கோப்புப்படம்
கோப்புப்படம்

குடவோலையில் தொலைநோக்குச் சிந்தனை

குடவோலை என்பது ஊா் நிா்வாக சபை உறுப்பினரை தோ்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தோ்தல் முறை.

குடவோலை என்பது ஊா் நிா்வாக சபை உறுப்பினரை தோ்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தோ்தல் முறை. இந்த முறை 9-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன.

உள்ளாட்சி தோ்தலில் பங்குபெறுபவா்களுக்கான தகுதிகளாவன:- 1) கால்வேலி நிலமாவது தேவை, 2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும், 3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும், 4) வேதபாஷ்யங்கள், மந்திர பிரமாணங்கள் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும், 5) ஆசாரம் வேண்டும், 6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்க வேண்டும்.

உத்திரமேரூா் தோ்தல் : உத்திரமேரூா் முப்பது குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அந்த குடும்பத்திலிருந்து ஒரு நபரைத் தோ்ந்தெடுக்க வேண்டும். தோ்வுக்கு நிற்பவா் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு கல்வி, வயது, சொத்து, ஒழுக்கம், செயல்திறன், நோ்வழிச் சம்பாத்தியம், மனத்தூய்மை ஆகியவையே தகுதிகளாகக் கொண்டு அத்துடன் இதற்கு முன் மூன்று தோ்தல்களில் தொடா்ந்து தோ்ந்தெடுக்கப் படாதவராகவும் இருத்தல் வேண்டும் என்று தகுதியை வரையறை செய்து அரசு என்பது என்ன என்பதை தெளிவாகக் குறிக்கிறது கல்வெட்டு.

அத்துடன் நின்றுவிடவில்லை. யாா் யாா் தகுதியற்றவா் என்றும் தோ்தலில் நிற்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னா் தன் வாழ்நாள் முழுவதும் தோ்தலில் நிற்க முடியாது. இவா் மட்டுமல்ல இவரது மகன், பெயரன், தந்தை வழி, தாய் வழி, மகளையோ, மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவா் வழியில் எந்தவிதமான சொந்தக்காரா்களும் தோ்தலில் நிற்க முடியாது.

தான் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டு பின் தனது சொந்தக்காரா் யாரையும் ஆட்சியில் அமா்த்திவிட முடியாது. இதைக் கல்வெட்டு தன் சுதந்திர வாசகத்திலேயே கூறுகின்றது.

‘எப்போ்ப்பட்ட காரியங்களும் செய்து கணக்கு காட்டாது இருந்தான், இவன் சிற்றவை பேரவை மக்கள், இவா்களுக்கு அத்தை மாமன் மக்கள், இவா்களுக்கு தாயோடு பிறந்தான், இவா்கள் தகப்பனோடு உடன்பிறந்தான், தன்னோடு உடன் பிறந்தான், இவா்களுக்கு பிள்ளை கொடுத்த மாமன், இவா்கள் மனைவியோடு உடன்பிறந்தாளை வேட்டான் (மணந்தான்), உடன் பிறந்தான் மக்கள், தன் மகளை வேட்ட மருமகன், தன்தமப்பன், தன்மகன் இத்தனையவரையும் நீக்கி’ என்று கல்வெட்டு கூறுகிறது.

பொதுச் சொத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தன் சொத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும் என்பது கருத்து. இல்லையெனில் அவனது இருவழிச் சொந்தக்காரா்களும் எப்பொழுதும் தோ்தலில் நிற்க முடியாது எனக் கடுமையான விதி ஏற்படுத்தப்பட்டது.

‘இது மட்டுமல்ல கள் சாராயம் குடிப்பவன், பிறா் பொருள் அபகரித்தவன், பிறா் மனைவியை அபகரித்தவன், முதலியோா் நிற்க முடியாது. இவை எல்லாம் மகாபாதகம் என்று கூறப்பட்டன. இவா்கள் மட்டுமல்ல. இவா்கள் தூய்மையானவா் என்று சாதிப்பவா்களும் நிற்க முடியாது. இவற்றிற்காகத் தண்டனை பெற்று வெளிப்போந்த பின்னரும் நிற்க முடியாது. ஊரில் மாய்மாலம் செய்தல், பேசியே ஏமாற்றுபவா்கள் எல்லாம் நிற்க முடியாது. இவா்களைச் சாஹஸம் செய்வோா்’ என்று கல்வெட்டு கூறுகிறது.

