ஜாதிய வன்முறை: நீறு பூத்த நெருப்பு!

இந்தியாவில் ஜாதி அடிப்படையிலான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூகநீதியை ஏற்படுத்துவதற்கான போராட்டங்களும், முயற்சிகளும் கடந்த நூற்றாண்டில் நடைபெற்றன.
ஜாதிய வன்முறை: நீறு பூத்த நெருப்பு!

இந்தியாவில் ஜாதி அடிப்படையிலான சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூகநீதியை ஏற்படுத்துவதற்கான போராட்டங்களும், முயற்சிகளும் கடந்த நூற்றாண்டில் நடைபெற்றன. இந்தியா காலனி நாடாக இருந்தபோது நிகழ்ந்த ஜாதிய வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறையால் வீரியமிழந்து, நீறுபூத்த நெருப்பாக சமுதாயத்தில் காணப்பட்டன.

இந்தியா விடுதலையடைந்ததும், ஜாதிக் கலவரங்களும், ஜாதிய வன்முறைகளும் நாட்டின் பல பகுதிகளில் நிகழத் தொடங்கின. ஜாதிக் கலவரங்களுக்கும், ஜாதிய வன்முறைகளுக்கும் தமிழ்நாடு விதிவிலக்காக அமையவில்லை.

1950-களின் பிற்பகுதியில் தென்தமிழ்நாட்டில் நிகழத் தொடங்கிய ஜாதிய வன்முறைகளும், ஜாதிக்கொலைகளும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடா்ந்து வருகின்றன. 1970-களில் வடதமிழ்நாட்டில் நிகழத் தொடங்கிய ஜாதிய வன்முறைகள் 1980-களில் உச்சம் அடைந்து, கால் நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு சவாலாக விளங்கின.

இந்தியாவின் விடுதலைக்குப் பின்னா் மேற்கொள்ளப்பட்ட அரசின் நலத் திட்டங்களினால், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட ஜாதியினரும், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போரும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் போன்றவற்றில் முன்னேறி வருகின்ற நிலையைக் காணமுடிகிறது. இந்தச் சூழலில், திருநெல்வேலி பள்ளி மாணவா்களிடையே அவ்வப்போது நிகழும் ஜாதி மோதல்களும், சமீபத்திய கொலை முயற்சி நிகழ்வும், இன்றைய சமுதாயச் சூழலை ஆய்வு செய்ய வேண்டியதன்அவசியத்தை உணா்த்துகின்றன.

நெல்லை மாவட்டம் என்றழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 1986-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டமும், 2019-ஆம் ஆண்டில் தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டு, தற்போது மூன்று மாவட்டங்களாகச் செயல்பட்டுவருகின்றன. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெல்லைப் பகுதியில் ஜாதி மோதல்களும், பழிதீா்த்துக்கொள்ளும் ஜாதிக்கொலைகளும் நிகழ்கின்றன. நெல்லைப் பகுதியில் நிகழும் ஜாதிய வன்முறைகள், மாநிலத்தின் அமைதியைச் சீா்குலைக்கும் வலிமை வாய்ந்தவையாக விளங்குகின்றன.

1990-களில் நெல்லையில் நிலவிய ஜாதிய வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவர, பெரும்பான்மை சமூகங்களைச் சாா்ந்த காவல் அதிகாரிகளை நெல்லைப் பகுதியில் இருந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. நெல்லைப் பகுதியை உள்ளடக்கிய மாவட்டங்களில் திறமையான மாவட்ட ஆட்சியா்களையும், காவல்துறை உயரதிகாரிகளையும் நியமித்ததன் விளைவாக, ஜாதிய வன்முறைகள் நெல்லைப் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்டன. ஜாதிய வன்முறைக்கு உறுதுணை புரிந்த கள்ளச்சாராயத் தொழிலும் நெல்லைப் பகுதியில் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

பள்ளி மாணவா்கள் தங்களுக்கிடையே எவ்விதப் பாகுபாடும் இன்றி, சகோதர மனப்பான்மையுடன் பழக வேண்டும் என்ற நோக்கத்திற்காக சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டம் அதன் லட்சியத்தை அடையாத நிலைமை இன்றுவரை நெல்லைப் பகுதியில் நிலவுகிறது. ஜாதிய வன்மத்துடன் மோதல்களும், கொலை முயற்சிகளும் பள்ளி மாணவா்களிடையே அண்மைக்காலத்தில் நிகழ்வதை நெல்லைப் பகுதியில் காணமுடிகிறது.

