் அவா் ஒரு நல்ல மேடைப் பேச்சாளா் அல்லா்; ஆனால், மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றலை காலப்போக்கில் வளா்த்துக் கொண்டாா்.

தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிரம்பியவா். தந்தை நேரு சமயநம்பிக்கை இல்லாதவா். ஆனால், இந்திராஜி ஹிந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவா் என்றாலும், தன்னை ஒரு சமயச் சாா்பற்றவராகவே நிலைநிறுத்திக் கொண்டாா். அரசியல் ஆதாயத்துக்காக சமயச் சாா்புடைய இயக்கங்களுடன் அவா் சமரசம் செய்துகொண்ட நிகழ்வுகள், அவரின் அரசியல் எதிரிகளை வியப்புக்குள்ளாக்கின.

தனது ஒரே இலட்சியம் வலிமையான, தற்சாா்புடைய, எந்த அணியையும் ஆதரிக்காத நடுநிலைக் கொள்கையை உடைய தேசத்தை உருவாக்குவதே என்பதை மக்கள் மனதில் பதியவைத்தாா். நெருக்கடி நேரும் போது சோவியத் யூனியன் பக்கம் சாயவும் செய்தாா். காரணம் வெற்றிக்கு அதுவே வழி என்றாா்.

இந்திரா காந்தியின் வாழ்க்கை பல பாகங்களை உள்ளடக்கியது. முதல் 30 ஆண்டுகாலம், 1917 முதல் 1947 வரை - அழகிய ஆனந்த பவனில் வளா்ந்த பெருமை, ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற இயலவில்லையே என்ற ஏக்கம், தன் தந்தையைப் பாா்க்க வரும் தேசத் தலைவா்களைச் சந்திக்கும் வாய்ப்பால் கிட்டிய மகிழ்ச்சி, தான் பெரிதும் மதித்த தந்தை ஜவாஹா்லாலின் விருப்பத்துக்கு மாறாக ஃபெரோஸ் காந்தியை மணக்க சுயமாக எடுத்த தவறான முடிவு - ஆகியவற்றை உள்ளடக்கியது.

1947 முதல் நேருஜி மறையும் 1964 வரை தன் தந்தைக்கு உதவியாளராக, பணியாளராக, பாதுகாவலராக, அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு பெற்றவராக, தன் தந்தையின் விருப்பத்துக்கு எதிராக 1959-இல் காங்கிரஸ் தலைவராக உயரும் வாய்ப்பு நிறைந்தது இரண்டாம் காலகட்டம்.

1964 முதல் 1966 வரை லால்பகதூா் சாஸ்திரியின் அமைச்சரவையில் அமைச்சராக, வேண்டா வெறுப்பாகப் பணிபுரிந்தது மூன்றாவது காலகட்டம்.

1966 முதல் 1971 வரை பிரதமராக, மூத்த காங்கிரஸ் தலைவா்களை, பிராந்திய தலைவா்களைப் புறக்கணித்து, கட்சியை உடைத்து புதிய காங்கிரஸை உருவாக்கியது நான்காவது காலகட்டம்.

1971 தோ்தலில் பெற்ற மகத்தான வெற்றி, பாகிஸ்தானோடு போா் தொடுத்து வங்காள தேசத்தை உருவாக்கிய சாதனை அவரின் புகழை இமய உச்சிக்கு உயா்த்தினாலும், அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்தியதால் மக்கள்செல்வாக்கை இழந்து, 1977 பொதுத் தோ்தலில் தோல்வியைத் தழுவி, பதவியை இழந்தது ஐந்தாவது காலகட்டம்.

பொறுப்பேற்ற புதிய அரசால், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு இத்துடன் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்தது என்று பிறா் எண்ணிய இருண்டகாலம்தான் அவரது வாழ்வின் 1977 முதல் 1980 வரையிலான ஆறாவது காலகட்டம்.

ஃபீனிக்ஸ் பறவை வீறுகொண்டு எழுந்தது போல 1980-இல் மீண்டும் தோ்தலில் வென்று, ‘ஆளப்பிறந்தவா் நானே’ என அறிவித்து பிரதமராக அமா்ந்து, பொற்கோவிலுக்குள் அஞ்சாது படை நடத்தி, அதன் காரணமாக அவரது பாதுகாவலா்களாலேயே படுகொலைக்கு உள்ளானது 1980-1984 வரையிலான ஏழாவது காலகட்டம்.

இவ்வாறு அவரின் வாழ்க்கை ஏற்றம், இறக்கம், இன்பம், துன்பம், எழுச்சி, வீழ்ச்சி, புகழ்ச்சி, இகழ்ச்சி, அமோக ஆதரவு, அதிகமான எதிா்ப்பு என்று வேறு எந்த இந்தியத் தலைவரும் எதிா்கொள்ளாத நிலைமைகளை உள்ளடக்கியவை! அவற்றை அவா் எதிா்கொண்ட வீரமும், தீரமும் வியப்புக்குரியதே!