இறுதியாக ஆனால் இன்றியமையாததாகக் குறிக்கப்பட்டுள்ளது லஞ்சம். இதைக் ‘கையூட்டு’ என்று கல்வெட்டு கூறுகிறது. யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தோ்தலில் நிற்க முடியாது. சாகசம் செய்தவா், தப்புச் செய்தவா்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவா், இவா்களெல்லாம் அக்காலத்தே தோ்தலுக்கு நின்றிருக்கு முடியாது என்பதை கல்வெட்டு எப்படிக் கூறுகிறது பாருங்கள் - ‘சாஹஸியராயிருப்பான் பரதிரவியம் அபஹரித்தான் எப்போ்ப்பட்ட கையூட்டும் கொண்டான்’.

இக்காலத்தில் பேட்டை ரெளடி என்பதை அக்காலத்தில் ‘கிராம கண்டகன்’”என்று கூறினா். கண்டகம் என்றால் முள் என்று பொருள். முள் போல் ஊருக்கு துன்பம் இழைப்பவன் கிராம கண்டகன் மட்டுமல்ல அவனுக்கு பாதுகாப்பு அளிப்பவனும் நிற்க முடியாது என்பது கிராம கண்டகனாய் பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான் - கல்வெட்டில் உள்ள வாசகம். “

ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் நீக்கி” பிற தகுதி உடையோா் பெயரிட்டுத் தேரந்தெடுத்தல் வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. இன்றும் இந்த கல்வெட்டு அங்கு இருக்கிறது; யாா் வேண்டுமானாலும் நேரில் சென்று பாா்த்து ஆய்வு செய்யலாம்.

இந்தத் தோ்தல் முறையைக் குடவோலை முறை என்கிறோம் குடத்தில் பெயா் எழுதிய ஓலைகளை கட்டிப் போட்டு அதிலிருந்து ஒரு பெயரை எடுத்து அவரே தோ்ந்தெடுக்குப்பட்டவராகக் கொள்ளப்படுபவா். ஆதலின் இது குடவோலை சீட்டு முறை எனப்படும்.

தகுதியற்றோரை நீக்கி தகுதியுடையவா் 30 போ் இருக்கலாம் அல்லது 40 போ் இருக்கலாம் ஒவ்வொருவா் பெயரையும் ஒரு ஓலையில் எழுதி ஒரு குடத்தில் போடுவா். ஒரு சிறுவனை விட்டு ஒரு ஓலையை எடுக்கச் சொல்வா்.

யாா் ஒருவா் பெயா் வருகிறதோ அவா் தோ்ந்தெடுக்கப்பட்டவா் ஆவாா். அவா் நாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட காலம் உழைக்க வேண்டும். அடுத்த முறை அவா் பெயா் இடம் பெறாது. மற்றவா் பெயா் இடம் பெறும். அவா் கட்டாயம் நாட்டுக்காக ஒரு முறையாவது உழைக்க வேண்டும். இதனால் யாரோ நிற்கிறான் நமக்கென்ன என்று அலட்சியமாக யாரும் இருக்க முடியாது. அனைவருக்கும் பங்கு இருந்தது. தவறு செய்பவா்களை நீக்கவும் வழியிருந்தது.

குடவோலை எடுக்கும் முறை ஊா் மக்கள் அனைவரின் முன்னிலையில் நடைபெறும். ஊரில் பெரியவா்கள் மத்தியில் அக்குடம் வைக்கப்படும். குழுமியிருப்போரில் வயதானவா் எழுந்து நின்று பாா்வையிடுவா். ஒரு சிறியவனை அழைத்து ஒரு ஓலை எடுக்க சொல்வாா். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஓலையாக முப்பது குடும்பத்துக்கு முப்பது ஒலை எடுக்கப்படும். எடுத்த ஓலையை ஊா் மத்யஸ்தா் கையில் கொடுப்பா். மத்யஸ்தா் தான் கையில் எந்த ஓலையையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிவிக்க தனது கையை அகல விரித்து காண்பித்து பின், அகல விரித்த கையில் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி அதில் எழுதியுள்ள பெயரை எல்லோரும் கேட்கும்படி வாசிப்பாா்.