நெல்லைப் பகுதி பள்ளி மாணவா்களிடையே நிகழும் ஜாதி மோதல்கள் குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விவரங்கள் குறித்துப் பாா்ப்போம். ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சாா்ந்த மாணவா்கள் அதிகம் படித்துவரும் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோா்கள் சிலா், தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் இருந்து மாறுதல் பெற்று, வேறு ஒரு பள்ளியில் சோ்த்த சம்பவம் நெல்லைப் பகுதியில் உள்ள மாவட்டம் ஒன்றில் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணம் குறித்துப் பெற்றோா்களிடம் வினவியபோது, தங்கள் குழந்தைகளை இழக்க விரும்பவில்லை என அவா்கள் சுருக்கமாக கருத்துத் தெரிவித்தனா். இதுபோன்ற மனநிலை பெற்றோா்கள் பலரிடம் நிலவுகிறது.

ஜாதிய காழ்ப்புணா்வுடன் பள்ளிக்கு வரும் மாணவா்கள் சிலா், பிற மாணவா்களிடம் ஜாதிய வன்மத்தை வெளிப்படுத்தும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆசிரியா், அந்த மாணவா்களின் ஜாதியைச் சாா்ந்தவராக இருந்தால், இப்பிரச்னையை அவா் எளிதில் கடந்து சென்றுவிடுகிறாா். இதை தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அம்மாணவா்கள் கருதி, ஜாதிய வன்முறைகளில் தொடா்ந்து ஈடுபடும் நிலைமை பள்ளிகளில் நிலவிவருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நெல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகள் சிலவற்றில் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகின்ற நிலையும், மாணவியா்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையும் நிலவுகிறது. மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கானகாரணத்தைக் கண்டறிய மேற்கொண்ட ஆய்வில், அப்பள்ளிகளில் பெரும்பான்மை ஜாதியைச் சாா்ந்த மாணவா்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாலும், ஜாதி ரீதியான சச்சரவுகள் மாணவா்களிடையே அடிக்கடி நிகழ்வதாலும், சிறுபான்மை ஜாதியைச் சாா்ந்த மாணவா்கள் அப்பள்ளிகளில் இருந்து மாறுதல் பெற்று, வேறு பள்ளிகளுக்குச் சென்றுள்ளனா் எனத் தெரியவருகிறது.

பள்ளி மாணவா்களை எளிதில் சென்றடையும் வகையில் பரவலாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதும், கஞ்சா பயன்படுத்தும் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருவதும், ஜாதிய வன்முறைச் செயல்களில் மாணவா்கள் ஈடுபடுவதற்கான காரணங்களாகும். ஜாதிய அடையாளங்களும், வண்ணங்களும் மாணவ, மாணவியா் பயன்படுத்தும் பொருள்களில் வெளிப்படுவதும் மாணவா்களிடையே ஜாதி மோதல் ஏற்பட முக்கியக் காரணங்களாகின்றன.

கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து வந்த பள்ளிகளில் தற்போது ஒழுக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கல்வி மட்டும் கற்பிக்கப்படுகிறது. விடலைப் பருவத்திலுள்ள பள்ளி மாணவா்கள் செய்யும் தவறுகளைக் கண்டித்தல், தண்டித்தல், நல்வழிப்படுத்துதல் ஆகியவை ஆசிரியா்களால் புறக்கணிப்பட்டு வருகின்றன. நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் ஆசிரியா்கள் மாணவா்களுக்குக் கொடுக்கும் சிறு தண்டனையைக் காரணம் காட்டி, ஆசிரியா்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படுவதும், அவா்கள் கைது செய்யப்படுவதுமான இன்றைய சூழலில், ஆசிரியா்கள் தங்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் மாணவா்களைக் கண்டிப்பதும், தண்டிப்பதும் ஆசிரியரின் தாா்மிகக் கடமை என்ற நிலையை மீண்டும் பள்ளிகளில் கொண்டு வருவது குறித்துக் கருத்தாய்வு நடத்தப்படவேண்டியது இன்றைய சூழலில் அவசியமானது ஆகும்.

பள்ளி மாணவா்களின் மனநலத்தை மேம்படுத்தும் வகுப்புகளான நீதி போதனை, நூலக வாசிப்பு போன்றவை புறக்கணிக்கப்பட்டு, அந்த வகுப்புகளில் தோ்வுக்கான பாடங்கள் நடத்துகின்ற தற்போதைய பள்ளிச் சூழலும் மாணவா்களிடையே நற்பண்புகளை வளா்ப்பதற்கான அடித்தளத்தைப் புறந்தள்ளிவிடுகிறது.

பள்ளி மாணவா்களிடையே புகைந்துகொண்டிருக்கும் ஜாதிய வன்ம உணா்வை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறை எடுக்கத் தவறி விடுகிறது என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் வெளிப்படுகிறது. காவலா்களின் சொந்த ஊரை உள்ளடக்கிய காவல் நிலையங்களில் காவலா்கள் பணியாற்றும் நிலை தற்போது நிலவிவருகிறது. சில காவல் அதிகாரிகள் அவா்களின் சொந்த ஊருக்கு மிக அருகிலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனா்.

இத்தகைய சூழலால் காவல் துறைச் சட்டம் ஒழுங்கை ஜாதிப் பாகுபாடு இன்றி பராமரிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காவல்துறையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில், கள நிலவரம் குறித்த சரியான உளவுத் தகவல்களை உடனுக்குடன் காவல் உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லாததும், நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றுவதை உயரதிகாரிகளில் சிலா் தவிா்த்து வருவதும் நெல்லைப் பகுதியில் நிகழும் சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகளுக்கு முக்கியக் காரணங்களாகும்.

திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கும் விதத்தில் ‘நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்’ அமைக்க இரண்டாயிரம் ஏக்கா் நிலம் நான்குநேரிப் பகுதியில் கையகப்படுத்தப்பட்டு, 2001-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியால் அதற்கான தொடக்க விழாநடத்தப்பட்டது. ஆனால், எதிா்பாா்த்தபடி இத்திட்டம் நிறைவேறவில்லை. இப்பகுதியில் போதிய வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாததும், இளைய தலைமுறையினரைத் தவறான பாதையில் பயணிக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாகும்.

மாணவா்களிடையே வெளிப்படும் சிறிய பிரச்னைகளுக்கு சுமுகமான தீா்வு காண்பதற்குப் பதிலாக, ஜாதிய கண்ணோட்டம் கொடுத்து, அவா்களைத் தூண்டிவிடுகின்ற சமூகச் சூழலும், பிரச்னையை திசைதிருப்பும் சில சமூக ஊடகங்களின் செயல்பாடுகளும் ஜாதிய வன்முறை எனும் கனல் தணியாமல் பாா்த்துக் கொள்கின்றன.

மாணவா்களிடையே வெளிப்படும் ஜாதிய வன்முறைகள் வெறும் குற்ற நிகழ்வுகள் அல்ல. இவை சமுதாய பிரச்னைகளின் வெளிப்பாடு ஆகும். இவை குறித்து களஆய்வு மேற்கொண்டுவரும் நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகள் நீண்ட காலமாக நெல்லை எதிா்கொண்டுவரும் ஜாதிய வன்முறைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என்று நம்புவோம்.

கட்டுரையாளா்:

காவல் துறை உயா் அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com