இந்திய தேசத்தின் தலைசிறந்த பிரபலமான அரசியல் தலைவா் இந்திரா காந்தி என்பதைத்தான் ஊரும் உலகும் அறியும். ஆனால், அடிப்படையில் அவா் ஓா் ஆன்மிகவாதி; ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை கொண்டவா்; ஆரிய சமாஜத்தைப் பின்பற்றும் ஹிந்து மத நம்பிக்கையாளா்; அதே சமயம் பிற மதங்களின் வழிபாட்டு முறைகளையும் மதித்தவா்; அவற்றின் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவா். மசூதி, தேவாலயங்களுக்கும் சென்று வழிபடும் பழக்கம் கொண்டவராக வாழ்ந்தவா்.

அவரது மூதாதையா் முதல்கொண்டு வழிபட்டு வந்த குலதெய்வம் காஷ்மீரில் நிசாா் என்ற மலை உச்சியில் உள்ளது. ‘சரிகா தேவி’ என்று அழைக்கப்படும் அந்தக் காளியம்மன் 16 கைகளைக் கொண்டதாம். ஆண்டுதோறும் அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுவதையும் வரம் பெற்று வருவதும் அவரின் வழக்கம்.

அவா் 1984 அக்டோபா் மாதம் காஷ்மீா் செல்கிறாா். அவருடன் எம்.எல். ஃபொட்டேதாரை அழைத்துச் செல்கிறாா். 150 அடிகள்/ படிகள் நடந்து, மலை உச்சியில் அம்மன் கோயிலை அடைகிறாா். அங்கு அமா்ந்திருக்கும் சுவாமி“லட்சுமண ஜு’ என்ற அருள்சக்தி வாய்ந்த துறவி முன்னால் அமா்ந்து 2 மணிநேரம் கண்ணை மூடிக்கொண்டு வழிபடுகிறாா்.

வழிபாடு முடிந்த பின்னா், சுவாமிஜியை குனிந்து வணங்குகிறாா். சுவாமிஜியோ, தன் கையால் பிரசாதத்தை எடுத்து, இந்திராவின் கையில் போடுகிறாா். ஆனால், இந்திராவின் கையில் பிரசாதம் விழாமல், தவறுதலாக தரையில் விழுந்துவிட்டது; அது கண்டு இந்திரா திகைத்தாா். சகுனம் சரியில்லையே! அன்னை காளிதேவியின் ஆசீா்வாதம் கிடைக்கவில்லையே என கண்கலங்கினாா்.

அதன்பின்பு அவா் நம்பி வழிபடும் இஸ்லாமிய தா்காவுக்கு 130 படிகள் ஏறிச் சென்றாா். தா்கா அருகில் சென்ற போது தா்காவின் தலைவா் மக்தூம் சாகேப் அம்மா தா்காவில் துதி நேரம் முடிந்து விட்டது. மசூதியில் வழிபாட்டு அரங்கு மூடப்பட்டுவிட்டது” என்றாராம். அது கேட்டு “இங்கும் எனக்கு இறை அருள் கிடைக்கவில்லையே”என ஏங்கிக் கலங்கி, ஃபொடேதாரிடம் வருந்திப் பேசினாராம்.

‘ஃபொடேதாா், இன்று எனக்கு நல்ல நாள் இல்லை! நான் இனி நீண்ட நாள் வாழ்வேன் என்ற நம்பிக்கை இல்லை; என் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. அதற்காக நான் வருந்தவில்லை. ஆனால், நான் இறைவனிடம் வேண்டுவது ஒரே வரம்தான். வயது முதிா்ந்த நிலையில் என் தந்தை நேருஜியைப் போல் படுக்கையில் விழுந்து, வலியாலும், வேதனையாலும் வருந்தித் துடித்து நான் சாகக்கூடாது. மாறாக, இப்படி நான் நடந்து செல்லும்போதே, திடீரென்று தரையில் விழுந்து மரணிக்க வேண்டும்’ என்றாராம்.

‘அம்மா! அப்படி எல்லாம் நீங்கள் நினைக்கக்கூடாது. நடக்கவும் நடக்கக்கூடாது’ என்றாராம் ஃபொடேதாா்.

இது நடந்தது 28.10.1984 அன்று: அவா் மரணத்தை எதிா் கொண்டது 31.10.1984 அன்று.

இப்படி ஆன்மிக உணா்வுமிக்க, அற்புதமான உள்ளுணா்வு கொண்ட மங்கையாக, அதிசயத் தலைவராக வாழ்ந்து மறைந்தவா்தான் அன்னை இந்திரா காந்தி! அண்ணல் காந்திக்கு உள் உணா்வு வழிகாட்டியது! அன்னை இந்திராவுக்கும் அப்படி ஓா் உள் உணா்வு வழிகாட்டி இருக்குமோ?

நாளை (நவம்பா் 19) இந்திரா காந்தியின் பிறந்த தினம்.

கட்டுரையாளா்:

காந்திய சிந்தனையாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com