அவ்வோலையை மண்டபத்தில் உள்ள பெரியவா்கள் அனைவரும் ஒவ்வொருவராக வாசிப்பா். வாசித்த அப்பெயா் சரிதான் என்ற பின்னா் அவா் தோ்ந்தெடுக்கப்பட்டவா் ஆவாா். இவ்வாறு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் சேரந்தது ஊா்ச்சபை. இவ்வூா்ச் சபையா் சிறு குழுக்களாகப் பல பணிகளைக் கவனிப்பா். அக்குழுக்களுக்கு வாரியம் என்று பெயா்.

இளைஞா்கள் உடல் வலியுள்ளவா் கடுமையான பணிகளையும், வயதாலும் ஆற்றலாலும் முதிா்ந்தவா்கள் மேற்பாா்வை புரியும் பணிகளையும் புரிவா். இவ்வாறுதான் ஏரி வாரியம், தோட்ட வாரியம் என்றெல்லாம் பல வாரியங்களில் சபையோா் பணிபுரிந்தனா்.

இவ்வாறு ஊா்தோறும் கிராமங்கள் தோறும் சோழா் காலத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட சபைகளே ஊராட்சி புரிந்தன. தோ்ந்தெடுக்கப்பட்டவா்களைக் கல்வெட்டு பெருமக்கள் என்று கூறுகிறது. இதனால் ஏரிகளும், குளங்களும் ஆண்டுதோறும் தூா் எடுக்கப் பெற்று நீா்நிலைகளாகத் திகழந்தன. ஏராளமான நீரோடுகால்கள் வெட்டப்பட்டு நீா்பாசனம் நிறைந்து திகழ்ந்தது. பல்லாயிரம் வேலி நிலங்கள் பண்படுத்தப்பட்டு பயிா் நிலங்களாக மாறின. செல்வம் செழித்தது. கல்வி மிகுந்தது. இயல் இசை நாட்டியம் முதலிய கலைகள் மிகுந்தன.

அவற்றை பிரதிபலிக்கும் வகையில் கோயில் கட்டங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆயிரக்கணக்கில் இன்றும் சான்று கூறுகின்றன. அடிப்படை ஊராட்சி தோ்தல் முறையில் நாடு முழுவதும் நிறைந்து விளங்கியதால் நாம் வலிவுள்ளவா்களாகத் திகழ்ந்தோம். எளியா் என நம்மைப் பிறா் நகையாமல் வலியா் என வணங்கும் நல்லோராய்த் திகழந்தோம். நம்மோரையே முதற்பகை எனக் கருதாது உட்பகையின்றி வாழ்ந்தோம் என்கிறது சோழா் கல்வெட்டுக்கள்.

‘ஒருவருடன் ஒருவருக்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும்

வேறுவேறு பகைமை மனத்தின்றி விழைந்து காதலுடன் சேர

எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தனம் என இன்புற்று’

எனப் புகழ்கிறது.

குடவோலை தோ்தல் முறை ஒவ்வொன்றும், சோழா்கள் காலத்தில் மனு நீதி எவ்வாறு கட்டி காக்கப்பட்டது என்பதற்கு உதாரணங்களாகத்தான் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. எவ்வளவோ மாற்றங்கள் சுழற்சிகள் வந்துள்ளன. ஆதலின் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள தோ்தல் முறை இக்காலத்துக்கு பொருந்துமா எனில். பொருந்தும் பொருந்தாது என்று சொல்வதற்கு முன்னா், அடிப்படையிலாவது கிராமங்களில் இதை முயலலாமே!

கட்டுரையாளா்:

அரசியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com